ராம்குமார் “தற்”கொலை” ? – நீதிவிசாரணை வேண்டும்

(நேற்று நான் ‘நியூஸ் 7″ தொலைக் காட்சி விவாதத்தில் பேசியவற்றின் சுருக்கம்)

1.சுவாதி கொலை வழக்கு மிகப் பெரிய அளவில் ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட ஒன்று. தொடக்கம் முதலே இதில் காவல்துறை சார்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அவர்களின் நடவடிக்கைகளில் உள்ள பல முரண்களைப் பலரும் சுட்டிக் காட்டினர். ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடக்கம் முதல் இதை ஒரு இந்து – முஸ்லிம் பிரச்சினையாக மாற்றும் முயற்சியிலிம் இருந்தனர். இந்நிலையில் காவல்துறை இந்த முரண்களை விளக்கவோ இல்லை அது குறித்து விசாரிக்கவோ தயாராக இல்லை. முரண்களைச் சுட்டிக் காட்டியவர்களே இலக்காக்ககப்பட்டனர். இதோ இங்கு அமர்ந்திருக்கும் இந்த இளைஞர் திலீபன் மீது வழக்குப் போடப்பட்டது. ராம்குமாரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என ஊகங்கள் முன்வைக்கப்பட்ட நேரத்தில் இது நிகழ்ந்துள்ளது.. ஒரு சாதாரண ‘சில்க் ஒயரை’ பல்லால் கடித்து உள்ளே உள்ள கம்பியை வெளியே எடுக்கவே சில நிமிடங்கள் ஆகிறது. தற்கொலை மனநிலையுடன் இருந்த ஒரு இளம் கைதி ஓடிச் சென்று ஒரு வலிமையான ‘லைவ்’ ஒயரைப் பல்லால் கடித்துத் தற்கொலை செய்யும் வரை எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள் என்பதெல்லாம் நம்பத் தகுந்ததாக இல்லை.

2.2001 முதல் 2011 வரை இங்கு NHRC யின் கவனத்துக்கு வந்த சம்பவங்களில் மட்டும் இந்தியச் சிறைகளில் கிட்டத்தட்ட 13,000 பேர் இறந்துள்ளனர். காவல் மரணங்களிலும், இவை நீதித்துறைக் காவலில் நடக்கும் மரணங்கள். இவற்றிற்கு நீதித்துறை பொறுப்பேற்க வேண்டும். அதேபோல இந்த மரணம் இன்று சிறைக்குள் நடந்தது என்றாலும் இதில் சிறைத்துறை, இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை, தன்னுடைய காவலில் இருக்கும் ஒருவருக்கு நேர்ந்த சந்தேகத்துக்குரிய மரணம் பற்றிப் பொறுப்பேற்காத நீதித்துறை எல்லோரும் பொறுப்பாகிறார்கள்.

3.இம்மாதிரிக் கொலைகள் மேலிருந்து திட்டமிடப்பட்டு செய்யப்படுகின்றன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும். ஒன்றைச் சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ராஜாராம், கண்ணன் என்கிற இரண்டு பேர் தமிழ் தேசியத் தீவிரவாதிகள் என அப்போது சென்ட்ரல் ஸ்டேஷன் அருகில் இருந்த சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டைருந்தனர். அவர்களைக் கொல்லப்போவதாக காவல்துறை வெளிப்படையாக மிரட்டியது. இது குறித்து அவர்கள் புகாரும் செய்திருந்தனர். ஒரு நாள் அவர்களை சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு திரும்பி வழக்கமான வழியில் வராமல் கோட்டூர்புறம் வழியாகக் கொண்டுவந்து ட்ராஃபிக்கை நிறுத்திவிட்டு அவர்களைச் சாலையில் இறக்கிச் சுட்டுக் கொன்றார்கள். அவர்களது பெற்றோர்கள் அவர்களின் உடல்களை வாங்கிக் கொள்ள மற்றுத்துப் பல மாதங்கள் அவை அழுகிக் கிடந்தன. நீதிமன்றமும் அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆக இப்படியான கொலைகள் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை எல்லாம் சேர்ந்து நடத்துபவைதான். அப்படியான ஒன்றுதான் ராம்குமாரின் இந்த மரணமும். இது திட்டமிட்ட கொலை என ஐயம் கொள்வதற்கான எல்ல நியாயங்களும் உண்டு.

4.இங்கே வந்துள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி சொல்வதுபோல கண்டா கண்டபடி பல ஐயங்கள் முன்வைக்கப்பட்டன என்பதில் எல்லாம் பொருள் இல்லை. ஒரு இந்து முஸ்லிம் பிரச்சினையை உருவாக்குவதற்காக ஒரு சிலர் திட்டமிட்டு தென்காசியைச் சேர்ந்த கூலிப்படை ஒன்றை வைத்து சுவாதியைக் கொலை செய்ததாகவும், இந்தக் கொலையாளிகளுக்கு ஒரு அரசியல் கட்சியின் முக்கிய தலைவர் பாதுகாப்புக் கொடுப்பதால் இதை விசாரித்த தமிழக போலீஸ் அவர்களைக் கைது செய்யாமல் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட இந்த ராம்குமாரைப் பலிகடா ஆக்குவதாகவும் ஒரு முக்கிய ஐயம் மட்டுமே இந்த திலீபன் என்பவராலும் ஃப்ரான்சைச் சேர்ந்த தமிழச்சி என்பவராலும் முன்வைக்கப்பட்டது. அவர்கள் இதில் தொடர்புடையவர்கள் என ஒரு சிலரையும் பாதுகாப்பு கொடுத்தவர் என பா.ஜக வின் இப்பகுதியைச் சேர்ந்த முக்கிய தலைவர் கருப்பு முருகானந்தத்தையும் பெயர் குறிப்பிட்டு எழுதினர்.  தான் எந்த விசாரணைக்கும் தயார் என அந்தத் தமிழச்சி என்பவர் எழுதியது இன்னும் வலைத்தளங்களில் இருக்கிறது. இதுதான் முக்கிய குற்றச்சாட்டு. பெயர் குறிப்பிடப்பட்ட குற்றசாட்டு. இது தவறாகவும் இருக்கலாம். சரியானதாகவும் இருக்கலாம். உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்கக் காவல்துறைக்கு அக்கறை இருக்குமானால் அது என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் இந்த திலீபன் மற்றும் தமிழச்சி ஆகியோரை விசாரித்து அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் விசாரித்திருக்க வேண்டும். ஒருவேளை குற்றம் சாட்டும் இவர்கள்தான் பொய் சொல்லுகிறார்கள் என்றால் இவர்கள் மீதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது? அந்தக் கருப்பு முருகானந்தம் என்பவர் இதுவரை பல கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பவர். முத்துப்பேட்டையில் நடந்த ஒரு மதக் கலவரம் தொடர்பான எங்களின் ஆய்வறிக்கையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் மீது 30க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி இருந்தோம். அவர் இப்போது திருவாரூர் எஸ்.பி யிடம் கொடுத்த புகார் அடிப்படையில் இந்த ஐயங்களை முன்வைத்த இந்த திலீபனைக் கைது செய்து சித்திரவதை செய்தார்கள். ஆக காவல்துறை உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய ஆர்வம் காட்டவில்லை. எப்படியாவது ராம்குமாரை வைத்தே வழக்கு முடிக்கப்பட வேண்டும் என நினைத்துச் செயல்பட்டது உறுதியாகத் தெரிகிறது. இப்போது ராம்குமார் இப்படி மரணம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது, அவர் வெளியில் வந்து உண்மைகளைப் பேசினால் ஆபத்து எனக் கருதி அவர் கொல்லப்பட்டார் என ஐயம் உருவாவது தவிர்க்க இயலாதது.

5.இதுபோன்ற நிகழ்வுகளில் நீதித்துறையையும் குற்றம் சாட்டுகிறீர்கள். இப்படியானவற்றில் உங்களுக்கு நீதியே கிடைக்காதா, காவல்துறையின் தவறுகளை ஒன்றும் செய்ய முடியாதா எனக் கேட்கிறீர்கள். இதுவரை இப்படி மேலிட ஒப்புதலுடன் காவல்துறை செய்த தவறுகள் தண்டிக்கப்பட்டதில்லை. என்ன செய்தாலும் காவல்துறையினர் தண்டிக்கப்படக் கூடாது என்றே அரசு செயல்படுகிறது. அதுவும் இன்றைய ஆட்சி காவல்துறையைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டது. சென்ற ஆண்டு கான்சாபுரம் கிட்டப்பா என்பவரைப் பிடித்துச் சென்று திருநெல்வேலி போலிஸ் கொன்றது. நாங்கள் அதை வெளிப்படுத்தி அறிக்கை அளித்தோம். பின்னர் NHRC அதில் தலையிட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். தற்போது வேறொரு வழக்கு தொடர்பாக நாங்கள் உண்மை அறியச் சென்றபோது அந்த வழக்கை ஊற்றி மூடி மீண்டும் அவர்களைப் பணியமர்த்தும் வேலை நடந்து கொண்டிருப்பதை அறிந்தோம்.

6.இப்படியான சந்தேகங்களை உங்களால் நிறுவமுடியுமா என நீங்கள் கேட்பதை ஏற்க முடியாது. என்னுடைய வீட்டில் ஒரு கொலை நடந்தால் சில சந்தேகங்களை நான் முன்வைப்பேன். அதுதான் என்னால் முடியும். அதை நிறுவும் வாய்ப்புகள், கருவிகள் எல்லாம் என்னிடம் இருக்கும் எஎன்பதில்லை. காவல்துறைதான் என்னையும் விசாரித்து நான் குற்றம்சாட்டுபவர்களையும் விசாரித்து உண்மையை அறிய வேண்டும். அந்தப் பொறுப்பு investigating agency க்குத்தான் உண்டு. அவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும்.

7.இந்தப் புகார்களை முறையாகச் செய்தீர்களா என்கிறீர்கள்? முகநூலில் எழுதினேன் என்பது திலீபனின் பதில். நாங்கள் கொடுத்ததை அவர்கள் ஏற்கவில்லை எனவும், திலீபன் போன்றவர்கள் அதைப் புகாராகச் செய்திருந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பில்லை எனவும் வழக்குரைஞர் ராமராஜ் சொல்கிறார். இவற்றை நான் முழுமையாகச் சரி என ஏற்க இயலவில்லை. புகாரை ஏற்க மறுத்தால் பதிவுத் தபாலில் அனுப்பி இருக்கலாம்; email ல் அனுப்பி இருக்கலாம். உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்திருக்கலாம். நீதிமன்றத்தையும் அணுகி இருக்கலாம். இதுபோன்ற சம்பவங்களில் உடனடிப் பலன் உள்ளதோ இல்லையோ இது போன்ற பதிவுகள் முக்கியம். அது நமக்குப் பின்னால் உதவும்.  அதே போல புகார் கொடுத்திருந்தால் ஆபத்து எனச் சொல்வதையும் ஏற்க முடியாது. என்னைப் பொறுத்த மட்டில் இதுபோன்ற பிரச்சினைகளில் நாம் எந்த அளவிற்கு வெளிப்படையாக உள்ளோமோ அந்த அளவிற்கே நமக்குப் பாதுகாப்பு.

8.இறுதியாக: i) குற்றம் சாட்டப்பட்டவர் கொல்லப்பட்டார் எனச் சொல்லி சுவாதி கொலை வழக்கை முடிக்கக் கூடாது. சுவாதி கொலையில் வேறு சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்கிற நியாயமான ஐயங்களையும் குற்றச்சாட்டுகளையும் ஏற்று அந்த விசாரணை சி.பிஐ இடம் ஒப்புவித்துத் தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்.. 2. சிறையில் ராம்குமார் “தற்கொலை” செய்துகொண்டார் என்பது ஐயத்துக்குரிய ஒன்றாக இருப்பதால் பணியில் உள்ள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு அவரது மரணம் விசாரிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *