இந்திய – பாகிஸ்தான் போர் இன்றைய சூழலில் தேவையா?

(ஆகஸ்ட் 2013 ல் எல்லையில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது எழுதியது)

ஒரு போர் தேவை என்கிற குரல்தான் இப்போது உரத்து ஒலிக்கிறது. அப்படியான ஒரு கருத்தை உருவாக்குவதற்குத்தான் நமது ஊடகங்களும் துணை நிற்கின்றன. தொலைக்காட்சி விவாதகங்களிலும் இத்தகைய குரல்களுக்குத்தான் அதிக இடம் அளிக்கப்படுகின்றன. இது தேர்தல் நேரம் வேறு. பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.கவைப் பொருத்தமட்டில் பாகிஸ்தானையும் சீனாவையும் உடனடி எதிரிகளாகக் கட்டமைப்பது என்பது அதன் அரசியல் நிகழ்ச்சி நிரலில் ஒன்று. அதிலும் முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் ஒரு யுத்தத்தை நடத்திப் பணிய வைப்பதென்பது அதன் உள்நாட்டு அரசியல் நோக்கத்திற்கு உகந்த ஒன்று என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஆளும் கட்சியான காங்கிரசைப் பொருத்தமட்டில், அதற்கு ஊழல், பொருளாதார நெருக்கடி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்தச் சூழ்நிலையில், இத்தகைய போர் வெறிப் பேச்சுக்கள் அதற்கும்  கூட இவற்றிலிருந்து கவனத்தைத் திருப்ப உதவியாக இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்துள்ளார். எங்களின் பொறுமையைத் தவறாக எடை போட்டுவிடாதீர்கள் எனக் கூவியுள்ளவர், எல்லையோர அத்துமீறல்களுக்கு உடனடியாக எதிர்வினைகள் புரிய இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்திய இராணுவத் தளபதி விக்ரம் சிங், பிரதமரைச் சந்தித்து எல்லைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அமெரிக்காவில் நடக்க உள்ள ஐ.நா பொது அவைக் கூட்டத்தின்போது மன்மோகனும் நவாஸ் ஷெரீஃபும் சந்தித்துப் பேச உள்ள ‘சம்மிட்’ நடைபெறுமா என்பது இப்போது கேள்விக் குறியாக இருக்கிறது.

ஆகஸ்ட் 6 அன்று  இந்திய வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதற்குப் பின் இந்த எல்லையோர மோதல்களில் பாகிஸ்தான் வீரர்கள், ஒரு கேப்டன் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஒட்டி நேற்று பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதுவரை அழைத்து, அதன் அயலுறவுச் செயலர் இந்தக் கொலைகளைக் கண்டித்துள்ளார். பாக் தேசிய அசெம்பிளியில் கண்டனத் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. எனினும் ஆக்கபூர்வமான முறையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை என்பதும் தீர்மானத்தில் ஓரங்கமாக உள்ளது.

மன்மோகன் அரசின் நிலைபாடு என்பதுங்கூட பாக் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்பதாகவே இதுவரை இருந்தபோதிலும் இன்றுள்ள அரசியல் சூழலில் இதை அவர்கள் வெளிப்படையாகப் பேச இயலாதுள்ளது. இந்திய வீரர்கள் ஐவர் எல்லையில் கொல்லப்பட்ட அன்று பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, “பாக் ‘இராணுவ உடையில்’ வந்த சுமார் 20 பேர்கள் சுட்டதில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டார்கள்” என்று அறிவித்தது பா.ஜ.கவினால் மட்டுமின்றி இந்திய ஊடகங்கள் பலவற்றாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாக்கிக் கொன்றவர்கள் பாக் இராணுவ வீரர்கள்தான் என அடுத்த நாள் அழுத்தம் திருத்தமாக அவர் அவசர அவசரமாக அறிவிக்க வேண்டியதாயிற்று.

உண்மையில் அவர் முதலில் வெளியிட்ட அறிக்கைதான் எதார்த்தமானது மட்டுமல்ல, ராஜதந்திர ரீதியில் சரியானதுங்கூட. பாக் அரசியலைப் புரிந்தவர்களுக்குத் தெரியும், பாக் இராணுவம், இந்திய இராணுவத்தைப் போல அமைச்சரவைக்கு  முழுமையாகக் கட்டுப்பட்ட ஒன்று அல்ல. இந்தத் தாக்குதல் பாக் இராணுவ வீரர்களாலேயே நடத்தப்பட்டிருந்தாலுங் கூட அது நவாஸ் ஷெரீஃப் அரசின் ஒப்புதலுடன் நடந்ததாகக் கொள்ள இயலாது. பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிற செய்தி எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் பாக் இராணுவத்திற்கு அந்த எண்ணம் கிடையாது. எனவே ஷெரீஃபின்  திட்டத்தை முறியடிக்க இராணுவம் தன்னிச்சையாகச் செய்திருக்கலாம் என்கிற வாய்ப்பும் உண்டு. பாக் அரசியலில் இதெல்லாம் சகஜம். ஆனால் பாக் இராணுவமே கூட இன்று இந்தியாவுடன் ஒரு தீவிரமான போரை விரும்புகிறதா என உறுதியாகச் சொல்லிவிட இயலாது. ஏனெனில் பாக் மண்ணை வேராகக் கொண்டு உருவாகியுள்ள பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவிற்கு மட்டுமல்ல, பாக்கின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குமே பெரிய சவாலாக உள்ளது. பழங்குடிப் பகுதியில் ‘டெஹ்ரீக்-ஏ-தாலிபான் –ஏ- பாகிஸ்தான்’ அமைப்புடன்  பாக் நடத்தும் போரில் அது மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக் இராணுவத்திற்கு தோல்விதான்.

பாக் இராணுவத்திற்குள்ளேயே தீவிரவாதிகளுக்கு ஆதரவும் உள்ளது. தீவிர இயக்கங்களின் நோக்கங்களின் மீது ஒரு பகுதியினருக்கு மரியாதையும் உள்ளது. எனவே இராணுவத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல் இராணுவத்தின் அப்பகுதியினரின் சாகசங்களில் ஒன்றாகவும் இது நடந்திருக்கலாம், அல்லது பாக் இராணுவத்தின் மறைமுகமான ஆதரவுடன் தீவிரவாதிகளும் இதைச் செய்திருக்கலாம்.

இத்தனை சாத்தியக் கூறுகளும் உள்ள நிலையில் அந்தோணியின் தொடக்க அறிவிப்பு எத்தனை எதார்த்தமான ஒன்று என்பதை யாரும் புரிந்து கொள்ள இயலும். நவாஸ் ஷெரீஃப் அரசின் முழுமையான ஒப்புதலுடன் பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தால் பேச்சுவார்த்தையை முறித்துக் கொள்வது உட்பட பாக் அரசுடன்  நேரடி மோதல் என்கிற ஒரு அணுகல் முறையை மேற்கொள்வது ஒருவேளை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தகைய சாத்தியம் இல்லை என்பதுதான் பாக் அரசியலை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுள்ள  எல்லோருடைய கருத்தும். ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது வெளியானவுடன் ஷெரீஃப் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்த செய்தி பத்திரிக்கைகளை வந்தது.  பிரதமரான பிறகு நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் அவர் விடுத்த செய்தியிலுங் கூட இந்தப் பிரச்சினையின் அடிப்படையில் இந்தியாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ளும் அளவிற்கான பேச்சுக்களைத் தவிர்க்குமாறு அவர் கூறியதும் கவனிக்கத் தக்கது.

இந்தியாவுடன் ஷெரீஃப் முயற்சிக்கும் சுமுகமான உறவை முறிக்கும் நோக்குடன்தான்  பாக் இராணுவம் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்றால், இதை ஒட்டி நாம் பேச்சு வார்த்தையை முறித்துக் கொள்வது என முடிவெடுப்பது பாக் இராணுவத்தின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகிவிடும் என்பதை நாம் மறந்துவிடலாகாது. பதிலாக எல்லை ஓரத்தில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் அதே நேரத்தில் பாக் அரசுடன் பேச்சு வார்த்தையைத் தொடர்வதுமே பாக் இராணுவத்தின் நோக்கத்தை முறியடித்து அதைத் தனிமைப் படுத்த உதவும். இந்தியாவுடன் சுமுக உறவைப் பேண வேண்டும் என எண்ணுகிறவர்களே பாகிஸ்தானில் அதிகம் உள்ளனர் என்பதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

பாக் இராணுவத்தின் ஒரு பிரிவு தன்னிச்சையாகவோ, இல்லை பாக் இராணுவத்தின் உதவியுடன் தீவிரவாதிகளோ இந்தத் தாக்குதலை நடத்தி இருந்தாலும் கூட உடனடி மோதல் என்பது நிச்சயம் இந்தியாவிற்குச் சாதகமாக இருக்காது. எல்லையில் நடைபெறும் போர் தீவிரவாதிகள் எளிதில் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கே உதவும்.

தவிரவும், இராணுவ ரீதியில் எல்லா அம்சங்களிலும் நாம் பாக்கை விட வலிமையாக உள்ளோம் என்கிற நிலை பாக் அணு குண்டு வெடித்த அன்றோடு முடிவுற்று விட்டது. இன்று இரண்டுமே அணு வல்லமை உள்ள நாடுகள். 2001- 02 காலகட்டத்தில் இந்தியப் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதலை ஒட்டி ‘ஆப்ரேஷன் பராக்கிரம்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதலை நடத்தியபோது இந்தியத் தரப்பில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அதே நேரத்தில் இந்தியா மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் குறையவும் இல்லை. கிஷ்ட்வார் (2001), ரகுநாத் ஆலயம் (2002), நந்திமார்க் (2003) முதலான தாக்குதல்களை எல்லாம் நாம் முறியடித்துவிட இயலவில்லை. வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையை ஒட்டி 2003க்குப் பின் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்புதான் எல்லையில் இவ்வாறு அவ்வப்போது தாக்குதலில் இரு தரப்பிலும் வீரர்கள் கொல்லப்படுவது குறைந்தது.

2000த்தில் இது போன்ற எல்லையோரத் தாக்குதல்களில் இந்தியத் தரப்பில் 114 வீரர்களும் 36 சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். 2001ல் இது 37 வீரர்கள் 17 சிவிலியன்களாக இருந்தது. 2002ல் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் 81, சிவிலியன்கள் 74. 2003ல் இது 29 வீரர்கள் 38 சிவிலியன்கள். போர் நிறுத்தத்திகுப் பின் இந்த எண்ணிக்கை சுழியாகியது.

எல்லைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகள் ஏற்படாதவரை இதுபோன்று எல்லையில் படைகள் ஒன்றையொன்று சுட்டுக் கொள்வது என்பது நடந்து கொண்டுதான் இருக்கும். உண்மையில் “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை” ஒடுக்குவதற்காக எல்லை ஓரங்களில் சுடுவது என்பதை இந்தியாவே தொடங்கியது என்பதையும் நாம் கவனிக்கத் தவறலாகாது,

இன்று பாகிஸ்தானுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் எனப் படு தீவிரமாகப் பா.ஜ.க பேசி வந்தபோதும் அது ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் ஓரளவு பொறுப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். 2001 பாராளுமன்றத் தாக்குதலை ஒட்டி பாக் மீது போர் தொடுக்க வேண்டும் என்கிற கருத்துக்களை முறியடிக்கத் தான் எத்தகைய முயற்சிகளெல்லாம் செய்ய வேண்டி இருந்தது என்பது குறித்து அன்றைய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் தனது நூலில் குறிப்பிடுகிறார். அதேபோல இந்திய பாக் உறவில் வாஜ்பேயி – முஷாரஃப் பேச்சுவார்த்தையும், அதன் விளைவான போர்நிறுத்தமும் இந்திய பாக் உறவில் ஒரு மைல் கல் எனலாம்.

சென்ற ஆகஸ்ட் 4 அன்று பாக் உடனான பேசுவார்த்தையை உடனே நிறுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு மற்றும் அயலுறவுத் துறை சார்ந்த சுமார் நாற்பது உயரதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேர்தலுக்குப் பின் ஒருவேளை பா.ஜ.க தலைமையில் கூட்டணி அரசு அமைந்தால் அதில் தமக்கு ஒரு பதவி என்பதைக் காட்டிலும் வேறு எந்த நல்ல நோக்கத்தையும் இந்த அறிக்கை கொண்டிருக்கவில்லை.

அதே நேரத்தில் ஆகஸ்ட் 12 அன்று “அமைதிக்கான இந்திய பாகிஸ்தான் படைவீரர்களின் முன்முயற்சி” (Indo Pak Soldiers Peace Initiative) என்கிற அமைப்பின் இந்தியக் கிளை வெளியிட்ட அறிக்கை இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. ஐந்து இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்த இவர்கள், மோதல் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது, பேச்சுவார்த்தைகள் ஒன்றே இன்றைய தேவை எனக் குரல் எழுப்பினர். “இரு நாடுகளிலும் உள்ள மக்கள் அதிகாரம் பெறுவதற்கும், வளம் பெறுவதற்கும் அமைதி ஒன்றே வழி” என அந்த அறிக்கையில் முன்னாள் படை வீரர்கள் முழங்கினர்,

மக்கள் நலனை  முன்நிறுத்துபவர்கள் பேச்சு வார்த்தைக்கு முன்னுரிமை அளிப்பதும், சொந்த மற்றும் அரசியல் நலன் சார்ந்து பேசுவோர் பேச்சு வார்த்தைகள் கூடது எனச் சொல்வதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *