கஜா புயல் அழிவுகள் : ஒரு நேரடி கள ஆய்வு 

சென்ற நவ 14, 2018 அன்று நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திய கஜா புயல் அழிவுகள் குறித்து டிச06,07 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் ‘மக்கள் களம்’ இதழுக்கு எழுதப்பட்ட கட்ட்

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிகப் பெரிய இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பெரிதும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள இம்மாவட்டங்களில் பயிர்கள், மரங்கள் முதலியன பெரிய அளவில் அழிந்துள்ளன. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குடிசைகளும் ஓட்டு வீடுகளும் கிட்டத்தட்ட எல்லாமே அழிந்துள்ளன. கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமே தப்பித்துள்ளன. விவசாயிகளும் விவசாயத் தொழிலாளிகளும் பெரும் இழப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

1952 க்குப் பின் மிகப் பெரிய அழிவுகளைத் தமிழகத்தில் ஏற்படுத்திய புயல் இது எனக் கூறுகின்றனர். குறைந்த பட்சம் 45 பேர்கள் பலியாகி உள்ளனர் எனக் கூறப்படுகிறது. 65 பேர்கள் வரை இறந்துள்ளனர் என ஒரு பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இந்தப் புயல் அழிவு குறித்து மூன்று அம்சங்கள் இங்கே கவனத்துக்குரியன. 1.இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்வது குறித்த நம் தயாரிப்பு நிலை. 2.இந்தப் புயலின் ஊடாக விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு. 3.விவசாயத் தொழிலாளிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு.

நேரடி கள ஆய்வு மற்றும் ஊடகச் செய்திகள் ஆகியவற்றின் ஊடாக இவை குறித்துச் சிலவற்றைக் காணலாம்.

பேரழிவு நிர்வாகம் மேம்படுத்தப்படல் ஒரு உடனடித் தேவை

இந்தியத் துணைக் கண்டம், குறிப்பாகத் தென்னகம் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்பம். சுமார் 7,500 கி.மீ நீளமுள்ள கடற்கரை உள்ள ஒரு நாடு இது. தமிழகத்தில் மட்டும் கடந்த அறுபதாண்டுகளில் 40க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய புயல்கள் தாக்கி உள்ளன. 2015 ல் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மழை வெள்ளம், இந்த ஆண்டு கேரளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கு ஆகியன ஏற்படுத்திய வெள்ள அழிவுகள் கடந்த சில ஆண்டுகளில் நாம் எதிர்கொண்டவை.

ஆந்திரம், மே.வங்கம், ஒடிஷா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிகப் புயல் வெள்ள ஆபத்துகள் உள்ளவை எனவும், இதர பல மேற்குக் கடற்கரை மாநிலங்கள் அடுத்தகட்ட ஆபத்துகள் உள்ளவை என்றும் பகுக்கப்பட்டுள்ளன. ஆயினும் இவற்றை எதிர் கொள்வதற்கான நீண்ட காலத் திட்டங்கள் ஏதும் இங்கு இல்லை. ஒன்றை நாம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இயற்கையுடன் நாம் கொண்டுள்ள முறையும் நீதியும் அற்ற உறவின் ஊடாக இனி புயல் வெள்ள ஆபத்துகள் என்பன ஏதோ நூறாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக் கூடிய பேரழிவுகள் அல்ல. அவை எந்த நிமிடமும் நிகழலாம். ஒரே ஆண்டில் இருமுறை கூடவும் ஏற்படலாம். எனவே இது குறித்த விழிப்புணர்வும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளும் நமக்குத் தேவை. இப்படியான இயற்கைப் பேரிடர்களை எதிர் கொள்ளத்தக்க அகக் கட்டுமானங்கள், பாதிப்புகள் ஏற்படக் கூடிய பகுதிகளில் குடியிருப்புகளைத் தவிர்த்தல், புயல் வெள்ளங்களைத் தாங்கக் கூடிய வீடமைப்புகளை உருவாக்குதல், புயல் எப்போது கரையைக் கடக்கும், அது எந்தத் திசையில் நகரும் என்பவற்றைத் துல்லியமாகக் கணக்கிடும் Tropical Cyclone Ensemble Forecast முதலான சாதனங்களையும் அமைப்புகளையும் கடலோரப் பகுதிகளில் அமைத்தல் முதலான தொலை நோக்கிலான திட்டங்கள் நமக்குத் தேவை.

182 பேரை, உரிய எச்சரிக்கை செய்யாததால் பலி கொடுத்த ஓகிப் புயல் அழிவின்போதே இந்த மூன்னூகிப்புக் கருவிகளின் தேவைகளை நாம் வற்புறுத்தினோம். ஆனால் அந்தத் திசையில் எந்த நகர்வும் அரசிடம் இல்லை. கஜா புயல் கிட்டத்தட்ட ஒருவாரம் போக்கு காட்டியது. நவ 14 அன்று தமிழகத்துக்கு பெரிய ஆபத்தில்லாமல் அது U திருப்பம் மேற்கொண்டு எங்கோ கரையைக் கடக்கும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எப்படி நகரும் என ஊகிக்க வானிலை ஆய்வு மையங்களால் முடியவில்லை. உரிய கருவிகளும், பயிற்சியும் இன்மையுமே அடுத்த இரண்டு நாட்களில் (நவ 16) இந்த நான்கு கடலோர மாவட்டங்களில் இத்தகைய பேரழிவுக்குக் காரணமாயின.1G

பேரழிவு நிர்வாகம் என்பது இன்னும் துல்லியப்படுத்தப்படுதல் (professionalizing disaster management), தாக்குதல் சாத்தியம் மிக்க பகுதிகளில் குடிருப்புகளைத் தவிர்த்தல், குடிசைகளை கான்க்ரீட் வீடுகளாக மாற்றுதல் முதலியன உடனடித் தேவை என்பன நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.

அரசின் தோல்வி

அரசு இப்போது மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளதாக ஒரு பேச்சு இங்குள்ளது. வை.கோ, ப.சிதம்பரம், கி.வீரமணி முதலான தலைவர்களும் பெரிதாக இதைப் பாராட்டி வேறு உள்ளானர். புயல் வரப் போகிறது என்கிற எச்சரிக்கையைச் செய்தது, சில தாழ்வான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றியது, முதலுதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதெல்லாம் உண்மைதான்.

ஆனால் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தால்தான் அரசு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் எத்தனை அதிருப்தியுடன் உள்ளனர் என்பது விளங்கும். நான் சந்தித்த மக்கள் கிட்டத்தட்ட எல்லோரும் இதுவரை மக்களின் இழப்புகளை ஈடுக்கட்ட எதுவும் நடக்கவில்லை என்றனர். இரண்டு நாட்களாக நான் பலரையும் சந்தித்தேன். டிச 5 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 250 இடங்களில் மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தது. அதே நாளில் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை அறிக்கை இயக்கம் ஒன்றை நடத்தியது. நான் பேருந்தில் திருவாரூர் மாவட்டத்தில் பயணித்தபோது பல இடங்களில் சாலை மறியல்களும் நடந்து கொண்டிருந்தன.  முதலமைச்சர் அடையாளமாக வந்து தந்த அந்த 27 பொருள்கள் உள்ள மூட்டை என்பது அதற்குப் பின் யாருக்கும் தரப்படவில்லை. அமைச்சர்களுக்கு ஆங்காங்கு எதிர்ப்புகள் ஏற்பட்டபின் அவர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவதில்லை. என்னருகில் பேருந்தில் அமர்ந்திருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரு பெரியவர், “இந்த ஊர்காரர்தான் அமைச்சர் காமராஜ், பக்கத்து ஊர்லதான் திருமணம் செய்துள்ளார். அவர் இந்தப் பக்கத்திலேயே காணாம். முதலமைச்சர் பழனிச்சாமியுடன் வந்த கார்களின் பெட்ரோல் செலவை மட்டும் மக்களுக்குக் கொடுத்திருந்தால் இரண்டு நாட்களுக்குச் சாப்பிட்டிருப்போம்” என்றார்.

CPI கட்சியைச் சேர்ந்த தோழர் டி.வி.சந்திரராமன், CPM கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளர் தோழர் ரகுராமன், எனது மாணவரும் தற்போது வழ்க்குரைஞராகவும் பணி செய்யும் கவிஞர் தை.க, நகரில் புத்தகக் கடை வைத்துள்ள ஆனந்தன், என்னுடன் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேரா. அருளானந்தசாமி மற்றும் அப்பகுதிகளில் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியவர்கள் சொன்னவையிலிருந்து நான் அறிந்து கொண்டது இதுதான். நகர்ப்புறங்களில் ஓரளவு மின்சார வசதிகள் சரி செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் நகரை ஒட்டிய பகுதிகளிலும் அறுந்து தொங்கும் மின் கம்பிகள்  கூட இன்னும் நீக்கப்படவில்லை. ஓரிடத்தில் மின் கம்பிகளில் துணி காயப்போட்டிருந்தனர். கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகியும் மின் வசதி உட்புறப் பகுதிகளில் சரிசெய்யப்படவில்லை. முக்கிய சாலைகளில் இருந்த மரங்கள் நீக்கப்பட்டு பேருந்துப் போக்குவரத்துகள் சரி செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அவர்களின் குடியிருப்புகள் சரி செய்யப்படாமலேயே திருப்பி அனுப்பப் பட்டுப் பள்ளிகள் டிசம்பர் 5 முதல் செயல்படத் தொடங்கியுள்ளன..

நான் சென்ற போது மடப்புரத்திற்கு அருகில் உள்ளே தள்ளியுள்ள ஒரு குடிசைப் பகுதியில் தனியாக வசிக்கக் கூடிய ஒரு பெரியவரின் குடிசையைச் சுற்றி தண்ணீர் தேங்கி, அவர் உள்ளே போக முடியாமல் வெளியே நின்று கொண்டிருந்தார். திருத்துறைப்பூண்டி பெண்கள் பள்ளியில் தங்கவைக்கப்பட்ட ஒரு 50 குடும்பங்கள் மட்டும் அவர்களின் குடிசைப் பகுதி முற்றிலும் சீரழிந்துள்ளதால் பள்ளியை விட்டு அகல மறுத்து அங்கேயே தங்கியுள்ளனர்.

உதவித் தொகை எனவும் எதுவும் கொடுக்கப்படவில்லை. நூறுநாள் வேலைத் திட்டம் ஓரளவு செயல்படுகிறது. தோட்டங்களில் விழுந்த மரங்கள், மட்டைகள் முதலியவற்றை வெட்டி நீக்கும் பணிகளில் சிலருக்கு வருமானம் கிடைக்கிறது.

அரசு ஊழியர்கள் இழப்பீடுகளைக் கணக்கெடுக்கத் தொடங்கியுள்ளனர். அவ்வளவுதான்.

விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு

நாகை, தஞ்சை, திருவாரூர் முதலியன பெரிய அளவில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலையே நம்பியவை. அதிலும் இந்த டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக் காவிரி நீர் இல்லாமலும், பருவ மழை பொய்த்தும் போனதால் நெற் சாகுபடி குறைந்து தென்னை, பலா, வாழை, நெல்லி. மா, புளி முதலான பழச் சாகுபடிகளுக்கு அப்பகுதி மாறியுள்ளது.

தற்போதைய அழிவில் நெற்பயிர்களின் சேதம் ஒப்பீட்டளவில் குறைவு. முற்றியிருந்த நெற்பயிர்கள்தான் அழிந்துள்ளன. இளம்பயிர்கள் ஓரளவு தப்பி விட்டன. சுமார் 30 சத நெற்பயிர்கள் அழிந்துள்ளன எனலாம். அவர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முழு இழப்பிற்கும் உள்ள தொகையைக் கணக்கிட்டு இழப்பீடு அளிக்க வேண்டும்.

தென்னை மரங்கள்தான் அதிக அளவில் அழிந்துள்ளன. சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் உள்ள உயரமான கட்டிடங்கள் ஓரளவு வீசும் காற்றுக்குத் தடையாக இருந்து அதன் வேகத்தைக் குறைக்கும். இங்கு அப்படியான தடைகள் இல்லாததால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வேரோடு சாய்தும் கிடக்கின்றன. விழாத மரங்களிலும் பலவற்றில் கொண்டை எனச் சொல்லப்படும் மேற் பகுதி திருகிச் சுருண்டுள்ளன. மதுக்கூருக்கு அருகில் உள்ள வேப்பங்குளத்தில் உள்ள தென்னை ஆராய்ச்ச்சி நிலையமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நெர்சாகுபடியைப் பொருத்த மட்டில் இப்போது அழிவு ஏற்பட்டாலும் அடுத்த சில மாதங்களில் அடுத்த சாகுபடியைத் தொடங்கிவிட முடியும். ஆனால் வீழ்ந்த இந்தப் பழ மரங்களை மீண்டும் உருவாக்கி அது பயன்தரக் குறைந்தது ஏழெட்டு வருடங்கள் ஆகும். இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டுதான் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை விவசாயிகள் மரம் ஒன்றிற்கு ரூ 15,000 வரை இழப்பீடு கேட்கின்றனர். நால்வழிச்சாலை முதலானவற்றிற்காக மரங்கள் வெட்டப்பட்டபோது எந்த அளவு இழப்பீடு கொடுக்கப்பட்டதோ அந்த அளவு இப்போதும் கொடுக்கப்பட வேண்டும் என்றார் இன்னொரு விவசாயி. வீழ்ந்த மரங்களை வெட்டி அகற்றுவதும் விவசாயிகளுக்குப் பெரிய செலவு. அதற்கான இழப்பீடுகளும் உரிய அளவில் கணக்கிட்டுத் தரப்பட வேண்டும்.

வீழ்ந்த மரங்களைக் கணக்கெடுப்பதிலும் அரசு இப்போது எளிய மக்களுக்கு ஒரு துரோகம் செய்கிறது. 10 மரங்களுக்கு மேல் சேதமடைந்துள்ள “தோப்பு”களுக்கு மட்டுமே இழப்பீடு தரப்படும் என அறிவித்துள்ளது. இது எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றார் CPM கட்சியைச் சேர்ந்த ரகுராமன். பத்து மரங்களுக்குக் கிழே இருந்தால் பதியவே வேண்டாம் எனவும், மக்கள் ரொம்பவும் வலியுறுத்தினால் சும்மா ஒரு பேப்பரில் எழுதிக் கிழித்தெறிந்துவிடுங்கள் எனவும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கணக்கெடுக்க வந்த அதிகாரி சொன்னதாகப் பேரா. அருளானந்தசாமி குறிப்பிட்டார்.

இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. வீட்டைச் சுற்றியுள்ள கொஞ்ச நிலத்தில் உள்ள இப்படியான மரங்களை வைத்தே பிழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கும் வேலை இது. சொல்லப் போனால் இவர்களுக்கான இழப்பீடு சற்றி அதிகமாகத் தர வேண்டும் என்பதே நியாயம்.

தவிரவும் புயல் வாய்ப்புகள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் எளிதில் கீழே விழாத உயரக் குறைவான தென்னைகளை அரசு பிற பகுதிகளிலிருந்து வரவழைத்து இவ்விவசாயிகளுக்கு இலவசமாகத் தர வேண்டும்.

புளிய மரத்திற்கு இழப்பீடு கிடையாது என அரசு கூறியுள்ளதும் கண்டிக்கத் தக்கது. அவற்றுக்கும் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். தற்போது இடதுசாரிக் கட்சிகள் வைக்கும் கோரிக்கைகளில் இதுவும் அடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளிகள் மற்றும் குடிசை வாழ் மக்கள்

கஜா புயல் அழிவுகள் குறித்து ஆங்கில, தமிழ் இதழ்கள் மற்றும் ஊடகங்கள் நிறைய பயனுள்ள பதிவுகளைச் செய்துள்ளன. தென்னை மற்றும் பழ விவசாயிகளின் இழப்புகள் குறித்து பக்கம் பக்கமாக எழுதியுள்ளன. இவற்றை வரவேற்கும் அதே நேரத்தில் விவசாயத் தொழிலாளிகளுக்கும் குடிசை வாழ் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு இவற்றில் உரிய முக்கியத்துவம் அளிக்கப் படாததையும் இங்கே சுட்டிக் காட்டுவது அவசியம்.

பாதிக்கப்பட்டுள்ள இந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளிகள் என்போர் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. குடிசைவாழ் மக்களிலும் இவர்களே அதிகம். இவர்களில் கொஞ்சம் வசதி உள்ளவர்கள் தம் குடிசைகளைச் சிறு ஓட்டு வீடுகளாக மாற்றியுள்ளனர். அவையும் இன்று அழிந்துள்ளன.

கஜா புயலில்  குடிசை வீடுகள் புரட்டி எறியப்பட்டுள்ளன. ஓட்டுவீடுகளும், தகர மற்றும் பிளாஸ்டிக் ஷீட்கள் பொருத்தப்பட்ட கூரைகளும் பிய்த்து எறியப் பட்டுள்ளன. இவ்வாறு எறியப்பட்டவையும் அருகில் உள்ள கூரை வேய்ந்த குடிசைகள் மீது விழுந்து அவற்றையும் அழித்துள்ளன. இன்று இப்பகுதிகளுக்குச் சென்றீர்களானால் இந்தக் கூரை வீடுகளில் எஞ்சியவை தற்போது பல்வேறு அமைப்புகளாலும் கொடையாக அளிக்கப்பட்ட தார்பாலின்களைப் போத்திக் கொண்டு நீல, மஞ்சள் வடிவங்களில் காட்சியளிப்பதைக் காண முடியும். தாழ்வான பகுதிகளில்தான் இந்தக் குடிசைகள் பெரும்பாலும் உள்ளன. அங்கெல்லாம் தண்ணீர் புகுந்து சேராகக் குழப்பிக் கிடப்பதையும் காண முடிகிறது.

தற்போது அரசு கணக்கெடுக்கும்போது இப்படியான குடிசைகளில் இரண்டு சுவர்களும் வீழ்ந்திருந்தால்தான் இழப்பீடு தர முடியும் எனச் சொல்லியுள்ளதையும் சி.பி.எம் கட்சியின் ரகுராமன் குறிப்பிட்டார். இதையும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

குடிசை மக்கள் உள்ளடங்கி இருந்ததனாலும், சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்திருந்ததாலும் சாத்தங்குடி, ஆழங்கால், வினோபாஜி காலனி முதலான பல ஊர்களை மூன்று நாட்கள் வரை யாரும் அணுக முடியவில்லை, அவர்களுக்கு எந்த உதவியும் போகவில்லை என்றார் கவிஞர் தை.க. அவர் தன் சொந்த முயற்சியில் கோவையில் உள்ள நண்பர்களைத் தொடர்பு கொண்டு கொன்சம் ரெடிமேட் ஆடைகள் முதலியவற்றைப் பெற்று சில குடிசைப் பகுதிகளுக்குச் சென்று உதவியுள்ளார். உதவிப் பொருட்களைக் கொண்டு வருபவர்களைச் சாலை ஓரங்களில் உள்ளவர்கள் வழி மறித்துப் பெற்றுக் கொண்டு உள்ளே தள்ளியுள்ளவர்களுக்கு உதவிகள் சென்றடையா வண்ணம் தடுப்பது என்பது இம்மாதிரி இயற்கைப் பேரழிவுகளில் எப்போதும் நடப்பதுதான். இதனால் பாதிக்கப்படுவதும் குடிசை வாழ் பழங்குடி மற்றும் தலித் மக்கள்தான். இப்போதும் பல இடங்களில் அப்படித்தான் நடந்துள்ளது.

அந்தந்த சாதி அமைப்புகள் அவரவர் சாதிக்கு மட்டும் அதிக விளம்பரம் இல்லாமல் உதவி செய்ததையும் ஒருவர் குறிப்பிட்டார்.

“தென்னை, பழ மரங்கள் ஆகியவற்றின் அழிவால் அந்த விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. அந்தப் பண்ணைகளில் வேலை செய்த மரமேறித் தேங்காய் பறிப்பவர்கள், கீற்று முடைபவர்கள் முதலான தொழிலாளிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆடு மாடுகள் தீவனங்கள் இல்லாமல் அலைகின்றன. முகாம்களில் இருந்தவர்கள் ஒரு வாரம் கழித்துக் கட்டாயமாக வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்கள் போவதற்கு வீடுகள் இல்லை. குறைந்த பட்சம் பிளாஸ்டிக் படுதா முதலியவற்றையாவது கொடுத்தனுப்பி இருக்க வேண்டும். முகாமில் இருந்த வரைக்கும் அரிசி முதலியவற்றைக் கொடுத்தார்கள். கூட்டாஞ்சோறுபோல ஆக்கித் தின்றோம். இனி வேலையும் இல்லாமல், வீடும் இல்லாமல் இம்மக்கள் என்ன செய்வது?” என்றார் CPI கட்சியின் சந்திரராமன்.

“இன்று இப்பகுதிகளில் கீற்று கிடைக்கவில்லை. நூறு கீற்றின் விலை ஆயிரத்துப் பத்து ரூபாய். நாங்கள் கரூரிலிருந்து கீற்று வரவழைத்து இந்தக் குடிசைகளைக் கட்டிக் கொடுக்கிறோம்” என்றார் மொரார்ஜி தேசாய். இவர் ஒரு வக்கீல் குமாஸ்தா. சாதி மீறிய காதலர்கள் இவரைத்தான் நாடி வருவார்கள். இவர் உரிய சட்ட உதவிகளைச் செய்வார். இப்படியான உதவிகளைப் பெற்று திருமணம் செய்து கொண்டவர்களை அணுகி அவர்களது நன்கொடையில் பத்து குடிசைகளை இவர் புனரமைத்துக் கொடுத்துள்ளார். வேதனை என்னவெனில் அவரது எளிய சிறிய வீடும் முற்றாக அழிந்துள்ளது.

புயலடித்து இப்போது மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. கட்டாயமாக மக்கள் முகாம்களிலிருந்து அனுப்பப் பட்டுள்ளனர். பெரியநாயகிபுரம் எனும் இடத்தில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு தலித் குடியிருப்பு பற்றி எரிந்து சுமார் 50 வீடுகள் நாசமாயின. அங்குள்ளவர்கள் உதவியில் அவர்கள் தம் குடிசைகளைப் புதுப்பித்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இன்று அவர்களின் அந்தக் குடிசைகளும் அழிந்துள்ளன. அவர்கள் தாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பள்ளிக் கட்டிடத்திலிருந்து வெளியேற மறுக்கிறார்கள்.

குடிசைகளுக்குத் திருப்பி அனுப்பபட்டவர்கள் ஏதோ சொந்த முயற்சியில் கொஞ்சம் தம் குடிசைகளைப் புனரமைத்துக் கொண்டு வாழ்வைத் தொடங்கியுள்ளனர். இப்போது இழப்பீடு கணக்கிடும் அரசு புயலுக்குப் பின் அந்த வீடு அழிந்திருந்த புகைப்படம் வேண்டும் எனக் கேட்கிறது. அவர்கள் என்ன செய்வார்கள்?

பேரிடர் அழிவுகள் எல்லோரையும் பாதிக்கிறது. மேலே உள்ளவர்களின் இழப்பே வெளியில் தெரிகிறது. கீழே இருப்பவர்கள் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களை யாரும் கவனிப்பதில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *