காஸா : போரினும் கொடியது மவுனம்

இதை எழுதத் தொடங்கியுள்ள இந்தக் கணத்தில் (ஜூலை 24) இஸ்ரேலியக் குண்டு வீச்சில் 700 பலஸ்தீனியர்களும், ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் 32 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அயலுறவுச் செயலர் ஜான் கெர்ரி கூறுகிறார். கொல்லப்படுபவர்கள் எல்லோரும் சிவிலியன்கள். பெரிய அளவில் பலஸ்தீனக் குழந்தைகள் செத்து மடிகின்றனர், மருத்துவமனைள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லம் எல்லாம் கூண்டு வீச்சுக்கு இரையாகியுள்ளன. குண்டு வீச்சின் விளைவாக பெரிய அளவில் குடி நீர் விநியோகம், கழிவு நீர் வெளியேற்றம் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸும் இஸ்லாமிய ஜிகாதி இயக்கமும் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. இது ஒரு அபத்தமான குற்றச்சாட்டு. காசா ஒரு துண்டு நிலம் 51 கி.மீ நீளம் சுமார் 11 கி.மீ அகலம் உள்ள இத் துண்டு நிலத்தில் 18 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதற்குள் நின்று சிவிலியன்களுக்கு மத்தியில்தான் இயக்கத்தினரும் இருந்து போரிட்டாக வேண்டும்.

இந்தத் துண்டு நிலத்தின் ஒரு பக்கம் கடல், கீழ்ப்பக்கம் எகிப்து. வலப்பக்கம் இஸ்ரேல். கடலோரத்தில் இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் சுமார் 86 சதத்தைப் பாதுகாப்புப் பகுதி (Buffer Zone) என இஸ்ரேல் அறிவித்து தன்னுடைய கண்காணிப்பில் வைத்துள்ளது. தங்களுடைய உலகத் தொடர்புகள் பலவற்றையும் பலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் ஊடாகத்தான் நிறைவேற்றிக் கொள்ள முடியும். இதற்கான வழிப் பாதைகள் ஆறையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது இஸ்ரேல். நிலப்பகுதியிலும் சுமார் 15 சதத்தைப் பாதுகாப்புப் பகுதியாக அறிவித்து அதையும் தன் கண்காணிப்பில் வைத்துள்ளது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு விளை பொருட்கள் உற்பத்தி ஆகிக் கொண்டிருந்த நிலம் இது.

ஆக பலஸ்தீனியர்கள் இன்று ஒரு முற்றுகை இடப்பட்ட மக்கள். காசா ஒரு மிகப் பெரிய அகதிகள் முகாம். நிரந்தரமாக அவசரநிலை அறிவிக்கப்பட்ட பகுதி.

இந்தப் பின்னணியில்தான் இன்றைய போர் நடந்து கொண்டு உள்ளது. காசாவும், மேற்குக் கரையும் ஆக்ரமிக்கப்பட்ட பகுதிகள் (occupied territories) என்பதையும், தான் ஒரு ஆக்ரமிப்பாளன் (occupant) என்பதையும் இஸ்ரேல் ஏற்பதில்லை. இறையாண்மை உள்ள பகுதிகளை கைவசப்படுத்தி இருந்தால்தான் அதன் பெயர் சர்வதேசச் சட்டப்படி ஆக்ரமிப்பாம். காசாவும் மேற்குக்கரையும் எகிப்து மற்றும் ஜோர்டானின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளாம். எனவே அவை இறையாண்மை உடைய நாடுகள் இல்லையாம். எனவே அவற்றில் வன்முறையாக நுழைந்து குடியமர்த்துவதை “ஆக்ரமிப்பு’ எனச் சொல்லக் கூடாதாம். சட்டம் பேசுகிறது இஸ்ரேல்; ஒத்தூதுகிறது அமெரிக்கா.

இஸ்ரேலைச் சேர்ந்த பதின் வயது மாணவர் மூவர் கொல்லப்பட்டதை ஒட்டித்தான் இந்த விமானத் தாக்குதலை அது தொடங்கியது. ஹமாஸ்தான் இந்தக் கொலைகளைச் செய்தது என அது குற்றம்சாட்டுகிறது. ஹமாசும் பிற போராளி இயக்கங்களும் தங்களுக்குத் தொடர்பில்லை என்கின்றன. இஸ்ரேல் தன் குற்றச்சாட்டை மெய்ப்பிக்க எந்த ஆதாரத்தையும் இதுவரை ஐ,நா அவை முன் வைக்கவில்லை.

ஒரு தந்தை என்கிற முறையில் இந்தச் சிறுவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வேதனை அடைவதாகவும், இந்தக் கொடுமையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இதற்குப் பழியாக ஒரு பலஸ்தீனியச் சிறுவனை இஸ்ரேலியர்கள் உயிருடன் எரித்துக் கொன்றதைக் கண்டிக்கவில்லை. இதற்கெல்லாம்முன்னதாக இரண்டு பலஸ்தீனியச் சிறுவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ பதிவு வெளி வந்தபோதும் வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.

விருப்பம்போல காசாவுக்குள் நுழைந்து பயங்கரவாதிகள் எனவும், இஸ்ரேல் இராணுவத்தைத் தாக்கினார்கள் எனவும்கூறி இழுத்துச் செல்லப்பட்ட கிட்டத்தட்ட 570 பலஸ்தீனியர்கள் இப்போது இஸ்ரேலியச் சிறைகளில் உள்ளனர். இவர்களில் சுமார் 240 பேர் இளைஞர்கள், சிறுவர்கள். தம் பகுதிக்குள் வரும் இஸ்ரேலிய இராணுவ வண்டிகளின் மீது கல்லெறியும் பலஸ்தீனப் பள்ளிச் சிறுவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் எனக் கைது செய்யப் படுகின்றனர். இஸ்ரேலுக்குள் உள்ள சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இவற்றைக் கேள்விப்பட்ட போதெல்லாம் ஒபாமாவுக்கு ஒரு தந்தை என்கிற உணர்வு வந்ததில்லை. செஞ்சிலுவைச் சங்கமும் கூட இக் கைதுகளைக் கண்டிக்க மறுத்தது. அவர்களைப் பொருத்த மட்டில் இவை எப்போதும் நடக்கிற விடயங்கள். ஒன்றும் விசேடமானவை அல்ல.

பள்ளி சென்று வந்து கொண்டிருந்த பிள்ளைகளப் பொய் வழக்குப் போட்டு இஸ்ரேல் இராணுவம் கடத்திச் சென்று விட்டது எனப் புகார் அளித்தால்’ பிள்ளைகளைப் பொறுப்பாக வளர்ப்பதில்லையா, கல்லெறியாமல் பார்த்து அழைத்துக் கொண்டு வருவதில்லையா என அலட்சியப் படுத்தி “சமாதானத்திற்கு ஒத்துழைக்காத பெற்றோர்கள்” எனக் கண்டிக்கும் இஸ்ரேலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நேடோ நாடுகளும் இந்த மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் பள்ளி சென்று வரும் வழியில் கடத்திச் சென்று கொல்லப்பட்ட போது இப்படிச் சொல்லவில்லை. ஒரு பத்திக் கட்டுரையாளர் சொன்னதைப் போல இஸ்ரேலியர்களுக்கு பலஸ்தீனிய உயிர்கள் மயிருக்குச் சமம்; ஆனால் ஒரு இஸ்ரேலிய உயிரோ மலையை விட உயர்ந்தது. டோவ் லியோர் என்கிற ஹெப்ரோன் தலைமை ராபி (யூத மதத் தலைவர்) வெளியிட்ட மத ஆணை (edict) ஒன்றில, “இஸ்ரேலியர் அல்லாத நூறு உயிர்கள் கூட ஒரு இஸ்ரேலியனின் விரல் நகத்திற்குச் சமமில்லை” என்று கூறியுள்ளது நினைவிற்குரியது. இவற்றை உலகமும் ஏற்கிறது.

இதுதான் இன்று அங்குள்ள மையப் பிரச்சினை. எனவே ஒரு இஸ்ரேலியனின் விரல் நகம் சிதைந்தாலும் அதற்காக நாங்கள் நூறு பேர்களைக் கூடக் கொல்லத் தயங்கோம் என்பதுதான் இஸ்ரேல் உலகத்திற்குச் சொல்லும் சேதி.

இன்றும் இஸ்ரேலின் ஆக்ரமிப்புகள் தொடர்கின்றன. இப்போதும் தெற்கு ஷரோன், கிழ்க்கு ஜெருசலேம் பகுதிகளில் ஆக்ரமிப்புகள் நடக்கின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.

ஒரு குன்றின் மீது ஏறி நின்று தன் கைவிரல்களை விரித்துக் காட்டி, “இது போல யூதக் குடியிருப்புகளைப் பலஸ்தீனத்தில் அமைக்க வேண்டும்” என ஏரியல் ஷரோன் கூறியதாக ஒரு கதை உண்டு. அவ்வாறே விரித்துக் காட்டப்பட்ட கை விரல்களைப்போல பலஸ்தீனிய மக்கள் மத்தியில், நடு நடுவே யூதக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. இப்படி அருகருகே இரு இனத்தவரும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதோடு, பகை, ஆக்ரமிப்பு எல்லாவற்றையும் தாண்டி, இரு தரப்பு மக்களுக்கும் இடையே ஒரு உறவும் இருந்தது. மனிதர்கள் அப்படித்தானே. இஸ்ரேலியர்களிடம் பலஸ்தீனியர்கள் வேலை செய்வர், இவர்களின் விளை பொருட்களை அவர்கள் வாங்கிக் கொள்வர்… இப்படி. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளக் கூட இயலாத அளவிற்கு இனப்பகை உருவாகியது. இப்படி அருகருகே இருப்பவர்கள் பேசிக் கொள்ளக்கூட இல்லாமல் பகை கொண்டுள்ள நிலை ஒருவருக்கொருவர் இப்படிக் குழந்தைகளைக் கடத்திச் சென்று கொல்லக்கூடிய மனநிலையை உருவாக்கி விடுகிறது.

பலஸ்தீனிய அமைப்புகளிடம் ஒற்றுமை இல்லை என்பது ஊரறிந்த உண்மை. 2006 தொடங்கி காஸா ஹமாசின் கட்டுப்பாட்டிலும், மேற்குக்கரை ஃபடா அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இயங்கி வந்தன. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாதிப் போராளிகள் கைது செய்யப்படுவதில் ஃபடா அமைப்பு இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. எனினும் நீண்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பின் சென்ற ஏப்ரல் 23 (2014) அன்று ஹமாசும் ஃபடாவும் இணைந்து காசாவில் “ஒற்றுமை அரசு” அமைக்க முடிவெடுத்ததை இஸ்ரேல் எரிச்சலுடன் பார்த்தது. இத்தனைக்கும் அந்த ஒப்பந்தத்தில் 1967ல் இருந்த நிலையில் இஸ்ரேல் எனும் நாட்டை அங்கீகரிப்பது, வன்முறைகளை நிறுத்திக் கொள்வது முதலான அம்சங்களும் இருந்தன, ஹமாஸ் இதுவரை இஸ்ரேல் எனும் நாட்டை அங்கீகரித்ததில்லை.

இஸ்ரேல் இன்று இத்தனை ஆத்திரத்துடன் தாக்குதல் நடத்துவதன் பின்னணியில் ஹமாஸ், ஃபடா இரண்டையும் முற்றிலும் எதிர் எதிராக நிறுத்தி இப்போது உருவாகியுள்ள இந்த “ஒற்றுமையை”க் குலைப்பதும் ஒரு நோக்கமாக உள்ளது. எகிப்து உருவாக்கிய போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்ததை இன்று ஃபடா அமைப்பின் தலைவர் அப்பாஸ் கண்டித்துள்ளார். இன்றைய எகிப்து அரசு ஹமாசுக்கு எதிரானது என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்புதலை நம்பவே இயலாது. அப்படித்தான் 2008ல் போர் நிறுத்தத்திற்கு முதலில் ஒப்புக் கொண்ட இஸ்ரேல், கைதாகியுள்ள ஓரு இஸ்ரேலியர் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒரு காரணத்தைச் சொல்லி போரைத் தொடர்ந்தது. அந்தப் போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுவதற்கு ஒரே வழி “இரு நாட்டுத் தீர்வு” (Two Nation Solution) எனப்படும் ஐ.நா.தீர்மானத்தை நிறைவேற்றுவதுதான். 1967 நவம்பர் 22ல் இயற்றப்பட்ட ஐ.நா தீர்மானம்(எண் 242) மற்றும்1974 நவம்பர் 22ல் உள்ளடக்கப்பட்ட பலஸ்தீனியர்களின் உரிமைக்கான இணைப்பு ஆகியவற்றின் ஊடாக உருப் பெற்ற இந்தத் தீர்வு இன்று வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இஸ்ரேலும் அமெரிக்காவும் அதைத் தடுத்து நிறுத்தி வருகின்றன. பலஸ்தீனர்கள் 1967 தீர்மானத்தில் அதிருப்தி கொண்டிருந்த போதிலும் பின்னர் அதை ஏற்றுக்கொண்டனர். பலஸ்தீனம், இஸ்ரேல் எனும் இரு நாடுகளை உரிய எல்லை மற்றும் இறையாண்மையுடன் உருவாக்குவது என்பதுதான் அந்தத் தீர்மானம். 1967க்கு முந்திய நிலையின் அடிப்படையில் இந்த எல்லைகள் தீர்மானிக்கப்படும் என்பது முக்கிய அம்சம். அதாவது 1967 போரில் இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகளிலிருந்து அது வெளியேறுவதையும், அகதிகளாக வெளியேறிய பலஸ்தீனர் நாடு திரும்புவதையும் அது உள்ளடக்குகிறது.

அப்படி பலஸ்தீனமும் இஸ்ரேலும் இறையாண்மையுள்ள இரு தனித் தனி நாடுகளாக உருவாகாத வரை இப்படித்தான் பலஸ்தீனிய இனம் அழிக்கப்படுவதும் உலகம் அதை வேடிக்கை பார்ப்பதும் தொடரும்.

இன்றைய போர் குறித்து நேரில் அறிந்து எழுதியுள்ள இந்தியவியல் அறிஞரும் ஜெருசலேம் பல்கலைக்கழகப் பேராசிரியருமான டேவிட் ஷுல்மான் கூறியுள்ளதைப் போல, “இன வெறுப்பு மற்றும் படுகொலைகளை விடக் கொடியது அதைக் காணும் மற்றவர்களின் மௌனம்தான்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *