இந்துத்துவமும் தமிழ்நாடும்

இதழொன்று என்னிடம் கேட்ட கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க வேரூன்றத் தொட்டங்கியுள்ளது என்பது உண்மையா? அதற்கான காரணங்களாக நீங்கள் கருதுவது என்ன?

இதற்கு நான் சொன்ன பதில் :

ஒருகாலத்தில் “இது பெரியார் பிறந்த மண், இங்கே இந்துத்துவம் காலூன்ற முடியாது” என முழங்குவது வழக்கம்; இன்று அது பொய்யாகி விட்டது; திராவிடக் கட்சிகளே ஒன்று மாற்றி ஒன்று பா..ஜ.க வுடன் கூட்டு சேர்கின்றன. பா.ஜ.கவும் இந்துத்துவ சக்திகளும் இன்று இங்கு ஓரளவு குறிப்பிடத்தக்க சக்திகளாக உருப்பெற்று வருவதை யாரும் மறுக்க இயலாது. அதற்கான காரணங்களாக நான் கருதுபவை:

1. திராவிடக் கட்சிகள் நீர்த்துப்போனமை (bankruptcy); பார்ப்பனீயம் எனப் பெரியார் சொன்னபோது அவர் பார்ப்பனர்களின் சமூக/ அரசியல் மேலாண்மையை (social and political hegemony) மட்டும் கேள்விக்குள்ளாக்கவில்லை. அதன் சடங்கு மேலாண்மையையும் (ritual hegemony), அதற்குக் காரணமான இந்துத்துவத்தையும் அவர் எதிர்த்தார். பெரியாருக்குப் பிந்திய திராவிடக் கட்சிகள் popular politics ஐக் கையில் எடுத்தபோது “பார்ப்பனீயம்தான் எங்கள் எதிரி, பார்ப்பனர்கள் அல்ல” எனவும், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனவும் பேசத் தொடங்கியபோது கொள்கையளவில் அவை நீர்த்துப்போவது தொடங்கியது; கருத்தியல் ரீதியாக திராவிடத்தில் அப்படி ஒன்றும் பற்றில்லாத எம்.ஜி.ஆர் கட்சியை உடைத்தபோது பார்ப்பன / இந்துத்துவ எதிர்ப்பு என்பது முற்றிலும் இல்லாமற் போனது; ஜெயா கட்சியைக் கைப்பற்றியபோது அவரே ஒரு பார்ப்பனராக இருந்தது மட்டுமல்ல. “நான் பாப்பாத்தி என்பதில் பெருமைப் படுகிறேன்” எனச் சட்ட மன்றத்திலேயே அறிவித்தவர். சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பன இந்துத்துவக் கருத்தியலாளர்களை தன் அரசியல் ஆலோசகராகக் காட்டிக் கொள்வதில் அவர் வெட்கப்பட்டதும் இல்லை. வை.கோவைப் பொருத்தமட்டில் அவர் எந்நாளும் பார்ப்பன எதிர்ப்பு / சாதி எதிர்ப்பு என்கிற திராவிட அரசியல் கூறுகளை முன் வைத்ததே இல்லை. 2002 Gujarat Pogrom க்குப் பின்னும் இம்மியும் வெட்கப்படாமல் நரேந்திரமோடிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றவர் அவர்.

2. மாநிலக் கட்சிகள் எப்போதும் தேசிய / உலக அரசியல்களில் கருத்துச் செலுத்துவதில்லை; தேர்தல் அறிக்கைகளில் கூட அவை foreign policy பற்றியெல்லாம் அதிகம் பேசுவதில்லை. அந்த அரசியல்களில் இவை எப்போதும் சமரசமாகத் தயாராகவே உள்ளன; தவிரவும் இன்றைய FPTP தேர்தல் முறையில் எவ்வளவு வலிமையான கட்சியானாலும் கூட்டணி தேவைப்படுகிறது. அந்த வகையில் திராவிடக் கட்சிகள் எதிர் எதிரான இரண்டு கட்சிகளானபோது ஒன்று காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் இன்னொன்று பா.ஜ.க வுடன் கைகோர்க்கத் தயங்குவதில்லை.

3. ஈழ ஆதரவு என்கிற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் வெளிப்படையாக பா.ஜ.கவை மேடை ஏற்றின. தமது மேடைகளைத் தவிர, ஏறிப் பேச இடம் இல்லாதிருந்தவர்களுக்கு மேடை அமைத்துத் தந்தவர்கள் நெடுமாறன் முதலிய தமிழ்த் தேசியர்கள்.. தமிழ்த் தேசியம் என்றைக்கும் சாதி / இந்துத்துவ எதிர்ப்பு பேசியது கிடையாது. அவர்களைப் பொருத்தமட்டில் எல்லாம் “தமிழ்ச் சாதிகள்” தான்; இந்து மதம் தமிழர் மதம்; சமண பவுத்த மதங்களே வடவர் மதம்; கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அந்நிய மதங்கள். தமிழ்த் தேசியத்தின் முன்னோடி ம.பொ.சி தான் இந்து எனச் சொல்வதில் பெருமை கொள்வதாக அறிவித்தவர். தமிழன் என்பதைக் காட்டிலும் இந்து என்பது இன்னும் பெரிய அடையாளம் என்றவர். சுருங்கச் சொன்னால் 30 ஆண்டு கால ஈழப் போராட்டம் இங்கு இந்துத்துவ / பாசிச / ஏகாதிபத்திய எதிர்ப்புகளை நீர்த்துப்போக வைத்ததே உண்மை.

4. இந்துத்துவ எதிர்ப்பை நீர்த்துப்போக வைத்ததில் தமிழகத்தில் வளர்ந்த தலித்தியம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. தலித் அறிவுஜீவிகளாக அறியப்பட்டோர் திராவிடக் கட்சிகளே தலித்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் சாதி ஆதிக்கத்திற்கும் காரணம் என்கிற நிலையை எடுத்தனர். தனிப்பட்ட நலன்களுக்காக சில தலித் அறிவுஜீவிகள் பார்ப்பன நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டனர். இன்று மோ டி குரூசின் நாவலை வெளியிடமுடியாது என அறிவித்த நவாயனா பதிப்பகம் வி..சி.கவின் ரவிக்குமார் மற்றும் ஆனந்த் என்கிற திராவிட எதிர்ப்பு பேசும் பார்ப்பனர் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இந்திய அளவில் பெரியார் எதிர்ப்பைக் கொண்டு சென்றதில் ஆனந்தின் பங்கு முக்கியமானது. “சிறியவன் ஆனந்த்” என்கிற பெயரில் தமிழிலும் ஆனந்த் என்கிற பெயரில் ஆங்கிலத்திலும் இந்த ஆனந்த் எழுதிய கட்டுரைகள் பெரியாரையும் திராவிடக் கட்சிகளையும் கொச்சைப்படுத்தின. “பெரியார் என்றால் தமிழ் நாட்டில் யாருக்கும் தெரியாது. அது ஒரு ‘பெரிய ஆறு’ (Big River) என்றுதான் நினைத்துக் கொண்டுள்ளனர்’ என outlook ல் எழுதியவர் ஆனந்த். காலச்சுவடு எனும் பார்ப்பன இதழில் ஆசிரியர் குழுவில் இருந்த ரவிக்குமார் அதில் பெரியார் ஒரு பெண்பித்தராக அலைந்தவர் என்கிற ரீதியில் எழுதினார். தமிழக தலித் அறிவுஜீவிகள் + பார்ப்பன நிறுவனங்கள் மத்தியில் உருவான இந்தக் கூட்டணி தீராவிட எதிர்ப்பு பேசியதே தவிர, திராவிடத்தை நீக்கிய அந்த இடத்தில் அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை வைத்ததில்லை. அந்தக் காலியிடத்தை இந்துத்துவ சக்திகள் ஆக்ரமிப்பதைப் பற்றிக் கவலை கொண்டதுமில்லை.

4. இங்கே திராவிட இயக்கத்தின் வீச்சால் இந்துத்துவ சக்திகள் ரொம்பவும் அடக்கி வாசிந்துக் கொண்டிருந்த போதிலும் மிக ஆழமாகவும் அமைதியாகவும் தொடர்ந்து அவர்கள் இம் மண்ணில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். காந்தி கொலையால் கிடைத்த கெட்ட பெயர்,, அதை ஒட்டிய தடை, பின் நெருக்கடி நிலை, அதை ஒட்டிய தடை ஆகியவற்றின் பின்னணியில் அமுக்கமாக வேலை செய்து கொண்டிருந்த அவர்கள் மீனாட்சிபுர மதமாற்றத்தை ஒட்டி வெளியே வந்தனர். அத்வானியை எல்லாம் இங்கு அழைத்து வந்து தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினர். இந்து முன்னணி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது, வெறுப்புப் பேச்சுக்கள் கலவரங்கள் முதலியன ஆங்காங்கு நிகழ்த்தப்பட்டன. கோவை, கிழக்குக் கடற்கரைச் சாலை, கன்னியாகுமரி மாவட்டம் முதலான முஸ்லிம் / கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் உருவாக்கிய polarisation இன்று அவர்களுக்குக் கைகொடுக்கிறது.

5. சாதிக் கட்சிகள் எதுவும் பெரிய அளவில் மத எதிர்ப்பு கொண்டவையாக இருப்பதில்லை.. இந்தியாவில் நடைபெறும் மதக் கலவரங்களில் ஓரம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மோதல் எனப் பொத்தாம் பொதுவாக அவற்றைச் சொல்லிவிட இயலாது. இந்துக்களிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் முக்கிய பங்கேற்கும் வன்முறையாகவும் அவை உள்ளன. இந்தக் ‘குறிப்பிட்ட சாதி’ என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றாக இருக்கலாம். முசாபர்நகரில் சமீபத்தில் நடந்த கலவரம் வெறுமனே ஒரு இந்து முஸ்லிம் கலவரம் மட்டுமல்ல; அது ஒரு ஜாட் – முஸ்லிம் கலவரமும் கூட. எனவே சாதிக் கட்சிகள் எளிதாக இந்துத்துவத்துடன் ஐக்கியமாகின்றன. வருண வரிசையில், தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் இங்கே ஷத்திரிய வருணம் கிடையாது. எல்லா இடைநிலைச்சாதிகளும் தம்மை ஷத்திரியர் என உரிமை கோருவதும் இன்று பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ம.க வின் வன்னியர் சாதி அமைப்பின் அடையாளம் அக்கினிச் சட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. இன்றைய சமூகம் சமகாலத் தகவல்களால் கட்டப்பட்ட சமூகமாக உள்ளது. சற்றைக்குப் பிந்திய வரலாறைக்கூட அறியாதவர்களாக இன்றைய இளைஞர்களும், சற்றைக்குப் பிந்திய வரலாறையும் மறந்தவர்களாக மற்றவர்களும் உள்ளனர். இந்தத் தேர்தலில் பங்கு பெறும் புதிய வாக்காளர்கள் 18 கோடி பேர். பா.ஜ.க மற்றும் மோடியின் பழைய வரலாறுகளை அறியாத / மறந்த மக்களின் மத்தியில் இந்துத்துவம் தன்னைப் பதித்துக் கொள்வது எளிதாகி விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *