டாக்டர் ராமதாசிடம் நிறப்பிரிகை நேர்காணல்

(1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறப்பிரிகை இதழில் வெளிவந்தது)

நாள் : 15.11.1991 வெள்ளி மாலை 6 மணி.
இடம் : டாக்டர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனை, திண்டிவனம்.
பங்கேற்பு : நிறப்பிரிகை ஆசிரியர் குழு(அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி)வைத் தவிர தோழர் பா.கல்யாணி.

குறித்த நேரத்திற்கு டாக்டர் ராமதாஸ் காத்திருந்தார். நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த நிறப்பிரிகை இதழ்களைப் படித்திருந்தது பேச்சில் வெளிப்பட்டது. கத்தர், காகர்லிட்ஸ்கி பேட்டிகளும், சாதி ஒழிப்புக் கட்டுரையும் அவரைக் கவர்ந்திருந்தன. சுமார் ஒன்றரை மணி நேரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அரசியல்வாதிகளுக்குரிய குயுக்தி, தந்திரம், சாதுரியம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகப் பதில்கள் வந்தன. இடையில் இரண்டு நோயாளிகள் வந்தனர். பெயரச்சிடப்படாத வெள்ளைத் தாள்களில் மருந்துகள் எழுதினார். ஒரு சிறுவன் மருந்துச் சீட்டைக் கொடுத்து – அம்மாவுக்கு குணமாகவில்லை வேறு மருந்து வேண்டுமென்றான். சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு – ஒரு தடவை மட்டும் சாப்பிட்டிருப்பாங்க, இன்னும் இரண்டு வேளை சாப்பிட்டு விட்டு வரச் சொல் – என்றார். பேட்டி தொடங்கியது.

கேள்வி:
ஓட்டுக் கட்சிகளில் பா.ம.க. மட்டுமே பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாத கட்சி என அறிகிறோம். இன்று தமிழகத்தில் ‘பார்ப்பன மறுமலர்ச்சி’ என்று சொல்லத்தக்க நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் செலவில் வேதாகமக் கல்லூரி தொடங்கப்பட இருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இருபது சத இட ஒதுக்கீட்டிற்காக வன்மையான போராட்டம் நடத்தியது போல இப்போதும் நடத்துகிற திட்டம் ஏதுமுண்டா?

பதில்:
பார்ப்பனர்களை நாங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை. வருணாசிரமம் அவர்களால்தான் உருவாக்கப்பட்டு கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. இதுவே இன்றைய சாதீய உறவுகளுக்குக் காரணமாக இருப்பதால் தான் இந்த முடிவு.

வேதாகமக் கல்லூரி, கோயில்களுக்கு நிதி திரட்டுவது முதலியன பார்ப்பனியத்தை வளர்க்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள். பாரதீய ஜனதா கட்சியின் புரிதலுடன் ஜெயலலிதா செயல்படுகிறார். சங்கர மடத்தின் அறிவுரைகளும் பின்னணியில் உள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்ன விசயங்கள், மக்களைப் பாதிக்கிற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருப்பதை பாரதீய ஜனதா, காங்கிரஸ், பார்ப்பனர்கள் தவிர மற்ற எல்லோருமே எதிர்க்கிறார்கள். ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளுக்குள் நாங்கள் வித்தியாசமான கொள்கையுடையவர்கள். இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இதன் ஆபத்துக்களை விளக்கி அறிக்கைகள் முதலியவற்றை பா.ம.க. இளைஞர்களுக்கு வினியோகிக்கிறோம். மாவட்ட அளவில் இளைஞர் அணி, மாதர் அணி போன்றவற்றைக் கூட்டி விளக்குகிறோம். ஒட்டுமொத்தமான ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தப் பிரச்சார வேலையில் இறங்கியுள்ளோம்.

பஸ் கட்டண உயர்வு மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களுக்குத் தொடர்ந்து பல பிரச்சினைகள். எதற்கு உடனடி முக்கியத்துவமளிப்பது என்பதைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. போராட்டம் ஒரு மாதத்தில் முடிகிற காரியமல்ல. போராட்டம், பின் விளைவுகள், பாதிப்புகள் எல்லாவற்றையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். பின்னர் வேதாகமக் கல்லூரி ஆரம்பிக்கும்போது பெரிய போராட்டம் ஒன்றைத் தொடங்குவோம்.

கேள்வி:
தி.மு.க. மேற்கொண்டிருக்கும் ‘திராவிட மறுமலர்ச்சி’ நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:
திராவிட மறுமலர்ச்சி என்கிற பெயரில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் எனப் பேசி லாபமடைந்தவர்கள் ஒரு சில சாதியினர் தான். ஒட்டுமொத்தமான திராவிட சமுதாயமல்ல. பார்ப்பனரல்லாதவர் எனப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்தப் பலனும் அடையவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார நிலையிலும், சமுதாய நிலையிலும் முன்னேறியிருந்த ஒரு சில சாதியினர் தான் பலன் பெற்றுள்ளனர். இட ஒதுக்கீடு, கல்வி, அரசு வேலை எதுவாக இருந்தாலும் அவர்கள் தான். எனவே இன்று திராவிட மறுமலர்ச்சி என்று அவர்கள் பேசும்போது ஓட்டுப் பொறுக்குவதற்காகத்தான் இந்த வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

இது பற்றிய வெளிப்படையான விவாதத்திற்கு அவர்கள் தயாராக இருந்ததில்லை. பல முறை நான் இதனைப் பகிரங்கமாகப் பேசி இருக்கிறேன். தி.க. மாநாடுகளிலே கூடப் பேசி இருக்கின்றேன். அப்போதெல்லாம் பதில் சோல்லி என்னைப் பெரிய மனிதனாக்க வேண்டாம் என்றெல்லாம் கேலி பேசினார்கள். சில வருடங்களுக்கு என்னை அவர்கள் மாநாடுகளுக்கு கூப்பிடாமல் கூட இருந்தார்கள்.

கேள்வி:
இன்றைய தேர்தல் அரசியலில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாடே ஆதரவாக இருந்தது. இன்று ஈழத் தமிழர்களுக்கெதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கெதிராக மக்கள் எழுச்சி ஏற்படாததில் பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. மக்கள் தொடர்புச் சாதனங்கள் முழுமையாக பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கிறது. பா.ம.க. பற்றி எழுதும்போது கூட ஒவ்வொரு முறையும் “An outfit of Vanniyar Sangam” என்று எழுதத் தயங்குவதில்லை. இவற்றை நீங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டதுண்டா? இதனை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பதில்:
பத்திரிகைகள் பார்ப்பனர்கள் கையிலிருக்கிறது. மேலும் சில பத்திரிகைகள் பிற்படுத்தப்பட்ட – நாடார்களின் கையில் இருந்தாலும் அவையும் வியாபார நோக்கில் மக்களுக்கு எதிராக இருக்கிறது. இவர்கள் ஈழ மக்களுக்கெதிராக, புலிகளுக்கெதிராக, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக நாங்கள் – பல குறைகள் இருந்தாலும் கடந்த – மூன்றாண்டு காலமாக தினசரி ரூ.2,000/- நஷ்டத்தில் தினப்புரட்சி” நடத்துகிறோம். ஆட்சியாளர்கள்-ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ் என யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்கிறோம். இதனால் எங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடையாது. ஒரு ஐம்பது வன்னியர்கள் ஆளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் போட்டுத் தொடங்கிய நிறுவனம் இது. இதில் முழுக்க ஒரு பண்பாட்டுப் புரட்சியை, சமூக மாற்றத்தை உள்ளடக்கும் நோக்கில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அறிவு ஜீவிகள், அறிஞர்கள் இதனை ஒரு சாதிப் பத்திரிகையாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் இதனைத் தங்களது பத்திரிகையாக ஆக்கிக் கொள்ளலாம். எந்த விமர்சனமும் செய்யலாம். குறைகளை நீக்க வழி செய்வோம். வியாபார-பார்ப்பனப் பத்திரிகைகளுக்கெதிராக வெகுமக்கள் பத்திரிகையாக இதனை ஆக்கிக் கொள்ளலாம். அல்லது இந்த நோக்கில் வேறு யாரேனும் பத்திரிகை தொடங்கினால் அதையும் வரவேற்கிறோம். தேவையான ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ் மக்களின் எதிரியே இந்த பார்ப்பன-வியாபாரப் பத்திரிகைகள்தான். நம் முன்னர் இருக்கும் உடனடிப் பிரச்சினை இதுதான். டி.வி., ரேடியோவும் வெகு மக்களுக்கு எதிரானதுதான் என்றாலும், அரசதிகாரத்தைக் கைப்பற்றாமல் அதை நாம் உடனடியாக மாற்ற முடியாது.

கேள்வி:
மாற்றுப் பத்திரிகை என்பது ஒரு தீர்வுதான். இந்தச் சூழலிலேயே மக்களுக்கெதிராக அவதூறுகள் பரப்புகிற பத்திரிகைகளில் தலையிடுவதும் ஒரு தீர்வாக அமையலாமே. இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இப்படி நடந்ததே. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டவுடன் நிலைமை சற்று மாற்றமடைந்ததே! அருண்சோரி போன்றோர் நீக்கப்பட்டதற்குக் கூட இது ஒரு காரணமில்லையா?

பதில்:
உண்மைதான். இவ்வாறு அவதூறுகள் பரப்பப்படும்போது டி.வி., ரேடியோ, பத்திரிகைகள் முன் உடனடியாகக் கூடிப் போராடலாம். ஓட்டுப் பொறுக்காத கட்சிகள் தனித்தனியாகவும், சேர்ந்தும் குரல் கொடுக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து: ஒரு சிறிய அளவிலாவது வன்முறையுடன் கூடிய பாடம் கற்பித்தாலொழிய – பாதிப்புகளை உருவாக்கினாலொழிய இது சரியாகாது. பார்ப்பனர்களே முழுக்க முழுக்கத் தொலைக்காட்சி-ரேடியோவை ஆக்கிரமித்துள்ள நிலை மாறி தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் பெரிய அளவில் பங்குபெறும் போது அங்கும் நிலைமை ஓரளவு சீரடையலாம். “தினமலர்” போன்ற மக்கள் விரோதப் பத்திரிகைகளை வாங்கக் கூடாது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செவதும் பயனளிக்கும்.

கேள்வி:
பொதுவான மக்கள் மத்தியிலும் கூட பா.ம.க. என்பது வன்னியர் கட்சி என்கிற எண்ணமே நிலவுகிறது. புவியியல் ரீதியாகவும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பா.ம.க. இருக்கிறது. இந்நிலை மாற என்ன செய்கிறீர்கள்? பொதுவான தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியாக இதனை உருவாக்குவது எப்படி?

பதில்:
இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. சமீபத்திய பஸ் மறியல் போராட்டத்தில் பாளையங்கோட்டைச் சிறையில் 400 பேரும், மதுரையில் 1200 பேரும் அடைபட்டிருந்தனர். கோவை, குமரி மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. நாங்கள் வளரக் கூடாது என அரசு எந்திரமும், ஊழல் பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை வன்னியர் கட்சி, படையாச்சி கட்சி எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். நல்ல முற்போக்குச் சிந்தனையுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கட்சி வளரக் கூடாது என்கிற கருத்து இந்தச் சக்திகளிடம் உள்ளது. இதை விட நல்ல சிந்தனையுள்ள ஒரு கட்சி இருந்தால் நான் அதில் சேர்ந்து விடத் தயார். தனி நபர் வழிபாடு உருவாகாமல் தடுக்கவும் முயற்சிக்கிறோம்.

போஸ்டரில் என் படம் பெரிதாய்ப் போடுவதைக் குறைக்கச் சொல்கிறோம். தினப்புரட்சியில் என் படம் தலைப்பில் போட வேண்டும் எனச் சொன்ன போது, கடுமையாகப் போராடி அதனை மாற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படம் போட வைத்தோம். தனி நபர் வழிபாட்டைக் குறைக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறோம். பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். சமுதாயம் தெளிவு பெற்றால் இந்நிலைமை மாறும். கட்சி கார்டில் கூட என் படம் இல்லை.

கட்சியின் கொள்கையில் ஓட்டு வாங்குவது கடைசிக் குறிக்கோள் தான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சமுதாய மாற்றத்தை உருவாக்குவதே நோக்கம். தேர்தல் சமயத்தில் கூட இதனால்தான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் விலகி நின்றோம்.

கேள்வி:
“தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவோம்” என அறிவித்த ஒரே கட்சியாக இருந்த போதிலும் கூட, தமிழகமெங்கிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பா.ம.க. மீது ஒரு ஐயம் இருக்கவே செய்கிறது. இதனை எவ்வாறு போக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறப் போகிறீர்கள்?

பதில்:
முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் எங்கள் போஸ்டர் ஒட்டினால் கிழிப்பார்கள். இப்போது நிலைமை மாறி வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் கொள்கையிலான கட்சியாக பா.ம.க.வை முன் வைக்கிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள் இவர்களுக்குள் மோதல் கூடாது. இம்மக்களுள் அரசு ஊழியர்கள், படித்த இளைஞர்கள் போன்றோர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஓட்டு வாங்கத்தான் இப்படிச் சோல்கிறோம் என்கிற பயம் தேர்தல் நேரத்தில் இருந்திருக்கலாம். திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலமே முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும். ஷெட்யூல்டு இன மக்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சுய நலமில்லாத அரசியல் ரீதியான தலைவர்கள் யாருமே இல்லை. இப்போதுள்ள தலைவர்களின் பிடியிலிருந்து என்றைக்கு விடுபடுகிறார்களோ சமூக மாற்றமும், அரசியல் மாற்றமும் அப்போதுதான் பிறக்க வழி ஏற்படும். இந்த அரசியல் தலைவர்களின் பிடியிலிருந்து விடுபட்டால் வெகு சீக்கிரமே பா.ம.க. அம்மக்களைப் புரிய வைத்து ஒரு பெரிய வலுவான அரசியல் இயக்கமாக ஆக முடியும். விரைவில் பா.ம.க.வை நம்பி ஷெட்யூல்டு இன மக்கள் நிச்சயம் வருவார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பா.ம.க. சில திட்டங்களை அறிவித்துள்ளது. பறையடித்தல், பிணம் சுடுதல், செத்த மாடு புதைத்தல் போன்றவற்றை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் எனவும், பொதுக்குளம், பொதுக்கிணறு ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், மறைமுகமான தீண்டாமைக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்து செயல்படுத்துகிறோம். பா.ம.க.வால் மட்டுமே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியும். வெகு மக்களாக உள்ள ஷெட்யூல்டு இன, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தச் சமூக மாற்றத்தை விரும்பி ஏற்கும்போது வேறு எந்தச் சக்தியும் குறுக்கே வந்து நிற்க முடியாது.

பா.ம.க. என்றால் வன்னியர் கட்சி எனத் தாழ்த்தப்பட்ட மக்கள் நினைப்பது ஒரு புறம். இன்னொரு பக்கம் இந்தப் பிரச்சினை குறித்து சமூகப் பிரக்ஞையுள்ள கம்யூனிஸ்ட், தி.க. கட்சிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே வன்னியர்/ஆதி திராவிடர், தெற்கே முக்குலத்தோர்/பள்ளர், கோவையில் கொங்கு வேளாளர்/அருந்ததியர் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் ஓட்டுப் பொறுக்காத பொதுவான அமைப்புகள் கருத்தரங்கம், மாநாடு நடத்தினால் அங்கெல்லாம் பா.ம.க. துணை நிற்கும்.

கேள்வி:
இம்முடிவுகளை அணிகள் மத்தியில் கொண்டுபோகும் போது உங்கள் அனுபவம் எப்படி? தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தமட்டில் தீண்டாமைக் கொடுமையே தலையான பிரச்சினை. இதற்கெதிரான போராட்டங்கள் ஏதும் எடுத்துள்ளீர்களா? பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட அணியினர் மத்தியில் இருக்கும் உயர்சாதி மனப்பான் மையைத் துடைத்தெறிய என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:
கிராம அளவில் இப்பிரச்சினைகள் பேசப்படும் அளவிற்குப் பதிய வைத்துள்ளோம். கூட்டங்களில் நானே மாடு புதைப்பேன் எனப் பேசியது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் பறை அடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களே தங்களது வருமானம் பாதிக்கப்படுகிறது எனத் தானாகவே முன்வரும்போதுதான் ஏதும் செய முடிவதில்லை. இழிவு என்பதனால் அதைச் செய்யவே வேண்டாம் எனச் சொல்கிறோம். செயல் வடிவத்தில் முழுமையாக வரா விட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். தாழ்த்தப்படவர்களுக்குக் குடியிருப்பு ஊர் நடுவில் கட்ட வேண்டுமென்கிறது எங்கள் தேர்தல் அறிக்கை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்தக் கருத்தைத் திரித்து எல்லா இடங்களிலும் பேசித் திரிந்தது தி.க., தி.மு.க.வினர்தான். “டாக்டர் பாரு, பறையனையெல்லாம் நடுவில் வைக்க வேண்டுமென்கிறார்” என ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க.வினர் பேசினர். இதன் விளைவாக ஒரு அரை சதவீதம் ஓட்டுக்கள் எங்களுக்குக் குறைந்தது என்றாலும், இது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. கட்சிப் பொறுப்புகளில் கூட எங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் முன் வருகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம். பிற கட்சிகளில் இந்நிலைமை இல்லை. தாழ்த்தப்பட்டவர் அணி எனத் தனியாக வைத்து அதில் பொறுப்புத் தருவார்களே யொழிய பொதுப் பொறுப்புகளைத் தருவதில்லை. எங்கள் கட்சியில் பொதுச் செயலாளரே தாழ்த்தப்பட்டவர். செங்கை மாவட்டத்தில் தலைவர், தஞ்சையில் தலைவர், நாகை மாவட்டத்தில் செயலாளர் இவர்களெல்லாம் ஆதி திராவிடர்கள்தான். எங்கள் கட்சியின் மூதறிஞர் அணித் தலைவர் மணியரசு நாராயணசாமி அவர்களும் ஒரு ஆதி திராவிடர்தான்.

கேள்வி:
தீண்டாமைக் கொடுமை என்பது கலாச்சார ரீதியாக வெளிப்படுவது. இதனை எதிர்த்த நடவடிக்கைகள் கலாச்சாரத் தளத்திலும் நடைபெற வேண்டும். அத்தகைய திட்டங்கள் ஏதும் உண்டா? மஞ்சள் துண்டணிவது, அக்னித் திருவிழாக்கள் நடத்துவதென்பதெல்லாம் பா.ம.க.வினரால் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் பொருளென்ன? தாழ்த்தப்பட்டோரின் பண்பாட்டு அடையாளம் எதையும் பொதுக் குறியீடாக மாற்றும் திட்டமுண்டா?

பதில்:
குறிப்பிட்ட வடிவம் ஏதும் கிடைத்தால் செய்வதில் தடையில்லை. கட்சிக் கொடியில் மஞ்சள் சிவப்புடன் நீலமும் இருக்க வேண்டும் என்கிற கருத்து வந்தபோது உடனடியாக ஏற்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ‘டீ க்ளாஸ்’ வைக்கும் பழக்கம் உள்ளதைக் கேள்விப்பட்டு அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். மீன் சுருட்டியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டீ குடித்து அந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தனி டீ கிளாஸ் பழக்கம் எங்காவது இருந்தால் அங்கு நானே வந்து போராடுவேன் எனப் பேசியதைத் தொடர்ந்து பல ஊர்களில் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டது. கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்கும் போது கூட பொதுக்கிணற்றில் நீர் எடுப்பது, கோயில்களில் சம மரியாதை போன்ற செயல் திட்டங்களுடன் இணைந்த கூட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துப் போறேன்.

அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை தமிழக அரசு சரியாகக் கொண்டாடவில்லை. நாங்கள் சிறப்பாகக் கொண்டாடினோம். சுமார் பத்து இடங்களில் அம்பேத்கருக்குச் சிலைகள் திறந்துள்ளோம். இது இளைஞர்கள் மத்தியில் மனமாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் பதட்டம் குறைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பையன்கள் வன்னியப் பெண்களைக் காதலிப்பது போன்ற விஷயங்கள் இப்போது அதிகம் பெரிதுபடுத்தப்படுவதில்லை. பெரும் தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களானாலும் இதுவரை செய்யப்பட்டுள்ளவை ரொம்பக் குறைவுதான். இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. பா.ம.க. ஒரு அரசியல் கட்சியாகவும் இருப்பதால் இத்தகைய பிரச்சினைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியவில்லை. மக்களைப் பாதிக்கிற இதர பிரச்சினைகளும் வந்து விடுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தபு இயக்கங்கள் எதுவும் இப்படியான பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டங்களுக்காக எங்களை அணுகியதில்லை.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
கட்சியில் பல்வேறு வெகுஜன அணிகள் வைத்திருக்கிறீர்கள். தீண்டாமை ஒழிப்பு அணி என்று ஒன்று தனியாக அமைக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் தலைமையில் அது இயங்கலாம். தீண்டாமைப் பிரச்சினைகளை மட்டுமே அது கவனத்தில் எடுத்துச் செயல்படலாம்.

பதில்:
ரொம்ப அருமையான கருத்து. இதுவரை யாரும் சொன்னதில்லை. இதை உடனடியாக நிறைவேற்றுவோம். சாதி ஒழிப்புக் கூட்டு விவாதத்தில் உங்கள் வீட்டில் மாட்டுக்கறி விருந்தளித்ததாகப் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நாங்களும் இப்படிச் செய்வோம். நான் கூட கூட்டங்களில் பேசுவதுண்டு – உங்களில் பாதிப் பேர் பன்றிக் கறி சாப்பிடுகிறீர்கள். பன்றியாவது மலம் தின்கிறது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறி சாப்பிடுங்கள் – என்பேன்.

கேள்வி:
அரசில் குறுக்கிட்டு ஸ்தம்பிக்கச் செய்வது என்கிற போராட்ட வடிவத்தை எங்கிருந்து முன்மாதிரியாகப் பெற்றீர்கள்?

பதில்:
முன்மாதிரி என்று எதையும் பார்க்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். ரொம்பவும் நியாயமான கோரிக்கை என்பதால் மக்கள் பெருமளவில் முன்வந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நாங்கள் பங்கு கோருகிறோம் என்கிற தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு 22 சதம் வன்னியர்களுக்கு 20 சதம் எனப் போராடினோம்.

கேள்வி:
ஈழ மக்களுக்கெதிராக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெதிராக ஓட்டுக் கட்சிகளில் ஓரளவு குரல் கொடுத்தது பா.ம.க.தான். இன்னும் வன்மையாக நீங்கள் குரல் கொடுத்திருக்க முடியும். அதன் மூலம் திராவிட இயக்கங்களைத் தோலுரித்து ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்க முடியும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள் என்றே கருதுகிறோம்.

பதில்:
ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினேன். ஆதரவாக நின்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்தபோது அதனையும் கண்டித்தோம். ராமகிருஷ்ணன் முதலியோரை சிறையில் சென்று பார்த்தேன். இதர சிறிய அமைப்புகளுடன் சேர்ந்து சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். தொடர்ந்து இதனைச் செய்வோம். இதில் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கட்சியைத் தடை செய்தாலும் சரி.

கேள்வி:
தாராளவாதம் என்கிற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு இந்தியா அடிமையாகி வருகிறது. இவற்றின் விளைவாக கல்வி, மருத்துவம் என்பதெல்லாம் கூட இன்று வணிகமயமாகி வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. பா.ம.க. இவை பற்றி எல்லாம் பேசுவதாகத் தெரியவில்லையே?

பதில்:
மன்மோகன் சிங் வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இது குறித்தும் சர்வதேச நிலைமைகள் குறித்தும் நிர்வாகக் குழுவில் பேசுகிறோம். மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

கேள்வி:
மக்களே Local Power, அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது இன்று அண்டை மாநிலங்களிலெல்லாம் நடைமுறையாகி வருகிறது. உங்கள் கருத்தென்ன?

பதில்:
Local Power – ஐ மக்களே கையிலெடுத்துக் கொள்வதுதான் சரியான தீர்வு என்பதே என் தனிப்பட்ட கருத்து. மக்கள் கண்காணிப்பு அணிகளை ஆங்காங்கு உருவாக்கிச் செயல்படுத்துவது அவசியம்.

கேள்வி:
சனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன் நமது அமைப்புக்களை நாம் சனநாயகப்படுத்த வேண்டும். பா.ம.க.வில் அத்தகைய திட்டம் ஏதும் உண்டா?

பதில்:
இன்னும் இரண்டு மாதங்களில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தேர்தல்கள் நடத்த இருக்கிறோம். சில மாவட்டங்களில் அமைப்பு கட்ட வேண்டியுள்ளதும், சிவில் தேர்தல்கள் இடையில் அறிவிக்கப்பட்டதும் தான் தாமதத்திற்குக் காரணம்.

கேள்வி:
கல்விப் பிரச்சினைகளில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பா.மக.வின் கல்விக் கொள்கை என்ன?

பதில்:
கல்வியைப் பொறுத்த மட்டில் இதோ இருக்கிறாரே (கல்யாணியைச் சுட்டிக்காட்டி) இவர் சொல்வதுதான். மக்கள் கல்வி இயக்கத்தின் கொள்கையை முழுவதுமாக ஏற்கிறோம். இன்றைய கல்வி முறை கிராமப்புற மக்களைப் பொறுத்தமட்டில் ஆடு, மாடு மேய்க்கத்தான் பயன்படும். தமிழ்வழிக் கல்வி முதலியவற்றுக்காகப் போராடுவதற்கு முன்னுரிமை அளிப்போம்.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
புதிய தீவிர வடிவங்கள் தேவை என்பது ஒரு புறம். இப்போது இருக்கும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு இயல்பாயுள்ள போர்க்குணத்தை – Militancyயையும் அல்லவா குறைத்து விடுகின்றன. நிறப்பிரிகை 600 பிரதிகளே அச்சிடப்பட்டாலும் சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடியவர்கள் மத்தியில் செல்லும் ஒரு இதழ். இதன் மூலம் நீங்கள் எதையேனும் சொல்லலாம்.

பதில்:
பா.ம.க. பற்றிய குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். விமர்சனங்களை எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். திருத்திக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். தினப்புரட்சி நமது பத்திரிகை. அதில் எல்லோரும் எழுதலாம். நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

(நிறப்பிரிகை, பிப்ரவரி 4, 1992)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *