பூம்புகார் கடற்கோளில் அழிந்த வரலாற்றின் இலக்கியச் சான்று

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 21,  தீராநதி, அக்டோபர் 2018                     

மாற்றுருக் கொள்ளும் திறனும் வான்வழி பறக்கும் வித்தையும் அருளப் பெற்றவளான மணிமேகலை நினைத்திருந்தால் எப்போதோ அரசியின் கொடுமைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கலாம். எனினும் அவற்றை எல்லாம் அவள் சகித்துக் கொண்டிருந்தது என்பது இந்தத் துன்பங்களை ஏல்லாம் தனக்கு இழைத்த அரசி முற்பிறவியில் தன் காதலனாக இருந்தவனை இப்பிறவியில் வயிற்றில் சுமந்திருந்தவள் என்பதனாலும், மகனை இழந்த துயரின் விளைவாய்த்தான் அவள் இத்தனையையும் செய்கிறாள் என்பதை எண்ணியும்தான் என விளக்கிய மணிமேகலை அரசியை அமைதி அடையுமாறும் தான் உரைக்கும் அறவுரைகளைக் கேட்குமாறும் சொல்லிச் சில எடுத்துக்காட்டுகளுடன் தொடங்கினாள்.

“அறந் தவறிய ஆள்வோரின் கொடுமையால் நிலைதவறிய ஒரு நாட்டில் கணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண் தான் பெற்ற குழந்தையையும் பிரிந்து எங்கோ சென்று வரையறைகளை மீறிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது குழந்தையை ஒரு பார்ப்பனன் யாரும் அறியாது வளர்த்து வந்தான். அப்படி வளர்க்கப்பட்டவன் யாரென அறியாமல் தான் தாயையே புணர்ந்து, உண்மை அறிந்ததும் உயிரை ஈந்தான்.

“நிறை கர்ப்பமான ஒரு இளம் மானின்மீது அம்பெறிந்த ஒரு வேடன், வீழ்ந்த அந்த மானின் விழியிலிருந்து வடிந்த நீரைக் கண்டு அந்த இடத்திலேயே தானும் வீழ்ந்து மடிந்தான்.

“கள்ளுண்ட மயக்கத்தில் எதிர் நிற்பது ஒரு மதங்கொண்ட யானை என்பதை அறியாது அதன் முன் சென்று அதன் வெண்மையான தந்தத்தால் குத்துப்பட்டு வீழ்ந்தான் இன்னொருவன்.

“நெறி தவறி வாழ்வோர் அதன் துயர விளைவுகளிலிருந்து தப்ப இயலாது. களவாகிய ஏரைக் கொண்டு உழுபவன் கடுந்துயரைத்தான் விளைவித்துக் கொள்ள இயலும். கற்ற கல்வி மட்டுமே ஒருவர்க்கு மெய்யுணர்வைத் தந்துவிடாது; ஆத்திரத்தை அடக்காதோர் அறிவுணர இயலாது. அல்லலுற்ற மக்களுக்கு இல்லாததைத் தருவோர், பட்டினி கிடப்போரின் பசி நீக்குபவர், மண்ணுலக உயிர்கள் மீதெல்லாம் அன்பைப் பொழிபவர் எவரோ அவரே தாங்கள் செல்ல விரும்பும் நல்லுலகத்திற்கான வழியை அறிந்தோர்”

-என்றெல்லாம் சொல்லி மகனிறந்த துயரால் நெஞ்சம் எரிந்து கொண்டிருந்த அரசிக்கு ஆறுதல் கூறினாள் மணிமேகலை.

அறம் தவறாத வாழ்வும் மக்களின் பசித்துயர் நீக்கலும் மட்டுமே உய்வதர்கான ஒரே வழி என்பதை வாய்க்கும் இடங்களில் எல்லாம் சாத்தனார் வற்புறுத்தத் தயங்குவதில்லை என்பதைத் தொடர்ந்து கண்டு வருகிறோம்.

மனந் தெளிந்த அரசி மணிமேகலையைத் தொழுது நின்றபோது மணிமேகலை ஒருகணம் துடித்துப் போனாள். தன் முற்பிறவிக் கணவனுக்கு இப்பிறவியில் தாயாக அமைந்தவள் அவள்; அதோடு அவள் இந்த நாட்டின் அரசியும் கூட. “நீ எனைத் தொழுவது தகுதியல்ல” எனக் கூறி மணிமேகலை அரசியை வணங்கி நின்றாள்.

இதற்கிடையில் நடந்த துயரச் சம்பவங்களை எல்லாம் அறிந்த மணிமேகலையின் பாட்டியும் முதுகணிகையுமான சித்திராபதி பேத்தியைச் சிறை மீட்க ஓடி வந்து அரசியின் காலடி வீழ்ந்தாள்.

“இந்திரனுக்குப் முன் நடனமாடும்போது குற்றமிழைத்தவர் ஐவர், சாபமிடப்பட்டவர் நூற்றி ஐந்து பேர், இந்திரனுக்கு அழகியர் பெற்றுத்தந்தவர் பதினொருவர் என நூற்றி இருபத்தோறு பெண்கள் தொன்மைச் சிறப்புமிக்க இம்மாநகருக்கு வந்து  ஆடல் மங்கையராகச் சிறப்புற்று வாழத் தொடங்கிய காலந்தொட்டு இன்றுவரை எம்குலமகளிர் எவரும் இன்று யான் பெற்ற துயரைப் பெற்றிருக்கமாட்டார்கள். கோவலன் மறைந்தபின் என் மகள் மாதவி துறவு மேற்கொண்டு பவுத்தப் பள்ளி ஒன்றைச் சென்றடைந்ததை ஒட்டியும், அவள் மகள் மணிமேகலை பிச்சைப் பாத்திரத்துடன் வீடு வீடாகத் திரிவதைக் கண்டும் எம் குலத்தவர் எள்ளி நகையாடுகின்றனர். நாடகக் கணிகையரின் இலக்கணங்களை மீறிய வாழ்வொன்றை இவர்கள் தேர்வு செய்ததின் விளைவாக மன்னவன் மகன் கேடுற்றது மட்டுமின்றி இந்நகருக்கும் இடுக்கண் நேரப் போகிறது….”

என்று பலவாறும் பிதற்றிய சித்திராபதியின் புலம்பலின் ஊடாகச் சாத்தனார் இன்னொரு கிளைக் கதையைக் காவியத்தில் ஏற்றுகிறார்.

கடலோரமாய் உள்ள ஒரு புன்னைமரச் சோலையில் நின்றிருந்த சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளியின் முன் தன்னந்தனியாய்த் தோன்றினாள் ஒருத்தி. அவளைக் கண்ட கண்ணிலும், கேட்ட செவியினும், உயிர்த்த மூக்கினும், உற்றுணர் உடம்பினும் காமவேளின் மலர்களாலான பஞ்சபாணக்களும் தாக்க நிலைகுலைந்த மன்னன், போர்க்களங்களிலே பலரைப் புறங்கண்டவனாயினும் இப்போது அவளைப் பணிந்து அவள் ஏவலை நிறைவேற்றுபவனாய் அவளோடு கூடி இருந்தான். சுமார் ஒருமாத காலம் அவள் அவனுடன் கழித்தனள். ஆயினும் இறுதிவரை அவள் யாரென அவனிடம் உரைக்கவில்லை என்பது மட்டுமல்ல திடீரென அவள் ஒரு நாள் காணாமற் போனாள்.

வேந்தர் பலரை வென்றவனான கிள்ளி வளவன் அந்த இளங்கொடி நங்கை எங்கு ஒளிந்து கொண்டாளோ எனத் தேடி அலைந்தான். அப்போது நீர், நிலம், வான்வழி என எங்கும் அலைந்து திரியும் சாரணர் ஒருவரைச் சந்தித்து அவரையும் வணங்கி அவளைக் கண்டீரோ என வினவினான். “நான் அவளைக் கண்டதில்லை ஆயினும் அவளை அறிவேன். நாக நாட்டை ஆளும் வளைவணன் என்பவனின் தேவி வாசமயிலை என்பவளின் வயிற்றில் உதித்த பீலிவளை என்பவள் அவள். அவள் பிறந்தபோது, ‘இரவி குலத்தில் (சோழ குலம்) பிறந்த ஒருவனது தழுவலில் கரு உயிர்த்து வருவாள்’ என ஒரு கணியன் உரைத்தான். அவனுக்குப் பிறக்கும் நின் மகன் உன்னிடம் வரலாமேயன்றி அவள் இனி வாராள். நீ புலம்புதல் வேண்டாம்” என உரைத்துச் செல்லும் முன் அவன் இன்னொன்றையும் சொன்னான்.

“நீ ஆண்டுதோறும் எடுக்கும் தீவகச் சாந்தி விழாவை தொடர்ந்து செய்ய வேண்டும். கைவிட்டாயானால் உன் காவல் மாநகர் (பூம்புகார்) கடல்கோளால் அழியும். இது கடல் தெய்வமான மணிமேகலா தெய்வம் வாய்மொழியால் உரைத்தது என்பதை மறவாதே. அது மட்டுமல்ல. அப்படி நீ விழாவைக் கைவிடுவாயானால் இந்திர சாபமும் சேர்ந்து கொள்ளும். எனவே இந்த ஆபத்து தணிவதற்கு வாப்பில்லை. எனவே உன் மாநகர் கடல் வயிறு புகாமல் காக்க வேண்டுமானால் இந்திர விழாவை எக் காரணம் கொண்டும் கைவிடாதே” என எச்சரித்துத் தன் வழிப்போக்கைத் தொடர்ந்தார் அந்தச் சாரணர்.

சித்திராபதியின் புலம்பலின் ஊடாக வெளிப்படும் இச் செய்தியுடன் இக்கிளைக் கதை பாதியில் முற்றுப் பெற்று அடுத்த அத்தியாயத்தில் மீண்டும் தொடர்கிறது.

மணிமேகலையை அரசியிடமிருந்து விடுவித்து அழைத்துச் செல்வதிலேயே கருத்தாய் இருந்த சித்திராபதி கிள்ளியின் கதையை அத்துடன் நிறுத்திக் கொண்டு தன் வேண்டுதலைத் தொடர்ந்தாள். கொலைக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைப்பட்டது உட்பட எதிர்கொண்ட துன்பங்களின் விளைவாகத் தன் பேத்தி ‘மனந்திருந்தி’ தன் அறிவுரையை ஏற்று குலத் தொழிலைத் தொடர்வாள் என்கிற நம்பிக்கை வேறு அந்த மூதாட்டிக்கு. “நல்மனம் பிறந்துள்ள நாடகக் கணிகையை என் மனைக்கு அழைத்துச் செல்லுகிறேன்” என அரசியிடம் வேண்டிய போது உண்மையில் “நல்மனம்” பிறந்துள்ளது அரசிக்குத்தான் என அவள் அறிந்திருக்கவில்லை. “கள், பொய், காமம், கொலை, களவு செய்யும் உள்ளம் ஆகிய குற்றங்கள் அறிவுடையோரால் நீக்கப்பட்டவை.  அவற்றையே தலைமையாய்க் கொண்ட உன்னுடன் வாழ்வதை அஞ்சித்தான் அவள் வெளிப்போந்தாள். இனி அவள் உன்னுடன் உன் அகம் புகாள். அவள் என்னோடிருப்பாள்” என அரசி சீறிய தருணத்தில் மாதவ முனிவரான அறவணர் மாதவியுடனும், சுதமதியுடனும் அங்கே வந்தார்.

மணிமேகலைக்கு நேர்ந்ததை எல்லாம் அறிந்த மாதவி கவலை கொண்டு சுதமதி துணையுடன் அறவணரைச் சென்று சந்தித்தாள். பின் மூவரும் அரசியைச் சந்திக்க வருகின்றனர். நடந்தவற்றை அறிகின்றனர். பணிந்த அரசிக்கு அறமுரைக்கிறார் அடிகள். அதன் பின் தன்னுடைய எதிர்காலத் திட்டங்களை விளக்கி அங்கிருந்து அகல்கிறாள் மணிமேகலை.

இந்தப் பின்னணியில்தான் பூம்புகார் கடற்கோளால் அழிந்தது. ஆம் சாரணரின் எச்சரிக்கையை மன்னன் கிள்ளிவளவன் மறந்தான். கடற் தெய்வமான மணிமேகலா தெய்வம் சீற்றம் கொண்டு பூம்புகாரை அழித்தது. கி.மு நூற்றாண்டுகளில் ஏதன்ஸ், ரோம் முதலான நகரங்களுடன் வணிகத் தொடர்பில் இருந்த வரலாறு பூம்புகாருக்கு உண்டு என்பதை அறிவோம். ஒரு பெரும் கடற்கோளால் பூம்புகார்ப் பெருநகர் அழிந்ததை இன்று அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது. பூம்புகாரை ஒட்டிய கடற்பகுதியில் இப்போது செய்யப்பட்ட ஆய்வுகளில் இதற்குச் சான்றுகள் உள்ளன என்கின்றனர். கடல்கோள் ஏற்பட்டு பூம்புகார் அழிந்ததற்கான முக்கிய இலக்கியச் சான்றாக மணிமேகலை அமைகிறது.

அந்த வரலாற்று நிகழ்வை மணிமேகலைத் தன் காப்பியப் போக்கில் இணைத்துக் கொள்வதைத் தொடர்வோம். இக் காதையின் முடிவில் மணிமேகலை அவர்களிடமிருந்து விடை பெற்று சாவகத் தீவை (நாகபுரம்) அடைகிறாள். அத்தீவை அப்போது ஆண்டு கொண்டிருந்த புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாகப் பிறவி கண்டிருந்தவன். அவனிடம் மணிமேகலை தன்னிடமுள்ள அமுதசுரபியைக் காட்டி அவனது பழம் பிறப்பை அவன் அறிய வேண்டுமானால் மணிபல்லவத் தீவிற்குச் சென்று பீடிகையை வணங்க வேண்டும் என்கிறாள். இருவரும் கப்பலில் தீவை வந்தடைகின்றனர்.

அங்கே அத் தீவின் காவற் தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம் பூம்புகார் கடற் கோளால் அழிந்த கதையைச் சொல்கிறது. அதனூடாகக் கிள்ளி – பீலிவளை வரலாறும் தொடர்கிறது.

“பலர் தொழும் பாத்திரத்தைக் கையிலேந்திய நங்கையே கேள்! நாக நன்நாட்டை ஆள்பவனின் மகள்தான் பெண்களிற் சிறந்த பீலிவளை என்பாள் பனிக்குப் பகைவனான கதிரவனின் வழியில் தோன்றிய தனது இளம் குழந்தையுடன் இத் தீவிற்கு வந்த அவள் புத்த பீடிகையை  வலம் வந்து வணங்கினாள். அப்போது கம்பளச்செட்டி என்பானின் கப்பல் வந்து அங்கே நின்றது. அவனிடம் சென்று உசாவிய பின் உம் மன்னனின் மகன் இவன். இவனைக் கொண்டு செல்” என அவனிடம் குழந்தையைச் சேர்ப்பித்தாள். பழுதற்ற தோற்றத்துடன் எதிர் நின்ற அந்தப் பைங்கொடி தந்த குழந்தையைப் பணிவுடன் ஏற்ற அந்த வணிகன் அக்குழந்தையுடன் அந்தத் துறைமுகத்தை விட்டகன்றான். ஆனால் அப்படிக் குழந்தையுடன் அவன்  சென்ற அன்றிரவே காரிருளில் கரையருகில் அவன் கலம் உடைந்து சிதறியது. உடைந்த கலத்திலிருந்து தப்பிய மாக்கள் உடன் அரசனிடம் சென்று அவனது குழந்தை கடல் விபத்தில் காணாமற் போன அத் துயரச் செய்தியை உரைத்தனர்.

“மகனுக்கு நேர்ந்த கதியை மன்னனால் பொறுக்க இயலவில்லை. தனது நாக மணியை இழந்த அரவம் அதை எப்படி எல்லாம் தேடி அலையுமோ அப்படித் தன் குழந்தையைத் தேடி கானல், கடல், கரை என எல்லா இடங்களுக்கும் சென்று அலைந்தான். அதனால் இந்திரவிழாக் கொண்டாட்டத்தை மாநகர் இழந்தது. மணிமேகலா தெய்வம் அதைப் பொறுக்க இயலாது, ‘அணிநகர் தன்னை அலைகடல் கொள்க !’ எனச் சாபம் இட்டது. புகார் நகர் கடலில் பட்ட கதை இதுதான்.

“கடவுள் அனைய மாநகர் கடலால் கொள்ளப் பட்டதும் வடிவேல் ஏந்திய அகன்ற கையை உடைய வானவன் போன்ற அரசன் தன் நகர் நீங்கினான். விரிந்த அலைகள் வந்து தன் அழகிய நகரை விழுங்கத் தன்னந்தனியனாய் அவ்விடம் விட்டகன்றான் மன்னவன்.

“அருந்தவ முனிவரான அரவணருடன் நின் தாயர் இருவரும் (மாதவி, சுதமதி) துன்பம் ஏதுமின்றி வஞ்சி நகர் சென்றடைந்தனர். மணிமேகலா தெய்வம் உரைத்தனவற்றைக் கேட்க விரும்பினால் கேள் !” எனக் கூறிய தீவதிலகை தொடர்ந்து சொன்னது:

“மறுபிறப்பை உணர்ந்தவளே ! உன் தந்தையாகிய கோவலனின் மரபில் வந்த முன்னோன் ஒருவனை மணிமேகலா தெய்வம் முன்னொருநாள் கடல் விபத்திலிருந்து எடுத்துக் காத்ததையும், அப்படிக் காப்பாற்றப்பட்ட அவ்வணிகன் ஊர் திரும்பியதும் அறங்கள் பல செய்து ஆண்டதையும் அறிய நினைத்தால் கடற் கோளுக்குப் பின் வஞ்சி மாநகரில் உறையும் அறவணன்பாற் சென்று கேள்!”

எனக் கூறி அத்தீவகத் தெய்வம் வானகத்தே எழுந்து பறந்து சென்றது.

(அடுத்து அறவணர் அரசிக்கு உரைத்த அறமும்  வஞ்சிமாநகரில்  கண்ணகியைச் சந்தித்து மணிமேகலை அறவுரை பெறுதலும்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *