உளவுத் துறையிடம் காவல் அதிகாரம் இருக்கக் கூடாது

(‘மக்கள் ரிபோர்ட்’ இதழில் பிரசுரமான எனது பேட்டி)

கடந்த 19ம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்கிற வெங்காய வியாபாரி இந்திய இராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதற்காகவும், இந்தியாவை சீர்குலைப்பதற்காக வெளிநாட்டு சக்திகளோடு இணைந்து சதி வேலையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் வழியாக செய்தி சொன்னது திருச்சி கியூ பிரிவு போலீஸ்.

அன்சாரி கைது விவகாரத்தில் போலீஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் அது குறித்த உண்மை நிலை என்ன என்பதை கண்டறிவதற்காக பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு தஞ்சைப் பகுதியில் முகாமிட்டிருக்கும் தகவல் கிடைக்கவே மக்கள் ரிப்போர்ட்டுக்காக பேராசிரியர் அ. மார்க்ஸை நேரில் சந்தித்தோம். இந்த வழக்கு தொடர்பாக தனது குழுவுடன் சென்று கண்டறிந்த உண்மைகளையெல்லாம் தொகுத்து திருச்சி பிரஸ் கிளப்பில் 24-09-2012 அன்று அறிக்கையாக வெளியிடுவதற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மக்கள் ரிப்போர்ட்டுடனான நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கித் தந்தார் அ. மார்க்ஸ். அவருடனான நேர்காணலை வாசகர்களுடன் பரிந்து கொள்கிறோம்.

மக்கள் ரிப்போர்ட்: உண்மை அறியும் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள்?

மார்க்ஸ்: நான், கோ. சுகுமாரன், எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் பிரபா கல்விமணி, பேரா. கோச்சடை, வழக்குரைஞர் கமருத்தீன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறோம்.

ம.ரி : உண்மை அறியும் குழுவின் நோக்கம்தான் என்ன?

மார்க்ஸ் : காவல்துறையினரால் பாரதூரமான குற்றச்சாட்டுகள், பெரிய வழக்குகள் போடப்படும்போது, அதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதிலுள்ள உண்மைத்தன்மையை அறிந்து அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் சொல்வதுதான் எங்கள் நோக்கம்.

ம.ரி: அதிராம்பட்டினம் அன்சாரி மீது அப்படியென்ன குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது போலீஸ்?

மார்க்ஸ்: அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்களை இலங்கைக்கு கடத்த முயன் றதாகவும், இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ம.ரி: இந்த குற்றச் சாட்டுகளில் உண்மை இருப்பதாக உங்கள் குழு கருதுகிறதா?

மார்க்ஸ்: அது குறித்துத்தான் ஆய்வு செய்ய வந்துள்ளோம்.வழக்கில் பல அய்யங்கள் உள்ளன. ஏனென்றால் அன்சாரி பிளாக்பெரி செல்போனை வைத்துக் கொண்டு ஊட்டியில் இயங்கும் இந்திய இராணுவ தளத்தை வெளியில் ரோட்டில் நின்று கொண்டு படம் பிடித்தார். அந்தப் படத்தை இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்தார் என்று எஃப். ஐ.ஆரில் சொல்லப்படுகிறது. இந்த எஃப்.ஐ.ஆரில் பல முரண்பாடுகள் உள்ளன. அவற்றை நாங்கள் தொகுத்திருக்கும் உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம். இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவமே இந்த இராணுவ தளத்தில் பயிற்சி அளிக்கும்போது அன்சாரியின் புகைப்படம், அதுவும் வெளியில் ரோட்டிலிருந்து எடுக்கும் படம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவருக்கு எதற்கு? அவர்களுக்கு கிடைக்காத என்ன இரகசியத்தை இந்த செல்போன் படங்கள் தந்து விட முடியும்? இந்தியாவும் இலங்கையும் “மோஸ்ட் ஃபேவர்டு நேஷன்ஸ்’ என்ற அடிப்படையில் செயல்படுவதை நாம் அறிவோம் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ம.ரி: தூத்துக்குடி துறைமுகம் போன்ற முக்கிய இடத்தின் வரைபடங்கள் அன்சாரியிடம் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கூறுகிறதே!

மார்க்ஸ் : இன்று கூகுள் உள்ளிட்ட இணைய தளங்களில் இவர்கள் சொல்லக் கூடிய மேப்கள் கிடைக்கின்றன. அதனால் அன்சாரியின் மூலம் இதை வாங்க வேண்டியது இல்லை. அதுவும் சி.டி.யில் பதிவு செய்து நேரடியாக கொடுக்க அன்சாரி இலங்கைக்கு போனார் என்பதும் நம்பும்படியாக இல்லை.

ம.ரி : அன்சாரி கைது செய்யப்பட்டது குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல் வருகிறதே?

மார்க்ஸ் : காவல்துறை 19ம் தேதி திருச்சி டோல் கேட்டில் விரட்டிப் பிடித்து கைது செய்ததாக சொல்கிறது. அது உண்மையல்ல. அன்சாரியை 16ம் தேதியன்றே திருச்சி விமான நிலையத்தில் கைது செய்து காவல்துறை வைத்திருந்தது. திருச்சி டோல் கேட்டில் அன்சாரியை கைது செய்யவில்லை.

ம.ரி : அப்படியானால் 16ம் தேதி யன்று கைது செய்யப்பட்ட அன் சாரியை 19ம் தேதி கைது செய்த தாக காவல்துறை ஏன் பொய் சொல்ல வேண்டும்?

மார்க்ஸ் : பொதுவாக பொய் வழக்கை ஜோடிப்பதற்காக இந்த அவகாசத்தை காவல்துறை பயன்படுத்திக் கொள்ளும். அன்சாரி விஷயத்திலும் அப்படித்தான் நடந்து இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். உண்மையில் அன்சாரி காவல்துறையால் கண்காணிக்கப்பட்டிருந்தால், அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கு உளவுத்துறையிடம் ஆதாரம் இருந்தால் கைது செய்த உடனே அன்சாரியை கோர்ட்டில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறை அப்படிச் செய்யவில்லை. அதுவும் எங்களுக்கு சந்தேகத்தை கிளப்புகிறது. தஞ்சை வல்லம் பகுதியைச் சேர்ந்த ராதா என்ற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுடன் அன்சாரி நெருங்கிப் பழகினாராம். அவரிடமிருந்து இராணுவ ரகசி யங்களைப் பெற்றாராம். இதை போலீஸ் சொல்கிறது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளிடம் எல்லாம் இராணுவ ரகசியங்கள் இருக்கும் என்பது நம்பும்ப டியாக இல்லை. அதே சமயம், அந்த இராணு அதிகாரியை போலீஸ் ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்பதற்கும் பதிலில்லை.

ம.ரி : அன்சாரியை வழக்கத்திற்கு மாறாக கியூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பது பற்றி?

மார்க்ஸ் : ஆமாம். கியூ பிரிவு போலீஸ் கைது செய்து வழக்கை நடத்துகிறது. கியூ பிரிவு போலீஸ் நக்ஸலைட்டுகளின் செயல்பாடுகளை உளவு பார்க்க 1970களில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சீருடை கிடையாது. காவல் நிலையத்திலும் பெயர் பலகை கிடையாது. காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் செயல்பாடுகளில் வேறுபாடுகள் உண்டு. உளவுத்துறை என்பது இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்றும் கூட சொல்லலாம். இது சேகரிக்கும் உளவுத் தகவல்களை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. காவல்துறை என்பது அப்படியல்ல… ஒருவரை கைது செய்தால் அவர் குற்றவாளி என போலீஸ் கருதினால் முறையாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தல், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைது செய்தல், பொருட்களை பறிமுதல் செய்தல், தேடுதல், அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். இதோடு இதன் பணி முடியாது. அது சேகரித்த தகவல்களை, சாட்சியங்களின் உண்மைத் தன்மையை நீதிமன்றத்தில் அது நிறுவியாக வேண்டும்.

ம.ரி : ஒரே இலாகா போலீசாரே கைது செய்து வழக்கை நடத்தக் கூடாது என்கிறீர்களா?

மார்க்ஸ் : அப்படியல்ல. உளவுத் துரைக்குக் காவல்துரை அதிகாரம் இருக்கக்கூடாது. இருந்தால் இந்த இலாகாவை பயன்படுத்தி அரசியல் காரணத்திற்காகவும், மற்ற சுய லாபத்திற்காகவும் பொய்யான வழக்கைப் போட்டு, போலியான ஆதாரங்களை தயார் செய்து யாரை வேண்டுமானாலும் பழி வாங்க முடியும். ஆகவேதான் கூடாது என்கிறோம். இது மனித உரிமை மீறலாகவும் அமையும்.

ம.ரி : கியூ பிரிவு போலீஸ் இந்த வழக்கை நடத்துவது மனித உரிமை மீறலாகக் கருதுகிறீர்களா?

மார்க்ஸ் : மனித உரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமாமியங்குவதற்கு வழைவகுக்கும் கியூ பிரிவை கலைக்க வேண்டும்.மேலை நாடுகளில் கூட இதுபோல காவல் அதிகாரமுடைய உளவு அமைப்புகள் கிடையாது. எனவே கியூ பிரிவு இந்த வழக்கை நடத்துவது சரியல்ல.

ம.ரி : அன்சாரி மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்றால் அதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறீர்களா?

மார்க்ஸ் : இஸ்லாமியர்கள் இறைத் தூதராக ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகத்தை உண்மைக்குப் புறம்பாக அவதூறு கூறி படமெடுக்கப்பட்டதை கண்டித்து அந்த இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்தக் கொடும் செயலுக்கு துணைபோகும் அமெரிக்க அரசை கண்டித்தும் உலகம் முழுவதும் போராட்டம் நடந்தாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், இஸ்லாமிய சமுதாயத்தை அச்சப்படுத்தி போராட்டத்தை வீரியமிழக்கச் செய்யவும்தான் அன்சாரி மீது வழக்கு போடப்பட்டிருக்கலாம் என்று நம்பத் தோன்றுகிறது. அன்சாரி கைதுக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்கும்படுகிறது.

(பேட்டி & படங்கள் : நாச்சியார் கோவில் அபு முஜாஹிதா)

இஸ்லாமியர்கள் சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும்!

அன்சாரி கைது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவரும் சமூக ஆர்வலருமான ராஜவேலுவை நேரில் சந்தித்து கருத்து கேட்டோம். “இஸ்லாமிய சமூகம் முதலில் சட்ட ரீதியான விழிப்புணர்வை பெற வேண்டும். இதுபோன்ற வழக்குகளை சட்ட ரீதியாக எதிர் கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மிக முக்கியமாக, இஸ்லாமிய சமூகம், திமுக, அதை விட்டால் அதிமுகவை மட்டும் ஆதரிப்பதை விட்டு மாற்று அரசியல் சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து தங்களின் இருப்பை வலிமைப்படுத்த வேண்டும்…” என்றார் நம்மிடம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *