கஸ்தூரிரங்கன் அறிக்கையின் மூன்று அடிப்படைகள்

கல்விக் கொள்கை 5

இந்திய அரசு விவாதத்திற்கு முன்வைத்துள்ள கல்விக் கொள்கை அறிக்கை தமிழகத்தில்தான் விரிவான விமர்சனத்துக்கு உள்ளாக்கப் பட்டுள்ளது. தமிழகம் தனித்துவமான அரசியல் பாரம்பரியம் உள்ளது என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது. பள்ளி மாணவர்கள் கட்டாயமாக இந்தி கற்க வேண்டும் என இவ் அறிக்கை மூலம் முன்மொழியப்பட்ட கருத்து இங்கு வெளியான எதிர்ப்பைக் கண்டு ஒரே நாளில் திரும்பப் பெறப்பட்டது. அதே நேரத்தில் இந்த 484 பக்க அறிக்கையை ’இந்தி’ மற்றும் ‘ஆங்கிலத்தில்’ மட்டுமே வெளியிட்டுள்ளதற்கு முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மோடி அரசு இறுதிவரை மதிக்கவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அறிக்கை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை ஊன்றிக் கவனித்தால் அவற்றில் 5ம் வகுப்பு முதல் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை எழுத வேண்டும், தொழிற் படிப்புகளுக்கு மட்டுமின்றி கலைக் கல்லூரிச் சேர்க்கை உட்பட எல்லாவற்றிற்கும் இனி கட்டாயமாக இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும் என்பவைதான் இன்று அதிகம் பேசப்படுகின்றன. இவை மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. எனினும் இத்துடன் வேறு ஆபத்தான உள் நோக்கங்களை இந்த அறிக்கை நுணுக்கமாக முன்வைப்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

இந்த அறிக்கை மூன்று வகைகளில் மிகவும் ஆபத்தானது. அவற்றை ஒவ்வொன்றாக மிகச் சுருக்கமாகக் காணலாம்.

1.மத்தியில் குவிக்கப்படும் அதிகாரம்

முதலில் இந்த கல்வியை மிகத் தீவிரமாக மையப் படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது. வெவ்வேறு பண்பாடுகள், பிரச்சினைகள், புவியியல் வேறுபாடுகள். இயற்கை அமைப்பு, வளர்ச்சி நிலை ஆகியவற்றுடன் அமைந்துள்ள இந்தத் துணைக் கண்டம் முழுமைக்கும் ஒரே கல்வித் திட்டம் சாத்தியமில்லை என்பது கல்வியியல் குறித்த அடிப்படை அறிவுள்ள யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை. அதனாலேயே இந்த நாட்டிற்கு அரசியல் சட்டம் அமைத்தவர்கள் கல்வியை மாநிலப் பட்டியலில் வைத்தனர். எனினும் அது 1976ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் ஊடாக பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் கல்வி தொடர்பான கொள்கைகளையும், சட்டங்ளையும் வகுப்பதில் மத்திய அரசு அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. மாநில அரசுகளின் அதிகாரம் இரண்டாம் பட்சமாகியது. எனினும் இன்றளவும் மாத்திய அரசே கல்வி தொடர்பான எல்லா முடிவுகளையும் தீர்மானித்துவிட இயலாது என்பது ஏட்டளவில் உள்ள ஒரு உண்மை..

பா.ஜ.க வும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மாநில சுயாட்சி என்பதை மட்டுமல்ல மாநிலங்கள், மாநில அரசுகள், மாநில உரிமைகள் என்கிற அரசியல் சட்டக் கருத்தாக்கங்களையே வெறுப்பவை. இந்தியாவை சுமார் எழுபது நிர்வாக அலகுகளாகப் பிரித்தால் போதும் என்கிற கருத்துடையவை. இன்னொரு பக்கம் இவை கல்வி என்பதைத் தம் கருத்தியல் பரப்பல்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தும் நோக்குடையவை. அந்த வகையில் இந்த அறிக்கை முன்வைக்கும் “ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக்” (Central Education Commission) எனும் கல்விக்கான மத்திய ஆணையத்தின் ஊடாகக் கல்வி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்தியில், அதிலும் குறிப்பாக பிரதமர் தலைமையிலான அமைப்பில் குவிக்கப்படுகின்றன. பிரதமர், கல்வி அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் தலைமையில் இது இயங்கும். எனவே இது ஒரு ஆளும் கட்சியின் கிளை அமைப்பாகவே இருந்து செயல்படும் என்பதை விளக்க வேண்டியதில்லை. மாநில அளவிலும் இப்படியான ஆணையங்கள் இதே வடிவில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அவற்றிற்கு எத்தகைய சுயேச்சையான அதிகாரங்களும் இருக்காது. மத்திய ஆணையம் எடுக்கும் முடிவுகளைச் செயல்படுத்த்ம் அமைப்பாக மட்டுமே அவை அமையும்.

ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக்  எனும் இந்த அமைப்பே கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும். நிதி ஒதுக்கீடுகளைத் தீர்மானிக்கும். திட்டச் செயல்பாடுகளை மதிப்பிடும். சுய நிதியுடன் செயல்படும். பிற கல்வி அமைப்புகளைக் கண்காணிக்கும், தர அளவுகோல்களை நிர்ணயிக்கும். கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு (accreditation) ஒழுங்காற்றும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும். ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தை மூட வேண்டும் என அது கருதினால் அதற்கு மூடும் அதிகாரமும் உண்டு. இந்த அமைப்பின் நிர்வாகக் குழு (Executive Council) மாநில அளவிலான அனைத்துக் கல்வித் திட்டங்கள், உயர் கல்வி தொடர்பான நிறுவன வளர்ச்சித் திட்டங்கள் (Institutional Development Plans – IDPs) என எல்லாவற்றையும் நேரடியாகக் கண்காணித்து மதிப்பிடும். இத்தனை அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ள இந்த அமைப்பு எந்த.மேற்பார்வைக்கும் கண்காணிப்பிற்கும் உட்பட்டதல்ல என்பது குறிப்பிடத் தக்கது.

கல்வி இன்னும்கூடப் பொதுப்பட்டியலில் இருக்கும்போது மத்திய அரசு இப்படி அதிகாரங்களைக் குவித்துக்கொண்டு மாநில அரசை டம்மி பீசாக்குவது மிகவும் கவலைக்குரிய ஒன்று. அந்த வகையில் இந்த அறிக்கை அரசியல் சட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஒரு பரிந்துரை.  இப்படியான ஒரு குழு இப்படி அரசியல் சட்டத்திற்குள் நின்றுதான் பரிந்துரைகளைச் சொல்ல முடியுமே ஒழிய அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பரிதுரை செய்துவிட முடியாது. கஸ்தூரிரங்கன் சந்திராயன் பறக்கவிட்டவராக வேண்டுமானால் இருக்கலாம். இப்படியான அடிப்படைகளையும் அறியாதவராகவே அவரும் அவரது குழுவினரும் உள்ளனர். அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்யவேண்டும் என ஓரிடத்தில் சொன்னால் மட்டும் போதாது. அது நாடாளுமன்றத்தின் வேலை. இந்த ஆணையத்திற்கு அந்தத் தகுதியும் இல்லை.

“தேசிய அளவிலான ஆய்வுக் கட்டுமானம்” (National Research Foundation -NRF) என்பது இப்படியான மேலிருந்து கீழாக மையப்படுத்தப்பட்ட மற்றொரு அமைப்பு. முன் சொன்ன ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோகின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவது. எந்த மாதிரி ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அதற்கெல்லாம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பதை எல்லாம் இவ் அமைப்பின் பிரிவுகளான ‘உள்ளகக் குழுக்கள்’ மற்றும் ‘பாடத்திட்டக் குழுக்கள்’ (Divisional Councils and Subject Committees)  தீர்மானிக்கும். இப்போது ஆய்வுகளுக்கான நிதி உதவி நல்க Indian Council for Medical Research; Council for Scientific and Industrial Research; Department of Biotechnology, Govt. of India; Defence Research Development Organisation; Research; Indian Council for Social Science Research; University Grants Commission என்பன போன்ற பல்வேறு கல்வித்துறை சார்ந்த சுதந்திரமாக இயங்கும் அமைப்புகள் உள்ளன. இனி அந்த அதிகாரம் முழுமையாக இந்த தேசிய ஆய்வுக் கட்டுமானத்தின் கைகளில் அளிக்கப்படும். இதுவும் கூட்டரசுத் தத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது (anti-federal).

எத்தகைய ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், எத்தகைய ஆய்வுகள் இன்றைய தேவை என்பதெல்லாம் மாநில அளவில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களுக்குள்ளும் உள்ள தனித்துவங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டியவை. பா.ஜ.கவும் அதனை வழி நடத்தும் ஆர்.எஸ்,எஸ்சும் ஆய்வுகளைக் கண்டு அஞ்சுபவை. சிந்துவெளி ஆய்வு, ஒப்பிலக்கண ஆய்வு இனவரைவியல் ஆய்வு ஆகியவற்றின் ஊடாகத்தான் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள வடமொழிகளும் திராவிட மொழிகளும் முற்றிலும் வேறு வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்தவை என்பது வெளிப்போந்தது. இதனூடாகவே இந்தியத் துணைக் கண்டம் முழுமையிலும் சமஸ்கிருதம் அது சார்ந்த பண்பாடு, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒற்றை அடையாளத்தை அவர்களால் இங்கே ஊன்ற முடியவில்லை. இது குறித்த ஆதங்கமும், அதை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்கிற வெறி கொண்டும் அலைபவைதான் சங்கக் கும்பல்கள்.

ஆய்வுகளைப் பொருத்த மட்டில் எது குறித்து ஆய்வு என்பதைக் காட்டிலும் என்ன முடிவை நோக்கி ஆய்வு அமைய வேண்டும் என்பதே முக்கியம் என்கிற கொள்கை உடையவை அவை.  சாதி அல்லது தீண்டாமை பற்றிய ஆய்வு என்றால், அது தேச ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் எனக் கூறி அந்த ஆய்வுக்கு அனுமதி மறுக்கப்படும்; வேறொருவர் சமஸ்கிருதத்தின் காலம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது என நிறுவப் போகிறேன் எனச் சொன்னால் அதற்கு உடன் அனுமதி அளிக்கப்படும். இது மிகைக் கற்பனை அல்ல. ஆய்வுகள் சமூக ஒற்றுமைக்கு எதிராக இருக்கலாகாது என்றும் அப்படியான ஆய்வுகள் கூடாது என்றும் இவர்கள் கூறி வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் நடைமுறைப்படுத்த கஸ்தூரிரங்கன் குழு சில புதிய அமைப்புகளையும், விதிகளையும் முன்வைக்கிறது. ஆய்வுத் தலைப்புகளுக்கு ஏற்பு வழங்கும் பாடத்திட்டக் குழு முதலியன அவ்வப்போது சுழற்சி முறையில் அமைக்கப்படுவதற்கு மாறாக இரண்டாண்டு பதவிக் காலம் அவற்றுக்கு நிரந்தரமாக அளிக்கப்படும் எனவும் கஸ்தீரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. குறிப்பான ஆய்வுத்  திட்டங்களுக்கான ஒரு குழு என்பதாக இல்லாமல் நிரந்தரமாக நிறுவப்பட்ட ஒரே குழு எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பதை ஏற்க இயலாது. தவிரவும் தொழிற்துறை மற்றும் வணிக வளர்ச்சி நோக்கில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவ் அறிக்கை கூறுவது இத்துடன் இணைத்துப் பார்க்கத் தக்கது.

ஆய்வுகள் என்பன ‘ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக்” போன்ற ஒரு மையப்படுத்தப்பட்ட நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படக் கூடியன அல்ல. ஆய்வு வழிகாட்டியும் ஆய்வாளரும் இணைந்து ஆய்வு வளர்த்துச் செல்லப்படுவதற்கு இத்தகைய மையப்படுத்துதல் தடையாக அமையும்.

இப்படி மாநிலங்களின் அனைத்து உயர்கல்வி சார்ந்த செயல்பாடுகளையும் கண்காணித்து மதிப்பிடும் அதிகாரங்களைக் குவித்துக் கொள்ளும் இந்த தேசிய ஆய்வுக் கட்டுமானத்தின் (RSA) செயற்குழு (Executive committee) தன்னிச்சையாக எந்தக் கட்டுப்பாடும் மேற்பார்வையும் இல்லாமல் இயங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

1498511027-3391

உயர்கல்வியில் மொழியப்படும் இன்னொரு மாற்றம் “லிபரல் ஆர்ட்ஸ் (Liberal Arts)  அணுகல்முறை” எனப்படும் நான்காண்டு சிறப்புப் பட்டப் படிப்பு. இதுவும் வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்ள ஒரு முறையை அப்படியே இங்கு பொருத்தும் முயற்சிதான். மிகவும் குழப்பமாகவும் பதில் தெரியாத கேள்விக்குறிகளுடனும் இது முன்வைக்கப்படுகிறது. இது குறித்து அனுபவம் மிக்கவர்கள் கூறுவது இங்கு அதை நடைமுறைப்படுத்த உரிய தரமான அகக் கட்டுமானங்கள் கிடையாது என்பதுதான். முதலில் விடுதியுடன் கூடியதாக இதைப் பயிற்றுவிக்கும் கல்லூரிகள் அமைய வேண்டும். முதன்மைப் பாடம் (Core), சிறப்புப் பாடங்கள் (Electives), திறன் அடிப்படையிலான கல்விகள் (Skill-based Courses) என அதிகப் பாடச் சுமையைக் கோரும் கல்வித் திட்டம் இது. ஏற்கனவே இம்மாதிரியான நான்காண்டு பட்டப்படிப்பு டெல்லி பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுத் தோல்வியடைந்த முயற்சியை நாம் எளிதில் மறந்து விட முடியாது. மாணவர்களுக்கு பாடத் தேர்வுச் சுதந்திரங்கள் இதில் உண்டு, தேர்வுகளிலும் கூட மாணவர்கள் தமக்குப் பிடித்தமான பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்பதெல்லாம் உரிய அகக் கட்டுமானங்கள் இல்லாதபோது பிரச்சினைதான். Choice-based Credit System என்கிற மதிப்பீட்டு முறை என்பதெல்லாம் கூட இங்கு அத்தனை வெற்றிகரமாக அமையவில்லை என்பதும் இந்த அறிக்கையை எழுதியவர்களால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இந்த நான்காண்டு பட்டப்படிப்பை முடித்தால் நேரடியாக ஆய்வுப் படிப்பைத் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. பட்ட மேற்படிப்பு (Post Graduation)  இல்லாமல் ஒரு மாணவர் நேரடியாக ஆய்வுக்குத் தகுதியாவது சாத்தியமில்லை. தவிரவும் இந்தப் படிப்பை ஒருவர் மூன்றாண்டுகளுடன் வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. நான்காண்டும் முடித்த இந்தப் பட்டதாரிகளுக்கும் வழக்கமாக இப்போதுள்ள மூன்றாண்டுப் பட்டதாரிகளுக்கும் இடையில் ஏதும் தகுதி வேறுபாடுகள் கடைபிடிக்கப்படுமா என்பதும் விளங்கவில்லை. மொத்தத்தில் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக முடியும் வாய்ப்பு இதில் அதிகம்.

இந்தியா முழுவதும் NCERT பாட நூல்களே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், எந்த மாநிலமேனும் தாங்களே பாடநூல்களை வெளியிட விரும்பினால் அதற்கு NCERT ஒப்புதல் பெற வேண்டும் என இவ் அறிக்கை சொல்வதையும் உயர்கல்வியை மையப்படுத்தும் இந்த முயற்சிகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

2.வணிகமயமாக்கல்

கல்வியை, குறிப்பாக உயர்கல்வியை வணிகமயமாக்குவதில் மிகத் தீவிரமானவர்கள் பா.ஜ.கவினர்தான் என்பதை நாம் மறந்துவிட முடியாது. வாஜ்பேயி தலைமையில் முதல்முறை அவர்கள் ஆட்சி அமைத்தபோதுதான் கல்வி, மருத்துவம் முதலான சேவைத் துறைகளை உலகச் சந்தைக்குத் திறந்து விடும் “காட்ஸ்’ (GATS) ஒப்பந்தத்திற்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதல் கட்ட ஒப்புதலுக்கு “அர்ப்பணிப்பு” (offer) எனப் பெயர். இம்முறை மோடி தலைமையில் ஆட்சி அமைந்த கையோடுதான் ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தின் அடுத்த இறுதிக்கட்டமான சேவைகளை முழுமையாக ஒப்படைப்பதற்கான (commitment) நைரோபி மாநாடு கூடியது. இதில் கையொப்பமிடும் நோக்குடன் மோடியின் வணிக அமைச்சர் அங்கு விரைந்தார். நல்லவேளையாக அது அப்போது கையொப்பமாகவில்லை. சேவைகளை இப்படி வணிகமயமாக்குவதின் ஆபத்து கருதி வேறுபல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அது இப்போதைக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களான (1) இனையம் மூலமாக வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கல்வி பயிலல் (cross border supply) (2) நமது மாணவர்கள் தாராளமாக வெளி நாடுகளுக்குச் சென்று மருத்துவம் முதலான கல்விகளை பணம் செலுத்திப் பெறுதல் (consumption abroad) (3) வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இங்கே வந்து கடை விரித்தல் (commercial presence0 (4) வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் இருந்து ஆசிரியர்கள் இங்கு வந்து பாடங்களைச் சொல்லித் தருதல் (presence of natural persons) முதலியன இன்று பல்வேறு மட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளன. வெளிநாட்டிலிருந்து இவ்வாறு இங்கு வரும் ஆசிரியர்களுக்கு 20 மணிநேரம் வகுப்பெடுக்க 5,00,000 ரூ ஊதியத்தையும் இன்று மோடி அரசு நிர்ணயித்துள்ளது.

2035 க்குள் உலகத்தரமான 200 பன்னாட்டுக் கல்வி நிறுவனங்கள் இங்கே கல்விக் கடை விரிக்க அனுமதிக்கப்படும் என இப்போது கஸ்தூரிரங்கன் அறிக்கை கூறுகிறது.

கல்வித் துறையின் எல்லா மட்டங்களிலும் தனியார் மயமாதலை இவ் அறிக்கை ஊக்குவிக்கிறது. ஆயிரம் கோடி ரூ முதலீடு செய்பவர்கள் யார் வேண்டுமானாலும் உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்கலாம். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி தேவையில்லை. ஆண்டுதோறும் கல்வித்துறை அதிகாரிகளின் மதிப்பீடுகளும் இருக்காது. தேவையானால் சக தனியார் பள்ளிகளைக் கொண்டே அவர்கள் மதிப்பிட்டுக் கொள்ளலாம். புதிதாக இட ஒதுக்கீடு எதையும் அரசு தனியார் பள்ளிகளில் கட்டாயப் படுத்தக் கூடாது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மைப் பள்ளிகளில் 25 சதம் இடங்கள் பட்டியல் சாதியினருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் ரத்து செய்யப் பரிந்துரைக்கிறது இவ் அறிக்கை.

3.காவிமயமாக்கல்

கல்வியைக் காவிமயமாக்குவதில் இவர்கள் மிகத் தீவிரமாக இருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. வாஜ்பேயி ஆட்சியில் இத்தகைய முயற்சிகள் செய்யப்பட்ட போதும், பல்கலைக் கழகங்களில் சோதிடம், புரோகிதம் போன்றவற்றிற்கு பட்டயம் மற்றும் பட்ட வகுப்புகள் முதலியன தொடங்க முயற்சித்த போதும் “மதிப்பீட்டுக் கல்வி” (value education) எனும் பெயரில் அறிவியலுக்குப் பொருந்தாத மதக் கருத்துக்களைத் திணிக்க முயன்ற போதும் உலகெங்கிலும் இருந்த அறிவியல் அறிஞர்கள் கடுமையான கணடனங்களை முன்வைத்தனர். இப்படி அறிவியல் அடிப்படை இல்லாதவற்றைப் பயிற்றுவிப்பதற்கு அரசு நிதி செலவிடப்படுவது அரசியல் சட்ட விரோதம் என்பதும் சுட்டிக்காட்டப் பட்டது. நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானிகள் உட்பட உலக அறிவியலாளர்கள் பலரும் கையொப்பமிட்டு கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர். அதை ஒட்டி அப்போது அம் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனாலும் இப்படியான கருத்துக்களைக் கல்வி எனும் பெயரில் பரப்புவது என்பது பெரிய விளம்பரங்கள் இல்லாமல் நடந்து கொண்டுள்ளது. தமிழ் ஆய்வுகளுக்கு எனத் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இப்போது சோதிடப் பட்டயப் படிப்பு சொல்லித் தரப் படுகிறது. அதற்கென மூன்று புத்தகங்களும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

இப்படியான கல்விக் கொள்கை அறிக்கைகளில் பெரிதாக எழுதி சர்ச்சைக்கு இடங்கொடாமல் அந்த வேலையைச் செய்வது என்பதுதான் இப்போது அவர்களின் செயல்பாடாக உள்ளது.

இப்போதும் இந்த 484 பக்க அறிக்கையில் கல்வி எனும் பெயரில் அறிவியலுக்குப் பொருந்தாதவற்றைப் பாடநூல்களில் முன்வைப்பது குறித்த எந்தக் கண்டனமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. தவிரவும் இந்த  அறிக்கையில் “மதிப்பீட்டுக் கல்வி” குறித்து மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. “அறம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த சிந்தனை முறை” (ethical and moral reasoning), “இந்தியச் சிநதனை” (knowledge India) என்பது போன்ற சவடால்கள் ஆங்காங்கு தெளிக்கப்பட்டு சனாதன பிற்போக்குப் பார்ப்பனீயக் கருத்துக்கள் நசுக்கி நசுக்கி முன்வைக்கப்படுகின்றன.

இந்த அறிக்கையில் இந்திய அறிவுப் பாரம்பரியமாகச் சுட்டிக் காட்டப்படுபவை எல்லாம் இந்து மரபைச் சார்ந்தவையாகவே உள்ளன. பெரியார் குறித்து எந்தப் பதிவும் இல்லை. அம்பேத்கர், காந்தி போன்றோரையும் கூட சும்மா அடையாளமாகச் சில இடங்களில் சுட்டிக்காட்டுவதோடு சரி. சமஸ்கிருதம் பற்றிய குறிப்புகள் சுமார் 24 இடங்களில் இடம் பெற்றுள்ளன. குப்தர் ஆட்சிக் காலம் பற்றிக் குறிப்பிட முடிந்த கஸ்தூரிரங்கன் குழுவினருக்கு உலக வரலாற்றில் “போரில்லை சமாதானம்” என முழங்கி தருமச் சக்கரம் உருட்டியவனும், மரணதண்டனை வழங்கப் பட்டவர்களுக்கும் சிறைச்சாலைக் கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்கல் எனும் நடவடிக்கையை உலக வரலாற்றில் 2400 ஆண்டுகளுக்கு முன்பே செய்து காட்டியதோடு, அதற்கெனத் தனி அதிகாரிகளை நியமித்தவனுமான அசோகர் குறித்தும் மௌரிய ஆட்சி பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை.

692550-education-institutions

மொத்தத்தில் இவ் அறிக்கை தூக்கிக் குப்பையில் எறியப்பட வேண்டிய ஒன்று.

மூன்று மொழிகளைக் கட்டாயமாக்குவது, மூன்று வயது முதல் ஏராளமான பொதுத் தேர்வுகலைக் குழந்தைகள் எழுத வேண்டும் என்பது, எல்லா மட்டங்களிலும் இந்திய அளவிலான ‘நீட்’ வகையான நுழைவுத் தேர்வுகளைக் கட்டாயமாக்கப் பரிந்துரைப்பது ஆகியன குறித்து நிறைய எல்லோரும் எழுதிக் கொண்டுள்ளோம். “ஒரே இந்தியா” எனும் நோக்கில் ஒரே ஆதார் அட்டை, ஒரே ரேஷன் கார்ட், மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற நோக்கில் எல்லாவற்றையும் மையப்படுத்துதல் எனும் வரிசையில் எப்படி “ஒரே கல்வி”, “ஒரே பாடநூல்” முதலியனவும் இந்தக் கல்விக் கொள்கை மூலமாக நம் மீது திணிக்கப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டும் நோக்கில் இக்கட்டுரையில் இந்த மூன்று அம்சங்கள் மட்டும் பேசப்பட்டுள்ளன. பிற எல்லாமும் கூட இம் மூன்று அம்சங்களில் பொருந்துவனதான்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *