ஜெயகாந்தன் : சில நினைவுகள்

“மதவாத மற்றும் சாதீய சக்திகளுக்கு வாக்களிக்காதீர்” என்கிற எழுத்தாளர்களின் வேண்டுகோள் அறிக்கையில் கையொப்பம் பெற ஒவ்வொரு நண்பர்களாகப் பேசிக்கொண்டிருந்தேன். நான் மிகவும் மதிக்கும் மூத்த இதழாளர் துரைராஜ் அவர்கள் ஃப்ரன்ட்லைன் இதழிலிருந்து ஓய்வு பெற்று திருச்சியில் உள்ளார். அவருடன் உரையாடுவது எப்போதும் மனநிறைவைத் தரும் ஒரு அனுபவம். ஜெயகாந்தன் அவர்களின் நல்ல நண்பர்களில் ஒருவர் அவர்.

எந்தத் தயக்கமும் இன்றி அறிக்கையில் பங்கு பெற ஒப்புதல் அளித்த துரைராஜ் அவர்களுடனான உரையாடல் வழக்கம்போல ஜெயகாந்தன் அவர்களது உடல் நல விசாரிப்பை நோக்கி நகர்ந்தது. திடீரென எனக்கு ஒரு யோசனை. இந்த அறிக்கையில் முதல் கையொப்பதாரியாக ஜெயகாந்தன் இடம் பெற்றால் எப்படி இருக்கும்? எளிய மக்கள் எல்லோரையும் எழுதிய, நேசித்த அவருக்கு இதில் கையொப்பமிட என்ன தயக்கம் இருக்க இயலும்?

“செய்யலாமே”, உடனே போய்ப் பார்க்க உற்சாகம் அளித்தார் துரைராஜ். ஆனால் ஜெயகாந்தனைத் தனியாகப் போய்ப் பார்க்கும் தைரியம் எனக்கிருந்ததில்லை. இதுவரையிலும் மேடைகளில் மட்டுமே அவரைக் கண்டவன் நான். நான் தயங்கியதைக் கண்ட அவர் சொன்னார்: “உங்களை அவருக்கு நல்லா தெரியும். தினமணியில் வந்த உங்களின் காந்தி பற்றிய கட்டுரையைப் படிச்சிட்டு, மார்க்ஸ் காந்தி பற்றி எழுதினதை எல்லாம் தொகுத்து புத்தகமாப் போடணும்னு சொல்வாரே..” என்றார்.

துரைராஜ் இதைச் சொல்வது இரண்டாம் முறை. முதல்முறையைப் போலவே இப்போதும் நெகிழ்ந்து நீரானேன். எனது எழுத்துப் பணிக்கு இதைத்தவிர வேறென்ன பெரிய விருது எனக்குக் கிடைத்து விட இயலும்? அப்படி அவர் சொன்னதற்குப் பின் காந்தி பற்றி ஒரு முழு நூல் நான் எழுதியுள்ளது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,

######

எங்கள் ஊருக்கு (பாப்பாநாடு) அப்போதெல்லாம் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி கதிர்’ எல்லாம் தபால் பார்சல்களாகத்தான் வரும். பஞ்சநாதம் என்பவர் ஏஜன்ட். நாளிதழ்கள் பஸ்களில் பார்சாலாக வரும். குமுதம், விகடன், கதிர் தவிர தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ ஆகிய வார இதழ்களையும் ‘தினமணி’, ‘எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களையும் வீட்டுக்கு வரவழைப்பார் அப்பா. கருத்துக்கள் பிடிக்காத போதும் அன்றைய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் ‘கணக்கன்’ கட்டுரைகளை தினம் அவர் படிக்கத் தவற மாட்டார். அப்புறம் ‘சோவியத் நாடு’, ‘தாமரை’ ஆகியனவும் வரும். ராமசாமி அவர்களின் ‘நாத்திகம்’ இதழும் வரும். ‘எக்ஸ்பிரசை’ எனக்கெனவே அவர் வாங்கியபோதும் நாளிதழ் படிப்பதில் அப்போது எனக்கு ஆர்வமில்லை.

‘குமுதம்’, ‘விகடன்’ ஆகியவைதான் நான் விரும்பிப் படிப்பவை. அழகிய படங்களுக்காக ‘சோவியத் நாடு’ இதழைப் படித்துவிட்டுக் கடையில் போடாமல் பாதுகாத்து வைத்திருப்பேன். வியாழன், சனி என நினைவு. இந்த நாட்களில்தான் அப்போது குமுதம், விகடன் வரும். போஸ்ட் ஆபீசில் காத்திருப்பேன். பஞ்சு சற்றுத் தாமதமாகத்தான் வருவார். பார்சலைப் பிரித்தவுடன் தரவும் மாட்டார். அவர் ஒரு ‘சீல்’ வைத்திருப்பார். “பஞ்சநாதம்/குமுதம், விகடன் ஏஜன்ட்/திருமங்கலக் கோட்டை காலனி” என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்த பின்தான் சிரித்துக் கொண்டே இதழை என்னிடம் நீட்டுவார்.

உடனே வீட்டுக்குப் போய்விட மாட்டேன். ஒரு மரத்தடியில் நின்று தொடர்கதைகளை எல்லாம் படித்துவிட்டுத்தான் போவேன். வீட்டில் அம்மாவும், பெரிய தங்கையும் காத்திருப்பார்கள். சாண்டில்யன் (யவன ராணி), சேவற்கொடியோன், மணியன், ரா.கி.ரங்கராஜன் (இது சத்தியம்), தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் (பத்து பேர்கள் தேடிய பத்துக் கோடி), சி.சுப்பிரமணியத்தின் பயணக் கட்டுரைகள் (நான் சென்ற சில நாடுகள்), இவற்றோடு பின்னாளில் தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யையும் கூட நான் இந்த இதழ்களில் (தினமணி கதிர்) தொடர்கதையாகத்தான் படித்தேன். கோபுலுவின் சித்திரங்களுடன் கதிரில் ‘செம்பருத்தி’யை வாசித்தது கண்முன் நிற்கிறது.

அப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் ஒரு முத்திரைக் கதை வரும். அந்த வயதில் அந்தக் கதைகள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அப்பா என்.சி,பி,எச் சிலிருந்து வாங்கிவரும் ருஷ்ய நாவல்களையும் அவ்வளவாகப் படிக்க ஆர்வம் இருப்பதில்லை. அனாலும் தயாரிப்பு நேர்த்தியில் மயங்கி அவற்றைப் பத்திரமாக வைத்திருப்பேன். விகடன், குமுதம் ஆகியவற்றில் வரும் தொடர்கதைகள் ஏற்படுத்திய ஆர்வம் என்னை துப்பறியும் நாவல்கள் படிப்பதற்கு இட்டுச் சென்றது. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து ஒன்றிரண்டை எடுத்து வந்து நான் படிப்பது அப்பாவுக்குப் பிடிக்காது. அம்மாவிடம் சத்தம் போடுவார். “வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களையாவது படிக்கச் சொல்லு. கண்ட துப்பறியும் நாவலையும் படிக்க வேணாம்னு சொல்லு” எனச் சத்தமும் போடுவார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ (மணியத்தின் படங்களுடன்), அரு.இராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’, இவற்றை எல்லாம் கொண்டு வந்து தந்து, “இதையாவது படி, கொஞ்சம் வரலாறாவது தெரிஞ்சுக்கலாம்’ என்பார். அதையெல்லாம் நான் வேகமாகப் படித்து விடுவேன்.

மின் விசிறி, மேசை, நாற்காலி இந்த வசதிகள் எதுவும் இல்லாத அந்த வீட்டில் இவற்றை எல்லாம் வெறி கொண்டு படித்துத் தீர்த்த காலம் அது, அப்படி ஏதோ ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த போதுதான் பட்டென்று என் முன் விழுந்தது ஒரு விகடன். எதிரே நின்றிருந்த அப்பா கோபமாக. “இதைப் படிச்சியா நீ? படிச்சிருக்க மாட்டே ! இந்த மாதிரி நல்ல கதைகளைப் படிடா. கண்டதைப் படிக்காதேடா” என்று கத்தி விட்டு நகர்ந்தார். அவர் அகன்றவுடன் அதை எடுத்துப் பார்த்தேன். ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்”.

அது ஒரு குறு நாவல். அப்போதெல்லாம் ஆனந்த விகடனில் இப்படி நிறைய குறுநாவல்கள் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு இது போலச் சிறப்பிதழ்களில் வரும். சற்றுப் பெரிதாக இருப்பதாலோ என்னவோ அவற்றையும் நான் ஆர்வமாகப் படிப்பதில்லை. சரி இதைப் படித்துத்தான் பார்ப்போமே எனப் புரட்டத் தொடங்கினேன்.

அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. அப்படியான அநுபவங்கள் மீண்டும் மீண்டும் எனக்குத் தேவையாகவும் இருந்தன. ஜெயகாந்தனின் நூல்களை எல்லாம் தேடித் தேடிப் படித்தேன். அப்பாவின் சேகரங்களில் இருந்த சரத்சந்திரர், காண்டேகர், அப்புறம் அப்பா வாங்கித் தந்திருந்த ருஷ்ய நாவல்கள்… எனக்கு ஒரு புதிய உலகம் திறந்தது,

அந்தச் சின்ன வயதில் ஜெயகாந்தன் மீது எனக்கு ஒரு பித்து ஏற்பட்டிருந்தது, அவர் இந்தக் காலகட்டத்தில் தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார், தினமணி கதிரில் நிறைய எழுதினார். ‘ரிஷிமூலம்’, ‘சமூகம் என்பது நாலு பேர்’ எல்லாம் கோபுலுவின் படங்களுடன் கதிரில்தான் வந்தன. ஆனந்த விகடனில் அப்போது வந்த அவரது ‘அக்கினிப் பிரவேசம்’ (படம்: மாயா) என்கிற சிறு கதை மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது, அதற்கு எதிராக மாற்றுக் கதை ஒன்றையும் யாரோ எழுதினார்கள். பின் ஜெயகாந்தன் அதன் தொடர்ச்சியாகச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைத் தொடர்கதையாக எழுதினார். அந்தக் கால்கட்டத்தில் அவர் எழுதிய ‘அந்தரங்கம் புனிதமானது’ வும் .’சமூகம் என்பது நாலு பேர்’ உம் என் மன விசாலத்திற்குப் பெரிதும் காரணமாயின, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘பாரீசுக்குப் போ’ முதலியன வெறுப்பற்ற ஒரு உலகம் குறித்த கனவுகளை என்னில் விதைத்தன.

சொன்னால் நம்பமாட்டீர்கள், சொல்வதற்கு வெட்கமாகவும் உள்ளது. பத்திரிக்கைகளில் வரும் ஜெயகாந்தனின் படங்களை மெழுகு வைத்துத் தேய்த்துப் புத்தகங்களில் பிரதி செய்து கொள்வேன். அப்படி ஒரு நூல் என்னிடம் இன்றும் உள்ளது. ‘மார்க்ஸ் ஏங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்’ என்கிற ருஷ்ய மொழிபெயர்ப்பு நூல் அது. மார்க்ஸ் இறந்தவுடன் அவரது அக்காலத்திய நண்பர்கள் எழுதியவை உள்ளிட்ட பல கட்டுரைகளும் மார்க்ஸ் ஏங்கல்சின் மிக அழகான படங்களும் நிரம்பிய நூல், வில்லியம் லீப்னெக்ட் போன்றோரின் கட்டுரைகளை முதன் முதலில் அதில்தான் பார்த்தேன். அந்தப் புத்தகத்தில் நான் மெழுகுப் பிரதி செய்த ஜெயகாந்தனின் படம் இன்னும் உண்டு.

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தின் (இப்போது பழைய பஸ் ஸ்டான்ட்) வெளிப்புறத்தில்  அரை வட்ட வடிவில் அன்று (1965, 66) ஒரு என்.சி.பி.எச் புத்தகக் கடை உண்டு. நான் அப்போது சரபோஜி கல்லூரி மாணவன். ஊருக்குப் போகும்போதும் வரும்போதும் அங்கு சென்று காசிருந்தால் ரசியப் புத்தகங்கள் வாங்குவேன். ஒரு பெரியவர் அங்கிருப்பார், ஜெயகாந்தன் புத்தகங்கள் அங்கிருக்காது. அப்போது மதுரை மீனாட்சி புத்தகாலயம்தான் ஜெயகாந்தன் நூல்களை வெளியிட்டு வந்தது, அந்தப் பெரியவரிடம் ஜெயகாந்தன் புத்தகங்கள் பற்றி விசாரித்தபோது அவர் ரொம்ப எதிர் மறையாக ஏதோ சொன்னார். “அவன் கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தவரை ஒழுங்கா எழுதிட்டு இருந்தான்; இப்ப கண்ட அசிங்கங்களையும் எழுத ஆரம்பிச்சுட்டான்..” என்றார். இது ஜெயகாந்தன் பற்றி எனக்குக் கிடைத்த முதல் எதிர்மறை விமர்சனம், ஆனால் இது ஜெயகாந்தன் பற்றிய எதிர்மறைக் கருத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கம்யூனிஸ்டுகளின் பார்வை மீதுதான் ஒரு எதிர்மறைப் பார்வையைத்தான் என்னிடம் ஏற்படுத்தியது. இங்குதான் நான் தஞ்சை பிரகாஷையும் முதலில் சந்தித்தது. அவரைச் சந்திக்கும் யாரும் யாரும் எளிதில் அவருக்குச் சீடராகிவிடுவார்கள். அவருக்கும் அவரது பேச்சுக்கும், அவரது ஆழமான இலக்கியப் பரிச்சயத்திற்கும் யாரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டு, ஆனால் முதல் உரையாடலிலேயே அவர் ஜெயகாந்தனை எடுத்தெறிந்து பேசியது என்னை அவரிடமிருந்து இறுதி வரை விலக்கி வைத்தது.

1967. காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு தி.மு.க ஆட்சி உருவானது. ஜெயகாந்தனும் கவிஞர் கண்ணதாசனும் அப்போது தீவிரமாகக் காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்தனர். காங்கிரசை எனக்குப் பிடிக்காவிட்டாலும் இந்த இருவரையும் எனக்குப் பிடிக்கும். காமாராசரின் காலம் அது. ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு நாளிதழ்கள் வந்தன; முதலில் ‘ஜெயபேரிகை’, அப்புறம் ‘ஜெயக்கொடி’. நான் அப்போது சரபோஜி கல்லூரி விடுதியில் இருந்தேன். தினந்தோறும் இரவில் விடுதி மேலாளர் நகரத்திற்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவார். அவரிடம் காசு கொடுத்து ஜெயபேரிகை வாங்கி வரச் சொல்வதுண்டு. அதில் வரும் ஜெயகாந்தன் கட்டுரைகளைப் படித்து நறுக்கி வைத்துக் கொள்வேன்.

அப்படித்தான் ஒருமுறை, அடுத்த நாள் காலை எனது பட்ட வகுப்பு தமிழ்த் தேர்வு. நான் தஞ்சையில் மேல வீதியும் கிழக்கு வீதியும் சந்திக்கும் முனையில் நடைபெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

1968ல் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது அன்றைய முதல்வர் அண்ணா இறந்து போனார், பெருந்திரளான மக்கள் கூட்டம். எங்கும் அண்ணா புகழ். அண்ணாவை ஒரு மக்கள் தலைவர் என்கிற நிலையிலிருந்து விமர்சனகளுக்கு அப்பாற்பட்ட ஒரு திரு உருவாகக் கட்டமைத்து அதன் மூலம் ஒரு நிரந்தர அரசியல் பலனைப் பெறும் முயற்சியைக் கருணாநிதி செவ்வனே செய்தார், அப்போது தமிழகம் முழுவதும் இதைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ஜெயகாந்தன். “நான் அண்ணாத்துரையை விமர்சிக்கிறேன்” என்கிற தலைப்பில் ஒரு குறு நூலாகவும் அந்தப் பேச்சு அப்போது வெளி வந்தது. அப்படிச் சென்னையில் நடைபெற்ற அத்தனை கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டேன்.

ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வந்த நாளிதழ்கள் மிகக் குறுகிய காலத்தில் நின்று போயின, அவரது மேடைப் பிரச்சாரங்களும் குறைந்தன. ‘கண்ணதாசன்’ என்கிற பெயரில் ஒரு இலக்கிய இதழை அப்போது கண்ணதாசன் நடத்திக் கொண்டிருந்தார். கண்ணதாசனை மதிப்பிடுகிறவர்கள் அவரது திரை இசைப் பாடல்களை விதந்து பேசுவதே வழக்கம். இந்த இதழ் மூலம் வெளிப்பட்ட அவரது பங்களிப்பை யாரும் பேசுவதில்லை. அரசியல் இல்லாத அந்த முழு இலக்கிய இதழில்தான் ஜெயகாந்தனின் இன்னொரு விவாதத்திற்குரிய முக்கிய படைப்பான ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ நாவல் தொடர்கதையாக வந்தது. அதன் பின் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானரதம்’ வெளி வந்தது.

ஜெயகாந்தனின் வளர்ச்சியில் இது மூன்றாவது நிலையின் தொடக்கம். ஒரு கம்யூனிஸ்டாகத் தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய அவர் ஆனந்த விகடன், தினமணி கதிர் முதலான ஜனரஞ்சக இதழ்களில் பெரும் பிரபலம் பெற்றபோது, அவர் மார்க்சீயத்திலிருந்து விலகுகிறார், மார்க்சீயத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் கவனம் கொள்கிறார் என்கிற விமர்சனங்கள் மட்டுமே இருந்தன. இப்போதோ அவர் மார்க்சீய விரோதியாகி விட்டார் என்கிற அளவிற்கு அவரது இந்தக் காலகட்ட எழுத்துக்கள் விமர்சனங்களை எதிர் கொண்டன. ‘ஜெய ஜெய சங்கர’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘ஹரஹர சங்கர’ முதலியன அவரது இக்காலகட்டப் படைப்புகளில் சில.

ஜெயகாந்தனின் எழுத்துக்களை நானும் விமர்சித்துள்ளேன். இன்றும் விமர்சனகள் உண்டு. ஆனால் ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும். அவரது பிற்காலத்து இந்த எழுத்துக்களும் கூட அவற்றை வாசிக்கும் யாரிடமும் மார்க்சீயம் முன்வைக்கும் பொதுமைச் சிந்தனைகளின்பால் இம்மியும் வெறுப்பை ஏற்படுத்தி விடா. மாறாக உலகை, மக்களை, எல்லாத் தரப்பு மக்களையும் வெறுப்பின்றி நேசிக்கும் மனநிலையைத்தான் அவை விதைக்கும். வெளிப்படையாகவும், மிக நுணுக்கமாகவும் மனிதர்கள் மீது வெறுப்பைக் கட்டமைக்கும் ஜெயமோகன் போன்றோரிடமிருந்து எட்ட இயலாத உயரத்தில் ஜெயகாந்தன் நிற்கும் புள்ளி இதுதான்.

######

ஜெயகாந்தனின் எழுத்துக்களைப் போலவே அவரது பேச்சுக்களாலும் வசீகரிக்கப்பட்டவன் நான். கடைசியாக நான் அவரது உரையைக் கேட்ட நிகழ்வு எண்பதுகளின் பிற்பகுதியில் அமைந்தது. அப்போது அன்ணா சாலை என்.சி.பி.எச் விற்பனை நிலையம் இப்போதுள்ள இடத்திற்கு நேரெதிராக இருந்தது. அதன் மாடியில் இருந்த ஒரு சிறு அறையில் அக்கூட்டம் நடை பெற்றது. சோவியத் யூனியனின் இறுதி அதிபர் கோர்பசேவ் ‘ப்ரெஸ்டோரிகா’, “க்ளாஸ்நாஸ்ட்” என சோவியத் யூனியனின் இரும்புத் திரையை மட்டுமல்ல அதன் சோஷலிச அடித்தளைத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த காலம் அது. உலகெங்கிலும் அதுவே அன்றைய முக்கிய விவாதம். ‘ரசியாவில் நடப்பதென்ன?’, ‘மார்க்சீயத்தின் பெயரால்’ என்கிற எனது இரு முக்கிய நூல்கள் அக்காலகட்ட விவாதங்களினூடாக வெளிப்போந்தவைதான். நான் அப்போது நக்சலைட் (இப்போதைய மாஓயிஸ்ட்) கட்சியிலிருந்து தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன், மாஓயிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக கோர்பசேவின் “சீர்திருத்தங்களை” எதிர்த்து வந்தது. என்.சி.பி.எச் நிறுவனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சி.பி.ஐ கட்சியோ இதுபற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கம்போல சோவியத் யூனியனையும் கோர்பசேவையும் ஆதரித்து வந்தது.

அந்தக் காலகட்டம் மிக முக்கியமான ஒன்று.. உலகெங்கிலும் கோர்பசேவின் நடவடிக்கைகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தன. கம்யூனிஸ்டுகள் மத்தியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் கம்யூனிஸ்டுகள் மத்தியில் இன்னும் அந்தக் குழப்பம் தீர்ந்தபாடில்லை என்பதுதான்.

அப்போது நான் ஒரு ‘பனிஷ்மென்ட் ட்ரான்ஸ்ஃபரில்’ குடியாத்தம் அரசு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், கல்லூரி ஆசிரியர் கழகத்தில் நான் மாநிலத் துணைத் தலைவருங் கூட. ஒரு மிகப் பெரிய போராட்டத்தை அகில இந்திய பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (AIFUCTO) நடத்திக் கொண்டிருந்தது. சங்கத்தின் பிற தலைவர்கள் எல்லோரும் டெல்லி சென்று விட்டனர். திருவல்லிக்கேணியில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இருந்த எங்கள் சங்க அலுவலகத்திற்கு நாந்தான் பொறுப்பு. போராட்ட நேரம். எந்த நேரமும் ஏதாவது வேலை இருக்கும். அந்தச் சூழலில்தான் யாரிடமோ பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு நான் ஜெயகாந்தனைக் கேட்கப் புறப்பட்டு விட்டேன்.

அண்ணாசாலை என்.சி.பி.எச் அலுவலகத்தின் சிறிய மாடியில் நடந்த கூட்டத்தில்தான் நான் ஜெயகாந்தனைக் கடைசியாகவும் நெருக்கமாகவும் பார்த்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச “இரும்புத்திரையைக் கிழித்து வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டிய” கோர்பசேவின் GLASNOST குறித்து நானும் நிறைய எழுதியுள்ளேன் ஜெயகாந்தன் அன்று அதை வேறு விதமாகச் சொன்னார்.

” இரகசியம் என்பது போல மானுடத்திற்கு எதிரான பண்பு எதுவும் இருக்க இயலாது; நான்கு பேர் இருக்கும் ஒரு அறையில் யாரேனும் இருவர் எல்லோருக்கும் தெரியும் மொழியிலன்றி அவர்களுக்கு மட்டுமே புரிந்த மொழியில் பேசிக் கொள்வதைக் காட்டிலும் அநாகரிகமான செயல் உலகில் வேறெதுவும் இருக்க இயலாது. இரகசியம் அந்நியம்; இதை இன்று கோர்பசேவ் உடைத்துள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.”

#######

ஜெயகாந்தனைத் தனியே சென்று சந்திப்பதில் நான் காட்டிய தயக்கத்தைக் கண்டு துரைராஜ் அதற்கொரு வழியையும் சொன்னார். “இந்தியா டுடே இதழில் வேலை செய்கிறாரே மணி அவரிடம் சொல்றேன், நீங்க அவரோடு போய்ப்பாருங்க. மணி ஜே.கேயின் உறவினரும் கூட”

மணியை எனக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் என்பதைத் தாண்டி அவர் ஒரு முறை சரத் சந்திரர் குறித்து என்னிடம் உரையாடியதிலிருந்து அவர் ஒரு இலக்கிய மனம் உடையவர் என்பதையும் நான் அறிவேன்.

அவரைத் தொடர்பு கொண்டு நான் ஜெயகாந்தனை இந்த அறிக்கை தொடர்பாகச் சந்திக்க வேண்டும் என்பதைச் சற்றுத் தயக்கத்துடனேயே கூறினேன். ஜெயகாந்தன் படுத்த படுக்கையாக இருப்பதையும், இந்த நேரத்தில் அவர் நம் கோரிக்கை குறித்துப் பேசி அறிக்கையில் கையொப்பம் இடுவதெல்லாம் சாத்தியமில்லை எனவும் மணி சொன்னபோது இந்தக் கோரிக்கையை அவரிடம் வைத்ததற்காக நான் வெட்கம் கொள்ள நேர்ந்தது.

சமாளித்துக் கொண்டு சொன்னேன், “பரவாயில்ல சார். நீங்க சமீபத்தில எப்பவாவது அவரைப் பார்க்கப் போனா சொல்லுங்க. ஒரு தடவை நான் அவரைப் பாக்கணும்” என்றேன்.

வரும் 24 அன்று ஜெயகாந்தனின் பிறந்த நாள். அன்று போகலாம் எனச் சொல்லியுள்ளார்.

ஆவலாகக் காத்திருக்கிறேன். அன்றைக்கு “மார்க்ஸ் ஏங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்” நூலை எடுத்துச் செல்ல வேண்டும். அதில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பதித்திருந்த அவரது சிறு புகைப்படத்தின் மெழுகுகுப் பதிவைக் காட்டி, ஒரு பூங்கொத்தையும் தந்து வணங்கி வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *