தஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள்

 உண்மை அறியும் குழு அறிக்கை

தஞ்சை
ஜூன் 19, 2012

தஞ்சையைச் சுற்றியுள்ள முத்துவீரக் கவுண்டன் பட்டி, மானோஜிப்பட்டி, குருவாடிப்பட்டி, ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகர், மாரியம்மன் கோயில், அம்மன்பேட்டை, ஆவாரம்பட்டி முதலான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டக் குறவர் இன மக்கள் வசிக்கின்றனர். பழங்குடிப் பட்டியல் இனத்தவரான (scheduled tribes) இவர்கள் பன்றி வளர்ப்பு, கூடை முடைதல், அம்மி கொத்துதல் முதலான தொழில்களைச் செய்து பிழைத்து வருகின்றனர். சிலர் விவசாயம், கொத்து வேலை முதலியவற்றையும் செய்து வருகின்றனர்.

தஞ்சை நகரை ஒட்டியுள்ள அன்னை சிவகாமி நகரிலுள்ள குறவர் குடியிருப்பில் கடந்த வாரத்தில் 60 பழங்குடிக் குறவர் பெண்கள் காலவரையரையற்ற உண்ணாவிரதமிருந்த செய்தியைப் பத்திரிக்கைகளில் படித்தோம். இவர்களில் நான்கு பெண்களின் உடல்நிலை மோசமானதையொட்டி அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செய்தியையும் அறிந்தோம்.. தஞ்சை, அரியலூர், திருவாரூர், சேலம் மற்றும் திருச்சி மாவட்டக் காவல்துறைகளால் தாங்கள் குற்றப்பரம்பரையினராக நடத்தப்பட்டுப் பொய்வழக்குகள், சட்ட விரோதக் காவல், சித்ரவதை முதலியவற்றால் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். போராட்டத்தை வழி நடத்திய விடுதலைச் சிறுத்தைகளின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் விவேகானந்தன் மற்றும் மனித உரிமைகளில் அக்கறை உள்ள சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இப்பிரச்சினை குறித்து விசாரிக்கக் கீழ்க்கண்டவாறு ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா.அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை,
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி,
3. பேரா. பிரபா. கல்விமணி, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம், திண்டிவனம்,
4. அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம், பேராவூரணி,
5. மு. சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், திருவாரூர்,
6. பேரா. சி. சுப்பிரமணியன், தஞ்சை

முதற் கட்டமாக சென்ற 11ந்தேதி அ.மார்க்ஸ் அங்கு சென்று உண்ணாவிரதம் இருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். அன்று மாலை மாவட்ட ஆட்சியர் முன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் உண்ணாவிரதமிருந்த பெண்கள் போராட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

இரண்டாங் கட்டமாக எம் குழுவினர் அனைவரும் நேற்றும் இன்று காலையும் தஞ்சை சென்று பாதிக்கப்பட்ட சுமார் 50 குறவர் இன ஆண்கள் மற்றும் பெண்களையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் ஐ.ஏ.எஸ், மாவட்டக் கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி ஐ.பி.எஸ் ஆகியோரையும். தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் கேப்டன் துரை, மாநிலப் பொருளாளர் திருவாதிரை ஆகியோரையும் சந்தித்தனர்.
கு2

பின்னணி

காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவெங்கிலும் பல பழங்குடிகளையும், சாதிகளையும் “குற்றப் பரம்பரை” என அறிவித்து அவர்களைக் குற்றப்பறம்பரைச் சட்டத்திற்குள் (Criminal Tribes Act -1911) கொண்டுவந்திருந்த வரலாற்றை நாம் அறிவோம். இந்தப்பட்டியலிலுள்ள மக்களில் 10 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் அனைவரும் தினம் மாலையில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வந்து அங்குள்ள பதிவேட்டில் தம் கைரேகைகளைப் பதித்துவிட்டு, இரவு முழுவதும் அங்கேயே தங்கிக் காலையில்தான் வீடு திரும்ப வேண்டும். வெளியூரிலுள்ள உறவினர் வீடுகளுக்கோ, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கோ செல்ல வேண்டுமாயின் காவல் துறையிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். இப்படியான ஒரு வாழ்வை வாழ நேர்ந்த இம்மக்களைக் காவல்துறையினர் எவ்வெவ் வகைகளிலெல்லாம் பயன்படுத்தியிருப்பர் என்பதை யாரும் யூகித்துக் கொள்ள இயலும். இலவச உழைப்பு, பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல் என்பவை தவிர தேவைப்படும்போதெல்லாம் திருட்டு வழக்குகளில் தொடர்புபடுத்திச் சிறையிலடைத்தல் என்பன இக்கொடுமைகளில் சில.

சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் இக்கொடுமைகட்கு எதிராக மக்கள் ஆங்காங்கு போராடினர். மதுரைக்கருகிலுள்ள பெருங்காமநல்லூரில் வாழ்ந்த பிரான்மலைக் கள்ளர்கள் இச்சட்டத்தை எதிர்த்து நடத்திய போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 ஆண்களும் 1 பெண்ணும் இறந்தனர். முத்துராமலிங்கத் தேவர் போன்றோரும் இச்சட்டத்திற்கெதிரான போரட்டங்களை நடத்தினர். சுதந்திரத்திர்குப் பின் இச்சட்டம் நீக்கப்பட்டது.

சட்டம் ஏட்டளவில் நீக்கப்பட்டபோதும் நமது காவல்துறையினரின் நெஞ்சத்திலிருந்து அது நீங்கவில்லை. இந்தச் சட்டம் அளித்த அபரிமிதமான அதிகாரங்களை அவ்வளவு எளிதாக அவர்கள் இழந்துவிடத் தயாராக இல்லை. ஒருகாலத்தில் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதும் எண்ணிக்கையில் பலமாகவும், குறிப்பிட்ட பகுதிகளில் செறிந்தும் வாழ நேர்ந்த சாதியினர் தேர்தல் அரசியலினூடாக வலுவான அரசியல் சக்திகளாக மாறினர். ஆனால் அத்தகைய வாய்ப்புப் பெற்றிராத பழங்குடியினர்களான இருளர்கள், குறவர்கள், ஒட்டர்கள் முதலானோர் காவல்துறையினரால் குற்றப் பரம்பரையினராக நடத்தப்படுவது தொடர்ந்தது.. ஆண்டு இறுதியில் கணக்கு முடிக்கவும், கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை முடிக்கவும், சில நேரங்களில் காவல் துறையுடன் நெருக்கமாக இருந்து செயல்படும் திருட்டுக் கும்பல்களைக் காப்பாற்றவும், பதவி உயர்வுகளுக்காகவும், பதக்கங்கள் (out of turn promotion and gallantry awards) பெறுவதற்காகவும் இவர்கள் கைது செய்யப்படுவர். வீடு புகுந்து இழுத்துச் சென்று பல நாட்கள் வரை சட்டவிரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து, குற்றங்களை ஒப்புக் கொள்ளச் செய்து சிறையில் அடைக்கப்படுவர். இவ்வாறு தேடி வரும்போது இளம் பெண்கள் தென்பட்டால் அவர்கள் கடத்திச் செல்லப்பட்டுத் துன்புறுத்தப் படுவர். பல நேரங்களில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுவதும் உண்டு.

பேசிக்கொண்டிருக்கும்போது ஒருவர் சொன்னார். ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை விழாவை வெகு விமரிசையாகக் காவல் நிலையங்களில் கொண்டாடுவது எல்லோருக்கும் தெரியும். அதை ஒட்டி பெரிய அளவில் வசூல் வேட்டையும் நடக்கும். ஆயுத பூஜை கொண்டாடும்போது காவல் நிலைய லாக் அப் அறை காலியாக இருக்கக் கூடாதாம். அதற்காக யாராவது ஒரு குறவரைக் கொண்டுவந்து பொய் வழக்கொன்றைப் போட்டு அடைத்து வைப்பார்களாம்.

காலங் காலமாக நடைபெற்று வந்த இக்கொடுமைகளை எதிர்த்துத்தான் இப்போது அந்தப் பழங்குடிப் பெண்கள் காலவரையரை அற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். இனி அவர்களின் சொற்களினூடாகச் சில சோகக் கதைகளைக் கேட்கலாம். நாங்கள் சேகரித்த வாக்கு மூலங்களில் இரண்டு மட்டுமே மாதிரிக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வாக்குமூலங்களிலிருந்து சுருக்கமாகச் சில செய்திகள்

1. முத்து வீரக் கண்டியன் பட்டி செல்வராணி க/பெ வீரையன்

“எனக்கு இரண்டு பெண்கள் ஒரு பையன். பண்ணி வளர்க்கிறது, கூலி வேலை மற்றும் வேஸ்ட் சாப்பாடு எடுக்கிறது எங்கள் தொழில். தொடர்ந்து என் புருசன் மேல கேஸ் போட்டுகிட்டே இருகாங்க. எல்லா ஸ்டேசன்லையும் அவர் மேல கேஸ் இருக்கு. மொத்தம் 17 கேஸ்கள். பிடிச்சிட்டுப்போய் சித்திரவதை பண்றாங்க. குறவன்ன்னா கேஸ் இல்லாம இருக்கக்கூடாதுங்கிறாங்க. பிள்ளைகள்

படிக்கக்கூடாதுங்கிறாங்க. போன வருசக் கடைசியில அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எஸ்.ஐ டேவிட் இருவரும் வந்து என் புருசனத் தேடுனாங்க, ஒப்படைக்கலன்னா உன்னை பலாத்காரம் பண்ணுவேன்னாங்க. என் அப்பா துரைசாமி கம்யூனிஸ்ட் கட்சியில இருக்கார். வார்டு மெம்பராவும் இருக்கார். அவர் இது பற்றி மேலதிகாரிங்க கிட்டப் புகார் மனு கொடுத்தார். அதனால அவரையும் சட்டக் கல்லூரியில் படிக்கிற என் தம்பியையும் பிடிச்சுட்டுப் போனாங்க. அப்பாவ விலங்கு போட்டு தெருவுல நாய் மாதிரி இழுத்துட்டுப் போனாங்க. தம்பிய விட்டுட்டு அப்பா மேல கேஸ் போட்டாங்க. பத்து பவுன் நகை கொடுத்தா விட்டுடரேன்னு சொன்னாங்க. எங்க கிட்ட இல்லன்னோம். ஏதாவது ஒரு நகை கடையைக் காமி. இங்கதான் திருட்டு நகையை வித்தோம்னு சொல்லு. நாங்க அவன்கிட்ட வாங்கிக்கிறோம்னு சொன்னாங்க. அப்போ முல்லை பெரியார் பிரச்சினை இருந்துச்சு. முத்தூட் ஃபைனான்ஸ்லதான் குடுத்தேன்னு சொல்லுன்னு சொன்னாங்க. தாங்க முடியாம நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக மண்ணெண்ணையை ஊத்தி தீ வச்சுக்கிட்டேன்.”

50 சதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வராணி சிகிச்சைக்குப் பின் பிழைத்துக் கொண்டார். எனினும் கைது பொய் வழக்குகள் முதலியன தொடர்ந்தன. குறவர் இனத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி பெருமாள்(60), அவரது மருமகன் அன்பழகன் (28) ஆகியோர் கடந்த ஏப்ரல் 30ம் தேதியும், மானோஜிப்பட்டி நாகப்பா (37) மே 20ம் தேதியும் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை குறவர் பழங்குடி சங்கம் ஏற்பாடு செய்தது. இதை அறிந்த காவல் துறையினர் அன்னை சிவகாமி நகர் கணேசனை (45) கடந்த 5ம் தேதியும், இச்சங்கத்தின் மாவட்ட அமைப்பாளரும் செல்வராணியின் கணவருமான முத்துவீரக் கண்டியன் பட்டி வீரையனை ஏழாம் தேதியும் கைது செய்தது. மருத்துவக் கல்லூரிக் காவல் நிலைய ஆய்வாளர் சுபாஷ் சந்திர போஸ், வீரையனை தொலைபேசியில் அழைத்து காவல் நிலையத்திற்கு வரச் சொல்லிக் கைது செய்தார். பின் அவர் அய்யம்பேட்டைக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று பழைய வழக்கொன்றில் சிக்கவைக்கப்பட்டார்.

நேற்று மாலை பிணையில் விடுதலை ஆன அவரை சிறை வாசலிலேயே சாதாரண உடையிலிருந்த போலீசார் மீண்டும் கைது செய்ய முனைந்துள்ளனர். அவரது வழக்குரைஞர் காமராஜ் தலையிட்ட பின்பு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை தன்மீது 17 பொய் வழக்குகள் போடப்பட்டன எனவும் விசாரணை முடிந்த இரு வழக்குகளிலும் தான் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் வீரையன் எம் குழுவிடம் கூறினார்.

கு 2

2. முருகாயி க/பெ ரஜினி

“மானோஜிப்பட்டி சரபோஜி நகரில் நாங்க இருக்கோம்.நாலரை ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம் தவிர கொத்தனார் வேலையும் அவர் செய்வார். 2005 லிருந்து எ3ன்னையும் என் புருசன், தம்பி, மாமியார், ஓப்படியா இப்டி எல்லாரையும் குடவாசல், அரியலூர், புதுக்கோட்டை, மெடிகல் காலேஜ் இப்படி பல போலீஸ்காரங்க பிடிச்சு, அடிச்சு, சித்ரவதை பண்ணி பொய் கேஸ் போட்டு கொடுமைப் படுத்திருக்காங்க. 2005ல குடவாசல் போலீஸ் என் புருசனப் புடிச்சிட்டுப்போயி 30 நாள் வச்சிருந்தாங்க. போய்க் கேட்டா காட்ட மாட்டாங்க. அடி தாங்க முடியாம என் புருசன் தப்பிச்சு ஒடிட்டாரு. உடனே எங்கள தொந்தரவு பண்ண ஆரம்பிச்சாங்க. என்னை, மாமியார், தம்பி, அண்ணன் நாலு பேரையும் புடிச்சுட்டுப் போனாங்க. மாமியாரை தஞ்சாவூர் நூலகக் கட்டிடத்துக்குப் பக்கத்துல ஒரு மாடியில வச்சு அடிச்சாங்க. அண்ணன், தம்பி ரண்டு பேரையும் குடவாசல் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என்னையும் நாலு வயசு, ஒன்றரை வயசுள்ள என் ரண்டு பிள்ளைகளையும் நன்னிலம் ஸ்டேஷனுக்குக் கொண்டு போனாங்க. என் பிள்ளைங்க போட்டிருந்த வெள்ளி அரணா, மோதிரம் எல்லாத்தையும் புடுங்கிட்டாங்க. என்னை ஒரு வாரம் போட்டு அடிச்சாங்க. என் புருசன் போய் அரெஸ்ட் ஆனார். அப்புறந்தான் எங்களை விட்டாங்க.
5பேர் மேல கேஸ் போட்டாங்க. அப்புறம் பெயிலில் எடுத்தோம். ஆனா மறுபடி மெடிகல் காலேஜ் ஸ்டேசன்ல அவரைக் கைது செய்து 20 நாள் வச்சு அடிச்சாங்க. அப்புறம் அவர் மேல 4 கேஸ் போட்டு திருவையாறில ரிமான்ட் பண்ணினாங்க. மறுபடி பெய்ல் எடுத்தோம். 2009ல் அரியலூர் ஸ்டேஷன்லேருந்து பிடிச்சுட்டுப் போய் ஒரு வாரம் வச்சிருந்து அடிச்சுச் சித்ரவதை பண்ணி அப்புறம் ஒரு கேஸ்ல ரிமான்ட் பண்ணினாங்க. அதோட முடியல. நான், என் ஓப்பிடியா, மாமியார், சித்தப்பா மொத்தம் 11 பேர், ரண்டு ஆண், 9 பெண்கள திருச்சி போலீஸ் கைது பண்ணிக் கொண்டு போச்சு.. திருச்சி டோல்கேட் மண்டபத்தில் வச்சு ராத்திரியெல்லாம் அடிச்சாங்க. சித்தப்பாவையும், மாமியாரையும் விட்டாங்க. என்னையும் ஓப்பிடியாவையும் புடவையெல்லாம் அவுத்துட்டு வெறும் பாடி, பாவாடையோட 3 பெண் போலீஸ்கள் தொடை மேல ஏறி நின்னு ஆண் போலீசை விட்டு அடிக்கச் சொன்னாங்க. இப்படி ஒரு வாரம் நடந்துச்சி. அப்புறம் திருமானூர் ஸ்டேசனுக்குக் கொண்டுபோயி மத்தவங்க மேல குண்டர் சட்டம் போட எங்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு விட்டாங்க. என் கொழுந்தனார் அப்புறம் அண்ணன் 2 பேர் மேல குண்டர் சட்டம் போட்டாங்க.

2010ல மறுபடி மெடிகல் காலேஜ் போலீஸ் வந்து பிடிச்சது. அங்கே வந்த புதுக்கோட்டை போலீஸ் எங்களை ஆலங்குடி கொண்டு போச்சுது. 8 நாள் வச்சிருந்தாங்க. நாலு நாள் என்னையும் எம் புருசனையும் பத்துப் பத்துப்பேர் சுத்தி நின்னு அடிச்சாங்க. அப்புறம் 6 பேர் மேல கேஸ் போட்டாங்க. எம் மேலையும் (24) ஓப்பிடியா (22) மேலையும் கொள்ளை முயற்சின்னு கேஸ் போட்டாங்க.

அப்புறம் அம்மாபேட்டையிலுள்ள அக்கா வீட்டுக்குப் போயிட்டு வர்றப்போ பஸ்சை நிறுத்தி ஏட்டு செழியன், ரவி ஆய்வாளர், சுபாஷ் சந்திர போஸ் என்கிற மூணு போலீஸ்களும் என்னை, அண்ணனை, வீட்டுக்காரரை அழைச்சிட்டுப் போனாங்க. இரவு 9 மணிக்கு என்னை விட்டுட்டாங்க. மறு நாள் போனேன். அவங்களைக் காட்டல. 28 நாள் இப்படி வச்சு அடிச்சாங்க. மஜிஸ்ட்ரேட்டிடம் பெட்டிசன் கொடுத்த பின்புதான் ரிமான்ட் பண்ணாங்க. ஆனா அப்புறம் அவரு மேல குண்டர் சட்டம் போட்டாங்க. தெற்கு ஸ்டேஷன், மெடிகல் காலேஜ், பல்கலை கழகம், கீழவாசல்ன்னு மொத்தம் எட்டு கேஸ் அவர் மேல இருக்கு. அப்புறம் திருவெறும்பூர் ஸ்டேஷன்லையும் ஒரு கேஸ் இருக்கு.”.

அன்னை சிவகாமி நகரில் சேதுமணி மாதவன் உருவாக்கிய பெண்கள் சிறைச்சாலை.

அன்னை சிவகாமி நகரில் முருகேசன் என்பவரை அப்போது (2005) இன்ஸ்பெக்டராக இருந்த சேதுமணி மாதவன் தேடி வந்தார், முருகேசன் பயந்தோடிச் சென்றவுடன் அவரது வீட்டில் அந்தப் பகுதியிலிருந்த 15 பெண்களை உள்ளே வைத்துப் பூட்டிச் சுமார் 45 நாள் சிறை வைத்ததாகப் பலரும் வாக்குமூலங்கள் அளித்தனர். ஆய்வாளர்கள் சோமசுந்தரம், முத்தரசு, தமிழ்ச்செல்வன் முதலானவர்களும் உடந்தையாக இருந்ததாக நாகன் மகன் கணேசன் கூறினார். வேண்டும்போது வந்து பண்ணி அடிச்சு விருந்து சமைக்கச் சொல்லிச் சாப்பிட்டுவிட்டும் போவார்களாம்

ஒரு நாள் மஃப்டியில் அங்கு வந்த இன்னாசிமுத்து, தருமராஜ் என்ற இரண்டு போலீஸ்களை அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த செல்லன் மகன் ஆறுமுகம் அடித்து அங்கேயே உட்கார வைத்துவிட்டார். இதற்காக அவர் பட்ட சித்திரவதைகள், அவர் மீது போடப்பட்ட வழக்குகள் ஏராளம். ஈரோடு, சேலம், பரமக்குடி முதலான பல இடங்களுக்கும் கொண்டு போகப்பட்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. அதில் ஒரு கொலை வழக்கும் அடக்கம். எனினும் விசாரணை முடிந்துள்ள 3 வழக்குகளிலும் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஊட்டி ஆறுமுகம் என்பவரைத் தேடி வந்து அவரது மனைவி மீனாட்சியைக் கொண்டு சென்ற போலீஸ்காரர்கள் அவரைத் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர். வயதில் சிறிய அவரது கொழுந்தன்முன் அவரது மேற்சீலையை அவிழ்த்து வீசி. கொழுந்தன் மீது அவரைத் தள்ளி “அவளைக் கெடுறா” எனச் சொல்லி அடித்துள்ளனர். கையை அடித்து, பின்புறம் இழுத்து வளைத்துச் சித்திரவதை செய்ததில் மீனாட்சியின் சுண்டு விரல் நிரந்தரமாக வளைந்துள்ளது. அவமானம் தாங்காத மீனாட்சி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முனைந்துள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் என்பதற்காக அவரது வீட்டார் அவரைக் கண்காணிப்பில் வைத்துப் பாதுகாத்துள்ளனர். தனது ஒன்பதாவது படிக்கும் மகளையும் பன்னிரண்டாவது படிக்கும் மகனையும் பள்ளியில் சென்று அனைத்து மாணவர்களின் முன்னிலையில் அவமானம் செய்து, “நீங்கள்லாம் திருந்தினா எப்படி எங்களுக்கு வழக்குக் கிடைக்கும். எங்களின் பொண்டாட்டி பிள்ளைகள் என்ன செவாங்க? உங்களை நாங்க திருந்த விட்ருவோமா?” என ஏட்டு செழியனும் ஆய்வாளர் ரவிச்சந்திரனும் பள்ளியிலிருந்து விரட்டியதாகவும் மீனாட்சி வாக்குமூலம் அளித்தார். மகள் இப்போது பள்ளிக்குச் செல்வதில்லை.

சித்திரவதைகளில் லாடம் கட்டுவது, விரல்களில் ஊசி ஏற்றுவது, சிகரெட்டால் சுடுவது, மிக அசிங்கமாகப் பேசுவது என இந்த அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கொடுமைகள் ஏராளம்.

பெண்கள் மீதுப் பொய்யாகத் திருட்டுக் கேஸ்கள் போடுவது தவிர கஞ்சா கேஸ்கள் போடும் கொடுமையும் இங்கு நடந்துள்ளன. ஆனந்த் மனைவி கல்யாணி இவ்வாறு தன்மீது பொய்யாகக் கஞ்சா வழக்கு போடப்பட்டது குறித்து எங்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செழியன் என்னும் ஏட்டு காளியப்பனின் மனைவி பங்காருவின் வீட்டுப்பத்திரத்தை எடுத்துச் சென்றுள்ளார். செழியன், ஆய்வாளர் சோமசுந்தரம் இருவரும் அவர்களின் மகன் ராஜாவின் டி,வி,எஸ் ஃபோர்ட் எனும் இரு சக்கர வாகனத்தையும் (எண்: டி.என். ஏ.கே 49/ 7480) எடுத்துச் சென்றுள்ளனர். ஓட்டர் அய்.டியையும் பிடுங்கிச் சென்றுள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் மானோஜிப்பட்டியிலுள்ள தன் அக்கா வீட்டிற்கு வந்திருந்தபோது அவர் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைக்குப்பின் சேலம் சிறையில் அடைக்கப்பட்ட்டார். சிறையிலிருந்தபோது அவர் இறந்து போனார். 2008ல் முன்னயம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்கிற 9 வயதுச் சிறுவனைச் சமயபுரம் காவல் துறைக் கைது செய்து கொண்டு சென்று கடுமையாக அடித்துச் சித்திரவதை செய்து தலையில் கடுமையான காயங்களுடன் வீட்டில் கொண்டு சென்று போட்டது. மூன்று நாட்களில் அவன் இறந்து போனான்.

இம்மக்ககள் அளித்துள்ள இந்த வாக்கு மூலங்களைப் படித்தால் நம் காவல்துறையிடம் இத்தனை வக்கிரங்கள் புதைந்துள்ளனவா என ஒருவர் வியப்படைவதைத் தவிர்க்க இயலாது.

நிர்வாகத்தின் விளக்கங்கள்

மாவட்ட ஆட்சியரை நாங்கள் சந்தித்துப் பேசியபோது தன் அதிகார வரம்பிற்குள்ன் சாத்தியமான வகையில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அந்த விசாரணையில் காவல் அதிகாரிகள்மீது கூறப்பட்டிருக்கும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் அவர் எங்களின் குற்றச்சாட்டுகளை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் சொல்லுமாறும் வேறு எந்தெந்த முகமைகளிடம் இது குறித்துப் புகார்கள் செய்ய இயலுமோ அங்கெல்லாமும் முயற்சியுங்கள் என்றும் கூறினார். காவல்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாக இருப்பதால் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் அவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்குக் கிடையாது என்பதைச் சொல்லி வந்தோம்.

ஐ.ஜி அலெக்சாண்டர் மோகன் அவர்களைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டபோது அவர் கிரிமினல்கள் மீது மட்டுமே தாங்கள் வழக்குகளைப் போடுவதாகவும், பொய் வழக்குகள் போடுவதில்லை எனவும் கூறினார். குற்றவாளிகள் மீது வழக்குகள் போடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஒரு இனத்தையே குற்றவாளியாகக் கருதி நடவடிக்கை எடுப்பதைத்தான் நாங்கள் சொல்கிறோம் எனச் சொன்னபோது அப்படியெல்லாம் இல்லை எனத் தான் குறவர் பிரதிநிதிகளிடம் விளக்கி அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளனர் எனப் பதிலளித்த அவர் கண்காணிப்பாளரிடம் பேசுமாறு கூறினார். கண்காணிப்பாளர் அனில் குமார் கிரி மிகவும் சுருக்கமாகப் பேசி முடித்துக் கொண்டார். காவல் துறை அதிகாரிகள் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

எமது பார்வைகள்

1. காவல் துறையின் கீழ் மட்ட அதிகாரிகளே இந்த அத்து மீறல்களுக்கெல்லாம் நேரடியாகப் பொறுப்பான போதிலும் உயர் அதிகாரிகள் இதற்கு உடந்தையாகவும், இது குறித்து முறையான விசாரணைக்குத் தயாரில்லாமலுமே உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் பழங்குடிப் பிரதிநிதிகள் ஐ.ஜி அலெக்சான்டர் மோகனைச் சந்திக்கச் சென்றபோது அவர் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் வேண்டுமானால் நீங்களே போலிஸ் ஸ்டேஷனை நடத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். இன்று அவர் தஞ்சையில் இருந்தும் நாங்கள் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்டும் எங்களை அவர் சந்திக்கவில்லை. தொடர்ந்து சில மாதங்களாக இந்த அத்து மீறல்கள் குறித்துப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோதும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் கீழ்மட்ட அதிகாரிகள் தொடர்ந்து அத்து மீறிக் கொண்டிருந்ததை மாவட்டக் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. இன்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அக்கறையுடன் நாங்கள் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டது குறிப்பிடத் தக்கது. வெறும் ஆர்.டி.ஓ விசாரணை மூலம் நீதி கிடைக்க வழி இல்லை என்பதையே இவை அனைத்தும் உறுதி செய்கின்றன.

2. குறவர்கள், இருளர்கள், ஒட்டர்கள் போன்ற பழங்குடிகள் எண்ணிக்கையில் சிறுத்தும் எந்த ஓரிடத்திலும் பெரும்பான்மையாக இல்லாதும் இருப்பதால் இவர்களின் பிரச்சினைகளை எந்த அரசியல் கட்சிகளும் பொருட்படுத்துவதில்லை. மிகவும் அடித்தள மக்களாகவும் எவ்வகையிலும் அரசியல் அதிகாரமும் அற்றுள்ள இவர்களின் பிரச்சினைகளில் இடதுசாரிக் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டத்தை வழி நடத்துவது பாராட்டுக்குரியது. எனினும் குறிப்பான வழக்குகள் புகார்கள் ஆகியவற்றைக் காவல் துறை அதிகாரிகள் மீது பதிவு செய்து முறையான வழக்குகளை அத்து மீறிய காவல் அதிகாரிகளின் மீது மேற்கொள்ளும் முயற்சி இதுவரை செய்யப்படாதது வருந்தத் தக்கது.

3. இது போன்று பொய் வழக்குகள் போடுவதன் மூலம் திருட்டுக்களும், கொள்ளைகளும் குறைந்ததில்லை என்பதை காவல்துறை கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இதன்மூலம் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடுவது குறித்தும் அதற்குக் கவலை இல்லை.

4. இதுவரை இவ்வாறு பழங்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகளில் விசாரணை முடிந்த வழக்குகள் அனைத்திலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்தும் காவல்துறைக்குக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

5. பெண்களை இவ்வாறு கொண்டுவந்து சித்திரவதை செய்து திருட்டு மற்றும் கஞ்சா வாழக்குகள் போடப்படும் கொடுமைகட்கும் அதிக முன்னுதாரணங்கள் இல்லை.

6. தஞ்சாவூரில் உள்ளவர்களைக் கொண்டு சென்று ஈரோடு, சேலம், பரமக்குடி முதலிய ஊர்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அவர்களுக்கு உறவினர்களோ, தொடர்புகளோ உள்ளனவா எனக் கேட்டபோது அப்படி இல்லை என்பது தெரிய வந்தது. பொதுவாகப் பழக்கமில்லாத பகுதிகளில் திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தவிரவும் எந்த வீடுகளிலும் திருட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவோ அவை ந்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவோ தெரியவில்லை.

7. பலர் மீது அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் திருடியதாக வழக்குகள் போடப்பட்டுள்ளன. மானோஜிப்பட்டி பொதிகை நகரைச் சேர்ந்த பொன்னன் மகன் மணி சேலம் சிறையில் இருந்த காலத்தில் பந்தநல்லூரில் திருடியதாகப் பிடித்துச் சென்று 9 நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து அடித்துள்ளனர். சேலம் சிறையில் இருந்ததை அவர் நிறுவியவுடன் அவர் மீது கஞ்சா வழக்குப் போடுச் சிறையில் அடைத்தனர்.

8.. காவல் துறை பழங்குடிக் குறவர்களைத் தேவைப்படும்போது வழக்குகள் போடுவதற்கான சேமிப்புப் படையாகவே வைத்துள்ளது.. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது அதிக அளவில் கைது செய்யப்படும் அவர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப் படுகின்றனர். சிறிய அளவில் கைதுகள் நடக்கும்போது ஏராளமான வழக்குகள் அவர்கள் மீது போடப்படுகின்றன. கைதுகள், சட்ட விரோதக் காவல்கள், சித்திரவதைகள், சிறை வாழ்க்கை, வழக்குகள், பிணை விடுதலைக்கு அலைதல் என்பதாக அவர்களின் வாழ்க்கை கழிகிறது.

எமது கோரிக்கைகள்

இப்பழங்குடி மக்கள் காவல்துறை மீது வைக்கும் ஏராளமான குற்றச்சாட்டுகளை விசாரித்து நீதி வழங்குவது ஆர்.டி.ஓ விசாரணையில் சாத்தியமே இல்லை என்பதால் பதவியில் உள்ள நீதிபதி ஒருவரால் இவை விசாரிக்கப்பட அரசு உத்தரவிட வேண்டும்..

சேதுமணி மாதவன், சுபாஷ் சந்திர போஸ் சோம சுந்தரம், ரவிச்சந்திரன், தமிழ்ச் செல்வன், முத்தரசு, பழனியப்பன் முதலான ஆய்வாளர்கள் ரவி, செழியன், தருமராஜ், பன்னீர்செல்வம், பத்மநாபன் முதலான காவலர்கள் மீது இம்மக்கள் பெயர் குறிப்பிட்டுக் குற்றம் சாட்டுகின்றனர். சாட்டுகின்றனர். அவர்கள் இப்பகுதியிலேயே பணியாற்றும் பட்சத்தில் விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுத் துறை நடவடிக்கை மட்டுமின்றிப் பழங்குடிகள் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்ற விசாரணைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். சித்திரவதையில் இறந்துபோன முருகன், முத்துக்குமார் ஆகியோரின் மரணத்துக்குக் காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். பழங்குடியினர் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் அனைத்துக் காவல் துறையினருக்கும் கொடுக்கப்படல் வேண்டும்.

பழங்குடிக் குறவர்கள்மீதான காவல்துறை அத்துமீறல்களை மட்டுமே இவ்வறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. இனச் சான்றிதழ் கொடுக்கப்படாமல் இருப்பது முதலான பழங்குடிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் இவர்கள் எதிர்கொள்கின்றனர். அரசின் இலவசத் திட்டங்கள் எதுவும் இவர்களைச் சென்றடைவதில்லை. மாவட்ட நிர்வாகம் இவற்றைக் கவனத்தில் கொண்டு உடனடியாகச் சரி செய்ய வேண்டும்.

இது போன்ற சிறுபான்மையாக உள்ள மக்கட் பிரிவுகளின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஆங்காங்கு அக்கறையுள்ள மனித உரிமை அமைப்புகளும் அரசியல் இயக்கங்களும் மாவட்டந்தோறும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்துச் செயல்பட வேண்டும்.

தொடர்புக்கு:

அ.மார்க்ஸ்

3/5, முதல் குறுக்குத் தெரு,
சாஸ்திரி நகர்,
அடையாறு,
சென்னை – 600 020.
செல்: 9444120582.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *