அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதன் பொருள்

comparative religion

comparative religious studies என்பது ஒரு மிக முக்கியமான கல்வித்துறை. மதம் என்பது ‘நல்லதா, கெட்டதா’ என்பதற்கு அப்பால் அது மனித சமூக வாழ்வில் பிரிக்க இயலாத ஒரு அங்கம் என்பது யாரும் மறுக்க இயலாத ஒரு அடிப்படை உண்மை. மதம் தொடர்பான எந்த ஒரு அடிப்படைக் கருத்தாக்கம் மற்றும் நம்பிக்கை குறித்தும் மதங்களுக்கிடையே வேறுபட்ட பார்வைகள் உண்டு. இதை அடிப்படையில் அங்கீகரிப்பதும் ஒப்பீட்டு உணர்வதும் மதங்கள் பற்றிய புரிதலுக்கு அவசியம்.

இந்தப் புரிதலை அடைவதற்கு ஒரு அவசிய நிபந்தனை (necessary condition) உண்டு. அது: “ஒரு மதத்தை இன்னொரு மதத்தால் அளக்க முடியாது” என்பதே. ஒப்பிட்டுப் புரிந்து கொள்வது என்பது மதிப்பிடுவது அல்ல. “அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு” என முகமது நபிகள் சொன்னதன் பொருள் இதுவே. என் நம்பிக்கை மட்டுமே சரியானது. என் மதமே உயர்வானது என்பது நபிகளின் இந்தக் கூற்றுக்கு நூறு சதம் எதிரானது. பலதரப்பட்ட நம்பிக்கையாளர்களும் கூடி வாழ வேண்டிய ஒரு புவியியல் மற்றும் காலச் சூழலில் வாழ நேர்ந்த நாம் இதைப் புரிந்து கொள்வது அவசியம்.

தவிரவும், இந்தப் புரிதலை நாம் வரித்துக் கொண்டோமானால் மதங்களுக்கிடையே உள்ள சில நுணுக்கமான ஏற்பு நிலை வேறுபாடுகளையும் புரிந்து கொள்ள இயலும்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் (பிப் 10,2017) எனது இளம் முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு ஐயத்தை எழுப்பி இருந்தார். “ஏசு புத்தர் காந்தி” என்றெல்லாம் பொது வெளியில் ஏசுவுக்கும் புத்தருக்கும் கிடைத்த ஏற்பு ஏன் நபிகளுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் அந்த ஐயம். அதற்கு அப்போதைக்கு உடனடியாக நான் அளித்த மறுவினை இங்கே. இப்படியான அடிப்படையான வேறுபாடுகள் தவிர்க்க இயலாதவை. அவை அப்படித்தான் இருக்கும். இந்த வேறுபாடுகளை நிறையாகவோ, குறையாகவோ கருத வேண்டியதில்லை. இது அந்தந்த மதங்களின் இயற்பண்பு சார்ந்தது என்பதே நான் சொல்ல முயல்வது.

இனி அந்த விவாதம்:

Ahmed Riswan : ஏசுவையும் புத்தரையும் கடவுளாகவோ மதத்தலைவராகவோ ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட, அவர்களை ஒரு சமூக சீர்திருத்தவாதிகளாக ஏற்றுக்கொள்கிறார்கள். புத்தர், ஏசு, காந்தி என மூன்று பெயர்களும் சேர்த்தே சொல்லப்படுவதை நாம் பார்த்திருப்போம். இதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை.

ஆனால் பொதுச் சமூகத்தில் இப்படி ஓர் அங்கீகாரம் நபிகளாருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தக் குறையைப் போக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

Marx Anthonisamy 1. பொதுச் சமூகத்தில் அங்கீகாரம் இல்லை என்பதாக நாம் அதைப் பார்க்க வேண்டுமா? தெரியவில்லை.

இந்தப் பட்டியலில் காந்தியை விடுங்கள். அவர் நம் கண்முன் வாழ்ந்து மறைந்தவர். குற்றம் குறைகளுடன். புத்தரும் தன்னை எந்நாளுமே கடவுள் என்றோ அவதாரம் என்றோ அழைத்துக் கொண்டதில்லை. அவர் தன்னை அதிகபட்சமாகச் சொல்லிக் கொண்டது ‘விழிப்படைந்தவர்’ என்றுதான். மற்றபடி அவரும் சாதாரணமாக வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்தவர்தான். ஏசுவைப் பொருத்த மட்டில் அவர் தன்னை இறைமகன் என அழைத்துக் கொண்டாலும், மக்கள் மத்தியில் அற்புதங்கள் செய்தவரானாலும் ஒரு சாதாரண மனிதனைப்போல, இன்னும் சொல்லப்போனால் சாதாரண மனிதரைவிடவும் சாதரணமானவராக, அதிகாரத்தால் குற்றம் சாட்டப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி, உலகின் முன், “என் கடவுளே, என் கடவுளே என்னை ஏன் கைவிட்டீர்” எனக் கதறி மாண்டவர்.

நபிகள் நாயகத்தைப் பொருத்த மட்டில் இவர்கள் எல்லோரையும் விடச் சாதாரண மனிதராக வாழ்ந்து மறைந்தவராயினும் அவரைத் தம்மில் ஒருவராகக் கற்பித்துக் கொள்வதற்குத் தடையாக இருப்பது, அவரை தம்மில் ஒருவராக உணர முஸ்லிம் அல்லாதவர்களுக்குத் தடையாக இருப்பது அவரைக் கற்பித்துக் கொள்ள ஒரு உருவமில்லாதது ஒரு காரணமோ? அதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. அது இஸ்லாத்தின் மிக அடிப்படையான ஒரு நம்பிக்கை. அது மதிப்பீடுகளுக்கும் விமர்சனகளுக்கும் அப்பாற்பட்டது. நான் நீங்கள் எழுப்பியுள்ள பிரச்சினைக்கு இதுவும் ஒரு காரணமோ என்கிற ஒரு பிரச்சினைப்பாட்டை மட்டுமே முன்வைக்கிறேன். அப்படியே உருவமாய்ப் பார்த்துப் பழக்கப்பட்ட மனங்களை மனதில் கொண்டு சொல்கிறேன்.

எப்போதாவது கிறிஸ்தவ ஆலயங்களுக்குப் போகும்போது ஒன்றைக் கவனித்துள்ளேன். திரு உருவங்களை அவர்கள் தொட்டு முத்தமிடுவதை. இந்துக் கோவில்களில் கர்ப்பக் கிரகங்களுக்குச் சென்று அய்தைச் செய்வது சாதாரண மக்களுக்குச் சாத்தியமில்லாதபோதும் அதை அவர்கள் திரு உருவப் படங்களாக வீடுகளிலும் கற்பிதங்களாகவும் கதைகளாகவும் நெஞ்சிலும் சுமக்க ஒரு சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது. இதெல்லாம் ஒரு காரணமாக இருக்குமோ?

Marx Anthonisamy 2 : இறை மற்றும் இறையடியாருக்கும் மானிடர்க்கும் உள்ள உறவு பற்றிப் பேச வரும்போது “ஆள் நிலைப்பட்ட உறவு” என்றொரு கருத்தாக்கத்தை முன்வைப்பார் பேரா. சிவத்தம்பி. இறையடியரை மட்டுமல்ல இறையையே தம்மைப் போன்ற ஒரு மனிதராகக் கருதி உறவு கொள்ளல் என்பது இதன் பொருள். இதை விளக்க ஒரு எடுத்துக்காட்டை இப்படிச் சொல்லலாம். ‘பட்டினத்தார்’ திரைப்படத்தில் ஒரு காட்சி. பட்டினத்தாருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இராது. அவர்கள் தம் வேதனையை வெளிப்படுத்தும் ஒரு காட்சி திரைப்படத்தில் உண்டு. அந்தத் திரைப்படப் பாடலையும் காட்சியையும் யூ டியுபில் காணலாம். (“நிலவே நீ இந்தச் சேதி சொல்லாயோ..”) . ஒரு நாள் அந்தத் தம்பதி உப்பரிகையில் அமர்ந்து நிலவை நோக்கி இறைவனிடமும் உமாதேவியிடமும் தூது சென்று தம் சோகத்தைச் சொல்ல முடியுமா எனக் கேட்பர். அருமையான பாடல். அதில் ஒருவரி. இறைவன் பகைவர் மீதும் பாதகர் மீதும் சினந்திருக்கும் போது போய் எங்கள் சோகத்தைச் சொல்லாமல் பெற்ற குழந்தைகளுடனும் உமா தேவிடனும் மகிழ்ந்து கொஞ்சிக் கொண்டிருக்கும் போது போய் எங்கள் சோகத்தைச் சொல்வாயா என்பார்கள். ஆக இறைவனையே நம்மைப் போன்ற உணர்வுகள், குற்றம் குறைகள், பாசங்கள், உறவுகள் உள்ளவனாக மானுடத் தன்மையுடன் கற்பிக்கும் ஒரு மானுட பலவீனத்தைச் சில மதங்கள் அனுமதித்து விடுகின்றன. இத்தகைய ஆள்நிலைப்பட்ட உறவு சாதாரண மக்களுக்கு நபிகளிடம் ஏற்பட இயலாமற் போனது எனக் கொள்ளலாமா?

என்னுடைய ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ நூலில் நபிகள் நாயகத்தின் இந்த ஆள் நிலைப்பட்ட பண்புகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்திருப்பேன். இறைவனே சொல்லவில்லையா, நபிகளே ! உம்மை நான் குற்றம் குறைகள் உள்ள மனிதராகப் படைக்க வில்லையா? என. அவர் வெறும் எச்சரிக்கை செய்ய வந்தவர்தான் என்றும் கூறவில்லையா. அவர் உம்மி நபிகள்தானே. பெற்ற மகனின் மண்ணறையை விட்டு அகல இயலாமல் குமுறி அழுது கலங்கி அமர்ந்திருந்தவர்தானே. மாற்றுமதத்தாரின் ஜனாசா ஊர்வலமானாலும் ஒதுங்கி நின்று மரியாதை செய்தவரல்லவா. இந்த ஆள்நிலைப்பட்ட உறவை நாம் முன்னிலைப்படுத்தத் தவறியதும் ஒரு காரணமோ?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *