இந்திரன் தோற்றான் புத்திரன் வென்றான்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 13  

(மணிமேகலைக் காப்பியத் தொடர் – பிப்ரவரி, ‘தீராநதி’)

          

பிராமண மதத்தைச் சிரமண மதங்கள் எதிர்கொண்ட விதம் தனித்துவமானது. ஆன்மா, இறை, வேள்வி முதலானவை குறித்த பிராமண மதக்  கருத்தாக்கங்களைச் சிரமண மதங்கள் முற்றிலுமாக மறுத்தாலும் இந்திய மதங்களுக்கென உருவாகி இருந்த சில பொது நம்பிக்கைகள், கதைகள், கடவுளர்கள் ஆகியவற்றை அவை ஏற்றுக் கொண்டன. ஆனால் அவற்றை பிராமண மதம் எவ்வாறு முன்வைத்ததோ அப்படியாக அல்லாமல் முறிலும் எதிராகவும் பல நேரங்களில் தலைகீழாகவும் அவற்றை அவை ஆக்கிய விதம் நுணுக்கமானது மட்டுமல்ல சுவையானதும் கூட. அப்படி ஏற்றுக் கொண்ட கடவுளர்களில் ஒருவந்தான் இந்திரன்.

இந்திரனோ தேவர் தலைவன். ஒரு எளிய, யாருமற்ற, பெற்றோர் யாரென அறியாத ஆபுத்திரனை, “மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன்” என அவனுக்குச் சமமாக நிறுத்துகிறார் சாத்தனார். இந்த மாபெரும் உலகில் வசிக்கும் உயிர்கள் அனைத்தின் பசியையும் போக்கும் பெரும் பேறு பெற்றவம் ஆபுத்திரன். அந்தப் பெருமை தேவர் தலைவனுக்குச் சற்றும் குறைந்ததல்ல என்பது கருத்து. “பேராற்றல் மிக்க தேவர்களின் வேந்தனே! மண்ணுலகில் உள்ள எம் போன்றோரில் நல்வினை, தீவினைகளை அங்கிருந்து கொண்டு மதிப்பிடுகிறவர்கள் நீங்கள். தருமம் செய்யும் மக்கள், எளியோரைப் பாதுகாத்திருப்போர், நற்றவம் செய்வோர், பற்றறுக்க முயல்வோர் முதலானோர் வாழும் உலகு வாய்க்கப் பெறாதவர் நீங்கள்”- எனத் தேவருலகைக் காட்டிலும் இம் மண்ணுலகம் சிறந்தது எனத் தனக்கு வரம் அளிக்க வந்த இந்திரனுக்குச் சொல்வான் அந்த எளியவன்.

“பசித் துயருடன் வந்தோரின் கொடும்பசியைத் தீர்த்து அவர்கள் முகத்தை இனிதாக்கும் பணியே தெய்வம் எனக்குக் காட்டிய வழி. இந்தப் பணிக்குரிய எனக்குத் தேவர் கோமான் நீ என்ன தந்துவிட இயலும்? உண்டியா, உடுப்புக்களா, பெண்களா இல்லை என்னைப் பாதுகாக்க யாருமா?” என்றந்தப் பெற்றோர் பெயரறியா இளைஞன் எள்ளி நகையாடியபோது தேவருலகத் தலைவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

புராண தெய்வங்களுக்கே உரித்தான குயுக்தியும் தந்திரமும் மிக்க இந்திரன் குறுக்கு வழியில் யோசித்தான். இவ்வுலகில்; பசி இருந்தால்தானே அதை ஆற்றுவாய்.. பசியே இல்லாமல் செய்தால்? “இந்த நீணிலம் முழுமையும் நீர் பெருகி வளம் சுரக்க” என ஆணையிட்டு அகன்றான் தேவர் தலைவன். பன்னிரண்டு ஆண்டுகளாக மழையின்றிக் காய்ந்து கிடந்த பாண்டி நாட்டில் பெருமழை பெய்ய அங்கு எல்லா வளமும் சுரந்தது. பசித்தோர் இல்லாத அந்த நாட்டில் அவன் தன் தெய்வ ஆணையை எப்படி நிறைவேற்றுவான்? என்னேரமும் பசித்தோர் நிறைந்திருந்த அவனது அம்பலப் பீடிகை இப்போது சோம்பேறிகள், காமுகர்கள், தூர்த்தர்கள், வம்பு பேசுவோர், சூதாடுவோர் முதலானோரால் நிறைவதாயிற்று.

தன் அம்பலத்தை விட்டு நீங்கிப் பசித்தோரைத் தேடித் திரிந்த அவன் கேலிக்குரியவன் ஆனான். தன் எல்லாச் செல்வங்களையும் கடலில் பறிகொடுத்தவன் போல அலைந்து திரிந்து கொண்டிருந்த அவனை அப்போதுதான் கப்பலிலிருந்து இறங்கிய சிலர் கண்டு சாவக நாட்டில் (Jawa) பெரும் பஞ்சம் நிலவி உயிர்கள் செத்தழிவதைக் கூறினர்.

சாவகம் செல்லும் அக்கப்பலில் ஏறினான் ஆபுத்திரன். வழியில் கடல் சீற்றம் காரணமாக அம்மரக்கலம் மணிபல்லவத்தீவில் நின்றது. இறங்கியவன் ஏறினான் என எண்ணி நள்ளிறவில் அம்மரக்கலம் அகன்றது.

தன்னை விட்டு விட்டு மரக்கலம் அகன்றதை அறிந்த ஆபுத்திரன் துயரம் கொண்டலைந்தான். அள்ள அள்ளக் குறையாத அந்த அரிய பாத்திரம் பயனற்றுத் தன் கரங்களில் இருப்பதை வெறுத்தான். அங்கிருந்த கோமுகிப் பொய்கையில் அதனை விட்டு, “ஆண்டுக்கு ஒருமுறை இப்பாத்திரம் வெளிப்படட்டும்.  அருளரம் பூண்டு ஆருயிர் ஓம்பும் யாரும் இங்கு தோன்றும் நாளில் அவர் கைப் புகுவாய்” என அதை வேண்டி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தான்.

கீழ்த் திசையில் தோன்றி மேற்திசையில் மறையும் ஞாயிறுபோல மணிபல்லவத்தீவில் உடலைத் துறந்த ஆபுத்திரன் சாவகத்தில் வாழ்ந்திருந்த மண்முக முனிவன் வளர்த்த பசுவயிற்றில் மீண்டும் பிறப்பெடுத்தான் என்று ஆபுத்திரன் வரலாற்றையும் அந்த தெய்வப் பாத்திரம் மணிமேகலையை வந்தடைந்ததையும் விளக்குவார் அறவணர். இப்போது ஆபுத்திரனை வயிற்றில் ஏந்திய பசுதான் தன் முற்பிறப்பில் அவனுக்குப் பாலூட்டிய பசுவும் கூட. பசு ஈன்ற அம்மகவைப் பிள்ளைப் பேறற்ற சாவக மன்னன் ஏந்தி வளர்த்து அரசன் ஆக்குவான். ஆபுத்திரன் இப்பிறவியில் சாவக நாட்டின் அரசனான கதை இது.

அப்போது சோழ நாட்டில் பெரும் பஞ்சம். இந்நிலையில் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை வீணே வைத்திருக்கல் ஆகாது என அரும்பசி ஆற்ற மணிமேகலையை ஆயத்தப்படுத்தி அகல்வார் அறவணர்.

மதுமலர்க் குழலி என இக் காவியத் தொடக்கத்தில் நமக்கு அறிமுகம் செய்யப்பட்ட அச்சிறுமி துறவுக் கோலத்துடனும் கையில் அமுதசுரபியுடனும் வீதியில் இறங்கினாள். அது அம்மக்களுக்குப் பேராச்சரியத்தை அளித்தது. கூடிய மக்களில் சிறியோர், அவளது அழகில் ஈர்ப்புற்றோர், காமுகர் எனப் பல திறத்தாரும் இருந்தனர் என்கிறார் சாத்தனார்.

அப்படி நின்றவருள் என்ன உண்டாலும், எத்தனை உண்டாலும் தீராப்பசி எனும் நோயுடைய காயசண்டிகையும் ஒருத்தி. வடதிசைப் பிறந்து தென் திசை அடைந்து பொதியமலையில் தவமிருந்த ஒரு முனிவனின் சாபத்தால் இந்தக் கொடிய நோயை அடைந்தவள் அவள். அப்படியான சாபம் பெற்றதற்கும் அவளது பழ வினையே காரணம்.

மணிமேகலை ஒரு பவுத்த காவியமாயினும் இந்தியத் துணைக் கண்டத்தில் புத்தர் வரலாற்றுடன் இணைந்த புனிதத் தலங்களான லும்பினி, புத்த கயா முதலானவை காப்பியத்தில் இடம் பெறுவதில்லை. முற்றிலும் இன்னொரு புதிய புத்த வெளி ஒன்று இங்கு கட்டமைக்கப்படுகிறது. தென்னிந்தியா, இலங்கை, சாவகம் முதலான தென் கிழக்காசியா என்றொரு புதிய புத்த பிரபஞ்சம் ஒன்று அறிமுகப் படுத்தப் படுகிறது. தென்கிழக்காசிய என்பது பவுத்தத்தை ஏற்றுக் கொண்ட நிலப்பகுதியாக உருப்பெற்ற காலம் அது. இன்றும் அங்கு பவுத்தம் என்பது அதற்கே உரிய வடிவில் முக்கிய மதமாக உள்ளதை அறிவோம்.

‘பொதியில்’ எனும் பொதியமலை அகத்தியருடன் இணைத்துப் பேசப்படும் ஒன்று. அகத்தியர் முதன் முதலில் தமிழ் இலக்கியத்தில் தோன்றுவதும் மணிமேகலையில்தான். பரிபாடலிலும் அகத்தியர் உண்டெனினும், அதுவும் சங்க இலக்கியங்களிலேயே மிகவும் பின்னுக்கு வந்த ஒன்று. ‘பொதியில்’ எனும் சொல்லாக்கம் போதி + இல் என்பதிலிருந்து உருவாகி இருக்கலாம் எனவும் புத்தரின் அடுத்த அவதாரமாகக் கருதப்படும் அவலோகீதீஸ்வரர் ஆலயம்தான் இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோவில் என்றும் சொல்கிறார் பவுத்த அறிஞர் ஹிகாசோகா. தேரன் + ஊர் என்பதுதான் தேரூர் என ஆகியது என்பது அவர் கருத்து. அகத்தியருக்குச் சிலைகள் தென்கிழக்காசிய நாடுகளில் உண்டு. மணிமேகலையைப் போல இன்றும் அழியாமல் நமக்குக் கிடைத்துள்ள இன்னொரு பவுத்த நூலான வீரசோழியம் அகத்தியரை அவலோகிதீஸ்வரருடன் இணைத்துப் பேசுவதும் குறிப்பிடத் தக்கது. மணிமேகலை மற்றும் அதற்குப் பிந்திய காலத்தில் நிலைபெற்றிருந்த தெற்கத்திய பவுத்தத்தில் அகத்தியருக்கு ஒரு முக்கிய இடமிருந்தது என்பார் ஆனே மோனியஸ்.

(அடுத்த இதழில் பணிமேகலையும் பத்தினி வழிபாடும்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *