பழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான்

இரண்டு நாட்கள் முன்னர் ஒரு மதியப் பொழுதை நண்பர் கவிஞர் பழமலையோடு கழிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குடந்தையில் எனக்குச் சில அருமையான இலக்கிய நண்பர்கள். என் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கி.மீ தொலைவில் அவர்களின் ஊர் அம்மாசத்திரம் பட்டுப் புடவைகளுக்குப் பெயர்போன திருபுவனம், சோழர் காலக் கற்றளிகளில் ஒன்றால் பெயர் பெற்ற ஊர் அங்கிருந்து ஒரு கி.மீ. காவிரிக் கரையோர ஊர்கள்.

நண்பர்கள் கார்ல் மாக்ஸ், அம்மா சத்திரம் சரவணன், இளங்கோவன், சேதுராமன், ரவி,,,, மறைந்த இனிய நண்பர் கனகசபை… கவிஞர் தேவ ரசிகன், கலை விமர்சகர் தேனுகா ஆகியோரின் வீடும் அருகில்தான்.

சிற்றிதழ்கள், நவீன இலக்கிய வடிவங்கள், நாவல்கள், கதைகள் படிப்பது, விமர்சிப்பது.. கவிஞர்கள், எழுத்தாளர்களைக் கொண்டாடுவது என ஒரு அற்புதமான கும்பல். யூமா வாசுகி, விக்ரமாதித்தன், ஃப்ரான்சிஸ் கிருபா முதலானோரின் இடைத் தங்கல்களில் அம்மாசத்திரம் முக்கியமான ஒரு சந்தி. சரவணனின் திருமணம் ஒரு இலக்கியத் திருவிழாவாகவே நடந்தது. அவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் அன்று வெளியிடப்பட்டது. அவ்வப்போது இலக்கிய விழாக்களும் எடுப்பார்கள். கடைசியாக நடந்த நிகழ்ச்சி கவிஞர் தேவதேவனுக்கு ஒரு விமர்சன விழா… எனினும் இது போன்ற இலக்கியக் கும்பல்கள் அவ்வப்போது கலைவதும் கூடுவதும் சகஜம்தானே,. குடும்பம், சம்பாத்தியம், பொருள் வயிற் பிரிவு…. இவை வாழ்வில் தவிர்க்க இயலாதவைதானே…

பொதியவெற்பன் ஊரை விட்டுப் போய்விட்டார். என் எழுத்துக்களின் முதல் விமர்சகராகவும் உயிர்த் துணையாகவும் இருந்த முத்து உலகை விட்டே போய்விட்டார். கல்லூரி ஆசிரிய நண்பர்களோடு இப்போது தொடர்பே இல்லை. குடந்தையில் இருக்கும் நாட்களில் வீடு, கணினி, புத்தகங்கள்,.. இவை தவிர எனக்கு இப்போது நண்பர்கள் என்றால் அம்மாசத்திரம் இலக்கிய வட்டம்தான். அவர்கள் உல்லாசமாகக் கூடும் நாட்களில் தவறாமல் என்னை அழைப்பார்கள். பெரும்பாலும் நான் சென்னையில் அல்லது வேறெங்காவது இருப்பேன். தீபாவளி, பொங்கலில் குடந்தையில் இருக்கும் வாய்ப்பு அதிகம். அந்த நாட்களில் எங்களின் சந்திப்பு கோலாகலமாக இருக்கும்.

இந்த ஆண்டு சுதந்திர நாளில் கார்ல் மாக்ஸ் சவூதியிலிருந்து விடுப்பில் வந்திருந்தார். அன்று காலையில் அழைப்பு வந்தது. காவிரிக்கரையில் தென்னந்தோப்பு ஒன்றில் அந்த மதிய நேரச் சந்திப்பு வழக்கம்போல இலக்கிய விவாதங்களோடு உற்சாகமாகக் கழிந்தது. எங்கள் விவாதம் எங்கெங்கோ சுற்றி பழமலையிடம் வந்து நின்றது. பழமலையோடு என் அனுபவங்களை அவர்கள் மிகவும் ரசித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் சுகுமாரன் பழமலை சற்றே உடல் நலமின்றி இருப்பது குறித்துச் சொன்னதை நினைவு கூர்ந்தேன். அப்போது முடிவானதுதான் அடுத்த நாள் விழுப்புரம் சென்று பழமலையைச் சந்திப்பது என கிட்டத் தட்ட நான்கு வருடங்களாவது இருக்கும் நான் அவரைச் சந்தித்து.

#######################

அப்போது வாரா வாரம் நான் அவரைச் சந்திப்பேன். அது எண்பதுகளின் பிற்பகுதி. நான் ஒரு தண்டனை இட மாற்றத்தில் குடியாத்தம் அரசு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அதற்குச் சில ஆண்டுகள் முன்பாகவே பழமலை எனக்குப் ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின்’ ஊடாக அறிமுகம் ஆகி இருந்தார். பு.ப.இ என்பது அன்றைய மக்கள் யுத்தக் குழுவின் (இன்றைய மாஓயிஸ்ட் கட்சி) பண்பாட்டு அமைப்பு. All India League for Revolutionary Culture (AILRC) என்கிற அனைத்திந்திய அமைப்பின் ஓர் அங்கம். நக்சல்பாரி இயக்கம் கடுமையான அடக்குமுறையை எதிர் கொண்டிருந்த காலம் அது.

சி.பி.எம் கட்சியிலிருந்து விலகி, இல்லை விலக்கப்பட்டு நான் இருந்த நாட்களில் என்னுடன் அரசு கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர்கள் மறைந்த தோழர் கோ.கேசவன், கல்யாணி (இன்றைய பிரபா கல்விமணி), கோச்சடை மூவரும் தஞ்சை வந்து சந்தித்தனர். முன்னதாகக் கேசவனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவரோடு நெருக்கமாக இருந்தவன் நான். அப்புறம் என்ன, அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்கினேன். நாங்கள் நால்வரும் கட்சி, பு.ப.இ இரண்டிலும் இருந்து செயல் பட்டோம். விழுப்புரம் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த பழமலை, அப்போதுதான் சட்டப் படிப்பை முடித்து விட்டு சிண்டிகேட் வங்கியில் வேலைக்குச் சேர்ந்திருந்த ரவிக்குமார் முதலானோர் பண்பாட்டு இயக்கத்தில் இருந்தனர். நான் அவர்களோடு தொடர்பு கொண்ட பின் நடந்த முதல் கூட்டம் விழுப்புரத்தில் ஒரு வீட்டு மாடியில்தான் நடந்தது.

அப்போதுதான் நான் முதன் முதலில் பழமலையைச் சந்தித்தது.

##########################

பு.ப.இ தொடங்குவதற்கு முன்னதாகவே பேரா. கல்யாணி, பழமலை, சூரி (திருக்குறள் முனுசாமி அவர்களின் மகன்), பாலு, விழி.பா இதயவேந்தன், ரவி கார்த்திகேயன் முதலானோர் இணைந்து விழுப்புரத்தை மையமாகக் கொண்டு ‘நெம்புகோல்’ என்றொரு இயக்கமாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் வட்டத்தில் உள்ள சௌந்தரபாண்டிய புரத்தைச் சேர்ந்த கல்யாணி அப்போது இந்த ஊருக்குப் பேராசிரியராக வேலைக்கு வந்து அப்படியே இந்தப் பகுதியோடும் இவர்களோடும் ஒன்றிக்கலந்தவர் .

பழமலை அவர்களில் மூத்தவர். பாலு, ரவி கார்த்திகேயன், இதயவேந்தன் எல்லோரும் அவரின் மாணவர்கள். பழமலை அவர்களோடு பாடுவார். அவர்களுக்குப் பாட்டெழுதித் தருவார். உள்ளூர்க்,காரர், பேராசிரியர், அவ்வூரின் ஆதிக்க சாதி ஒன்றைச் சேர்ந்தவர், எல்லோராலும் மதிக்கப்படுபவர் என்றெல்லாம் இருந்தும், ஊருக்குப் புதிய கல்யாணி, தனது இளம் மாணவர்கள், தலித் தோழர்கள் எல்லோரோடும் சேர்ந்து கையில் பறை ஏந்தித் தெரு முனைகளில் பாடித் திரிந்தவர் பழமலை.

குறுந்தாடி, எப்போதும் சிரிப்பு மாறாத முகம், நகைச் சுவை, அவைக் கூச்சமில்லாத ‘பச்சை’ நகைச்சுவைகள்…. பழமலை எனக்கு நெருக்கமானார். பல அம்சங்களில் அவரின் பார்வை வித்தியாசமாக இருக்கும். நான் அவரைச் சந்தித்த முதல் கூட்டத்திலேயே அவர் ஒரு கலக்குக் கலக்கினார். Revolutionary Cultural Movement என்பதற்கு இணையாக “புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம்” என்கிற தலைப்பில் அறிக்கை தயாரித்து வந்திருந்தார் கேசவன். எல்லோரும் அறிகையில் சில அம்சங்கள் மீது விவாதம் செய்து கொண்டிருந்தனர். பழமலை ஒது புதுப் பிரச்சினையைக் கிளப்பினார். “அதென்ன புரட்சிகரப் பண்பாடு? அங்கே இந்தக் ‘கர’த்துக்கு என்ன வேலை? புரட்சிப் பண்பாடு என்று சொன்னால் போதாதா? புரட்சி ‘கரம்’ தேவைதானா?” பழமலையின் இந்தக் கேள்வி அங்கே பலருக்கும் பிடிக்கவில்லை. விவாதத்தைத் திசை திருப்புகிறார் என்று வேறு எரிச்சல். ‘புரட்சிகரம்’ என்று சொல்வதுதான் வழக்கம்,அது என்ன மொட்டையாகப் ‘புரட்சிப் பண்பாடு’ என்றெல்லாம்தான் எல்லோருக்கும் தோன்றியதே ஒழிய யாராலும் புரட்சிக்கும் பண்பாட்டுக்கும் இடையில் அந்தக் ‘கரம்’ ஏனென்பதை விளக்க இயலவில்லை. இறுதியில் பழமலைதான் வெற்றி பெற்றார். கரத்தை ஒடித்து விட்டு வெறும் ‘புரட்சிப் பண்பாட்டு இயக்கம்’ எனப் பெயர் சூட்டினோம்.

###################

பு.ப.இ யின் ஊடாக மட்டுமில்லாமல் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் ஊடாகவும் எனக்கும் அவருக்குமான நட்பு இறுகியது. அப்போது நான் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவர். சிவக்குமார் தலைவர். கேசவன், திருமாவளவன், கோச்சடை, கல்யாணி எல்லாம் அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் வெவ்வேறு பொறுப்புகளில் இருந்தனர். இது போதாதா நம் சி.பி.அய், சிபிஎம் தோழர்களுக்கு. அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தை நக்சலைட்டுகள் கைப்பற்றி விட்டதாகப் பிரச்சாரம் செய்தனர். எங்களை ஓரம் கட்ட அவர்கள் சாதீய, பிற்போக்கு சக்திகளுடனும் அவர்கள் இணைந்து கூட்டணி அமைத்தனர்.

அப்போது ஆசிரியர் கழகத்தின் சார்பாக ஒரு கலைக் குழு உருவாக்கலாம் என முடிவு செய்தோம். சங்கத்தின் காலாண்டிதழையும், இந்தக் கலைக்குழுவையும் தலைமைக் கழகத்தின் சார்பாக வழி நடத்தும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இதழாசிரியர் கவிஞர் மீரா. கலைக்குழு அமைப்பாளர் பழமலை. ஒரு முறை விழுப்புரத்தில் கலைகுழுப் பயிற்சி அரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். பயிற்சி தொடங்கும்போது முன்னாள் அமைச்சர் பொன்முடி அங்கு வந்தார். அப்போது அவர் எங்களோடு கல்லூரி ஆசிரியர். விழுப்புரம் அரசு கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியர். சங்க நடவடிக்கைகளில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டுவதில்லை. என்ன திடீரென இவர் என யோசித்தேன்.

‘நீங்கள் எல்லோரும் நக்சலைட்கள். இந்தப் பண்பாட்டு அமைப்பு அந்த அரசியலை கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் விதைக்கச் செய்யும் முயற்சி என அவர் குற்றம் சாட்டினார். நீண்ட நேரம் விவாதம் நடந்தது. கல்யாணி பொன்முடிக்கு நெருக்கமானவர். பொன்முடியால் பெரிதும் மதிக்கப்படுபவர். அவர் பொன்முடியைச் சமாதானப் படுத்தினார். பின் பொன்முடியும் எங்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் பாடி விட்டுப் போனார். அவர் அவ்வளவு சிறப்பாகப் பாடுவார் என அன்றுதான் எனக்குத் தெரியும். நாங்கள் பொறுப்பில் இருந்தவரை பழமலையின் தலைமையில் அந்தக் கலைக் குழுவும் இயங்கியது. அடுத்து பொறுப்பேற்றவர்கள் அதை ஊற்றி மூடினர்.

####################

இந்த நேரத்தில் தான் எனக்கு அந்தத் தண்டனை இடமாற்றம் வந்தது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மதியமே கல்லூரியிலிருந்து புறப்பட்டு விடுவேன். குடியாத்தத்திலிருந்து வேலூர் வருவேன். அப்போது அங்கிருந்து நேரடியாக குடந்தைக்கு அதிகப் பேருந்துகள் இல்லை. இருந்தாலும் கூட விழுப்புரம் பஸ்சிலேயே ஏறுவேன். விழுப்புரத்தில் அப்போது புதிய பேருந்து நிலையம் கிடையாது. இப்போதுள்ள பழைய பஸ்ஸ்டாண்ட் மட்டும்தான். அருகில் சில அடி தூரத்தில் கன்னியாகுளத் தெருவில்தான் பழமலையின் வாடகை வீடு.

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு, சில நாட்கள் அவர் வீட்டிலேயே சாப்பிட்டும் விட்டும் புறப்படுவேன்.

அப்போதுதான் அவர் ஒருமுறை ஒரு அழகான நோட்டுப் புத்தகம் ஒன்றில் நிறுத்தி அழகாக எழுதி வைத்திருந்த ‘சனங்களின் கதை’ கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அப்போதெல்லாம் வெளியீட்டு வாய்ப்புகள் குறைவு. வெளியீட்டு வாய்ப்பு இல்லாமல் அவர் அதை வெளியிடாமல் வைத்திருந்தாரா இல்லை அவருக்கே அதை வெளியிடக் கூடிய ஒன்று எனக் கருத்தில்லையா – எதன் காரணமாக அது வெளியிடப்படாமல் நீண்ட நாட்களாக கையெழுத்து வடிவிலேயே கிடந்தது என இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

அது வெளி வந்து மிகப் பெரிய அளவில் அடித்தள மக்களால் பாராட்டப்பட்டபோது கூட சுந்தர ராமசாமி போன்றவர்கள அதைக் கவிதையாக அங்கீகரிக்கவில்லை. ஒரு முறை கல்யாணி வீட்டுத் திருமணம் ஒன்றிற்கு நாங்கள் எல்லோரும் சென்றிருந்தோம். இரண்டு நாட்கள் சவுந்தரபாண்டிய புரத்திலேயே தங்கி இருந்தோம். ஒரு நாள் அப்படியே நாகர்கோவில் வந்தபோது எல்லோரும் சுந்தரராமசாமி வீட்டிற்குச் சென்றிருந்தோம். அதச் சந்திப்பு குறித்துத் தனியே எழுத வேண்டும். அந்தக் குழுவில் பழமலை, நான், பழனிச்சாமி, ரவிகுமார் இன்னும் சிலர் இருந்தோம். பேச்சு வாக்கில் பழமலை நேரடியாகவே கேட்டுவிட்டார். “என்னுடைய கவிதைகளைப் படிச்சீங்களா? உங்க கருத்து என்ன? ஒண்ணும் சொல்லலியே?” சுந்தரராமசாமி சொன்னார்: “படிச்சேன், படிச்சேன்… அது… நீங்க செய்திகளை அப்படியே கவிதைன்னு சொல்றீங்க. ஆனா அது கவிதையா இல்லை”

திரும்பி வரும்போது நிலவிய இறுக்கமான மௌனத்தைப் பழனிச்சாமி கலைத்தார். “என்ன பழமலை, சுந்தர ராமசாமி உங்களை ‘நியூஸ் பொயட்’ ன்னு சொல்லிட்டாரே…”. அதற்குப் பழமலை சொன்ன பதில் பிரசித்தமானது. அது இங்கு தேவை இல்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால் இலக்கியத்தின் வடிவம், அழகு, உள்ளடக்கத்துடன் அது பொருந்தும் தன்மை ஆகியவை பற்றி ஆழமாகப் பேசக் கூடிய அன்றைய முக்கிய இலக்கிய விமர்சகரான சுந்தர ராமசாமியாலேயே அதைக் கவிதையாக ஏற்க இயலாத காலம் அது என்பதுதான். எனக்கும் அப்போது கையெழுத்துப் பிரதியாக இருந்த அது முதல் வாசிப்பில் கவிதைகளாய்ப் படவில்லை. ஆனால் அவை ஏதோ ஒரு வகையில் முக்கியமானவை என்று மட்டும் புரிந்தது.

##################

அந்தக் காலகட்டம் பற்றிச் சொல்லியாக வேண்டும். சோவியத் யூனியன் ஆட்டம் கண்டு கொண்டிருந்த காலம். அம்பேத்கர் நூற்றாண்டுக்கு முன்னும் பின்னுமாக இங்கு ஒரு தலித் எழுச்சி உருக்கொண்டிடிருந்த காலம். இந்திய அளவில் அடித்தள மக்கள் ஆய்வுகள் (Subaltern Studies) கவனம் பெற்றிருந்த காலம்.

நாங்கள் எல்லாம் அவற்றால் ஈர்க்கப்பட்டிருந்தோம். குடந்தையில் இரண்டு நாட்கள் ‘அடித்தள மக்கள் ஆய்வுகள்’ கருத்தரங்கம் நடத்தினோம். ‘தலித் அரசியல்’ நூல் வெளியிட்டோம். தலித்தியம், பெண்ணியம், அடித்தள மக்கள் வரலாறு, இதுகாறும் அதிகாரத்தில் மட்டுமல்ல இலக்கியத்திலும் இடமும், குரலும் மறுக்கப்பட்டவர்களுக்கான இடம் என்பது குறித்த கேள்வி தமிழகமெங்கும் ஒலித்த காலம். ‘நிறப்பிரிகை’ இந்த எழுச்சியைப் பிரதிநிதித்துவப் படுத்திய வகையில்தான் அது முக்கியம் பெற்றது. தமிழ் இதழியல் வரலாற்றில் ஒரு நீங்கா இடம் அதற்கு உரித்தானது இப்படித்தான்.

நான் அடுத்த வாரம், அதற்கு அடுத்த வாரம் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பழமலையிடம் கேட்டு அந்தக் கையெழுத்துப் பிரதியை எடுத்துத் தரச் சொல்லி வாசித்தேன். ஒரு நாள் பழமலை அவருக்கே உரித்தான வடிவில் இப்படிக் கேட்டார் : “என்ன இபிடி திருப்பித் திருப்பிப் படிக்கிறீங்க. உங்களுக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சா?” “இல்ல. இதை நாங்க வெளியிடலாமான்னு பார்க்கிறேன்…”

###############################

அப்போது தலித் இலக்கியம் உள்ளிட்ட அடித்தளப் பிரதிகள் வெளியீடு காண்பது அரிது. டானியல் உயிருடன் இருந்தவரை சொந்தக் காசில்தான் தன் நூல்களைத் தமிழகத்தில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் இறந்த பின் விட்டுச் சென்றிருந்த ‘கானல்’ நாவலை அடுத்த பல ஆண்டுகள் வரை என்னால் வெளியிட இயலவில்லை. இந்தச் சூழலில்தான் ஒருமுறை வேல்சாமியும் நானும் பேசிக் கொண்டிருந்தபோது இப்படியான நூல்களை வெளியிட ஒரு அமைப்பு உருவாக்கினால் என்ன என யோசித்தோம். வேல்சாமி தன் சொந்த முயற்சியில் ப்த்தாயிரம் ரூபாய் வரை திரட்டித் தந்தார். அப்போது அது ஒரு நல்ல தொகை. இரண்டு அல்லது மூன்று நூல்கள் கூட அதைக் கொண்டு வெளியிட்டு விடலாம். சிலிக்குயில் பதிப்பகம் நடத்திக் கொண்டிருந்த தோழர் பொதியவெற்பனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அவற்றை வெளியிடலாம் எனவும் முடிவு செய்தோம்.ஒரு ஏழெட்டு நூல்கள் அப்படி வெளி வந்தன. அவற்றில் ஒன்றாகப் பழமலையின் ‘சனங்களின் கதை’ வெளி வந்து சில மாதங்கள் வரை நாங்கள் செய்தது புத்திசாலித் தனமான காரியமா என எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் சில மாதங்களுக்குப் பின் ஒரு மிகப் பெரிய வரவேற்பு, நாங்களும் ஏன் பழமலையும் கூட எதிர்பாராத ஒரு வரவேற்பு அதற்குக் கிட்டியது. ஊரெங்கும் அதே பேச்சுத்தான். ஏகப்பட்ட இளைஞர்கள் பழமலை பாணிக் கவிதைகளை இயற்றத் தொடங்கினர். நம்மிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது, அதை நம்மாலும் சொல்ல இயலும். அதைக் கேட்பதற்கும் மக்கள் இருக்கின்றனர் என்கிற தன்னம்பிக்கையை ஆயிரம் ஆயிரம் அடித்தள இளைஞர்கள் மத்தியில் ‘சனங்களின் கதை’ உருவாக்கியது எனில் அது மிகை இல்லை. அப்படி ஆனதற்கு அன்று இங்கு உருவாகியிருந்த தலித் மற்றும் அடித்தள மக்களின் எழுச்சி பின்னணியாக இருந்தது. அதில் அப்போது வன்னியர்கள் உள்ளிட்ட அடித்தள மக்களின் உரிமைகளை முன்னிறுத்திய பா.ம.கவிற்கும் ஒரு பங்குண்டு,

#################

நாங்கள் அப்போது அடித்தள மக்களின் அரசியலை மட்டும் பேசவில்லை. பிரதிகளில் வெளிப்படும் அதிகாரத்தின் குரல்கள், தந்தை வழிச் சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கட்டுடைத்தல் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். பெண்ணியம் குறித்து நாங்கள் எழுப்பிய விவாதங்கள் தமிழகத்தை உலுக்கின என நான் இன்று சொன்னால் அது மிகைக் கூற்று என அன்றைய காலச் சூழலை ஆய்வு செய்கிற யாரும் அவ்வளவு எளிதாக நிராகரித்துவிட இயலாது.

அப்படித்தான் பழமலையின் சனங்களின் கதையை வெளியிட ஆர்வம் காட்டின நானே அதில் வெளிப்படும் விவசாயச் சமூக உளவியல் குறித்தும் எழுதினேன். அது பொதியவெற்பனின் ‘பறை’ சிறப்பிதழில் வெளி வந்தது. விவசாய உளவியலில் பிரிக்க இயலாது கிடக்கும் தந்தை வழிச் சமூக ஆணாதிக்கக் குரல், சாதீய மனோபாவம் ஆகியவற்றைச் சனங்களின் கதை எவ்வாறு சுமந்து நிற்கிறது எனச் சொல்லிய எனது அந்தக் கட்டுரையும் பெரிய அளவில் கவனம் பெற்றது.

####################

ஒன்றைச் சொல்ல வேண்டும். பழமலையும் நானும் எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்களோ அந்த அளவிற்கு எங்களிடையேயான கருத்து முரண்களும் இடைவெளிகளும் அதிகம். அவரால் நாங்கள் பேசிய பின் நவீனத்துவம், கட்டுடைப்பு ஆகியவற்றை எந்நாளும் செரித்துக் கொள்ள இயலவில்லை, அவரிடம் குடி கொண்டுள்ள விவசாயச் சமூக உளவியல் பா.ம.கவின் இன்றைய சாதி ஆதிக்க அரசியலைக் கூட ஏற்கும்; ஆனால் இந்தக் கட்டுடைப்பு வேலைகளை அதனால் ஏற்கவே இயலாது.

அது நேற்றைய விவாதத்திலும் வெளிப்பட்டது. அது ஒரு உணர்ச்சிபூர்வமான சந்திப்பு. என்னுடன் வந்த மூவரும் இப்படியான ஒரு நெருக்கமான சந்திப்பில் முதல் முறையாக இப்போதுதான் அவரோடு கருத்துக் கலக்கிறார்கள். எங்களின் சுமார் மூன்று மணி நேர உரையாடலில்,அந்த உணர்ச்சிகரமான சந்திப்பிற்கும், நகைச்சுவை வெடிகளுக்கும் அப்பால் அவரது போஸ்ட்மாடர்னிச எதிர்ப்பு கடைசிவரை இழையோடியது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ‘போஸ்ட்மார்டனிசம் என அவர் நினைத்துக் கொண்டிருப்பதன் மீதான எதிர்ப்பு’ இழையோடியது. நானோ இல்லை கார்ல் மாக்சோ அப்படி ஒன்றும் போஸ்ட் மார்டனிசத்தைக் ‘கொள்கை’யாக அறிவித்தவர்கள் இல்லை. பழமலையும் அப்படி ஒன்றும் போஸ்ட்மாடர்னிசத்தை ஆழக் கற்றவருமில்லை. இருந்தாலும் விவசாயச் சமூக உளவியலை அடித்தளமாகக் கொண்டு அதற்கு ஒவ்வாத மதிப்பீடுகள் அனைத்தையும் போஸ்ட் மார்டனிசச் சீரழிவுகளாக அவர் கிண்டலடித்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டுமே இருந்தார்.

நிறப்பிரிகையுடன் தொடர்பில் இருந்த இளம் எழுத்தாள நண்பர் உ.சே. துளசியை இன்று பலரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். அந்தக் கால கட்டதில் இதை எல்லாம் பேசப் புகுந்த ஒரு அற்புதமான இளைஞர். அவரது தற்கொலைக்கு அவரது இளம் வயதுத் திருமணம் உட்படப் பல காரணங்கள் இருந்தன. எங்களை மிகவும் பாதித்த ஒரு மரணம் அது. பழமலை ஏதோ ஒரு இதழில் துளசியின் மரணத்திற்கு அப்போது பேசப்பட்டுக் கொண்டிருந்த பின் நவீனத்துவம், அதைப் பேசிய நிறப்பிரிகை, முக்கியமாக நான்தான் காரணம் என எழுதினார்.

நொந்து போனேன் நான்.

தற்கொலைகளைக் கொண்டாடி நான் எங்கும் எழுதியதில்லை. ஆனால் பழமலையைப் பொருத்தமட்டில் போஸ்ட்மார்டனிச ஆதர்சங்கள் எல்லோரும் ஓரினப் புணர்ச்சியாளர்கள், தற்கொலையாளிகள், திருட்டு முதலான எல்லாக் குற்றங்களையும் நியாயப் படுத்துபவர்கள், மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்று சிறை ஏகியவர்கள்…நேற்று நான் அப்படி அவர் எழுதியதை நினைவுபடுத்திய போதும் அவர் மறுக்கவில்லை. அவர் நிலைபாட்டில் மாற்றமில்லை. “ ஆமா. நீங்கதானே காரணம். நீங்கதானே அதை ஆதரிச்சு எழுதுனீங்க. அதைக் கொண்டாடினீங்க…..” என்றார்.

###########################

பா.மக வின் தோற்ற கால அரசியலில் காணப்பட்ட முற்போக்குக் கூறுகளை ஆதரித்த நாங்கள், அக்கட்சி பாதை விலகியபோது அந்த நிலைபாட்டிலிருந்து விலகினோம். அதை நிராகரித்தோம். ஆனால் பழமலை பா.ம.க உடன் கூடவே சென்றார். செல்கிறார். செல்வார்.

#####################

எனினும் அவரது இந்த சாதி ஆதரவு நிலைபாடும், அவரது வாசிப்பில் ஏற்பட்ட தேக்கத்தின் விளைவான அவரது இலக்கிய / அரசியல் வெளிப்பாடுகளும் அவரிடமிருந்து பலரையும் அந்நியப்படுத்தின.

இரண்டாண்டுகளுக்கு முன் பழங்குடி இருளர் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து விழுப்புரத்தில் நடந்த ஒரு ஆர்பாட்டத்திற்கு கல்யாணியின் அழைப்பின் பேரில் நானும் சென்றிருந்தேன். பல ஆண்டுகளுக்குப் பின் அங்கு ரவி கார்த்திகேயனைப் பார்த்தேன். ரவி பழமலையின் மாணவர்; நெம்புகோல் அமைப்பில் பழமலையுடன் செயல்பட்டவர். விழுப்புரத்துக்காரர். ஆனால் அப்பகுதியின் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவரல்ல. தி.மு.க அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருந்த பொன்முடியின் அந்தரங்க உதவியாளராக இருந்தவர். அப்போதெல்லாம் அவரை அவ்வளவு எளிதாகப் பார்க்க இயலாது. தி.மு.க ஆட்சி வீழ்ந்ததன் விளைவாக இப்போது அவர் சற்று ஓய்வாக உள்ளார்.

“என்ன ரவி, எப்டி இருக்கீங்க?” என்றெல்லாம் விசாரித்த கையோடு, “பழமலை எப்டி இருக்கார்?” என்றேன். “அதை ஏன் சார் கேக்குறீங்க. அவர் ரொம்பவும் சாதி அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டார்….”

ரவி கார்த்திகேயன் சமீபமாக நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். பழமலை ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்கி எல்லோரையும் அழைத்துள்ளர். ரவியும் போயிருக்கிறார். கூட்டத்தைத் தொடங்கிய பழமலை, “ நம்ம ஆளுங்கதான் இங்கே வந்திருக்கீங்க. அப்படித்தான் அது இருக்க முடியும், பாருங்க ஒண்ணு, ரண்டு, மூணு …. ஒரு ஆறு பேர்தான் வேற ஆளுங்க இங்கே வந்திருக்காங்க’’ எனப் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது ரவி எழுந்திருந்து, “சார், நீங்க இலக்கிய அமைப்பு தொடங்குறீங்களா, இல்லை சாதி அமைப்பு கட்றீங்களா?” எனக் கேட்டுள்ளார். அதற்குப் பழமலை. “யாரது, ராவி கார்த்திகேயனா? உன்ன நான் கவனிக்கல. நீயும் வந்திருக்கியா? சரி அப்ப நீங்க மொத்தம் ஏழு பேரு” எனப் பேச்சைத் தொடங்கியுள்ளார். ரவி மனம் நொந்து போய் வெளி நடப்புச் செய்துள்ளார்.

நேற்று நான் நகைச்சுவையாக இதை பழமலைக்கு நினைவுபடுத்தியபோது. “ஓ ரவி அப்டிச் சொன்னானா? ஆமா சொன்னேன்; ம்ம்ம்ம்… ” என அதை அங்கீகரித்தார் பழமலை.

########################

பழமலைக்கு இப்போது வயது 70. மிகவும் உடல் தளர்ந்துள்ளார். இலக்கிய உலகுடன் அவர் தொடர்பற்றுப் போயிருப்பதும் சம கால மாற்றங்கள், அசைவியக்கங்கள் ஆகியவற்றிலிருந்து ரொம்பவும் தொலைவில் இருப்பதும் அவரது ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்பட்டது.. புதிய படைப்புகள், இன்றைய விவாதங்கள், புதிதாய் உருவாகியுள்ள எலக்ட்ரானிக் ஊடகங்கள் குறித்து அவருடைய அறிதலும் புரிதலும் சுழி. அவர் கணினியையும் அதிகம் பயன்படுத்துவதில்லை.

அவரது விவசாய உளவியலுக்கு ஒவ்வாத இன்னொருவர் சாரு நிவேதிதா. அவர் குறித்தும் நேற்று அடிக்கடிக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். ஆனால் பழமலையைப் பொருத்த மட்டில் சாருவின் கடைசி நாவல் ஃபேன்சி பனியன்கள் தான். அந்த அளவோடு சாரு பற்றிய அவர் வாசிப்பு முடிந்திருந்த்து.

############################

என்னைப் பொருத்தமட்டில் பழமலையின் ஒரே படைப்பு சனங்களின் கதை மட்டுந்தான். அதற்குப் பின் அவரது நான்கைந்து நூல்கள் வந்துள்ளன. ஆனால் அவற்றை அவர் எழுதியிருக்க வேண்டியதில்லை. அவரது ஒரே நூல் சனங்களின் கதை மட்டுமே. அந்த ஒன்று போதும் அவரை நாமும் நினைவில் ஏந்துவதற்கு.

######################

விழுப்புரத்திலிருந்து திரும்பிவரும்போது நண்பர்கள் பழமலையின் சனங்களின் கதையிலிருந்து பல காட்சிகளை அவரது வார்த்தைகளிலேயே சொல்லிக் காட்டியபோது, அவரது சனங்களின் கதையை அப்படியே ஒப்பித்த போது நான் வியந்து போனேன்.

வன்னியர் உலகின் கடை மடைப் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்களிடம் பழமலை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்லார், அதில் எத்தனை நியாயங்கள் உள்ளன என்பதை நேற்று நான் இன்னொரு முறை உறுதிப் படுத்திக் கொள்ள முடிந்தது. பழமலை ஒரு சகாப்தத்தின் வெளிப்பாடு. இதுவரை குரலற்றுக் கிடந்தவர்களிடம், “உங்களுக்கும் எழுத உண்டு; சொல்ல உண்டு” எனச் சொன்னவர் அவர். அந்த வகையில் அடித்தள மக்களின் நியாயங்களைப் பேசும் நம் எல்லோரது நன்றிக்கும் உரியவர்.

புறப்படும்போது அவரிடம் கேட்டேன். இப்ப என்ன செஞ்சுட்டு இருக்கீங்க? ராமசாமிப் படையாட்சியின் வரலாற்றை எழுதத் தகவல்கள் சேகரித்துக் கொண்டுள்ளாராம். “யாரும் கண்டுக்காத இந்த (வன்னியர்) சமுதாயத்தைப் பத்தி அவங்க உரிமைகளைப் பத்தி முதல்ல பேசுனவர் அவரு. இன்னைக்கு இந்தச் சமூகத்துக்கு அவர் யாரு, எங்க பிறந்தவரு, என்ன செஞ்சாருன்னு ஒண்ணும் தெரியாது. அவரோட வாழ்க்கையை எழுதணும்.”

உண்மைதான். தலித்களுக்கு அடுத்தபடியாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த அந்த மக்களின் நியாயங்களையும் அரசியலையும் முதன் முதலில் பேசியவர் அவர். இன்றைய பா.ம.க அரசியலைப்போல தலித்களை எதிரியாக வைத்து ஒரு சாதி வெறி அரசியலைச் செய்தவரும் அல்லர் அவர். அதனால்தானோ என்னவோ மருத்துவர் ராமதாசும் அவரது மகனும் படையாட்சியாரின் பெயரை உச்சரிப்பதே இல்லை.

###################

பழமலையின் இந்த ‘அடித்தள அரசியலின்’ இன்னொரு பக்கம் இடை நிலைச் சாதியின் உறுதிப்பாடாக இருக்கிறதே, அது இந்த ஆகக் கீழானவர்களின் மீதான வன்முறையாக விடிகிறதே…’ என்கிற கேள்வி நியாயமானதே. ஆம். அந்த இன்னொரு பக்கம் மோசமானதுதான். ஆனால் இதுவும் ஒரு பக்கம்தானே. வரலாற்றின் ஒரு பக்கந்தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *