பச்சைக் குழந்தைகளின் தலையில் பாடச் சுமையும் தேர்வுச் சுமையும்

புதிய தேசிய கல்விக் கொள்கை – 2019

முன்னாள் விண்வெளி ஆய்வுத்துறைத் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முன்வைத்துள்ள தேசியக் கல்விக் கொள்கை நகல் அறிக்கை இன்று பெரிய அளவில் கவனத்திற்கும் விவாதத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். கல்வி என்பது இன்று அறிவு வளர்ச்சிக்கு மட்டுமின்றி நல்ல வாழக்கை அமைவதற்கான ஒரு முக்கிய கருவியாக அமைந்துள்ளது என்பது ஒன்று. மற்றது பா.ஜ.க அரசு அமையும் போதெல்லாம் அது கல்வித்துறையில் ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய மாற்றங்கள் எப்போதுமே மக்களின் கடுமையான விமர்சனத்திற்கும் ஐயத்திற்கும் ஆளாகியுள்ளன.

வழக்கமான கல்விக் கொள்கை அறிக்கையைப்போல் அல்லாமல் இந்த அறிக்கை சற்றே சலிப்பூட்டும் அளவிற்கு அளவில் பெரியதாக இருப்பதாலும், சுருக்கமாகவும் தெளிவாகவும் ஐயத்திற்கு இடமில்லாமல் ஒவ்வொரு பரிந்துரையையும் முன்வைக்காததாலும்  வாசிப்பவர்களுக்குப் பல்வேறு குழப்பங்களையும் ஐயத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளதை இதுவரை இதுகுறித்து வந்துள்ள விமர்சனங்களை வாசிக்கும்போது நாம் புரிந்து கொள்கிறோம்.

புதிதாக இப்படியான ஒரு கொள்கை அறிக்கை முன்வைக்கப்படும்போது இதுவரையிலான இத்துறை அறிக்கைகள் முன்வைத்தவை, பின்னோக்கிப் பார்க்கும்போது அவற்றில் காணப்படும் நிறை குறைகள், அவற்றின் பரிந்துரைகள் எந்த அளவிற்கு முந்தைய அரசுகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு சுருக்கமான கணக்கெடுப்பை அது முன்வைப்பது அவசியம். அந்த அடிப்படையில் இன்றைய சமூகப் பொருளாதார மாற்றங்களுக்குத் தக்காற்போல இனி மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும், உதறித் தள்ளவேண்டிய பழமைகளையும், செய்ய வேண்டிய புதுமைகளையும் அது சொல்வது அவசியம்.

கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை இவ்வகையில் பெரிய அளவில் தோல்வியுற்றுள்ளது. மோடி தலைமையில் 2014ல் பா.ஜ.க அரசு அமைக்கப்பட்ட போது டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் எனும் முன்னாள அரசு அதிகாரி தலைமையில் கல்வி தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டதை அறிவோம். அதன் அடிப்படையிலும் வழிகாட்டலிலும் உருவாக்கப்பட்டதாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவ்வறிக்கை, முந்திய அறிக்கை முன்வைத்த சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்துக் காட்டும் மௌனம் குறிப்பிடத் தக்கது. எடுத்துக்காட்டாக பத்தாம் வகுப்பில் கற்கைத் திறனைப் பொருத்து மாணவர்களைத் தரம் பிரித்துத் திறன் குறைவானவர்களைத் தொழிற்பயிற்சிக்குத் திருப்புவது என்பது சுப்பிரமணியம் குழு முன்வைத்த ஒரு பரிந்துரை. இது இங்கு பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியது. இது குறித்து கஸ்தூரிரங்கன் அறிக்கை மௌனம் சாதிக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த அறிக்கை 9ம் வகுப்பிலேயே மாணவர்கள் விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. இந்த வயதில் தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முடிவை குழந்தைகள் எடுக்க முடியாது என்பதால் இந்தப் பரிந்துரை இன்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் குழந்தைகளைத் தரம் பிரிப்பது என சுப்பிரமணியம் குழு சொன்னதுதான் இங்கே இப்படி வேறு சொற்களில் முன்வைக்கப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

சுப்பிரமணியம் குழு தாய்மொழியில்தான் கல்வி அமைய வேண்டும் என்பதை உறுதியாகச் சொன்னது. கஸ்தூரிரங்கன் குழுவோ, “சாத்தியமானல் குறைந்தபட்சம் 5ம் வகுப்பு வரையாவது மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும். எட்டாம் வகுப்புவரையில் தாய்மொழியில் கற்க முடிந்தால் நல்லது எனக் கூறுவதன் மூலம் முந்தைய குழு தாய்மொழி வழி  கல்வி பயில்வதற்கு அளித்த முக்கியத்துவம் நீர்க்கச் செய்யப்படுகிறது. தவிரவும் இப்போது கூடுதலாக மும்மொழிக் கொள்கை முன்மொழியப்படுகிறது. அதில் ‘இந்தி’ கட்டாயமாக இருக்கும் எனச் சொல்லி, அதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு எரெற்பட்டவுடன் இரண்டே நாட்களில் அந்த நிபந்தனை நீக்கப்பட்டதை அறிவோம்.

எனினும் மூன்று மொழிகள் கட்டாயம் என்பது தொடர்கிறது. ஆங்கிலம் தவிர மற்ற இரண்டும் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனை. வேறு நாட்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாமாம், அது நான்காவது மொழியாகத்தான் இருக்க முடியும் எனவும் சிறு வயதில் குழந்தைகள் ஒரே நேரத்தில் பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முடியும் எனவும் மூன்று வயதிற்குள் குழந்தைகளுக்கு 85 சத மூளை வளர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது என்றும் இவ்வறிக்கை சொல்லிக் கொண்டே போகிறது. அந்த வகையில் இனி குழந்தைகளின் ஆரம்பக் கல்வி மூன்று வயது முதலே கணக்கிடப்படும் எனவும் கஸ்தூரிரங்கன் குழு  கூறுகிறது. அது மட்டுமல்ல குழந்தைகள் 3, 5, 8 வகுப்புகளிலேயே பொதுத் தேர்வுகள் எழுத வேண்டும் என இக்குழு முன்வைக்கும் கருத்து இன்று கல்வியாளர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.

எட்டாவது வகுப்புகள் வரை தேர்வுகள் கூடாது என்று இருந்த நிலை இப்படி இன்று அதிரடியாக மாற்றப்படுகிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் அதிகம் வசிக்கும் நாடு நம்முடையது. மூன்று வயதிலேயே குழந்தைகளுக்கு முழு மூளை வளர்ச்சி ஏற்பட்டுவிடும் என வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிட்டுப் பாடச் சுமையோடு, தேர்வுச்சுமைகளையும் அவர்கள் மீது சுமத்தக் கூடாது என்கிற கருத்தைக் கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்..

இதை ஒட்டி கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் அளிக்கப்படும் கல்வி உரிமை விரிவாக்கப்படும் என இவ் அறிக்கை சொல்வதை நாம் வரவேற்கலாம். இப்போதுள்ள சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரைதான் கல்வி உரிமை வரையறுக்கப் பட்டுள்ளது இனி அது குழந்தைக் கல்வி (3வயது) தொடங்கி 12 ம் வகுப்பு (18 வயது) வரை நீடிக்கப்படும். இதை நாம் வரவேற்றபோதிலும் வசதிகளும் படிப்பறிவும் மிக்க குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு இணையாக இந்த நாட்டின் பெரும்பான்மையாக உள்ள அடித்தளச் சமூகக் குழந்தைகளின் மீது இப்படி கல்விச் சுமையை மூன்று வயதிலிருந்தும், தேர்வுச் சுமையை எட்டு வயதிலிருந்தும் ஏற்றுவதை இத்துடன் இணைக்கும் போது தான் நம்மால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை. இப்படிச் சின்ன வயதிலேயே குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு வைப்பது பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கே வழி வகுக்கும்.

“ஒரேநாடு ஒரே தேர்தல்”. “ஒரேநாடு. ஒரே ரேஷன் கார்டு” முதலான வரிசையில் கஸ்தூரிரங்கன் குழு இந்தியா முழுவதும் “ஒரேநாடு ஒரே பாட நூல்” என்கிற அடிப்படையில் NCERT பாடத் திட்டத்தைக் கட்டாயமாக்குவதும் கவனிக்கத்தக்கது. ஒன்று NCERT பாட நூலை அப்படியே பின்பற்ற வேண்டும். அல்லது NCERT பாடத் திட்டத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்..

இதேபோல 6,7,8 ம் வகுப்புகளிலேயே தொழிற் திறமையை வளர்க்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுமாம். என்ன வகையான தொழிற்பயிற்சி என்பதை அரசும் “உள்ளூர்ச் சமூகமும்” (local community) தீர்மானிக்குமாம்.. இவ்வாறு கல்வி வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் “உள்ளூர்ச் சமூகம்” மற்றும் ஏற்கனவே “கல்வி வளர்ச்சி அடைந்த உள்ளூர் சமுதாயம்” ஆகியவற்றின் “உதவிகளைப் பெறுதல்” என்பதற்கு இந்த அறிக்கை பல்வேறு மட்டங்களில் முக்கியத்துவம் கொடுப்பதை க;ல்விக் கொள்கைகளைத் தொடர்ந்து மதிப்பிட்டு வரும் பேரா. கும்கும் ராய் போன்றவர்கள் கண்டித்துள்ளனர். இந்தியாவைப் பொருத்த மட்டில் “சமூகம்” என்பது. பல்வேறு சாதிகளாகப் பிளவுண்ட “சமூகங்களின்” தொகுப்பாகத்தான் உள்ளது. எனவே உள்ளூர்ச் சமூகம் தீர்மானிக்கும் என்கிறபோது அங்குள்ள ஆதிக்க சாதியினரே தீர்மானிப்பர் என்றுதான் பொருளாகும்.

“இந்தியச் சமூகம்”, “இந்தியப் பண்பாடு”, “சமஸ்கிருதத்தின் சிறப்பு” ஆகியவற்றை இந்த அறிக்கை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து அடையாளமாக்குவதும் குறிப்பிடத் தக்கது. “பல்வேறு கல்வித் துறைகளைக் கற்பித்த இந்திய நாளந்தா மற்றும் தட்சசீலம் முதலான பல்கலைக் கழகங்கள்” மற்றும் “குருகுல” கல்வி முறை ஆகியவற்றை இந்தியாவின் பாரம்பரியக் கல்விமுறை என  இந்த அறிக்கை பேசிக் கொண்டே இருக்கிறது. “அந்த மாபெரும் பாரம்பரியத்தை நாம் மீளுருவாக்கம் செய்யவேண்டும்” என்கிறது. இப்படி குருகுலக் கல்வியையும்  நாளந்தா மற்றும் தட்சசீலம் முதலான பல்கலைக் கழகங்களையும் ஒரே நிலையில் வைத்துப் புகழ்வது அபத்தம்.பௌத்த மரபில் வந்த நாளந்தா,. தட்சசீலம் முதலியன 17ம் நூற்றாண்டில் உருவான ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களுக்கு முன்னோடியாக இருந்தவை. பல கலைகளில் தேர்ச்சி பெற்ற பல நாட்டு அறிஞர்கள் ஒரே இடத்தில் கூடி சாதி வருண வேற்பாடுகள் இல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்த மாணவர்களுக்குப் பல துறைகளிலும் பயிற்சி அளித்தவை அவை. குருகுலமுறை என்பது ஏதேனும் ஒரு துறை நூல்கள் மற்றும் வித்தைகளில் தேர்ச்சி பெற்ற முனிவர்களிடம் சென்று அவர்களுக்குச்  சேவை செய்து அவற்றைக் கற்றுக்கொள்ளுதல். கடுமையான வருண சாதிக் கட்டுப்பாடுகளூக்கு அவை உட்பட்டவை என்பதற்கு ஏகலைவன் வரலாறு ஒன்றே சாட்சி. பழமை என்பதற்காக எல்லாவற்றையும் கொண்டாடுவது எத்தனை ஆபத்து என்பத்ற்கு இது ஒரு எடுத்துக்காட்டு,

தவிரவும் இவ் அறிக்கை பெரும்பாலான  “இந்திய மொழிகளுக்கிடையே உள்ள வியக்கத்தக்க அறிவியல் பூர்வமான ஒற்றுமை, ஒரே மாதிரியான இலக்கணம், ஒலிப்பு முறைகள், சொற்களஞ்சியம், அறிவியல் அடிப்படையில் அமைந்த அகரவரிசை, எழுத்துருக்கள்” – முதலானவற்றை வியந்து போற்றுகிறது,  சமஸ்கிருதம் மற்றும் இதர செவ்வியல் மொழிகளிலிருந்து  இந்திய மொழிகளின் சொற்களஞ்சியங்கள் உருவாயின என்றும் வியப்புக் காட்டுகிறது. ஆனால் மறந்தும் கூட இந்திய மொழிகள் என்பவை அனைத்தும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்பதையும், குறைந்தபட்சம் இங்கே மூன்று மொழிக் குடும்பங்கள் இருந்தன என்பதையும் குறிப்பிடுவதில்லை. சமஸ்கிருதமும் திராவிட மொழிகளும் முற்றிலும் வேறுபட்ட மூலங்களைக் கொண்டவை என்பதையும், சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பியப் பின்புலம் கொண்டது என்பதையும் சொல்வதில்லை. ஒலிப்புமுறை, எழுத்துவடிவம், இலக்கணம் ஆகியவற்றிலும் இவ்விரண்டு மொழிக் குடும்பங்களும் முற்றிலும் வேறுபட்டவை. மேசை என்றால் ஆண்பால், நாற்காலி என்பது பெண்பால் என்பதுபோன்ற சமஸ்கிருத இலக்கண முறை திராவிட மொழிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

உயர் கல்வியில் முன்மொழியப்படும் மாற்றங்கள்

சுப்பிரமணியம் குழு அறிக்கைக்கும், இந்த அறிக்கைக்கும் இடைப்பட்ட இந்தச் சில ஆண்டுகளில் உயர் கல்வியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பல்கலைக் கழகங்களுக்கு நிதி நல்கை அளிப்பது மட்டுமல்லாமல் அவற்றுக்கு ஏற்பு வழங்குதல் முதலான அதிகாரங்களையும் பெற்றிருந்த “பல்கலைக் கழக மான்யக் குழு (UGC)” முதற்கட்டமாக வெறுமனே நிதி நல்கைக்கான குழுவாக ஆக்கப்பட்டு பlல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் நீக்கப்பட்டது. “உயர்கல்வி நிதி நல்கை முகமை” (Higher Education Financing Agency – HEFA) எனும் பெயரில் பல்கலைக் கழகங்களுக்குக் கடன் கொடுக்கும் நிதி முகமை ஒன்றும்  அறிவிக்கப்பட்டது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை எனத் தரப்படுத்தப்பட்ட சுயாட்சி (Graded Autonomy), பெரும் நிதி ஆதரவுடன் கூடிய “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institutions of Eminence)” முதலியனவும் மோடி அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களோடு இன்று ‘‘உயர்கல்வி நிதிநல்கை அமைப்பு’’ (Higher Education Grants Council – HEGC) என்பதாக அதிகாரம் குறைக்கப்பட்ட பல்கலைக் கழக மான்யக்குழுவிற்கு புதிய பெயர் சூட்டப் பட்டுள்ளது. “தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று’’ அமைப்பு (NHERA) எனும் புதிய அமைப்பு இனி பல்கலைக் கழகங்களைக் கட்டுப்படுத்துமாம்.

அதுமட்டுமல்ல பல்கலைக் கழகங்களைத் தர நிர்ணயம் செய்யும் ‘நாக்’ அமைப்பிற்குப் பதிலாக மேலும் அதிகாரப்படுத்தப்பட்ட ஒரு புதிய NAAC அமைப்பு, “தேசிய உயர்கல்வி தகுதி நிர்ணய அமைப்பு’  (National Higher Education Qualification Framework) என்பவற்றோடு மேலாண்மை, ஒழுங்காற்றுப்படுத்தல், நிதிநல்கை, ஏற்பு வழங்கல் முதலான உயர்கல்வி தொடர்பான நான்கு முக்கிய அதிகாரங்களையும் உள்ளடக்கிய ‘ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக்’ (RSA) எனும் ஒரு நிறுவனத்தையும் இன்று கஸ்தூரிரங்கன் குழு முன்வைக்கிறது. இந்த RSA எனும் அமைப்பு நேரடியாகப் பிரதமரின் கீழ் செயல்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படியானப் பல அமைப்புகள், அவற்றுக்கிடையே போட்டி, தரப்படுத்தல், பெரிய அளவில் தனியார் பல்கலைக் கழகங்கள் உட்பட அறிவிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தலும் தொடங்கிய பின் இன்று இந்த அறிக்கையில் ‘அரசாங்க நிதி உதவியுடன் கூடிய உயர்கல்வி’ பற்றிப் பேசப்பட்டுள்ளது புதிராக உள்ளதென டெல்லியிலுள்ள “தேசிய கல்வித் திட்டமிடுதல் மற்றும் நிர்வாக” (NIEPA) அமைப்பைச் சேர்ந்த சுதான்ஷு பூஷன் முதலான கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர். ஒருவேளை இப்படிப் பல ஆயிரம் கோடிகளை அம்பானியின் ‘ஜியோ’ முதலான பல்கலைக் கழகங்களுக்கு அள்ளிக் கொடுப்பதைத்தான் “அரசாங்க உதவியுடன் கூடிய உயர் கல்வி” என கஸ்தூரிரங்கன் அறிக்கை சொல்கிறதோ எனும் ஐயமும் ஏற்படுகிறது. தவிரவும் இப்படிப் பல அமைப்புகள் உருவாக்கப்படுவதால் அவற்றின்  அதிகாரங்கள் ஒன்றோடொன்று உரசக்கூடிய நிலை ஏற்படும் எனவும், அது ஆரோக்கியமானதல்ல  என்றும் கல்வியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இப்படி ராஷ்ட்ரீய சிக்க்ஷா ஆயோக் எனும் அமைப்பை உருவாக்கி எல்லா அதிகாரங்களும் பிரதமரின் கீழ் குவிக்கப்படுவது என்பது நாடு ஒரு ஜனாதிபதி ஆட்சிமுறையை நோக்கிச் செல்கிறதோ என்கிற அய்யத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *