யார் இந்த ரோஹிங்யாக்கள்?

எல்லோராலும் விரட்டப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் 

(மக்கள் களம், அக் 2017)

“உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள்” (most persecuted minority) எனவும், மியான்மரில் நடப்பது “மனித குலத்திற்கு எதிரான குற்றம்” (crime against humanity) எனவும் ஐ.நா அவை மியான்மர் நாட்டு ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினையை இன்று வரையறுக்கிறது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள 40,000 பேர் உட்பட சுமார் ஐந்து இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன்று உலகெங்கிலும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவையும் கூட அளிக்க இன்று எந்த நாடும், அவர்களின் முந்தைய தாயகமாகக் கருதப்படும் வங்கதேசம் உட்படடத் தயாராக இல்லை.

இவர்கள் யார்? 138 இனங்களை உள்ளடக்கியுள்ள மியான்மர் ஏன் இவர்களை மட்டும் அங்குள்ள கூடுதலான இன்னொரு இனமாக ஏற்கத் தயாராக இல்லை? தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்யாக்களை வெளியேற்றியே தீருவோம் எனப் பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதற்குக் காரணமாகச் சொல்கிற பாக் மற்றும் இஸ்லாமியத் தீவிரவாத ஊடுருவல் என்பதில் நியாயம் உள்ளதா என்பவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

யார் இந்த ரோஹிங்யாக்கள்?

மியான்மர் நாட்டு வரைபடத்தில், வங்க தேச எல்லையில், வங்கக் கடலை ஒட்டி ஒரு வால் போல் தொங்குகிற ராகைன் எனப்படும் மியான்மர் நாட்டு மாநிலத்தில் வாழ்கிற முஸ்லிம் இனங்களில் ஒன்றுதான் ரோஹிங்யாக்கள் எனப்படுவோர். வங்க இலக்கியங்களில் ‘ரோஷாங்’ எனக் குறிப்பிடப்படும் இவர்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து வந்து இங்கு குடியேறினர். இந்தியப் பெருங்கடலை ஒட்டி வாழ்ந்த முஸ்லிம்கள் இவ்வாறு பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இப்படியான துறைமுக நகரங்களை நோக்கி இடம் பெயர்ந்து வந்து தென் கிழக்கு ஆசிய பவுத்த நாடுகளில் (மியான்மர், தாய்லந்த், லாவோஸ், கம்போடியா முதலியன) குடியேறினர் என்பது வரலாறு. காலனிய ஆட்சிக் காலத்தில் இத்தகைய இடப்பெயர்வு அதிகரித்தது. இந்துக்களும் கூட இவ்வாறு கொஞ்சம் இடம்பெயர்ந்தனர். 1869 ல் சூயஸ்  கால்வாய் திறக்கப்பட்டபின் இப்போதைய வங்கதேசத்தின் சிட்டகாங் பகுதியிலிருந்து கூலித் தொழிலாளிகள் இவ்வாறு நிரந்தரமாகவும், தர்காலிகமாகப் பருவ காலங்களிலும் இடம் பெயர்ந்தனர். அன்றைய பிரிட்டிஷ் அரசு தங்களின் நலனுக்காக இப்படியான பெருந்திரள் இடப்பெயர்வை ஊக்குவித்தது. இரண்டாம் யுத்தகாலம் வரையில் இவ்வாறு இடம்பெயர்ந்து வருவது தொடர்ந்தது. இப்படியான நீண்ட கால இடபெயர்வில் கடைசிக் கட்டத்தில் இடம் பெயர்ந்து வந்த முஸ்லிம்கள், அதற்குப் பல காலம் முன்னதாக வந்து கிட்டதட்ட இங்குள்ள சமூகத்துடன் உட்கலந்து வாழத் தொடங்கிவிட்ட முஸ்லிம்களிலிருந்து வேறுபட்டுத் தனித்துவத்துடன் விளங்கினர், ஆக இடம்பெயர்ந்த முஸ்லிம்களையே நாம் இரு பிரிவாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. பிற்காலத்தில் வந்த இவர்களே பின்னர் சுயாட்சி கோரிய வகையிலும், வங்க தேசத்துடன் (ஒருகாலத்தில் கிழக்கு பாகிஸ்தான்) ராகைன்ன் மாநிலம் இணையவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்த வகையிலும் சற்றே தீவிர அடையாள அரசியலை முன்வைத்தனர். 1950 களில் ராகைன் நாடாளுமன்ற அரசியலை ஏற்றுக்கொண்ட முச்லிம்களும் ராகைன் ‘முஜாஹித்’ போராளிகளும் ஷரியா சட்டத்தை அடிப்படையாகவும், உருதைத் தாய்மொழியாகவும் கொண்ட சுயாட்சி உரிமை உள்ள முஸ்லிம் பகுதி (autonomous Muslim zone) ஒன்றை உருவாக்கக் கோரினர். இந்தப் பின்னணியில்தான் இந்த ‘ரோஹிங்யா’ எனும் சொல்லும் அடையாளமும் உருவானது. தொடக்க கால பிரிட்டிஷ் ஆவணங்களில் இந்த அடையாளத்துடன் அவர்கள் பதியப்படவில்லை. முஸ்லிம்கள், வங்காளிகள், சிட்டகாங்கிலிருந்து வந்தோர் என்றே பதியப்பட்டனர்.

இன்று ரோஹிங்யாக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ராகைன் மாநிலம் ஆங்கிலோ பர்மிய யுத்தத்தின் போதுதான் (1826) பர்மாவுடன் இணைக்கப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அதற்கு முற்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அது வங்க மாநிலத்தின் கீழ்தான் இருந்தது.

முன்னாள் காலனிய நாடுகளில் இன்றுள்ள பிரச்சினைகள் பலவற்றிற்கு பிரிட்டிஷ் நிர்வாகத்திலேயே விதைகள் தூவப்பட்டன என்பது வரலாறு. ‘சென்சஸ்’ முதலானவை இதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இப்படி வங்க தேசத்திலிருந்து (அதாவது அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து) வந்த முஸ்லிம்களை ‘அந்நியர்கள்’ என்றும், மேற்குத் திசையிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் (‘கலர்’) என்றும் பதிந்ததன் மூலம் அவர்களுக்கு ஒரு தனி அடையாளம் சூட்டப்பட்டது. பாகிஸ்தான் உருவானபோது அவர்கள் பாகிஸ்தானிகள் எனவும் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் கொஞ்சம்பேருக்கு பாகிஸ்தான் குடியுரிமை வழங்கும் நிலையும் இருந்தது.

இரண்டாம் யுத்த காலத்தில் படையெடுத்து வந்த ஜப்பானியர்களை பவுத்தர்களாக இனம் கண்ட மியான்மர் பவுத்தர்கள் அவர்களின் படையெடுப்பை ஆதரித்தபோது மியான்மர் முஸ்லிம்கள் பிரிட்டிஷாரை ஆதரித்தனர். ஆந்த வகையிலும் ஒரு பிளவு உருவாகியது. பிற்காலங்களில் இடம்பெயர்ந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம்களின் அடையாள வலியுறுத்தல், சுயாட்சி கோரல் முதலியனவும் பவுத்த அரசியல் ஒன்று உருவானபோது ரோஹிங்யா முஸ்லிம்களை அந்நியர்களாகவும் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்களாகவும் கட்டமைத்தது. இந்த அடிப்படையில்தான் ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றறிஞர் ஜேக்வஸ் பி. லெய்டர், இன்று மியான்மரில் உருவாகியுள்ள வன்முறையை “முஸ்லிம்கள் மீதான வன்முறை” என்பதைக் காட்டிலும் இது “ரோஹிங்யாக்களின் மீதான வன்முறை” என்றே காணவேண்டும் என்கிறார்.

சுதந்திரத்திற்குப் பின் (1948) இந்தப் பகை முற்றியது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இந்தியாவுடன், அதாவது இன்றைய வங்க தேசத்துடன் இணைய வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்தனர். புதிய சுதந்திர அரசு ரோஹிங்யாவினரை இன அடிப்படையில் ஒதுக்கத் தொடங்கியது. அவர்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கியது. முழுக்குடியுரிமை, அரைக் குடியுரிமை முதலியவற்றைப் பெற வேண்டுமானால் உரிய ஆவணங்களை அவர்கள் அளிக்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்தியது. ஆனால் இவர்கள் குறித்த பதிவுகளில் பிரிட்டிஷ் ஆட்சி காட்டிய அலட்சியங்களின் ஊடாக இவர்களால் அரசு கோரிய ஆவணங்களை அளிக்கமுடியவில்லை.

ரோஹிங்யாக்களின் இனப்பெருக்க வீதம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது என்பது உண்மைதான். அதைக் காரணம் காட்டி, ரோஹிங்யாக்கள் திருமணம் செய்ய அரசு அனுமதி பெற வேண்டும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாது, ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையில் குறைந்தது மூன்றாண்டு இடைவெளி வேண்டும் என்பன போன்ற இன ஒதுக்கல் சட்டங்களையும் பர்மிய அரசுகள் இயற்றின.

இதற்கிடையில் வங்கதேசச் சுதந்திரப் போரின்போது, 1971 – 72 காலக்கட்டத்தில் சுமார் 5,00,000 முஸ்லிம்கள் இன்றைய வங்க தேசத்திலிருந்து ராகைன் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர்

இப்படித் தொடர்ந்து வங்க முஸ்லிம்கள் ஊடுருவி வருவதைத் தடுப்பது என்கிற பெயரில் மியான்மர் இராணுவம் அப்படியான ‘ஊடுருவல்காரர்களை’ திருப்பி விரட்டும் நடவடிக்கை என மேற்கொண்ட தாக்குதலின் ஊடாக 1978ல் சுமார் 2,00,000 வங்க முஸ்லிம்கள் வங்கதேசத்திற்குள் விரட்டப்பட்டனர். 1991 – 92 ல் மேலும் சுமார் 2,70,000 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இனிமேலும் ஒருவரைக்கூட  எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என இன்று அறிவித்துள்ளது வங்க தேச அரசு.

பவுத்தம் கட்டமைக்கும் ரோஹிங்யா வெறுப்பு

இன்று அஷின் விராத்து எனும் புத்த பிக்குவால் பெரிய அளவில் மியான்மர் மக்கள் மத்தியில் ரோஹிங்யா வெறுப்பு கட்டமைக்கப்பட்டு வருகிறது. 2003 முதல் இராணுவ அரசால் சிறைவைக்கப்பட்ட விராத்து இன்றைய “ஜனநாயகமய நடவடிக்கைகளின்” ஊடாக 2012 ல் விடுதலை செய்யப்பட்டபோது அது தீவிரமாகியது, அதிகமாகப் பிள்ளை பெறுகிறார்கள், பவுத்தப் பெண்களைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர், பர்மியப் பொருளாதாரத்தைக் கையில் வைத்துள்ளனர் என்றெல்லாம் மிகப்படுத்தப்பட்ட, பொய்யான வெறுப்பு அரசியல் முழக்கங்கள் இன்று அங்கு விராத்து முன்வைத்து வன்முறையைத் தூண்டுகிறார். இலங்கையில் இதே போல வெறுப்பு அரசியலைக் கட்டமைக்கும் பொதுபலசேனா எனும் பிக்குகள் அமைப்புடனும், இந்தியாவில் முஸ்லிம் வெறுப்பை முன்னெடுக்கும் இந்துத்துவத்துடனும் அவர் நெருக்கமான உறவுகளைப் பேணுவதும் குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில்தான் 2012 ல் பவுத்தப் பெண் ஒருவரை மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பலாத்காரம் செய்த செய்தியின் அடிப்படையில் மிகப் பெரிய அளவில் ரோஹிங்யாக்கள் மீது தாக்குதல் தொடங்கியது.

இத்தகைய தாக்குதல்களின் விளைவாக அன்று (2012) உள்நாட்டில் உள்ள எந்த அடிப்படை வசதிகளும் அற்ற அகதிகள் முகாம்களில் 1,40,000 ரோஹிங்யாக்கள் இருந்தனர். அங்கு அவர்களுக்குத் குறைந்தபட்ச மருத்துவ வசதிகளும் கூட இல்லை. “எல்லை கடந்த மருத்துவர்கள்” எனும் புகழ் பெற்ற சேவை அமைப்பினரும் வன்முறையாளர்களால் விரட்டப்பட்டனர். அன்றைய கணக்குப்படி முந்தைய 25 ஆண்டுகளில் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தோர் சுமார் 5,00,000. தாய்லாந்து, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில்  அடைக்கலம் புகுந்தவர்கள் 3,00,000ம் மேற்பட்டோர் என ஒரு கணக்கீடு கூறுகிறது.. இந்தியாவில் இப்போது 40,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களை வெளியேற்றுவது என்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது.

இந்த ஆகஸ்ட் 24 (2017) அன்று “அராக்கன் ரோஹிங்யா மீட்புப் படை” (Arakan Rohingya Salvation Army – ARSA) எனும் தீவிரவாத அமைப்பு மியான்மரின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராகைன் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் முப்பது காவல் நிலையங்களைக் குறிவைத்துத் தாக்கியதைச் சாக்காகக் கொண்டு அம்மக்கள் மீதான இன்றைய இராணுவத் தாக்குதல் தொடங்கியது. அராக்கன் ‘அர்சா’ படையின் இந்தத் தாக்குதலில் சுமார் 12 காவலர்களும் 59 தீவிரவாதப் படையினரும்  கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது அதை ஒட்டி இராணுவம் ரோஹிங்யா மக்களின் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியது. பெரியளவில் முஸ்லிம் கிராமங்கள் தரை மட்டமாக்கப்பட்டன. இதன் விளைவாக ரோஹிங்யாக்கள் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. தாக்குதலுக்கு அஞ்சித் தப்பி ஓடி வரும்  அப்பாவி மக்களையும் இராணுவம் சுட்டுத் தள்ளிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தன. கிட்டத்தட்ட 400 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. தரை வழி தவிர கடல் வழியாகவும் இம்மக்கள் தப்பி ஓடி வருகின்றனர். பாதுகாப்பற்ற கடல் பயணத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் மரணித்த செய்திகளும் வந்துள்ளன. முதல் பத்து நாட்களில் மட்டும் இப்படி ஓடியவர்களின் எண்ணிக்கை சுமார் 1,50,000.

எல்லா நாடுகளிலும் துரத்தி அடிக்கப்பட்டுக் கடலிலேயே மரணித்தவர்கள், வந்து இறங்கிய இடத்திலிருந்து நாடுகளுக்குள் புக இயலாமல்அருகிலுள்ள காடுகளில் ஒதுங்கி மாண்டவர்கள் ஆகியோரின் வரலாறுகளை விரிக்கப் புகுந்தால் கட்டுரை நீளும்.

மோடி அரசின் அணுகல்முறை

இந்தியாவ்வில் உள்ள 40,000 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளில் 16,000 பேருக்கு ஐ.நா அகதிகள் அமைப்பு அடையாள அட்டை வழங்கியுள்ளது. இந்திய அரசின் சார்பாகப் பேசி வரும் மத்திய துணை அமைச்சர் கிரேன் ரெஜ்ஜு இது குறித்து, “அவர்கள் பாட்டுக்குக் கணக்கு எடுத்து அட்டை வழங்கிக் கொண்டுள்ளார்கள். அதற்காக ரோஹிங்யாக்களை அனுமதித்துவிட இயலாது. நாங்கள் அவர்களை வெளியே அனுப்புவது உறுதி” என்கிறார். அதுமட்டுமல்ல, இந்திய அரசுக்கென இதுவரை தேசிய அளவிலான அகதிகள் கொள்கை எதுவும் கிடையாது. அகதிகள் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்பாட்டிலும் அது கையெழுத்திடவில்லை. இதையெல்லாம் சுட்டிக் காட்டி நாங்கள் அவர்களை வெளியேற்றுவதை ஐ.நாவோ இல்லை யாருமோ ஒன்றும் கேட்க முடியாது என்கிறது மோடி அரசு.

உயிருக்குப் பயந்து அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களை வெளியேற்றக் கூடாது என்கிற (principle of non-refoulement) கொள்கை இன்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே அப்படியெல்லாம் சொல்லி இந்தியா தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது என்கிறது ஐ.நா. “அவர்களை நாங்கள் அகதிகளாகக் கருதவில்லை. அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் (illegal immigrants). பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தானின் IS உளவு அமைப்பு எல்லாம் இதில் ஊடுருவ வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி அவர்களை வெளியேற்றியே தீருவோம்” என்பது மோடி அரசின் பதில்.

முஸ்லிம் தீவிரவாதிகளின் ஊடுருவல் என்கிற இந்தக் குற்றச்சாட்டில் ஏதும் உண்மையுண்டா? அப்படி ஏதும் ஆதாரபூர்வமான தகவல் இதுவரை இல்லை. எனினும் இப்படியான சூழலில் பன்னாட்டளவில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதம் இன்றைய மியான்மர் சூழலைப் பயன்படுத்தி இப்பகுதியில் ஊடுருவும் சாத்தியத்தை முற்றாக மறுத்துவிடவும் இயலாது. ஆனால் இப்படியான காரணங்களைச் சொல்லி மிக அடிப்படையான மனித உரிமைகளைக் காப்பதிலிருந்தும், அரசின் பன்னாட்டுக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தும் ஒரு நாடு ஒதுங்கிக் கொள்ள இயலாது. உரிய கண்காணிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் இத்தகைய ஊடுருவலைத் தடுக்கத்தான் முயல வேண்டுமே ஒழிய பயங்கரவாதப் பூச்சாண்டி காட்டி அடிப்படை உரிமைகளை மறுப்பதுய் அறமும் அல்ல, நியாயமும் அல்ல. மோடி அரசின் உள்நோக்கம் ஊரறிந்த ஒன்று. அது தன் முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்டும் எத்தனையோ நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *