‘மக்கள் களம்’, காந்தி150 சிறப்பிதழ், அக்டோபர், 2018
ஆம் காந்தி ஒரு புதிர்தான். நபிகள் நாயகத்திற்குப் பிறகு உலகில் மிக அதிகமாக வாழ்க்கை வரலாறுகள் எழுதப்பட்டவர் காந்திதான் என்பார்கள். அதுவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான வரலாறு. இந்த நூற்றுக் கணக்கான வாழ்க்கை வரலாறுகளில் எதுவும் ஒன்றைப்போல ஒன்று இருப்பதில்லை என்பது காந்தியின் கூடுதல் தனிச் சிறப்பு. காரணம் காந்தி எளிதில் யாராலும் கையக்கப் படுத்த இயலாதவர். எந்தச் சிமிழுக்குள்ளும் அவரை அடைத்துவிட முடியாது. அவரை மகான் என்பதா, இல்லை அசட்டுத்தனமான பிரம்மச்சரியச் சோதனைகளைச் செய்த சனாதனி என்பதா, அரை நிர்வாணப் பக்கிரி என்பதா இல்லை மகாத்மா என்பதா, இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றாக இணைத்துப் போராட்டக் களத்தில் நிறுத்துவதில் வெற்றி பெற்ற ஒப்பற்ற போராளி என்பதா இல்லை இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்தி ஒரே நாட்டுக்குள் வாழ வைப்பதில் படு தோல்வியுற்றுத் தன் வாழ்வை முடித்துக் கொண்டவர் என்பதா என்கிற கேள்விகளுக்கு யாரும் இதுவரை தெளிவாகப் பதில் சொன்னதில்லை. சொல்ல முடிவதில்லை. அதன் விளைவே அரசியல் அறிஞர்கள் முதல் உளவியல் மருத்துவர்கள்வரை அவரைப் பற்றி வெவ்வேறு கண்னோட்டங்களில் எழுதி எழுதிக் குவிக்க நேர்ந்தது..
சனாதன தர்மத்தை அழிக்கவந்தவர் என்றுதான் இந்துத்துவவாதிகள் அவரைக் கொன்றனர். இதை அவர்கள் வெளிப்படையாகவே கூறினார்கள். மகா பெரியவர் என அழைக்கப்படும் காஞ்சி சங்கராச்சாரியாரின் நிதி உதவியுடன் காந்திக்கு எதிராக ‘ஆரிய தர்மம்’ என்றொரு இதழ் இங்கு நடத்தப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களை ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றவர் என வெளிப்படையாகச் சொல்லி தமிழகத்தில் அவர் நுழையக் கூடாது என கோவில் கதவுகள் சாத்தப்பட்டன. “காந்தீ திரும்பிப்போ” என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பாகிஸ்தானுக்கு ஐம்பது கோடி கொடுக்கச் சொன்னதற்காகத்தான் அவரைச் சுட்டுக் கொன்றேன் என பகிரங்கமாக வாக்கு மூலம் அளித்தான் கோட்சே.
ஆனால் இன்னொரு பக்கம் அண்ணல் அம்பேத்கர் அவரை “இந்துச் சனாதனி” என்றார். முஹம்மது அலி ஜின்னா அவரை “இந்துக்களின் தலைவர்” என்றார்.
ஆம். கந்தி ஒரு புதிர்தான்.
காந்தியும் தன்னை ‘இந்து’ என்றுதான் அடையாளப்படுத்திக் கொண்டார். அனால் அவர் கற்பித்த இந்து மதம், இந்து மதத்தின் எந்த வகைக்குள்ளும், வழிபாட்டு நெறிகளுக்குள்ளும் அடைக்க முடியாததாக இருந்தது. அவர் எந்த இந்துக் கோவிலுக்கும் வழிபடச் சென்றது கிடையாது. அவர் தன் வாழ்வில் ஒரு பத்துப் பதினைந்து தடவைகள் மட்டும் இந்து ஆலயங்களுக்குச் சென்றார் என வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால். அவை எதுவுமே பக்தி சிரத்தையுடனோ, நேர்த்திக் கடன்களைக் கழிக்கவோ போனவையல்ல. காசி விசுவநாதர் ஆலயத்திற்கு அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றார்கள். வெளியில் வந்து அவர் நம் ஆலயங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அவை வழிபாட்டிற்கான இடங்களாக இல்லை, விபச்சார விடுதிகளைப்போல உள்ளன எனச் சொல்லி அகன்றார்.
எந்தச் சாமியார் பின்னும் காந்தி போனதில்லை. அவரது பிரார்த்தனைக் கூட்டங்களில் எல்லா மதத்தினரும் இருந்தனர். அங்கு “வைஷ்ணவ ஜனதோ”வும் பாடப்பட்டது. அல்லாவைப் புகழ்ந்தும், ஏசுவைக் கொண்டாடியும் அங்கு கூடியிருந்தோர் பாடினர். பார்சி மதப் புகழஞ்சலிகளுக்கும் அங்கு இடமிருந்தது. அவரது பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வ சமயக் கூடுகைகளாகவே திகழ்ந்தன.
சாதிகளையும் தீண்டாமையையும்தான் அவர் கூடாது எனச் சொன்னார். ஆனால் வருண ஏற்றத் தாழ்வுகளை அவர் அங்கீகரிக்கத்தான் செய்தார் என்றொரு விமர்சனம் அவர் மீது உண்டு. அவரைப் புகழ்ந்து எழுதுபவர்களும், கிளாட் மார்கோவிட்ஸ் போன்று நடுநிலையாக அவரை மதிப்பிடுபவர்களும் கூட அப்படி ஒரு கருத்தை முன்வைக்கின்றனர் (Claude Markovits, The Ungandhian Gandhi, 2003). ஆனால் அவர் அதைச் சொந்த வாழ்விலோ இல்லை தன் ஆசிரமங்களிலோ எந்நாளுமே கடைபிடித்தது இல்லை. இறுதிக் காலத்தில் தன் ஆசிரமங்களில் இனி கலப்புத் திருமணங்களுக்கு மட்டுமே இடமுண்டு என்றவர் அவர். அது மட்டுமல்ல அங்கு திருமணம் செய்து கொள்பவர்களில் ஒருவர் ஹரிஜன் ஆக இருக்க வேண்டும் என்றார். ஹரிஜனப் பெண்களை இந்து ஆண்கள் திருமணம் செய்து கொள்வதைக் காட்டிலும் இந்துப் பெண்கள் ஹரிஜன இளைஞர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றவர்தான் காந்தி.
இந்து மதத்திற்கே உரிய நம்பிக்கையான தீண்டாமை என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படை (சடங்குத்) “தூய்மை” (purity) மற்றும் தீட்டு (impure) என்கிற எதிர்மைகளே. அவற்றை மிக மூர்க்கமாக நடைமுறையில் மறுத்துக் காட்டியவர் காந்தி. மலம் அள்ளுதல் என்பதை அவர் இந்தச் சடங்குத் தூய்மையை மறுக்கும் ஒரு செயலாக முன் வைத்தார். அவருடைய ஆசிரமங்களில் வாழ்ந்தோருக்குத் தினமும் அவ்வப் பகுதிகளைத் தூய்மை செய்யும் பணி கட்டாயமாக்கப்படது. வினோபா பாவேயின் ஆசிரமத்தில் தான் தங்கியிருந்த நாட்களில் அவர் காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து ஒரு கூடையுடனும் நீண்ட குச்சி ஒன்றில் பதிக்கப்பட்ட கிண்ணத்துடனும் நடந்து சென்று அந்தக் கிராம மக்கள் பொது வெளிகளில் கழித்திருந்த மலங்களை அள்ளிக் கூடையில் போட்டுக் கொண்டு வந்து ஆசிரமத்தில் இருந்த மலத் தொட்டிக்குள் போட்டதைத் தான் நேரில் கண்ட அனுபவத்தை தமிழறிஞரும் தூய சைவருமான மு.அருணாசலம் அவர்கள் தன் நூலில் (காசியும் குமரியும்) குறிப்பிடுகிறார். வினோபா ஒரு பார்ப்பனர்.
இதெல்லாம் ஏதோ காந்திக்கு அவரது கடைசிக் காலத்தில் ஏற்பட்ட மனமாற்றம் என்றும் எளிதாக ஒதுக்கிவிட முடியாது. மகாத்மாவாகவெல்லாம் அறியப்படாத காலத்திலேயே அவர் தனது சொந்த வாழ்க்கையில் மேற்கொண்ட நடைமுறைதான் இது. ஒரு முஸ்லிம் வணிகரின் வழக்குரைஞராக அவர் தென் ஆப்ரிகா சென்று வாழ்ந்திருந்த காலம் கொஞ்சமல்ல. 21 ஆண்டுகள். அப்போது அவரது ஆண்டு வருமானம் 600 பவுண்டுகள். அன்று அது மிகப் பெரிய தொகை. அந்தத் தொகை முழுவதையும் அங்கு தான் தொடங்கி அமைத்த ‘பீனிக்ஸ்’ மற்றும் ‘டால்ஸ்டாய்’ பண்ணைகளில் மற்ற இந்தியக் கூலித் தொழிலாளிகள் உட்பட வாழ்ந்த கூட்டுச் சமுதாய வாழ்வில் பொது வருமானமாக்கியவர் காந்தி. ‘பண்ணை’ என்றால் எஸ்டேட்கள் அல்ல. சாதி, மத, வருண, மொழி. ஏழை-பணக்கார வேறுபாடுகள் இல்லாமல் வாழ்ந்த commune கள் அவை.
அங்கு அவர் அவரது மனைவி கஸ்தூரி பாய் உட்பட எல்லோரும் அவரவர் முறை நாளில் அனைவரின் மலத்தையும் அள்ளுதல் கடமையாக்கப் பட்டிருந்தது. மாடியில் தங்கியிருந்த ஒரு தாழ்த்தப்பட்டவரின் மலத்தை அள்ளிக் கொண்டு மரத்தாலான படிகளில் இறங்கி வருகையில் கஸ்தூரி பாயின் கால் தடுக்கி அவர் தலையெல்லம் மலம் வழிந்தபோது அவர் காந்தியைக் கடிந்து கொண்டதும், காந்தி அவரிடம் தான் அவருக்கு மாத ஜீவனாம்சம் தந்துவிடுவதாகவும், விவாகரத்து செய்து கொள்ளலாம் எனவும் சீறியதும் வரலாறு. மீண்டும் சொல்கிறேன் இது அவர் மகாத்மாவாக அறியப்படாத, மிக்க இளம் வயதிலேயே நடந்தது. வருணக் கோட்பாட்டை அவர் ஆதரித்தாகச் சொல்லப்பட்ட காலத்திலும் கூட அவர் தன் சொந்த வாழ்வில் அதைக் கடைபிடித்தவரில்லை.
உழைப்பைப் பாகுபடுத்துவது, ஒரு குறிப்பிட்ட தொழிலில் ஒருவரை முடக்குவது (parcellisation of labor) என்கிற இந்திய முறைமைக்கு அவர் எதிராகவே இருந்தார். அதனால்தான் நுணுக்கமாகப் பரிசீலிப்போர் அவரை ஒரு நவீனத்துவவாதி, மரபுகளின் எதிரி (modernizer / enemy of traditions) என்றெல்லாம் கூறுகின்றனர்.
சம்பரான் சத்தியாக்கிரகத்தின் பொருட்டு (1917) ‘இன்டிகோ’ விவசாயிகளைத் திரட்டியபோதுதான் காந்தி இந்திய கிராமங்களின் உண்மை நிலையைக் காண்டார். அதற்கு முன் அவருக்கு இந்திய கிராமங்கள் பற்றி ஆழமான புரிதல் கிடையாது. அன்று தொடங்கி அவர் தன்னை ஏழை மக்களுடனேயே அடையாளப்படுத்திக் கொண்டார். அதன் குறியீடுதான் கோட் சூட்டுடன் ஒரு ஐரோப்பிய கனவானைப் போலத் தென் ஆப்ரிகாவில் போய் இறங்கிய காந்தி இந்தியாவிற்குத் திரும்பித் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியபோது ஒரு வேட்டி, துண்டு என்கிற சமூகத்தின் கீழான நிலையில் இருப்பவர்களின் உடையைத் தேர்வு செய்து கொண்டார்.
இந்திய மக்கள் அவரை ஒரு வெறும் தலைவராக மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கடவுளாகவே அங்கீகரித்தனர். ஆம் ஒரு அவதாரமாகவே அவரை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். சம்பரான் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆய்வு செய்துள்ள ஜாக்கியுவெஸ் பௌச்சேபடாஸ் எவ்வாறு சம்பரானில் வந்திறங்கிய காலம்தொட்டே அவரைத் தம்மைக் கடைத்தேற்ற வந்த கடவுளாக அம்மக்கள் கண்டனர் என்பதைக் குறிப்பிடுகிறார் (Jacques Pouchepedas, champaran and Gandhi, 1998). உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூரில் காந்தி வந்து தங்கியிருந்த சில வாரங்களில் (பிப்ரவரி 1921) அப்பகுதி மக்கள் மத்தியில் அவர் கடவுளின் அவதாரம் எனவும், அவர் பெயரில் அற்புதங்கள் நிகழ்வதாகவும் பெரிய அளவில் வதந்திகள் பரவின என்பதைக் காந்தியை அடித்தள மக்களின் பார்வை நோக்கிலிருந்து (subaltern view) ஆய்வு செய்யும் சாகித் அமின் மிக விரிவாகப் பதிந்துள்ளார் (Shahid Amin, Gandhi as Mahatma, Subaltern Studies III, 1984). காந்தியை மந்திர சக்தி உடையவராகவும், அவர் பெயரால் அற்புதங்கள் நடப்பதாகவும் அம் மக்கள் கண்டனர். அவரை விஷ்ணுவின் அவதாரமாக அவர்கள் நம்பிய வேடிக்கையைப் பதிவு செய்யும் அமினின் கட்டுரை மிகச் சுவாரசியமான ஒன்று. அந்த நம்பிக்கை ஒரு வகையில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது பெரிய அளவில் மக்களைத் திரட்டுவதற்கும் பயன்பட்டது.
இந்திய மக்கள் அவரை அவதாரமாகவும் ஏற்றனர். அவரைச் சுட்டும் கொன்றனர்.
ஆம் அவர் ஒரு புதிர்.
அப்பாவி இந்தியக் கிராம மக்கள் மட்டுமல்ல மெத்தப் படித்த பகுத்தறிவாளர்களாக நம்பப்படும் மேலை நாட்டினரும் கூட இந்த அரை நிர்வாணப் பக்கிரியைக் கடவுளாகக் கண்டு வியந்தனர். அங்கும் அவரைப் பற்றிய இந்தப் பிம்பக் கட்டமைப்பு 1920 களிலேயே தொடங்கியது. ரோமன் ரோலந்த், ஜான் ஹேய்னெஸ் ஹோம்ஸ் (John Haynes Holmes) போன்றோரின் எழுத்துக்கள் காந்தி குறித்த இந்தப் புனைவு பரவுவதில் முக்கிய பங்கு வகித்தன. தென் ஆப்ரிக்க மக்களின்பால் நேசம் கொண்ட ஆங்கில பேப்டிஸ்ட் பாதிரியாரான ரெவரென்ட் ஜோசப் டோக் தான் முதன் முதலில் காந்தியுடனான தன் உரையாடலை ஒரு ஆன்மீக அனுபவமாகக் கண்டதோடு அதைப் பதிவும் செய்தவர் (J.J.Doke, M.K.Gandhi, An Indian Patriot in South Africa, 1909). காந்தியை ஏசுவுடனும் அன்னை மேரியுடனும் ஒப்பிடும் அளவுக்கு அவர் சென்றார்.
“நமது இந்திய நண்பர் பெரும்பாலான மக்களைக் காட்டிலும் ஒரு உயர்ந்த தளத்தில் வாழ்பவர். அவருடைய செயல்பாடுகள் பெத்தானியின் மேரியைப் போல மரபு மீறியதாகவும் (eccentric), தவறாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் பல நேரங்களில் அமைந்துவிடுகின்றன. அவரைத் தெரியாதவர்கள் அவரிடம் வெளிப்படும் அபரிமிதமான உலகப் போக்கிற்கு மாறான (unworldliness) தன்மைகளுக்குப் பின் அர்த்தமற்ற நோக்கங்கள் அல்லது கீழைத்தேய அற்பத் தனங்கள் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர்” – என அவர் எழுதியது குறிப்பிடத் தக்கது. காந்தியோடு நடைபயில்வது ஒரு கற்கை நெறி எனவும் அவரை அறிந்து கொள்வது அன்பை அனுபவிப்பது எனவும் பதிவு செய்தார் ரெவரென்ட் டோக்.
நிறைய கிறிஸ்தவப் பாதிரிமார்களின் வியப்புக்கு உரித்தவராகத் திகழ்ந்தார் காந்தி. அசிசியின் புனித ஃப்ரான்சிசுடன் (Saint Francis of Assisi) காந்தியை ஒப்பிட்டார் வில்லி பியர்சன் எனும் ஆங்கிலப் பாதிரியார். அமெரிக்காவின் தாராளவாத புராடெஸ்டேன்டியப் பிரிவின் பாஸ்டர் ஜான் ஹேய்ன்ஸ் ஹோம்ஸ் (Unitarian Pastor John Heynes Holms) நியூயார்க் நகரில் உரையாற்றியபோது (1921 ஏப்ரல்),
“வாழும் மனிதர்களிடையே மிகப் பெரியவர் லெனினோ ரோமன் ரோலந்தோ அல்ல. உண்மையில் அந்த மிகப் பெரியவர் யாரும் அறியாத ஒரு இந்தியப் போராளி. அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்திர காந்தி. ரோலந்தை நினைக்கும்போது எனக்கு டால்ஸ்டாய் நினைவுக்கு வருகிறார். லெனினை நினைத்தால் நெப்போலியன் நினைவுக்கு வருகிறார். ஆனால் நான் காந்தியை நினைக்கும்போது எனக்கு ஏசு கிறிஸ்து நினைவுக்கு வருகிறார். அவர் தன் வாழ்வை வாழ்கிறார்; தன் சொற்களைப் பேசுகிறார்.; துன்பங்களை அனுபவிக்கிறார். போராடுகிறார்; ஒரு நாள் இந்தப் புவியில் அவர் ஓர் உன்னதச் சாவை அடைவார்.” (J.H. Holms, Who is the Greatest Man in the World Today, H.T.Mazumdae (ed), The Enduring Greatness of Gandhi).
ஹோம்ஸ் ஒரு தீர்க்கதரிசியோ என்னவோ. ஆனால் அவர் சொன்னது பலித்தது. 1948 ஜனவரி 30 அன்று ஆர்.எஸ்.எஸ் ஊழியன் நாதுராம் கோட்சேயின் கையால் காந்தி அந்த உன்னதச் சாவை அடைந்தார்.
(அடுத்த இதழில் முடியும்).