பவுத்தத்தில் கலந்த பிறமதக் கூறுகள் (Syncretism) : ஒரு குறிப்பு

(பவுத்தம் பரப்ப விழைவோர் கவனத்தில் நிறுத்த வேண்டுய ஒரு முக்கிய குறிப்பு)

புத்தம் சரணம் 2.1

[எனது நூல்களில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் ஒன்று ‘புத்தம் சரணம்’. அதன் இரண்டாம் பாகத்தை எழுத நினைத்துப் பல ஆண்டுகளாகியும் முடியவில்லை. இதற்கிடையில் இதன் முதல் பாகம் சென்ற ஆண்டு ‘தமிழ்நாடு பௌத்த சங்க’த்தால் மறுவெளியீடு செய்யப்பட்டது.

“இதுகாறும் பௌத்தம் பற்றி அறிமுகம் இல்லாமல் அதைப்பற்றிப் புதிதாகத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், ஏற்கனவே பௌத்த அறிமுகம் பெற்று அதைப்பற்றி மேற்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்களுக்கும்- இருசாரருக்கும் இந்நூல் பயனுள்ளதாக இருக்கும்.இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நாட்டில் பௌத்த தம்மத்தை மீட்டெடுத்துக் காட்டுவதில் முன்னணியில் இருந்தவரும், அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களாலேயே தனது முன்னோடி எனப் போற்றப்பட்டவருமானதிரு. இலட்சுமி நரசு அவர்களின் What is Buddhism மற்றும் The Essence of Buddhism ஆகிய நூல்களுக்கு இணையானதாக இந்த நூலை நாங்கள் கருதுகிறோம்.ஆகவே இந்த நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடுவதை ஒரு சிறந்த தம்மப் பணியாகவே பாவித்துப் பெருமை கொள்கிறோம். பெருமகிழ்ச்சி அடைகிறோம்”

என்கிற முகப்புரையுடன் தமிழ்நாடு பௌத்த சங்கம் அந்நூலை வெளியிட்ட நிகழ்வு நான் நெகிழ்ந்த கணங்களில் ஒன்று.

திட்டமிட்ட இரண்டாம் பாகத்தை எழுதலாம் என முடிவு செய்து நேற்று அது குறித்த பணியைத் தொடங்கினேன். இடையீடு இல்லாமல் அது தொடருமா எனத் தெரியவில்லை. இந்தப் பணியின் ஊடாக அவ்வப்போது சில துணைச் செய்திகளை இந்தப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள முயல்கிறேன்.]

நான் முதல்முறை இலங்கை சென்றிருந்த போது நண்பர் சிராஜ் மசூரிடம் கொழும்பில் உள்ள முக்கிய பௌத்த கோவில்களுக்குச் செல்ல வேண்டும் எனச் சொல்லியிருந்தேன். அவரும் என்னை கொழும்பில் உள்ள பௌத்த ஆலயம் மட்டுமல்ல பொலனறுவைக்கும் அழைத்துச் சென்றிருந்தார். கொழும்பில் உள்ள அந்த மிக அழகான பௌத்த ஆலயத்தின் நுழைவாயிலிலேயே பிளையார், சரஸ்வதி சிலைகள் இருந்தன. இங்கு மட்டுமல்ல வேறு பல தலங்களிலும் நான் இதைக் காண நேரிட்டது. மலெசியாவில் உள்ள பௌத்த கோவில்களில் புத்தர் சிலைகளோடு சீனத் தொன்மங்கள் சார்ந்த உருவங்களும் அந்த ஆலயங்களை அலங்கரித்திருந்தன. இலங்கை சிங்கள பவுத்த அரசியல்வாதிகள் அவ்வப்போது இந்தியா வந்து திருப்பதி ஏழுமலையாம் முதலிய கடவுளரை வணங்கிச் செல்வதையும் நாம் கவனித்துள்ளோம்.

வைதீகக் கருத்துக்களுக்கு எதிராக எழுந்த ஒரு எதிர் பண்பாட்டுக் குரலாக பவுத்ததைக் காண்பவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியை அளிக்கக் கூடிய ஒன்றுதான்.

இன்று உலகில் கடைபிடிக்கப்படும் பௌத்தங்களை ஒரு அகன்ற பார்வையில் இரண்டாகப் பிரிக்கலாம். 1.தேரவாதம் : இலங்கை, மியான்மர், தாய்லந்த், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படுவது. 2.மகாயனம் : நேபாளம், திபேத், சீனம், ஜப்பான், கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் பயிலப்படுவது.

‘மூத்தோர்களின் கோட்பாடு’ எனப் பொருள்படும் தேரவாதம் காலத்தால் பழைமையானது எனவும், அதுவே ஆதி பவுத்தம் எனவும், மிகவும் கட்டுப்பெட்டித்தனமாக (conservative) இருந்துத் தன் புனிதத்தைக் காப்பாற்றிiக் கொண்ட மதம் எனவும் அது தன்னைச் சொல்லிக் கொள்வதுண்டு. மகாயனம் காலத்தால் மிகவும் பிந்தியது. அதற்கு முந்திய சர்வாஸ்திவாதம் முதலான பவுத்த சிந்தனைகளை மகாயனம் தனக்குள் அனுமத்தித்துப் பொதிந்து கொண்டது.

இந்தியாவிலிருந்து புவீயல் அடிப்படையில் சற்றே துண்டித்து நின்ற இலங்கைத் தீவில் செழித்திருந்த தேரவாத பௌத்தம் இந்தப் புவி இயல் துண்டிப்பின் விளைவாக இந்தியாவில் ஏற்பட்ட அழிவிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டது. பவுத்தம் இந்தியாவில்அழிவதற்குக் காரணமான சில முக்கிய அரசியல், பண்பாட்டு நிகழ்வுகள் இலங்கையை எட்டவில்லை. அதைப் பின்னர் பார்ப்போம்.

சரி. ஆசியாவில் இன்று பயிலப்படும் பவுத்தங்கள் அனைத்திலும் இத்தகைய பிற மதக் கூறுகள் கலந்து போய் இன்று பல மேலை நாட்டு ஆய்வாளர்களால் மிக எளிதில் syncretism – பிறமதக் கலப்பு ஏற்பட்டுள்ளாதாக எளிதில் வரையறுக்கத்தக்க நிலை எப்படி ஏற்பட்டது?

இதை ஒரு குற்றச்சாட்டாகவோ குறையாகவோ பார்க்க இயலாது என்கிறார் டேவிட் கெல்னர். மானுடவியல் நோகில் கீழைத்தேய மதங்களை ஆய்வு செய்பவர் அவர். மற்ற மதங்களைக் கறாராகப் புறந் தள்ளும் கிறிஸ்தவ மத அளவுகோலின்படிப் பார்த்தால்தான் இன்று ஆசிய பௌத்தத்தில் கலந்துபோயுள்ள இந்த பிற மதக் கூறுகளை syncretism என்பதாகக் குறை காண இயலும் என்பது கெல்னரின் வாதம். கிறிஸ்தவம் முதலான இத்தகைய ‘முழுமையான’ மதங்கள் ஆன்மீகத் தேவையை மட்டுமல்ல அவற்றைப் பின்பற்றுவோரின் அனைத்து சமூக மற்றும் இயற்கையதீத (supernatural) தேவைகளையும் பூர்த்தி செய்வதாயும், தன் மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுக்குள்ளேயே முழுச் சமூக வாழ்வையும் அர்த்தப்படுத்திவிட இயலும் என்பதாகவும் தம்மை முன்னிறுத்துகின்றன.

சாக்கியமுனி கௌதம புத்தன் உரைத்த பவுத்தம் அத்தகைய உரிமை கோரலை முன்னிறுத்தவில்லை.

இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

சமூக வாழ்வில் மதத்தின் இடமென்ன? மானுடவியல் நோக்கில் கெல்னர் அவற்றில் சிலவற்றை இவ்வாறு பட்டியலிடுவார்:

1.குடும்பக் குழுமத்தின் நியாயப்பாடு (legitimisation) மற்றும் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் (expression) முகாமையாக மதத்தின் பங்கு

2.ஒரு கிராமம் அல்லது ஒரு பழங்குடிப் பிரிவு அல்லது ஒரு சாதியாக தன்னைச் சமூக ரீதியில் நியாயப்படுத்திக் கொள்வதும் வெளிப்படுத்திக் கொள்வதும்

3.ஒரு தேசமாக அல்லது இனமாகத் தம்மை நியாயப்படுத்திக் கொள்வதும் வெளிப்படுத்திக் கொள்வதும்

4.வாழ்க்கைச் சுழலின் பல்வேறு நிலைகளுக்குப் (பிறப்பு, வயதுக்கு வருதல், திருமணம், இறப்பு முதலியன) புனித அங்கீகாரம் அளித்தல்

5.இளையோர் சமூகமயப்படுதல் மற்றும் ஒழுக்க/ நடத்தை விதிகளை அளித்தல்

6.(நோய் முதலான) துன்பங்கள் நேர்கையில் உளவியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் ஆறுதல் அளித்தல்

7.வாழ்வின் எல்லாத் துயரங்களில் இருந்தும் வாழ்வின் இறுதி விடுதலை அல்லது முக்தியை (salvation) அளித்தல்.

இரண்டு விடயங்கள் இதில் கவனத்துக்குரியன. ஒன்று: இவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மதம் என்பது வெறும் ஆன்மீகச் செயல்பாடு மட்டுமல்ல. சமூக வாழ்வில் அது பல்வேறு கடமைகளை ஆற்றுகிறது. இங்கே சொல்லப்படும் ‘நியாயப்பாடு’ என்பது சமூக/சட்ட ரீதியான அங்கீகாரமும் கூட. சமூக வாழ்வில் மட்டுமல்ல, தனிமனித வாழ்விலும் அதற்கு முக்கிய பங்குண்டு. மதத்தை எளிதில் முடிவுக்குக் கொண்டுவர இயலாமைக்கு இவை எல்லாம் காரணமாய் உள்ளன.

இரண்டு: எல்லா மதங்களும் இந்த எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துவிடுவதில்லை. இந்துமதம் அது பல்வேறு இனக்குழுக் கூறுகளை எல்லாம் உள்வாங்கிக் கொண்டே இருந்ததால் இப்படி எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வதாய் அமைந்தது. கிறிஸ்தவம், இஸ்லாம் முதலானவை நன்கு திட்டமிட்டு வரையறுக்கப்பட்டவையாக இருந்ததால் அவையும் சமூக / தனிமனித வாழ்வின் எல்லாவிதமான நியாயப்பாடுகளையும் நிறைவேற்றத் தக்கனவாக உருவாக்கப்பட்டன. ஷின்டோயிசம் முதலான மதங்களில் இறுதி விடுதலை (soteriology) என்கிற பேச்சிற்கு இடமில்லை. வேதாகமங்கள் இல்லாத மதங்களில் ஒழுக்க வரையறைகள் இருப்பதில்லை.

இப்போது தேரவாத பௌத்தத்திற்கு வருவோம். தொடக்க கால பவுத்தம் இந்த இறுதி விடுதலை என்பதற்கு மட்டுமே (soteriology) அழுத்தம் கொடுத்தது. உலகியல் சார்ந்த விடயங்கள் என்பன அதற்கு இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சம்தான். ஆனால் தேரவாதம் இந்த இறுதி விடுதலை என்பதற்கு முழுமையான அறவழியையே முன்மொழிந்தது. அதில் பக்திக்கு இடமிருக்கவில்லை. முழுமையான அறவாழ்வின் மூலமே ஒருவர் விடுதலை அடைய இயலும். இந்த வகையில் அது ஒரு சமூக மற்றும் தனிமனித வாழ்வுக்கான ஒழுக்க வரையறைகளையும் அளித்தது.

ஆனால் தேரவாதம் மேலே சொன்ன இதர ஐந்து நியாயப்பாடுகளுக்கும் வழிகாட்டவில்லை. எனவே தேரவாதம் இந்தக் காலி இடத்தைப் பூர்த்தி செய்யவேண்டி பிற மத/கலாச்சாரக் கூறுகளை எப்போதும் தன்னகத்தே இணைத்துக் கொள்வதாக (accretive) அமைந்தது என்பார் கோம்ப்ரிட்ச். எனவே பவுத்தம் எப்போதுமே பிறமதங்களுடன் எளிதில் இணைந்தே தன்னை இருத்திக் கொண்டது. இறுதிவிடுதலை குறித்த கருத்தாக்கத்தில் பவுத்தத்துடன் முரண்படாதவரைக்கும் அது பிற மதங்களுடன் இணைந்து நிற்பதற்குத் தயங்கியதில்லை என்பது மட்டுமல்ல, அது சிலவற்றை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருந்தது.

சில நேரங்களில் இவ்வகையில் பவுத்தம் மிருகபலியையும் கூட ஏற்றுக் கொண்டது. சாத்தியமான இடங்களில் அது மற்றவர்களிடமிருந்த இத்தகைய பௌத்தத்திற்கு ஒவ்வாத கூறுகளை ஒழித்தும் இருந்துள்ளது.

மனிமேகலைக் காப்பியத்தில் கப்பல் உடைந்து சாவகத் தீவில் (Java) கரை ஒதுங்கிய சாதுவனுக்கும் நாகர் தலைவனுக்கும் இடையில் நடந்த negotiation குறித்த என் முந்தைய கட்டுரையை வாசித்திருப்பவர்களுக்கு இதை விளக்கத் தேவை இல்லை. மது, மாது, மாமிசம் ஆகிய மூன்றையும் பரிசளித்த நாகர் தலைவனிடம் பௌத்தத்தை ஏற்றுக் கொண்ட சாதுவன் மூன்றையும் மறுப்பதோடு நாகர்களையும் அவற்றை விடச் சொல்வான். அவர்களின் வாழ்முறையில் அம்மூன்றையும் துறப்பது சாத்தியமில்லை என்றாகிற போது பவுத்தம் மது தவிர்த்து மற்றவற்றுடன் சமரசமாகிறது.

புத்தருக்குப் பலகாலத்திற்குப் பின் தோன்றிய மகாயனமும் அதன் தொடக்க காலத்தில் இபடிச் சமூக வாழ்வின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய இயலாததாகத்தான் இருந்தது. ஆனால் பின் தோன்றிய தாந்த்ரீக பவுத்தம் விரிவான சடங்கு ஆசாரங்கள் கூடியதாக அமைந்தது. சமூக வாழ்வில் மதத்தின் கடமைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யத் தக்க அளவிற்கு பிக்குகளின் அமைப்பும் வளர்ந்தது.

இந்தப் புரிதல் இன்று நமக்கு எந்த வகையில் உதவும்?

பெரியளவில் தமிழகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அம்பேத்கர் வழி நின்று பவுத்தத்திற்குப் பலர் மாறினர். ஆனால் அவர்களது வாழ்நாளிலேயோ, அல்லது அடுத்த தலைமுறையிலோ அவர்கள் மீண்டும் இந்துமதப் பண்பாட்டிற்குத் திரும்பி விடுகின்றனர்.

இது ஏன்?

ஏனெனில் இங்கு பவுத்தம் ஒரு வலிமையான அமைப்பாகவும், தொழுகை, சமூக நியாயப்பாட்டிற்கான சடங்கு மற்றும் மத ரீதியான தேவைகளை ஆற்றத் தக்கதாகவுமில்லை என்பதுதான் இதன் பின்னணி. ஒரு திருமணத்தையோ, குழந்தை பிறப்பையோ, இறப்பையோ புனிதப்படுத்தி (solemnise) நியாயப்படுத்தத் தக்க சமூக வலிமை உடையதாக அது இல்லை. சந்திப்பதற்கு, வணங்குவதற்கு, ஒரு சமூகமாக உணர்வதற்கு அவர்களுக்கு ஒரு பவுத்த ஆலயம் கூடத் தமிழகத்தில் இல்லாமற் போனது வேதனை.

பவுத்தம் பரப்ப விழைவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று இது. நான் சொல்ல வருவது இதுதான். பவுத்த ஆலயம், குருமார்கள் என்பதாக ஒரு பவுத்த சமூகம் ஒன்று அவசியம். நாம் பரப்பும் பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் அது நம்மிடம் வந்தவர்களின் மேற் குறிப்பிட்ட அந்த ஏழு தேவைகளையும் அது பூர்த்தி செய்யத் தக்கதாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *