அறம் சார்ந்தவற்றில் பவுத்தம் பேரங்களை அனுமதிக்கிறதா?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 14     

தீராநதி, மார்ச் 2018              

பௌத்தத்தில் பத்தினி வணக்கம் முதன்மைப்படுத்தப் படுவதில்லை. தன்னை ஒரு பவுத்த காவியமாக முன்னிறுத்திக் கொள்ளும் மணிமேகலை இவ்வகையில் சற்று பௌத்த மரபிலிருந்து விலகி நிற்கிறது எனலாம். தான் தேர்ந்து கொண்ட என்பதைக் காட்டிலும் தனக்குத் தேர்ந்தளிக்கப்பட்ட வாழ்வைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொண்டு, தனது பேறாய்க் கிடைத்த அந்த அற்புத்தப் பாத்திரத்துடனும் உள்ளத்தில் சிலிர்த்த பேருவகையுடனும் பிச்சை ஏற்க வீதியில் இறங்கிய மணிமேகலை, “பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் பெரும் பெருமைக்குரியதாய் அமையும்” என்றனள்.

இந்த இடத்தில் மணிமேகலைக் காப்பியத்தினுள் இரு துணைக்கதைகள் பதிக்கப்படுகின்றன. அவற்றினூடாக இன்னும் சில அடிப்படையான பௌத்த அறங்கள் முன்வைக்கப்படுகின்றன.. அது மட்டுமல்ல இந்தப் பின்னணியில் தென் ஆசியப் பவுத்தப் பிரபஞ்சம் ஒன்றும் நம் முன் விரிக்கப்படுகிறது.

இங்கு அறிமுகமாகும் காயசண்டிகை எனும் பாத்திரத்தின் துயர் நிறைந்த கதையைச் சொல்லும்முன் அவள் வாயிலாக அறிமுகமாக்கப்படும் ஆதிரை  மற்றும் அவளது கணவன் சாதுவன் ஆகியோரின் வரலாறு பௌத்த அறங்களை விளக்க முற்படுகிறது எனப் பார்க்கலாம். பவுத்தம் எவ்வாறு மக்களுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டு, சில அம்சங்களில் தன் இறுக்கத்தைத் தளர்த்தியும், சில விட்டுக் கொடுத்தல்களுக்கும் இடமளித்தும் மக்கள் மத்தியில் தனக்கொரு இடத்தை நிறுவிக்கொள்கிறது என்பதையும் காணலாம்.

“ஒரு குளத்திற்கு அதனுள் பூத்திருக்கும் தாமரை மலர்கள் அழகு சேர்ப்பன. அவறுள் ஓங்கி வளர்ந்து அழகு சேர்க்கும் ஒரு திருமலர் போன்ற கற்பின் சிறப்பைப் பெற்றவளான ஆதிரை வாழும் வீடு இதுதான்” எனக் கூறி அவளிடம் சென்று முதற் பிச்சை ஏற்றல் தகும் என காயசண்டிகை சொல்வதனூடாக ஆதிரை சாதுவன் இணையரின் வரலாறு இங்கே பதியம் கொள்கிறது.

சாதுவன் தீய ஒழுக்கங்கள் பலவற்றின் ஊடாக மனையறம் பேணற்குரிய தகவு அற்றவனாகி, மனைவியைப் பிரிந்து, கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். வட்டாடல், சூதாடல் என எல்லாத் தீய ஒழுக்கங்களின் ஊடாகவும் தன் பொருளனைத்தையும் இழந்தான். அவனிடம் பொருள் இருந்தவரை அவனைப் பேணிக் கொண்டாடிய அக் கணிகையும் அவனை ஒன்றும் இல்லாதவன் எனப் பழித்துக் கைவிட்டாள்.

மீண்டும் செல்வந்தன் ஆகவேண்டும் என்கிற அடங்கா வேட்கையுடன் சாதுவன் மரக்கலம் ஒன்றில் ஏறி வணிகர்களுடன் பொருள் தேடிச் சென்றான். கோவலனின் கதையுடன் சில அம்சங்களில் ஒப்புமை உடைய சாதுவனின் வரலாறு பல அம்சங்களில் அதிலிருந்து வேறுபடுகிறது. மாதவி கணிகையர் குலத்தில் பிறந்தவளாயினும் அவளை வெறும் பொறுளாசை மிக்க ‘வேசி’ என்பது போன்ற வழமையான கருத்தாக்கத்திலிருந்து வேறுபடுத்தி நிறுத்துவார் இளங்கோ அடிகள். மாதவியைப் பொருத்த மட்டில் அதே பார்வையுடன் அவளை இன்னும் ஒரு படி உன்னதப் படுத்தி பௌத்த அறம் பேணும் துறவு நிலை எட்டுபவளாகச் சித்திரிக்கும் சாத்தனார் இங்கு இந்தக் கணிகையை வழக்கமான பொதுப் புத்தி எப்படிப் பார்க்குமோ அப்படியே பதிவு செய்கிறார்ம. எனினும் காப்பியத்தின் போக்கு அக் கணிகையைத் தொடர்வதில்லை. அவள் இங்கு முக்கிய பாத்திரம் இல்லை.

கணிகையின் தொடர்பால் பொருளிழந்த கோவலனைப் போலவே மீண்டும் பொருள் தேடச் செல்லும் சாதுவனின் வரலாறும் பெரிதும் அதிலிருந்து வேறுபடுகிறது. அவன் சென்ற கலம் கவிழ்கிறது. எனினும் அவன் உயிர் பிழைத்து நிர்வாணச் சாரணப் பழங்குடி மக்கள் வாழும் ஒரு மலைப் பக்கமாய்க் கரை ஒதுங்குகிறான்.

மரக்கலம் சிதைந்து, சிதைந்த மரத் துண்டுகளைப் பற்றிக் கொண்டு அவனைப் போலவே கடலில் தத்தளித்த சக வணிகர்களில் சிலர் புகாரை அடைந்து சாதுவனின் மனைவி ஆதிரையிடம் அவன் விபத்தில் மறைந்தான் என்பதாகத் தகவல் அளிக்கின்றனர். கணவன் ‘இறந்த’ சேதி அறிந்த ஆதிரை, “சிறந்த என் கணவன், தன வினைப்பயன் உற்று இறந்தனன். நானும் உயிர் நீத்து அவனைத் தொடர்வேன்” எனக் கூறி தீப்பாய்கிறாள். ஆனால் அந்தத் தீ அவளைப் பற்றவும் சுட்டெறிக்கவும் மறுக்கிறது. தீக்குழியுனுள் அவள் அமைத்துக் கொண்ட படுக்கையும், அவள் உடுத்தியிருந்த்க கூறையும், அவள் கூந்தலை அணிசெய்திருந்த மாலையும் தீப்பற்றாது நின்றதோடன்றி தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்போல எந்த ஊறும் அடையாது ஒளிவீசி நின்றாள்  ஆதிரை.

“தீயும் கொல்லாத் தீவினையாடி ஆயினேன்” என அவள் ஏங்கி நிற்கும் தருணம் அசரீரி இறங்கி அவள் கனவன் உயிர் பிழைத்திருக்கும் நற்செய்தியை அறிவித்தது. ஆறுதல் கொண்டு வீட்டிற்குச் சென்று கணவனின் வருகைக்குக் காத்திருந்த ஆதிரையை, தன் கற்புத் திறத்தால் மழை பொழிய வைக்கவும் வல்ல பிற பத்தினிப் பெண்டிர் தொழுது போற்றும் பெருமை பெற்றவள் எனக் கூறுவதன் ஊடாகப் பத்தினிப் பெண்டிர் பெருமையைத் தொடர்கிறார் சாத்தனார்.

இன்னொரு பக்கம் கதை சாதுவனைப் பின்தொடர்ந்து பவுத்த அறங்களை விளக்க முற்படுகிறது. பவுத்த அறங்களை மட்டுமின்றி பவுத்தம் மக்களை அணுகிய வழிமுறைகளில் உள்ள ஒரு நுணுக்கத்தையும் நாம் புரிந்துகொள்ள ஏதுவாக சாதுவன் வரலாறு பதிக்கப்படுகிறது. பிற அவைதீக அறக் கோட்பாடுகளை முன்நிறுத்திய சமணம் முதலான மதங்களைப் போலன்றி பவுத்தம் நீண்ட காலம் இந்திய மண்ணிலும் இன்னும் தென் ஆசிய நாடுகளிலும் நிலை கொண்டதற்கான காரணங்களில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள ஏதுவாகவும் அமைகிறது.

அங்கே கரை ஒதுங்கிய சாதுவன் ஒரு மலையடிவார மரநிழலில் மயங்கிக் கிடந்த தருணத்தில், அவ்விடத்தே வசிக்கும் நர மாமிசம் உண்ணும் வழமையுடைய நக்க சாரணர் அவனைக் கண்டனர். ‘தனியனாய் வந்து துயருற்றுக் கிடக்கிறான். எனினுன் ஊனுடை இவ்வுடல் நமக்கு நல்ல உணவாகலாம்’ என எண்ணி அவனை அணுகி எழுப்பினர்.

சாதுவன் வணிகன். பல நாடுகள் சென்று அம்மக்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களிடம் தன் பண்டங்களை விற்று தனக்குத் தேவையானவற்றை வாங்கி வரும் திறன் மிக்கவன். “மற்றவர் பாடை (மொழியை) மயக்கறு மரபிற் கற்றவன்” என அவனைக் குறிப்பார் சாத்தனார். யராயினும் அவரவர் பாடையில் (மொழியில்) பேசுதல் என்பது அவரோடு நட்பு பேணுதற்கும், நம் கருத்துக்களை அவரிடத்தே கொண்டு செல்லவும் நல்ல உபாயமாக இருக்கும். பிற மதங்கள் இங்கு வரும்போது அவை இங்குள்ள மொழிகளில் மக்களை அணுகியதையும், அத்னூடாக இங்குள்ள மொழிகளுக்கு அவை வளம் சேர்த்தமையையும் இங்கு நினைத்துப் பார்க்கல் தகும். கிறிஸ்தவம், இஸ்லாம் எல்லாம் இங்கு தமிழுக்கு வளம் சேர்த்தமையையும், இங்கு அவை நிலை கொண்டமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்ததையும் நாம் இந்தப் பின்னணியிலிருந்தும் அணுக வேண்டும். தம் மொழியை உன்னதப் படுத்தி தேவ பாஷையாக நிலை நிறுத்தல் என்பதற்குப் பதிலாக அவை நம் மொழியில் பேசி நம் மொழிக்கு வளம் சேர்த்து நம்மோடு நிலை கொண்டன. சாதுவன் மற்றவர் மொழியை மயக்கமறக் கற்றவன் மட்டுமல்ல. அதை அதன் மரபு அறாமலும் கற்றவன்.

தம் மொழியில் சாதுவன் பேசியதைக் கண்டு வியப்புற்ற அச்சாரணர் அவனை வணங்கி அவர்களின் குருமகனிடம் அழைத்துச் சென்றனர். கள் காய்ச்சும் பானைகள், கழிவுகளின் முடை நாற்றம், வெயிலிற் காய்ந்து கிடக்கும் வெள்ளெலும்புத் துண்டுகள் சூழ்ந்த தன் இருப்பிடத்தில் கரடியொன்று தன் துணையோடு இருந்தாற்போலக் காட்சியளித்தான் அந்தக் குரு மகன்.

உரையாடல் தொடங்கியது. மொழி அவர்களைப் பிணைத்து நெருக்கமாக்கியது என்கிறார் சாத்தனார். “பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி” குளிர்ந்த பரநிழலில் அவனருகே சென்றமர்ந்த சாதுவனை, “நீ இங்கு வந்த காரணம் என்ன?” என்று கேட்க சாதுவனும் அவன் நிலையைச் சொன்னான். மிக்க அனுதாபம் கொண்ட அந்தப் பழங்குடித் தலைவன், அருந்த ஒன்றும் இன்றி அலைகடலில் உழன்று வந்துள்ளான். இரக்கத்திற்குரியவனாக உள்ளான். வாருங்கள் மக்களே! இந்த நம்பிக்கு மிக்க இளமையுடைய ஒரு பெண், வெம்மையான கள், மாமிசம் எல்லாவற்றையும் வேண்டும் மட்டும் கொடுங்கள்” என ஆணையிட்டான்.

இந்த விருந்துபசார வார்த்தைகள் சாதுவனைத் துயருறச் செய்தன என்கிறார் சாத்தனார். இந்த இடத்தில் சாதுவனுக்கும் சாரணர் தலைவனுக்கும் இடையில் விவாதம் தொடங்குகிறது. “கொடிய சொற்களைக் கேட்டேன்! இது எதுவும் வேண்டேன்” என அவன் அவசரமாக மறுத்தது அந்தப் பழங்குடித் தலைவனுக்கு ஆத்திரத்தை அளித்தது. ஆத்திரம் மட்டுமல்ல வியப்பும் தோன்றியது.

“அழகிய பெண்கள், சுவை மிகு உணவு இவை எல்லாம் இல்லாவிட்டால் மக்கள் இந்த உலகில் வாழ்ந்தென்ன பயன்? அப்படி ஏதும் இருக்கிறதென்றால் எனக்குக் காட்டேன். நாங்களும் பார்க்கிறோம்.. சொல்!”

சாதுவன் சொல்லத் தொடங்கினான்:

“மயக்கும் கள்ளையும், உயிர்களைக் கொல்லுதலையும் சீறிய அறிவுடையோர் ஏற்பதில்லை. பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது.  நல்லறங்களைச் செய்வோர் நல்லுலகம் அடைதலும், நல்லதல்லாதவற்றைச் செய்வோர் அருநரகடைதலும்தான் முடிவு என உணர்ந்தோர் அவற்றைக் களைந்தனர். நீயும் இதை அறிந்து கொள்”

கட கடவென நகைத்தான் அந்தத் தலைவன். “உடம்பை விட்டகலும் அவ்வுயிர் ஒரு வடிவத்தில் இன்னொரு இடம் சென்று புகும் என்றாயே அது எப்படி? எனக்குச் சொல்” என்றான்.

“கோபப்படாமல் இதக் கேள். உடம்பில் உயிர் தரித்திருக்கும் வரை உடல் உறும் இன்ப துன்பங்களை அது உணரும். ஆனால் அந்த உயிர் உடலை விட்டு அகன்றால் எரியும் நெரிப்பில் இட்டாலும் அதை அது உணராது. எனவே இவற்றை எல்லாம் உணர்கின்ற உயிர் ஒன்றும் உள்ளதென்பதை அறிந்து கொள்” – இது சாதுவன்.

இது கேட்டதும், எரியும் விழிகளையுடைய அந்த நாகர் தலைவன் நன்கறிந்த அந்த செட்டியின் (சாதுவனின்) காலில் வீழ்ந்தான். “கள்ளையும், கறியையும் விட்டுவிட்டல் இந்த உயிரை நான் எப்படிக் காப்பேன். நான் சாகும் வரை வாழ்வதற்குரிய நல்லறங்களைச் சொல்” என வேண்டி நின்றான்.

“நல்லது. நன்னெறியில் உன் வாழ்க்கை தொடரட்டும். உனக்குத் தகுந்த (ஒல்லும்) அறம் உரைப்பேன். என்னைப்போல மரக்கலம் கவிழ்ந்து தப்பிப் பிழத்து வந்தடைவோரைக் கொல்லுதலைக் கைவிடு. அவர்களின் அரிய உயிரைக் காப்பாற்று. மூப்படைந்து வீழ்ந்து சாகும் விலங்குகளை அல்லாமல் பிற உயிர்களைக் கொல்லும் செயலைக் கைவிடு.”

சாதுவனின் இந்த அறவுரையைக் கேட்ட அந்தச் சிறுமகன், “இது எனக்குப் பொருந்தும். இதை ஏற்று என்னால் கடை பிடிக்க இயலும். இதோ இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள். இதுவரை மரக்கலம் கவிழ்ந்துத் தப்பி வரும் மக்களை எல்லாம் கொன்றோம். உண்டோம். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டனவே இவை. எல்லாம் சந்தனம், அகில் முதலான மண மரங்கள், மெல்லிய ஆடைகள், மிக்க மதிப்புடைய பொருட் குவியல்கள். எடுத்துக் கொள்” என்றனன்.

அவற்றை ஏற்றுக் கொண்ட சாதுவன் சந்திரதத்தன் எனும் வணிகண் வந்த கப்பலொன்றில் ஏறி ஊர் திரும்பினான். அன்பு மனைவி ஆதிரையோடு இனிய அற வாழ்க்கை வாழ்ந்தான் என்பது மணிமேகலை உரைக்கும் சாதுவன் – ஆதிரை வரலாறு.

மணிமேகலைக் காப்பியத்துல் பதித்து அழகு சேர்க்கப்பட்ட இந்தத் துணைக் கதையின் ஊடாக பவுத்தப் பரவல் குறித்துச் சிலவற்றை நம்மால் உணர் முடிகிறது. பவுத்தத்திற்கு இறுக்கமான அறக் கோட்பாடுகள் இருந்த போதும் அவற்றை மக்கள் எல்லோருக்கும் பொதுவானதாக இறுக்கமாகவும் சமணத்தைப் போன்று மிக உச்சமாகவும் வற்புறுத்துத்துவதில்லை. மக்களின் வாழ்க்கை முறைகளுடன் இணைந்து அவை தகவமைக்கப்பட்டன. இந்தக் கதஈல் உயிர்க் கொலை, மது, மாமிசம் பாலியல் பிறழ்வுகள் ஆகிய நான்கையும் கைவிடச் சொல்லித் தன் அறவுரையைத் தொடர்கிறான் சாதுவன். பெண்டிரை விடுதல் என்பது முற்றிலும் பாலியல் வேட்கையைக் கைவிடல் என்பதல்ல. இப்படியாக இளம் பெண்களைப் பரிசளித்தல், தாசிகள் என்றொரு பிரிவினை உருவாக்கல் முதலானவற்றைக் கைவிடுதலே பெண்டிரைக் கைவிடல் என்பதன் பொருளாகிறது. முற்றான துறவு என்பதையோ காமம் என்கிற உணர்வையே கைவிட வேண்டும் எனவோ சாதுவன் வற்புறுத்தவில்லை.

நாகர்களோ ஒரு கடலோர மலையடிவார நிலப்பகுதியில் வாழ்வோர். விவசாய வாய்ப்பு அங்கில்லை. கடலுணவு, மாமிசம் ஆகியவற்றை அவர்கள் தவிர்க்க இயலாது. எனவே இந்த அம்சத்திலும் சாதுவன் ஒரு சமரசத்திற்கு இணங்குகிறான். மாமிசத்தை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் விருந்துகளுக்கெனவே கொல்லுதல் முதலானவற்றைத் தவிர்த்தல் தகும். இறந்த உடலங்களை உண்ணுதல் ஏற்கத்தக்கது என இந்த அம்சத்திலும் ஒரு முடிவு எய்தப்படுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது சாதுவன் தொடக்கத்தில் வற்புறுத்திய அறங்களில் முற்றிலும் விட்டுக் கொடுக்காமல் அமைவது மயக்கும் மதுவைத் தவிர்த்தல் மட்டுமே.

ஆக ஒரு அற பேரம் (negotiation) ஒன்றுக்கு பவுத்தம் தயாராக இருந்தது.

(பவுத்தம் காட்டும் இறுதி உய்விற்கான ஒரே வழி – அடுத்த இதழில்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *