அத்வானி அடிக்கல் நாட்டி பாக் அரசு திருப்பணி செய்த இந்துக் கோவில்

(பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு குறித்து இடப்பட்ட ஆதாரபூர்வமான பதிவொன்றைக் கண்டு, அதை மறுக்க இயலாத சிலர் பாகிஸ்தான் வெறுப்பை உமிழ்ந்தனர். இது குறித்து நான் இரு பதிவுகளை இட்டேன். அதைக் கண்ட சில நண்பர்கள் பாக் புதுப்பித்த இந்துக் கோவில்களின் கதையைச் சொல்லுமாறு கேட்டனர். அந்த விவரங்களைக் கீழே தந்துள்ளேன். பின்னணியை விளங்கிக் கொள்ள என் முந்தைய இரு பதிவுகளும் முன்னுரையாகத் தரப்பட்டுள்ளன.)

முன் பதிவு 1: பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சுமார் நான்காண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய கட்டுரையிl அது எவ்வாறு பாகிஸ்தானில் செயல்படுத்தப்பட்டது என்பதையும், அங்கு சிறுபான்மையினருக்கு seperate electorate கொடுக்கப்பட்டு, பின் அங்குள்ள கிறிதஸ்வச் சிறுபான்மையினர் அது தமக்குத் தேவை இல்லை என அவ் உரிமையைத் திருப்பி அளித்து விட்டதையும் எழுதியுள்ளேன். முடிந்தால் மேலதிக விவரங்களுடன் அதைத் திரும்பிப் பதிவிட முயல்கிறேன். பாகிஸ்தானில் ஒற்றை அதிகார மையம் இல்லை என்பதும், தீவிரவாதமும், இஸ்லாமிய அடிப்படிவாதமும் அந்த நாட்டைச் சீரழித்துக் கொண்டுள்ளன என்பதும் உண்மை. ஒரு காலத்தில் அரசும் இராணுவமுமே இதற்கெல்லாம் ஆதரவாக இருந்தபோதும், இப்போது பாக் அரசுக்கே அது பெரும் தலைவலியாக இருப்பதுதான் எதார்த்தம்.சென்ற ஆண்டில் எல்லை ஓரத்தில் இந்திய இராணுவ வீரர்கள் சிலர் கொல்லப்பட்டு, அவர்கள் உடல்கள் சிதைக்கப்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, அது இராணுவம் அல்லாதவர்களின் செயலாகவும் இருக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம் எனச் சொன்னபோது இந்துத்துவ வெறியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஆனால் அந்தோனியின் கூற்று மிகவும் நிதானமான ஒன்று. பாக்கில் இன்று குறைந்த பட்சம் மூன்று அதிகார மையங்கள் செயல்படுகின்றன. அரசதிகாரம், தன்னிச்சையாக இயங்கக்கூடிய இராணுவ அதிகாரம், அடிப்படைவாதிகளின் அதிகாரம். இந்த நிலை நீடித்தால் விரைவில் பாக் ஒரு failed state என்கிற நிலையை எட்டலாம் என்பது உண்மை.

முன்பதிவு 2: ஆனால் ஒன்றை நாம் மனங்கொள்ள வேண்டும். இப்படியான சூழல் இந்தியாவில் சில பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும், பாக். சிறுபான்மையினர் மீது அவ்வப்போது நடக்கும் சில வன்முறைகளுக்கும் காரணமாவது போலவே பாக்கில் முஸ்லிம் குடிமக்கள் மீதே உள்நாட்டு வன்முறைகளுக்கும் காரணமாகின்றது, இந்த வகையில் இது பாகிஸ்தான் அரசுக்கும் பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனால் இந்தக் காரணங்களுக்காகவே அங்கு எல்லாமே சீரழிந்துள்ளதாகவும்,ஒவ்வொரு பாகிஸ்தானியும் இந்திய வெறுப்புடன் வாழ்வதாகவும் நினைப்பதும், அந்த வகையில் ஒவ்வொரு பாகிஸ்தானியையும் நமக்கு எதிரியாகவும் நினைப்பதை விட அறிவு கெட்டத்தனம் அல்லது வன்ம வெறுப்பு மனோ நிலை வேறெதுவுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் வில்லியம் டார்லிம்பில், பாக் சென்று வந்து கட்டுரை ஒன்றை அவுட்லுக் இதழில் எழுதி இருந்தார். அதை வாசித்தால் பாக்கின் இன்னொரு பக்கத்தை நாம் விளங்கிக் கொள்ளலாம். அடிப்படை வசதிகள்,நயத்தக்க நாகரீகங்கள் உள்ள நாடுதான் பாகிஸ்தான் என்பதும், பாக் மக்கள் அப்படி ஒன்றும் இந்து மதத்திற்கோ, இந்தியர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல என்பதும் நிறைய வாசிக்கையில்தான் விளங்கும். பாக் மீதும் அம்மக்கள் மீதும் வெறுப்பைக் கொட்டி எழுதியிருக்கும் இரு பின்னூட்டங்களும் ஒன்றைத்தான் நினைவூட்டுகின்றன. அறியாமையும், வெறுப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதுதான் அது.

ஒன்றை மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன். பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கியவர் அத்வானி. 2005ம் ஆண்டில், பாகிஸ்தானில் உள்ள சக்வால் மாவட்டத்தில் இடிந்து கிடந்த இந்துக் கோவில் ஒன்றின் புனித தீர்த்தம் ஒன்று சீரமைக்கப்படுவதற்கும், அருகிலுள்ள ஏழு இந்துக் கோவிகளில் விக்ரகங்கள் புதிதாய் நாட்டப்படுவதற்குமான அடிக்கல் நாட்டு விழாவும் நடத்தப்பட்டதன. அதற்கு விருந்தாளியாகவும் தலைமை தாங்கவும் அழைக்கப்பட்டிருந்தவர் யார் தெரியுமா? பாபர் மசூதி இடிப்பிற்குத் தலைமை தாங்கிய அதே லால் கிருஷ்ண அத்வானிதான். ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் இது இந்தியாவில் சாத்தியமா?

சற்று விவரமாக இந்துக் கோவில் அங்கு புனருத்தாரணம் செய்யப்பட்ட கதையைச் சொல்கிறேன்.

2005ல் அத்வானி பாகிஸ்தான் சென்றபோது, பஞ்சாப் மாநிலம் சட்வால் மாவட்டத்தில் உள்ள கடஸ்ராஜ் கோவிலைப் புதுப்பிப்பதற்கான அடிக்கல்லை நாட்டி வந்தார். அப்போது அவருடன் கூடச் சென்றவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Q) கட்சித் தலைவர் ஷுஜாத் ஹுசேன். அது ஒரு சிவன் கோவில். அதை ஒட்டியுள்ள புனித கோவிற் குளம் தன் மனைவியின் இழப்பை ஒட்டிச் சிவன் உதிர்த்த கண்னீர்த் துளிகளால் உருவானது என்பது நம்பிக்கை. ஏழு சிறு கோவில்கள் அங்கு உண்டு.

தான் அடிக்கல் நாட்டிய அனுபவம் குறித்து அப்போது அத்வானி கூறியது: “உண்மையில் இது எனக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம். உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை கடஸ்ராஜிலுள்ள இந்துக் கோவில்கள். இவற்றைப் புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட என்னை அழைத்ததை இந்திய மக்களுக்கே அளிக்கப்பட்ட ஒரு கவரவத்தின் குறியீடாகவே கருதுகிறேன்.” இதை ஒட்டி பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாநிலத் தொல்லியல் துறை, பொது நலப் பணித்துறை முதலியன இப்பணி நோக்கி முடுக்கிவிடப்பட்டன.

சீரமைப்பு வேலையை விரைவுபடுத்தக் கோரி அத்வானி சென்ற 2008 டிசம்பரில் ஹுசேனைத் தொலை பேசியில் அழைத்துச் சொன்னார். “நீங்கள் சுட்டிக் காட்டிய விஷயத்தை நான் மிக்க கரிசனத்துடன் கவனத்தில் எடுத்துக் கொண்டேன், சக்வாலில் உள்ள இதற்குரிய அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தற்போது வேலைகள் எந்த நிலையில் உள்ளன என விசாரித்தேன். தீவிர அர்ப்பணிப்புடன் அப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எனக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என பாக் முஸ்லிம் லீக் தலைவர் ஷுஜாத் ஹுசேன் உடன் பதில் எழுதினார் (“Pak Temple Renovation on, Advani Told”, Express News Service, New Delhi, Dec 11, 2008).

கடஸ்ராஜ் கோவில்களும் ஶ்ரீ அமர்குண்ட் எனப்படும் புனித தீர்த்தமும் சுற்றுச் சூழல் கேடுகளால் சீரழிந்த வருவது குறித்து ‘டான்’ உள்ளிட்ட பாகிஸ்தான் நாளிதழ்கள் தொடர்ந்து எழுதி வந்தன. அருகிலுள்ள தொழிற்சாலைகள் நீரை உறிஞ்சி விடுவதால் அமர் குண்ட் வற்றி வருவதை அவை சுட்டிக்காட்டின. அப்படி ஒரு செய்தியைப் படித்த பாக் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அவர்கள் சென்ற 2012 மேயில் உரிய அதிகாரிகளை அழைத்து, புதுப்பிக்கும் பணியை “அறிவியல் நுட்பங்களுடன்” விரைந்து முடிக்குமாறு ஆணையிட்டார் (“Preserve Katasraj Temple : Zardari”, The Hindu, May 7, 2012).

சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறைச் செயலரும், கடஸ்ராஜ் கோவிற் புனரமைப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான சயீத் இக்பால் வஹ்லா, “போர்க்காலத் துரிதத்துடன் பஞ்சாப் அரசு இப்பணியை நிறைவேற்றி வருகிறது” என அறிவித்தார். “இந்த நாட்டின் சம குடி மக்களான சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பஞ்சாப் அரசுக்கு உண்டு” எனவும் அவர் கூறினார்.

நவம்பர் 5,2012 அன்று நடைபெற்ற விழாவில்115 இந்துக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஶ்ரீ அமர் குண்ட் வண்னப்பூக்கள் மிதக்கப் பேரழகுடன் காட்சி அளித்தது. “திருக்குளத்தைப் புதுப்பிப்பதற்காக பஞ்சாப் அரசு 60.92 கோடி ரூபாய்களைச் செலவிட்டுள்ளது. கோவிற் திருப்பணிக்காக மத்திய அரசு மேலும் 2 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. யாத்ரீகர்கள் தங்கிச் செல்ல விடுதி ஒன்றும் கட்டப்படும்” என வஹ்லா கூறினார் (“Pak Hindus Throng at Renovated Holy Pond”, One India, Nov 5, 2012).

ஹிந்து சுதர் சபாவின் பொதுச் செயலர் அசோக் சந்த் பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்தார். வந்திருந்த இந்துக்கள் கடஸ்ராஜில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தைத் தொழுது திரும்பினர்.

முஸ்லிம்களைப்போல கிறிஸ்தவர்கள் ஏன் அரசியல்மயப்பட இயலவில்லை?

(கத்தோலிக்கத் திருச்சபையினர் (ஜன 30) திருச்சியில் “அரசியல் களம் காணும் பொது நிலையினர்” என்கிற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள இரு நாள் கருத்தரங்கில் ஒரு அமர்வில் கருத்துரைத்தேன். விரிவான உரையின் இறுதியில் நான் சொன்னது இது.)

“இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இரண்டரை சதத்திற்கும் குறைவு. அவர்களும் தென் மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலுமே செறிந்துள்ளனர்.

தமிழகத்தில் சுமார் ஆறு சதம். முஸ்லிம்களைக்காட்டிலும் கிறிஸ்தவர்கள் சிறிது அதிகம். இரு சமூகங்களுமே இன்று வளர்ந்து வரும் வலதுசாரி பாசிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும், இயக்க ரீதியிலும் திரண்டுள்ள அளவிற்கு கிறிஸ்தவர்கள் திரளவில்லை.

முஸ்லிம்கள் அரசியல் ரீதியில் அணி திரண்டிருப்பதால் அவர்களுக்கு இன்று அரசியல் அரங்கில் அங்கீகாரம் உள்ளது, மரியாதை உள்ளது. கிறிஸ்தவர்களுக்கு அது இல்லை. முஸ்லிம்கள் தங்கள் மத அடையாளத்துடன் கூடிய கட்சிகளின் சார்பாகத் தேர்தலில் பங்கேற்கிறார்கள். தேர்தல் கூட்டணிகளில் பங்கு பெறுகின்றனர். பெரிய அரசியல் கட்சிகளுடன் போட்டியிடும் இடங்களின் எண்ணிக்கை குறித்துப் பேரம் பேசுகின்றனர். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இணைக்க வேண்டியதாக உள்ளது.

ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் அரங்கில் அந்த ஏற்பு இல்லை. காரணம் நீங்கள் அரசியல்மயப் (politicise) படவில்லை என்பதுதான்.

1938ல் சோலாபூரில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தங்கியிருந்த நேரத்தில் கிறிஸ்தவ மக்கள் ஒரு குழுமமாக வந்து அவரைச் சந்தித்துத் தங்களுக்கு அறிவுரை கோரி நின்றனர். அவருக்கு அண்ணல் சொன்ன அறிவுரை, “நீங்கள் அரசியல் மயப்பட வேண்டும்” என்பதே. “தலித்கள் நாங்கள் மாகாண சபையில் 15 உறுப்பினர்கள் உள்ளோம். ஆனால் கிறிஸ்தவர்கள் நீங்கள் ஒரு பிரதிநிதி கூட இல்லை.எங்கள் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அரசு விடுதிகள் உள்ளன. உங்களுக்கு அதெல்லாம் இல்லை. உங்களில் பலர் படித்துள்ளீர்கள். நல்ல வேலைகளில் உள்ளீர்கள். ஆனால் உங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்கள் அரசியலை அலட்சியம் செய்வதன் விளைவு இது” என்றார்.

(“Your society is educated. Hundreds of boys and girls are matric. These people have not agitated against this injustice unlike the uneducated untouchables. If any girl becomes a nurse or any boy becomes a teacher they are involved in their own affairs, they do not get involved in public affairs. Even clerks and officers are busy in their work, he ignores the social injustice. Your society is so much educated, how many are District judges or magistrates? I tell you, this is because of your neglect towards politics,because there in nobody to talk of and fight for your rights. …” )

அவர் சொன்னது இன்றும் பொருத்தமாக உள்ளது.

தமிழக முஸ்லிம்கள் இப்படி அரசியல் மயப்பட்டுள்ளபோது நீங்கள் ஏன் அரசியல்மயப்பட இயலாமல் உள்ளது?

எனக்குத் தோன்றுகிற சில காரணங்களை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன்.

1. கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாதிற்கும் வரலாற்று ரீதியாக ஒரு வேறுபாடு உண்டு. கிறிஸ்து அநீதிகளுக்கு எதிராக நின்றார், அதற்காக அவர் துன்பங்களை ஏற்றார். ‘என் தேவனே, என் தேவனே, என்னைக் கைவிட்டீரே’ என மனம் வெதும்பிச் சிலுவையில் மாண்டார். கிறிஸ்துவிற்குப் பின்னர் அடுத்த 300 ஆண்டுகள் கிறிஸ்தவம் தொடர்ந்து துன்புறுத்தப்பட்ட (persecuted) மதமாகத்தான் இருந்தது. ஆனால் இஸ்லாத்தின் வரலாறு வித்தியாசமானது. இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு இறை வாக்குகள் வரத் தொடங்கிய காலத்தில் அவரும் துன்புறுத்தப்பட்டார். அவர் மக்காவிலிருந்து புலம் பெயர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவர் விரைவில் அந்த நிலையை மாற்றியமைத்தார். அவரது எஞ்சிய காலம் வெற்றிகளில் கழிந்தது. அவருக்குப் பின் இஸ்லாம் ஏற்றத்தில் இருந்தது வெற்றிகளைக் குவித்தது. நபிகள் குறித்து ஆய்வு செய்வோர் அனைவரும் ஒன்றைச் சொல்வார்கள். அவர் ஒரு இறைத்தூதர் மட்டுமல்ல. ஒரு Statesmen கூட. ஒரு political poject ஒன்று இஸ்லாத்திற்கு உண்டு. அது இறப்பிற்குப் பிந்திய இறுதித் தீர்ப்பு என்பதோடு தன்னைநிறுத்திக் கொள்ளவில்லை. இந்த உலகிலேயே நீதியை நிலைநாட்டும் பொறுப்பையும் அது முன் வைத்தது. கிறிஸ்தவம் பின்னாளில் ஒரு விரிவாக்க மதமாக மாறியபோதிலும் அதன் உருவாக்கம் அப்படியாக இல்லை. அது மூன்றாம் உலக நாடுகளில் “விடுதலை இறையியலாக”(Liberation Theology) வடிவெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றது என்பதும் அதன் தொடக்க காலப் பாடுகளிலிருந்து பெற்ற உத்வேகந்தான். தமிழகத்திலும் கூட தலித் இயக்கங்களின் உருவாக்கத்தில் கத்தோலிக்க மதமும், சீர்திருத்தக் கிறிஸ்தவமும் ஆற்றிய பங்கை மறுக்க முடியாது. எனினும்கூட அது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலவில்லை.

2.தமிழகத்தில் முஸ்லிம்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. ஆம் கிறிஸ்தவர்கள் இல்லை. இங்கே கிறிஸ்தவ உடையார்கள் உண்டு; கிறிஸ்தவ வன்னியர்கள் உண்டு: கிறிஸ்தவப் பிள்ளைமார்கள் உண்டு; கிறிஸ்தவ நாடார்கள் உண்டு; கிறிஸ்தவ மீனவர்கள் உண்டு; கிறிஸ்தவ தலித்கள் உண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள் இல்லை. இதன் விளைவு முஸ்லிம்கள் “முஸ்லிம்” என்கிற அடையாளத்தில் இணைவது போல இங்கே கிறிஸ்தவர்கள் இணைய முடியவில்லை.

3.கிறிஸ்தவத் திருச்சபைகள் மிக வலுவான படிநிலைப்படுத்தப்பட்ட ஒரு கார்பொரேட் வடிவம் எடுத்துள்ளது. மத நிறுவனமே இங்கு கிறிஸ்தவ அடையாளத்தைப் பேணும், காப்பாற்றும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. “மேய்ப்பன் (ஆயர்) / ஆடுகள்” எனும் கிறிஸ்தவ மத உருவகம் ஒன்றே போதும் இந்நிலையை விளக்க. எனவே கிறிஸ்தவ மக்களின் நல்லது கெட்டதுகளை எதிர்கொள்வதற்கு திருச்சபை ஒன்றே போதும் என்கிற நிலை வந்து விடுகிறது. ஆனால் திருச்சபைகள், அவை ஒரு மத நிறுவனங்கள் என்கிற வகையில் பல்வேறு நிலைகளில் அரசுடன் சமரசம் மேற்கொள்ள வேண்டியதாகிவிடுகிறது. கூடங்குளம் இதற்கொரு நல்ல உதாரணம். இதன் விளைவு? கிறிதவப் பொது நிலையினரிடம் (laity) அரசியல் முனைப்பு (political initiative) இருப்பதில்லை.

முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது இங்கே கிறிஸ்தவர்கள் மத்தியில் அரசியல் முனைப்பு மழுங்கிக் காணப்படுவதன் பின்னணியாக எனக்குப் படுபவை இவை. மட்டற்ற மனித நேயமும், சேவை மனமும், விடுதலைப் போராட்டங்களில் அர்ப்பணிப்பும் காட்டும் கிறிஸ்தவம் தன்னளவில் தனக்கான ஒரு அரசியல் இயக்கமாக உருப்பெற இயலாத நிலை உள்ளதற்கு இவை முக்கிய காரணங்களாக உள்ளன.

கிறிஸ்துமஸ் தினம் கூட கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். பாதிரிமார்கள் உயிருடன் எரிக்கப்படக் கூடிய, கன்னியர்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்படக் கூடிய, கிறிஸ்தவ ஆலயங்கள் தீக்கிரையாக்கப்படக் கூடிய கால கட்டம் இது. தலித்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் நிலை, மதமாற்றத் தடைச் சட்டங்களின் ஊடாக மத உரிமைகள் பரிக்கப்படும் நிலை ஆகியவற்றிற்கு நமது அரசியல் சட்டத்திலேயே வழிவகுக்கப்பட்டுள்ள நிலை.

இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி முஸ்லிம்களைப் போல கிறிஸ்தவர்களும் அரசியல் மயப்பட வேண்டும். உங்கள் பிரச்சினைகளை இப்படி அறைக்குள் இருந்து கருத்தரங்குகள் நடத்திக் கொண்டிருப்பதன் மூலம் தீர்த்துவிட இயலாது. வீதியில் இறங்க வேண்டும். வீதிக்கு வரும்போது மட்டுமே உங்கள் பிரச்சினை ஊடக கவனம் பெறும். தொலைக் காட்சிகளில் விவாதப் பொருளாகும். அரசை உங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும். வலுவான அரசியல் கட்சியாக உருப்பெறுங்கள். சுயேச்சையாகச் செயல்படுங்கள். ஒவ்வொன்றிற்கும் திருச்சபையை நம்பியிராதீர்கள். உங்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்குங்கள். இடதுசாரிகள், பிற சிறுபான்மையினர், தலித்கள், மதச்சார்பற்ற கட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து நின்று பாசிசத்தை எதிர் கொள்ளுங்கள். இதைத் தவிர வேறு வழி இல்லை.

ரவிக்குமாரின் ஒரு பதிவும் பதிலும்

கீழே உள்ளது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தன் முகநூல் பக்கத்தில் செய்துள்ள பதிவும் அதற்கு இடப்பட்ட இரு பின்னூட்டங்களும். நண்பர் ஒருவர் இதை என் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார். எந்தப் பின்னணியில் இப் பின்னூட்டம் இடப்பட்டுள்ளது என்பது இவற்றை வாசித்தால் புரியும்.

ரவிக்குமாரின் பதிவு:

“தி இந்து நாளேட்டில் அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைக்கு நான் பதிவுசெய்திருக்கும் comment:

அ.மார்க்ஸ் பயன்படுத்தியிருக்கும் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்ற சொல் காந்தி பயன்படுத்திய ’ஹரிஜன்’ என்ற சொல்லைவிடவும் மோசமானது. தலித் என்பது பொருத்தமற்றது என அவர் கருதினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லிவிட்டுப் போகட்டும். Untouchable என்ற சொல்லுக்கு ’தீண்டாதார்’ என்ற மொழியாக்கம் தமிழில் உள்ளதென்பது பேராசிரியருக்குத் தெரியாதா? அல்லது தீண்டத்தக்கவர்கள் , தீண்டத் தகாதவர்கள் என்ற பாகுபாடுதான் அவருடைய நிலைபாடா? “- ரவிக்குமார்

Rajan Kurai Krishnan Untouchable என்னும் ஆங்கிலச்சொல்லும் பிழையானதுதான். அதன் மொழிபெயர்ப்புத்தான் தீண்டத்தகாதவர். ஆங்கிலத்தில் தேவையான சந்தர்ப்பங்களில் Untouched என்ற சொல்லை சில கருத்தரங்கங்களில் பயன்படுத்தியுள்ளேன். தமிழில் தேவையான சந்தர்ப்பங்களில் தீண்டப்படாதவர்கள் என்று சொல்வதில் வரலாற்றுத்தடம் இருக்கும் என நினைக்கிறேன்.

Ravi Kumar நிறப்பிரிகை நடத்தியபோதே அவரோடு இதே விஷயம் குறித்து நான் பேசியிருக்கிறேன்.பேராசான் மார்க்ஸ் என அவர் எழுதுவதையும் விமர்சித்திருக்கிறேன்.

இது குறித்து என் கருத்துக்கள்:

1.ராஜன் சொல்லியுள்ளது போல “தீண்டத்தகாதவர்கள்” எனும் சொல் என் கட்டுரையில் ஒரு இடத்தில் Untouchable என்கிற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. Untouchable, Untouchablity முதலான சொற்களை அண்ணல் அம்பேத்கர் பெரிய அளவில் பயன்படுத்தியுள்ளார். “The Untouchables Who Were They and Why They Became Untouchables ?”, “Untouchables or The Children of India’s Ghetto”, “Mr. Gandhi and the Emancipation of the Untouchables “முதலியன அவர் தம் நூலுக்குக் கொடுத்த தலைப்புகளில் சில. “Essays on Untouchability” என அவரது கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாக வந்துள்ளன. முல்க் ராஜ் ஆனந்தின் புகழ் பெற்ற நூலின் தலைப்பு கூட “The Untouchable” தான்..

டாக்டர் அம்பேத்கரின் நோக்கம் ரவிக்குமார் சொல்வதுபோல இந்திய சமூகத்தை Touchable எதிர் Untouchable எனப் பிரிப்பது அல்ல. மாறாக அத்தகைய பிரிவினையை ஒழிப்பதே.

2. ‘தலித்’ என்கிற சொல்லை தமிழில் பரவலாக்கியதில் எனக்கு முக்கிய பங்குண்டு என்பது வரலாறு. குறைந்த பட்சம் எனது மூன்று நூற்களின் தலைப்பில் “தலித்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. காந்தி, அம்பேத்கர் காலத்தில் தலித் மக்களைக் குறிக்க Untouchable என்கிற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்ததால் காந்தி குறித்த இக்கட்டுரையில் அந்த இடத்தில் அச் சொல் பயன்படுத்தபட்டுள்ளது.

3. அண்ணல் அம்பேத்கர் பயன்படுத்திய Untouchable எனும் சொல்லுக்கு ரவிக்குமார் கூறியுள்ளதுபோல ‘தீண்டாதார்’ எனும் சொல் பொருத்தமற்றது. இச்சொல்லுக்குத் ‘தொடாதவர்கள்’ என்றே பொருள் கூடும். வேண்டுமானால் ‘தீண்டப்படாதவர்கள்’ எனக் கூறலாம். இல்லை ‘தீண்டாதார்’ என்றாலே ‘தீண்டப்படாதவர்கள்’ என்பதுதான் பொருள் எனில், பின் ‘தீண்டாதார்கள்’ என ஏன் சொல்ல வேண்டும்?

4. சொற்களின் அரசியல் முக்கியமானதுதான். “சொல் அதுவே சிறந்த சொல்” என நாங்கள் நிறப்பிரிகையில் பதிவதும் வழக்கம்தான். அதன் பொருள் சொற்களைக் கையாள்வதில் சிரத்தை இருந்தால் போதும், செயலில், அதாவது சொந்த வாழ்வில் மக்களுக்கு, அதுவும் தான் சார்ந்துள்ள மக்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் துரோகம் இழைக்கலாம், துரோகம் இழைத்துச் சொத்தும் அதிகாரமும் சேர்க்கலாம் என்பதல்ல. எனது சொந்த வாழ்விலும் அரசியல் வாழ்விலும் நூறு சதம் அத்தகைய நேர்மையுடன் வாழ்ந்துள்ளேன், வாழ்ந்து வருகிறேன் எனச் சொல்லும் நெஞ்சுரம் எனக்குண்டு.

5. ‘பார்ப்பனர்’ என்கிற சொற் பிரயோகத்தைப் ‘பிராமணர்’ என மாற்றுவது, பெரியார் ஈ.வெ.ரா அவர்களைப் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ‘பொம்பளைப் பொறுக்கி’ என்கிற ரேஞ்சில் வசை பாடுவது, பின்னர் அரசியலுக்கு வந்தவுடன் வழிந்து அடக்கி வாசிப்பது, இதெல்லாவற்றைக் காட்டிலும் பேராசான் மார்க்ஸ் என்றோ, தந்தை பெரியார் என்றோ, அண்ணல் அல்லது பாபா சாகேப் அம்பேத்கர் என்றோ சொல்வது பெரிய பிழை என நான் கருதவில்லை. கலைஞர், கலைஞர் என வழிந்து காலிலும் விழத் தயங்காதவர்கள் இதை எல்லாம் சொல்வதை விட நகைச்சுவை என்ன இருக்க இயலும்?

6. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக்கொண்டு ச.ம.உ ஆன ரவிக்குமாருக்கு அந்த இயக்கம் நடத்திய நடத்துகிற எண்ணற்ற போராட்டங்களில் என்ன பங்கு என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வி.சி அமைப்பின் நிறுவனர் தொல். திருமாவளவன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தும் போராட்டங்கள் எதிலும் பங்கு பெறாத இவர் “கலைஞரை”ச் சந்திக்கப் போகும்போது மட்டும் முந்திக் கொண்டு சென்று பணிந்து குனிந்து நிற்பதையும் ஒரு கணம் நினைவில் கொண்டு வந்து பாருங்கள். திருமா அவர்கள் உடபட வி.சி கட்சிப் பொறுப்பாளர்கள் எல்லோர் மீதும் எத்தனையோ போராட்ட வழக்குகள் உண்டு, வழக்குகள் ஏதும் இல்லாத ‘கறைபடாத கரங்களுக்குச்’ சொந்தமான ‘தலைவர்’ ஒருவர் உண்டு என்றால் அவர் இவர் ஒருவர்தான். சென்ற தேர்தலில் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் நின்று வெற்றிபெற்ற இவர் வெள்ளம் வந்தபோது கூடத் தொகுதிப் பக்கமே போகாததால்தான் நடந்து முடிந்த தேர்தலில் அவரது கட்சியினரும், அத் தொகுதி தலித் மக்களுமே இவரை வேட்பாளராக நிறுத்தக் கூடாது என வெளிப்படையாக எதிர்ப்புக் காட்டினர் என்பதையும், அப்படியும் அவர் நிறுத்தப்ப்பட்டபோது அவர்கள் அவரைத் தோற்கடித்தனர் என்பதையும் யாரும் மறந்துவிட மாட்டார்கள்.

7. அ.தி.மு.க வுடன் தேர்தல் கூட்டு வைத்து வெற்றி பெற்றபின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.கவுடன் இணைத்ததில் ரவிக்குமாரின் பங்கு ஊரறிந்த ஒன்று, அவர் தி.மு.கவிற்கே போய்விடுவார் என்ற கருத்து பரவலாக இருந்ததும் யாவரும் அறிந்த ஒன்று. ஒரு வேளை தி.மு.க மட்டும் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் அவர் இன்னேரம் தி.மு.கவிற்குப் போயும் இருப்பார். அது கிடக்கட்டும். இப்படி அ.தி.மு.க வை நிரந்தர எதிரியாக்கி தி.மு.கவின் தொங்கு சதை என்கிற அளவிற்கு விடுதலைச் சிறுத்தைகளைக் கொண்டு வந்து நிறுத்தியதன் ஊடாக, கூட்டணி அரசியலில் வி.சி.கவின் பேர ஆற்றலைப் (bargaining power) பலவீனப் படுத்திய பெருமையும் ரவிக்குமாருக்கே உரித்து. இது குறித்து வி.சி அணிகள் மத்தியில் கடும் வெறுப்பும் அவர் மீதுண்டு.

சொற் பயன்பாட்டில் மட்டும் political correctness காட்டினால் போதாது. அரசியல் செயல்பாடுகளிலும் political correctness வேண்டும், அறம் வேண்டும்.

நேபாளத் தேர்தலில் மாஓயிஸ்டுகளின் வீழ்ச்சி

நேபாளத்திற்கு அரசியல் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கான இரண்டாம் அவைக்கான (Constituent Asembly II) தேர்தலில் மாஓயிஸ்டுகள் படு தோல்வி அடைந்துள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட அவர்கள் அரசியல் சட்ட அவைக்கான முதல் தேர்தலில் (2008) முதலிடத்தைக் கைப்பற்றி வெற்றியடைந்தது நினைவிருக்கும். மாறியுள்ள உலகச் சூழலைக் கணக்கில் கொண்டு அவர்கள் தங்கள் அணுகல்முறையை மாற்றிக் கொண்டதை உலகம் வரவேற்றது. ஊழலும், எதேச்சதிகாரமும் நிரம்பிய பன்னூறாண்டு கால முடியாட்சியை வீழ்த்திய சாதனைக்குரியவர்கள் என்கிற வகையில் மக்கள் நம்பிக்கையோடு அவர்களைத் தேர்வு செய்தனர். இன்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதோடு பல தொகுதிகளில் வைப்புத் தொகைகளையே இழந்துள்ளனர். முக்கிய தலைவர்கள் பிரசாண்டா. பாபுராம் பட்டாராய் இருவரும் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றில் தோற்றுள்ளனர். பிரசாண்டாவின் மகள், பட்டாராயின் மனைவி ஆகியோரும் தோல்வியுற்றுள்ளனர்.

இந்தத் தோல்வியை நாம் ஆய்வு செய்வதற்கு முன் நேபாளத் தேர்தல் முறையை விளங்கிக் கொள்ள வேண்டும். அவையின் மொத்த உறுப்பினர்கள் 601. இவர்களில் 240 பேர்கள் (40%) நேரடியாகத் தொகுதிகளில் போட்டியிட்டு, அதிக வாக்கு பெற்றவர்கள் (First Past The Post) தேர்வு செய்யப்படுவர். 355 உறுப்பினர்கள் (56%) கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அவ்வக் கட்சிகளால் தேர்வு செய்யப்படுவர். (Proportional Representation). மீதமுள்ள 26 பேர்கள் (4%) நியமன உறுப்பினர்கள் (Reserved for Distinguished Persons).

2013 தேர்தல் முடிவுகள்:

கட்சி நேரடி தேர்வு விகிதாசார தேர்வு மொத்தம்

நேபாள காங். (NP) 105 (29.8%) 91 (25.55%) 196

நேபாள கம்யூ. (UML) 91 (27.55%) 84 (26.66%) 175

மாவோயிஸ்ட் (UCPN-M) 26 (17.79%) 54 (15.21%) 80

ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி-N (RPP-N) 0 (2.79%) 24 (6.66%) 24

மாதேசி ஜனாதிகார்-L (MJF-L) 4 (3.13%) 10 (2.91%) 14

ராஷ்ட்ரீய பிரஜாதந்திரி (RPP) 3 (2.63) 10 (2.75%) 13

மாதேசி ஜனாதிகார் (MJF) 2 (2.28%) 8 (2.26%) 10

தராய் மாதேஷ்-L (TMLP) 4 (1.9%) 7 (1.91%) 11

பிற 5 – 47 – 52

குறிப்பு : நேபாள கம்யூனிஸ்ட் என்பது தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்ட ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (UML) கட்சி. மாதவ் குமார் நேபால், ஜாலாநாத் கானல் ஆகியோர் இதன் முக்கிய தலைவர்கள். மாஓயிஸ்ட் கட்சி என்பது ‘நேபாள ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி – மாஓயிஸ்ட்” எனப்படும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த அமைப்பு. புஷ்ப கமல் தகல் (பிரசாண்டா). பாபு ராம் பட்டாராய் முதலானோர் இதன் முக்கிய தலைவர்கள். மேலும் விவரங்களுக்குப் பார்க்க: அ.மார்க்ஸ், ‘நேபாளம்: வரலாறு, மக்கள், மாஓயிஸ்டுகள்’ பயணி வெளியீடு, சென்னை, 2008)

2008 தேர்தலில் 220 (120+100) இடகளை வென்ற மாஓயிஸ்டுகள் இம்முறை வெறும் 80 இடங்களைத்தான் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் சென்ற முறை 110 (37+73) இடங்களை மட்டுமே வெல்ல முடிந்த நேபாள காங்கிரஸ் இம்முறை 175 இடங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை 103 (33+70) இடங்களை வென்ற நேபாள கம்யூனிஸ்ட் கட்சியோ இம்முறை 175 இடங்களைப் பெற்றுள்ளது. சென்ற முறை மாதேசி கட்சிகள் இரண்டும் 72 இடங்களைப் பெற்றிருந்தன. இம்முறை அட்டவணையில் இடம்பெற்றுள்ள மூன்று மாதேசிக் கட்சிகளும் சேர்ந்து 35 இடங்களைத்தான் பெற முடிந்துள்ளது.

ஆக இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாக மாஓயிஸ்ட் மற்றும் மாதேசிக் கட்சிகளுக்கு எதிராகவும் நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது என்பதை யாரும் மறக்க இயலாது. இன்னொரு கவலைக்குரிய அம்சம் சென்ற முறை வெறும் 4 இடங்களை மட்டுமே பெற முடிந்த ராஷ்ட்ரீய பிரஜா தந்திரக் கட்சி (N) இம்முறை 24 இடங்களைப் பெற்றுள்ளது. இது இந்து மத அடையாளத்துடன் கூடிய முடியாட்சியை வேண்டுகிற ஒரு வலதுசாரிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனவும் இந்த இரண்டாம் அரசியல் சட்ட அவையில் தாங்கள் பங்கு பெற முடியாது எனவும் மாஓயிஸ்டுகள் முரண்டு பிடித்துப் பார்த்தனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ இடங்களுக்கு தங்கள் கட்சியின் சார்பாக யாரையும் நியமிக்க இயலாது எனவும் கூறினர். தங்களுக்கு எதிரான இம்மோசடிக்குக் காரணமாக அவர்கள் நேபாள இராணுவம், குடியரசுத் தலைவர் ராம் பரண் சர்மா உள்ளிட்ட தேர்தல் நடத்துவதற்கான தற்காலிக அரசு, அந்நிய சக்திகள் குறிப்பாக இந்திய அரசு ஆகியவற்றைக் குறிப்பிட்டனர். இவை மூன்றுமே எப்படியும் மாஓயிஸ்டுகள் ஆட்சியில் அமர்வதைச் சகித்துக் கொல்ளாதவை என்பது ஊரறிந்த இரகசியம். வாக்குப் பெட்டிகள் பல மணி நேரம் கட்சிப் பிரதிநிதிகளின் கண்காணிப்பின்றி இராணுவத்தின் வசம் இருந்த்தையும், நேரடித் தேர்தல் முடிவுகளுக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முடிவுகளுக்கும் வித்தியாசம் உள்ளதையும் சுட்டிக் காட்டினர்.

எனினும் மாஓயிஸ்டுகளின் இக்குற்றச்சாட்டிற்குப் பெரிய ஆதரவில்லை. தேர்தல் முடிந்த அன்று (நவம்பர் 19) தேர்தல் நியாயமாக நடந்தது எனப் பிரசாண்டாவே கூறியுள்ளார் மாஓயிஸ்டுகள் நேரடித் தேர்தலில் குறைவாகவும், கட்சிக்கு அளிக்கப்பட்ட விகிதாசார வாக்குகளினூடாக அதிக இடங்களையும் பெற்றுள்ளதற்கு தனிப்பட்ட முறையில் மாஓயிஸ்டுக் கட்சி வேட்பாளர்களின் மீது மக்கள் கொண்ட வெறுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்தாண்டு அனுபவத்தில் மாஓயிஸ்ட் தலைவர்களின் வாழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம், தொகுதி முன்னேற்றத்தில் அவர்களின் கவனமின்மை, மக்களை அணுகுவதில் அவர்கள் காட்டிய முரட்டுத்தனம் ஆகியன மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுத்தி இருந்தமையைப் பலரும் குறிப்பிடுகின்றனர்,

ஜிம்மி கார்டரின் தலைமையில் இயங்கிய பன்னாட்டுத் தேர்தல் பார்வையாளர் குழுமமும் தேர்தல் முறைகேடுகள் குறித்த மாஓயிஸ்டுகளின் கூற்றை மறுத்துள்ளது. ஆக, தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்றுக் கொள்வதற்குப் பன்னாட்டழுத்தமும் செலுத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள மாட்டோம் என்றெல்லாம் மாஓயிஸ்டுகள் சொன்ன போதும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்வதுதான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாகவும் இருந்தது.

தேர்தல் நடக்காது என்றும், அப்படியே நடத்தப்பட்டாலும் மக்கள் பங்கேற்பு அதிகம் இருக்காது எனவும் கூறப்பட்ட ஆரூடங்களுக்கு எதிராக, ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் தவிர்த்து, தேர்தல் அமைதியாகவே நடந்தது மட்டுமின்றி 78 சதத்திற்கும் மேலாக வாக்குப் பதிவு நடந்துள்ளது. குறிப்பாக முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவில் உற்சாகமாகப் பங்கேற்றுள்ளனர்.

எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கும்போது கடந்த ஐந்தாண்டு காலம் அரசியல் சட்டத்தை உருவாக்காமல் வெறும் பதவிச் சண்டையில் கழிந்ததாகவே மக்கள் கருதுகின்றனர் என்பதும், அப்படியானதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கிருந்த போதும், தோல்விக்கான முழுப் பொறுப்பையும், முந்திய தேர்தலில் தாங்கள் யாரை நம்பி முதன்மை வாக்களித்தார்களோ அவர்கள் மீதே ஏற்றிப் பார்க்கின்றனர் என்பதும் தெளிவாகிறது. அப்படியான ஒரு கருத்தைச் சர்வதேசச் சமூகமும், குறிப்பாக இந்தியாவும், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் மாஓயிஸ்டுகளின் பரம எதிரியான இராணுவமும் பிரச்சாரம் செய்து, அதில் வெற்றியும் அடைந்துள்ளது.

மாஓயிஸ்டுகளைப் பொருத்தமட்டில், 2008ல், அரசியல் சட்ட அவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிற வகையில், அறுதிப் பெரும்பான்மை இல்லாமலேயே ஆட்சியில் அமர்ந்தனர். அரசியல் சட்டத்தை உருவாக்குவது தவிர மாஓயிஸ்டுகளுக்கென வேறு சில அவசரமான, முக்கியப் பணிகளும் இருந்தன. தமது புரட்சிகர இராணுவம் வசம் இருந்த ஆயுதங்களை அவர்கள் ஐ.நா.அவைப் பார்வையாளர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தனர். மாஓயிஸ்டுகளின் இராணுவத்தை நேபாள இராணுவத்துடன் இணைப்பது என்பது ஒப்பந்தத்தில் இருந்தபோதும், நேபாள இராணுவம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதோடு முட்டுக்கட்டையும் போட்டு வந்தது. குடியரசுத் தலைவர் தேர்தலிலும் மாஓயிஸ்டுகள் விரும்பிய தலைமையைக் கொண்டு வர இயலவில்லை, தேர்ந்தெடுக்க்ப்பட்ட ராம் பரண் யாதவ் மாஓயிஸ்டுகளுக்கு எதிரானவர்.

இந்தியத் தலையீடு:

அடுத்த இரு பெருங்கட்சிகளான நேபாள காங்கிரசும், நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் அரசியலில் நீண்ட நாள் அனுபவம் வாய்ந்தவை. கருத்து மாறுபாடுகளை மீறி மாஓயிஸ்டுகளை ஓரங் கட்டுவதில் இவ்விரு கட்சிகளும் ஒன்றுபட்டன. சர்வதேசச் சமூகத்தின் பிரதிநிதியாக விளங்கிய இந்தியாவுக்கு நேபாளத்தைத் தன் முழுக்கடுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வது அவசியமாக உள்ளது. அருகாமை நாடுகள் அனைத்துடனும் பகையுறவையே கொண்டுள்ள இந்தியா போர் நிலை முக்கியத்துவமுள்ள நேபாளத்தை முழுமையாகத் தன் கட்டுக்குள் வைப்பதற்கு மாஓயிஸ்டுகள் தடையாக இருப்பதைச் சரியாகவே கணித்தது..

ஏப்ரல் 2010ல் பிரதமர் மன்மோகனின் சிறப்புத் தூதுவராக நேபாளத்திற்கு வந்த இந்திய அயலுறவுச் செயலர் ஷியாம் சரண் வெளிப்படையாக மாஓயிஸ்டுகளை முழுமையாக ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதுதான் நல்லது என எச்சரித்தார், நேபாள மாஓயிஸ்டுகளும் பான்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சூழல்களைக் கணக்கில் கொண்டு இறங்கி வந்தனர். இந்த ஆண்டு பிப்ரவரியில் ஹெடாவ்டா நகரில் நடந்த கட்சிப் ப்ளீனம் ஒன்றிற்குப் பின் நடந்த கூட்டத்தில் தங்கள் பாதையில் மூன்று அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பிரசாண்டா அறிவித்தார். அவை :

1)  முழுமையான பல கட்சி ஜனநாயக ஆளுகைக்குத் திரும்புதல். 2) பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்தல். இந்த வளர்ச்சியில் இந்தியாவை முக்கிய பங்காளியாக ஏற்பது. இந்திய முதலீடுகளுக்கு வாய்ப்பளிப்பது. இந்த வளர்ச்சியின் மூலமாக உருவாகும் அரசியல் நிலைத் தன்மை அருகிலுள்ள நாடுகளின் (அதாவது இந்தியாவின்) பாதுகாப்பு தொடர்பான கவலைகளையும் போக்கும். 3) ‘குறுகிய தேசியத்தை’க் கைவிட்டுவிட்டு இனி முற்போக்கு தேசியத்தை முன்னெடுத்தல்.

நேபாள அரசியலில் இந்தக் ‘குறுகிய தேசியம்’ என்பது இந்திய மேலாதிக்கம் பற்றிய கவலையைக் குறிக்கும். இந்திய மேலாண்மை குறித்த அச்சம் நேபாளிகளுக்கு எப்போதுமே உண்டு. இந்தியா பெரிய அளவில் நேபாளத்தில் முதலீடுகளைச் செய்துள்ளதோடு அதன் அபரிமிதமான கனிம வளங்கள் மீதும் இந்தியாவிற்கு எப்போதுமே ஒரு கண்ணுண்டு. தவிரவும் திபெத்திலிருந்து வரும் அகதிகளை இந்தியா நேபாளத்திற்குத் திருப்பி விடுவதை ஒரு தந்திரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் சீனாவின் கோபத்திலிருந்து தான் தப்பி, சீனாவுக்கும் நேபாளத்திற்கும் இடையில் விரிசலை ஏற்படுத்துவது நோக்கம். இது தவிர எல்லையோரத்தில் இந்திய ஆக்ரமிப்பு நிகழ்வதாகவும் நேபாளத்திற்கு ஐயங்கள் உண்டு.

மொத்தத்தில் சிக்கிமை வளைத்துப்போட்டது போல நேபாளத்தையும் தன்னுடன் இந்தியா இணைத்துக் கொண்டு விடுமோ என்கிற (sikkimisation) அச்சம் நேபாளத்திற்கு உண்டு. இந்தியாவும் ஏதோ தன்னுடைய மாநிலங்களில் ஒன்றைப் போலவே நேபாள அரசியலில் தலையிட்டு வருகிறது. நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதர் நேபாள அயலுறவு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் நேபாள பிரதமர் உட்பட யாருடைய அலுவலகத்திற்கும் சென்றுவரக் கூடிய நிலை உள்ளது.

இந்தப் பின்னணியில் இந்திய மேலாண்மை குறித்து அதிகம் கவனப்படுத்தி வந்தவர்கள் மாஓயிஸ்டுகள்தான். இந்திய மேலாண்மைக்கு எதிராக உருவாகியுள்ள இந்த நேபாள தேசிரய உணர்வைத்தைத்தான் இப்போது குறுகிய தேசியம் என அவர்களே அழைத்துக் கொள்ள வேண்டிய நிலை நேபாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சென்ற மார்ச்சில் இந்தியா வந்த நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மாதவ் குமார் நேபால் இந்து இதழுக்கு அளித்த பேட்டியில் தம் கட்சி உட்பட நேபாளிக் கட்சிகள் பலவற்றிலும் இந்திய வெறுப்பு எனப்படும் குறுகிய தேசியம் செயல்படுவதாகக் கூறினார்.

மாஓயிஸ்டுகள் வேறு பல அம்சங்களிலும் விட்டுக் கொடுக்கவே செய்தனர். 2006 புரட்சியைக் கொடுங்கரம் கொண்டு ஒடுக்க முனைந்தவரும் முடியாட்சிக்கு மிக நெருக்கமாக இருந்தவருமான லோக்மான்சிங் கார்கியை ஒரு உயர்ந்த அதிகாரமிக்க பதவியில் அமர்த்த ஒப்புதல் அளித்தது, தலைமை நீதிபதி கில் ராஜ் ரெக்மியை தேர்தலுக்கான தற்காலிக அரசுக்குத் தலைமை ஏற்க முன்மொழிந்தது ஆகியவற்றைச் சில எடுத்துக்காட்டுகளாகச் சொல்லலாம்.

அரசியல் சட்டம் எழுதுவதில் என்ன பிரச்சினை?

எனினும் இந்தியா கடைசி வரை மாஓயிஸ்டுகளை நம்பாமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. இன்று படு தோல்வி அடைந்துள்ள மாஓயிஸ்டுகள், மாதேசிக் கட்சிகள் ஆகிய இரு தரப்பினருமே ‘வெஸ்ட்மினிஸ்டர்’ மாதிரி, அதாவது இந்தியாவில் உள்ளது மாதிரி ஜனநாயகத்திற்குப் பதிலாக அடையாள அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை (identity based federalism) முன் மொழிந்தனர். இதை நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தனர். இந்தியாவின் கருத்தும் அதுவே.

இந்த அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதென்ன? இந்தியாவைப் போலவே பல்வேறுபட்ட சாதிகள், இனங்கள், ஆதி குடிகள் அந்தச் சின்ன நாட்டிலும் உண்டு. ‘பாகுன்’, ‘சேத்ரி’ முதலான சாதிகள் இந்தியாவிலுள்ள பார்ப்பன, சத்திரிய சாதிகளைப்போல ஆதிக்க சாதியினர். காத்மாண்டை மையமாகக் கொண்ட இவர்களின் அதிகாரமே நேபாளத்தில் கோலோச்சி வந்தது. சட்டமன்றங்களிலும் 37 சதம் வரை இவர்களே ஆக்ரமித்திருந்தனர். ஆரம்பம் முதலாகவே தலித்கள், உள் நாட்டு இனத்தினரான ஜனஜாதிகள், இந்திய வம்சாவளியினரான மாதேசிகள், இவர்கள் ஒவ்வொரு பிரிவினரிலும் பெண்கள் முதலான அனைத்துப் பிரிவினருக்கும் ஆளுகையில் பங்கு வேண்டும் என்பதை மாஓயிஸ்டுகள் வற்புறுத்தி வந்தனர், நீண்ட விவாதங்களுக்குப் பின் 2008 தேர்தலில் இது நடைமுறைக்கும் கொண்டு வரப்பட்டது. போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், இந்த ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய வீதங்களில் வாய்ப்பளிக்க வேண்டும், அதிலும் ஒவ்வொரு பிரிவினரிலும் பாதி வேட்பாளர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்கிற கருத்தொருமிப்பு ஏற்பட்டது.

இது குறிப்பிடத்தக்க நல்ல விளைவையும் தந்தது. 2008 அரசியல் சட்ட அவையில் பாகுன் மற்றும் சேத்ரி பிரிவினரின் பங்கு 4 சதமாகக் குறைந்தது. ஒரு சதப் பிரதிநிதித்துவம் கூட இதுவரை கிடைக்காதிருந்த தலித்களுக்கு முதன் முதலாக 8.17 சதம் கிடைத்தது.மொத்த உறுப்பினர்களில் 32.22 சதம் பெண்கள்; மாதேசிகள் 34.09 சதம்; ஜனஜாதிகள் 33.39 சதம் இருந்தனர்.

இவ்வாறு அனைத்துப் பிரிவினருக்கும் ஆளுகையில் உரிய பங்கை அளிப்பதற்கு அரசியல் சட்டத்திலேடே வழி வகுப்பதைத்தான் அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதாக மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் முன்வைத்தனர். இதைக் கடுமையாக நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்த்தன. இந்தியாவின் கருத்தும் இதுவாகவே இருந்தது.

சட்டசபைக் கலைப்பும் பின் நடந்த அரசியலும்:

இதில் ஒரு ஒப்புதல் ஏற்படாதது அரசியல் சட்ட உருவாக்கத்திற்குத் தடையாக இருந்தது. இரண்டாண்டுகளுக்குள் இந்தப் பணி முடியாததால் அவையின் காலகெடு இரு முறை நீடிக்கப்பட்டது. இறுதி வரை இது சாத்தியமில்லாமல் போகவே 2012 மே 27 அன்று முதலாம் அரசியல் சட்ட அவை அதன் நோக்கம் நிறைவேறாமலேயே கலைக்கப்பட்டது. மார்ச் 13, 2013 அன்று இரண்டாம் அரசியல் சட்ட அவைக்கான தேர்தல் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டு, பின் அந்தத் தேதி மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு, இறுதியில் நவம்பர் 19, 2013 என்பதாக முன்வைக்கப்பட்டது. தேர்தலை நடத்த, தலைமை நீதிபதி ரெக்மி தலைமையில் இடைக்காலத் தேர்தல் அரசு ஒன்று அமைப்பது எனவும் கருத்து உருவானது. ஒவ்வொரு முறையும் இப்படியான முடிவுகளுக்குத் தக இடைக்கால அரசியல் சட்டமும் திருத்தப்பட்டது.

இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்க மாஓயிஸ்ட் கட்சி, நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்ட், மாதேசி முன்னணி ஆகிய நான்கு கட்சிகளின் எட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய ’உயர் மட்ட அரசியல் குழு’வும் (HLPC) உருவாக்கப்பட்டது.

2013 செப்டம்பர் 14 அன்று இந்த உயர் மட்ட அரசியல் குழு கூடியபோது அதில், தேர்தலை 2014 மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைப்பது, இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற்கும் ரெக்மி தனது தலைமை நீதிபதிப் பொறுப்பிலிருந்து விலகுவது முதலான கோரிக்கைகளை மாஓயிஸ்டுகள் முன்வைத்தனர். ஒரு வட்ட மேசை மாநாடு கூட்டிப் பொதுப் பிரச்சினைகளில் முடிவெடுப்பது, பெரும்பான்மை அடிப்படைலான ஆளுகை என்பதாக இல்லாமல் கருத்தொருமிப்பு அடிப்படையிலான அரசியல் சட்ட அவைக்கான அரசு (consensus government) முதலியன மாஓயிஸ்டுகளின் பிற கோரிக்கைகளாக இருந்தன. தேர்தலை ஒத்தி வைப்பது, தலைமை நீதிபதிப் பொறுப்பொலிருந்து ரெக்மி விலகுவது முதலான மாஓயிஸ்டுகளின் கோரிக்கைகளில் ஒரு கருத்தொருமிப்பு எட்டும் தருவாயில் இந்திய அயலுறவுத் துறைச் செயலர் ஷ்யாம் சரணின் வருகை அறிவிக்கப்பட்டது. அன்று மாலை இந்தியத் தூதரகத்தில் விருந்தொன்றுக்கு அவர் அழைப்பு விட்டிருந்தார். விருந்தின்போது, தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது என்பதே இந்தியாவின் கருத்து என அறிவிக்கப்பட்டது.

மீண்டும் செப்டம்பர் 16 அன்று குடியரசுத் தலைவர் ராம் பரண் சர்மா தலைமையில் உயர்மட்டக் குழு கூடியபோது இரண்டு நாட்கள் முந்திய கருத்தொருமிப்புகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. மாஓயிஸ்டுகளின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு, முன் தீர்மானித்தபடி நவம்பர் 19, 2013 அன்றே தேர்தலை நடத்துவது என்பதும் ஒரே நேரத்தில் ரெக்மி தலைமை நீதிபதியாகவும் இடைக்கால அரசின் தலைவராகவும் நீடிப்பது என்பதும் உறுதியானது.

மாஓயிஸ்டுகள் விட்ட பிழைகள்:

நடந்து முடிந்த தேர்தலின் மிகச் சுருக்கமான பின்னணி இதுவே. இந்தியா பிரதிநித்தித்துவப் படுத்திய சர்வதேச அழுத்தம் மற்றும் உள்நாட்டு அரசியல் சக்திகள் ஆகியவற்றால் மாஓயிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு முறியடிக்கப்பட்ட வரலாறும் இதுவே. மாஓயிஸ்டுகளின் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யும் பலரும் இப்போது இந்த வரலாற்றைப் புறக்கணித்துவிட்டு தோல்விக்கு முழுக்க முழுக்க மாஓயிஸ்டுகளே காரணம் என்பதாக முன்வைக்கின்றனர்.

மாஓயிஸ்டுகளின் பக்கம் தவறுகளே இல்லை என்பதல்ல. ஆனால் இந்தச் சர்வதேச மற்ற்ம் உள்நாட்டுச் சதிகளைக் கணக்கில் கொள்ளாமல் பழி அனைத்தையும் மாஓயிஸ்டுகளின் பக்கம் திருப்பிவிடலாகாது என்பதுதான்.

மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் இவ்வாறு 2008 தேர்தலைக் காட்டிலும் இப்போது பெரிய அளவில் தோல்வி அடைந்திருப்பதற்குக் காரணமாக சர்வதேச மற்றும் அவர்களுக்கு ஒத்துழைத்த உள் நாட்டு சக்திகள் கூறுவது, இவ்விரு கட்சிகளின் அடையாள அடிப்படையிலான ஜனநாயகக் கூட்டாட்சி என்பதை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதுதான்.. இதை முழுமையாக ஏற்றுக் கொள்ள இயலாது இத்தகைய அணுகல் முறையின் பலனாக இதுகாறும் அதிகாரம் மறுக்கப்பட்ட தலித்கள் பெண்கள் ஜனஜாதிகள் முதலான பல்வேறு பிரிவினருக்கும் சென்ற தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் கிடைத்ததைக் கண்முன் கண்ட மக்கள் இதை ஏற்கவில்லை என்பதாக இந்தத் தேர்தல் முடிவின் அடிப்படையிலிருந்து மட்டும் சொல்லிவிட இயலாது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரதிநிதித்துவம் எவ்வாறு அமைந்துள்ளது என்பது குறித்த விவரங்கள் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் கட்சிகளால் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை வைத்துப் பார்க்கும்போதே முந்தைய தேர்தலைக் காட்டிலும் இபோது பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது விளங்குகிறது. தவிரவும் ஒப்புக்குப் பெண்கள் முதலான பிரிவினருக்கு வாய்ப்பளித்தபோதும் உறுதியாகத் தோல்வியைத் தழுவும் தொகுதிகளிலேயே கட்சிகள் அவர்களை வேட்பாளர்களாக்கியுள்ளன.

அடையாள அடிப்படையிலான ஜனநாயகம் குறித்த கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் தவறிவிட்டனர் என்கிற கருத்தை இது குறித்து ஆய்வு செய்துள்ளவர்கள் குறிப்பிடுகின்ரனர். தவிரவும் சென்ற அரசியல் சட்ட அவையில் இப்படிப் பல பிரிவினருக்கும் இடமிருந்தபோதும், இந்த ஐந்தாண்டு கால அரசியல் குழப்பங்களின் விளைவாக உண்மையான அரசியல் அதிகாரம் இந்தச் சக்திகளுக்கு மாற்றீடு செய்யப்படவில்லை. மீண்டும் அரசியலதிகாரம் காத்மாண்டுவை மையமாகக் கொண்ட மேட்டிமைச் சக்திகளிடமே குவிந்திருந்தன. விளைவாக அதிகாரப் பரவலின் பலன்களை மக்களால் ருசிக்க இயலாவில்லை.

தவிரவும் இந்த ஐந்தாண்டு இடைவெளியில் மாஓயிஸ்ட் கட்சி மட்டுமின்றி மாதேசிக் கட்சிகளும் பிளவுண்டன. மாஓயிஸ்டுகளைப் பொருத்தமட்டில் மோகன் வைத்யா மற்றும் சி.பி கஜுரெல் முதலானோர் தலைமையில் பிரிந்து ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி – மாஓயிஸ்டுகள்’ (CPN M) என்கிற பெயரில் இயங்கிய அமைப்பு மாஓயிஸ்டுகளைப் பெரிய அளவில் பலவீனப்படுத்தியது. ஐ.நா அமைப்பிடம் பதிந்த முன்னாள் மாஓயிஸ்டுகளின் புரட்சிகர இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 32,250. இதில் கிட்டத்தட்ட சரி பாதிப் பேர் இன்று மோகன் வைத்யா அமைப்பில் சேர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிளவே கூட வெளி நாட்டு சக்திகளால் முன்னெடுக்கப்பட்டது என்றொரு கருத்தும் உண்டு. எப்படியோ பொதுவுடைமைக் கட்சிகள் பிளவுறும்போது பிளவுண்ட கூறுகள் தமது வர்க்க எதிர்ப்பை எல்லாம் ஒத்தி வைத்டுவிட்டு பரஸ்பர எதிர்ப்பை முதன்மைப் படுத்துவது வழக்கம். அதுதான் இங்கும் நடந்தது. மோகன் வைத்யா குழுவினர் சில தொகுதிகளில் மாஓயிஸ்டுகளுக்கு எதிராக நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

பிரிந்து சென்ற மோகன் வைத்யா குழுவினர் தேர்தல் புறக்கணிப்பிற்கு அறைகூவல் விடுத்தனர் ஒரு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் என மறைமுகமாக கஜூரெல் எச்சரிக்கையும் விடுத்தார். எனினும் உற்சாகமான 78 சத வாக்களிப்பு என்பது அவர்களது கோரிக்கையையும் அரசியலையும் மக்கள் ஏற்கவில்லை என்பதை நிறுவியது.

எனினும் மாஓயிஸ்டுகள் ஓரம்சத்தில் கோட்டை விட்டுவிட்டார்கள் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஆயுதப் போராட்டத்தையே நடைமுறையாகக் கொண்டிருந்த அவர்களுக்கு இந்தப் புதிய அரசியலின் விதிகளுக்கும் இலக்கணங்களுக்கும் தக தங்களைத் தகவமைத்துக் கொள்ள இயலவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்களிடம் அவர்களின் அணுகல் முறைகள் முரட்டுத் தன்மாக இருந்ததைப் பலரும் குறிப்பிடுகின்றனர். அகன்ற பெரிய கொள்கை மோதல்களுக்கு முதன்மை அளித்த இவர்கள் அதிகாரத்தில் அமர்ந்தபோது ஆளுகைக்கு (governance) முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதேபோல வென்ற மாஓயிஸ்ட் வேட்பாளர்கள் தொகுதிப் பிரச்சினைகளிலும் நாட்டம் செலுத்தவில்லை. பெரும் செல்வாக்குப் படைத்த தலைவரும் 2008 தேர்தலில் பெரு வெற்றி பெற்றவருமான பிரசாண்டா ‘காத்மாண்டு -10’ தொகுதியில் இம்முறை இரண்டாவதாகக் கூட வர இயலாமல் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுப் படு தோல்வி அடந்ததற்கு இது ஒரு காரணமாக்ச் சொல்லப்படுகிறது. இப்படி ஆளுகையில் உரிய கவனம் செலுத்தாததன் விளைவு முடியாட்சியைத் தூக்கி எறிந்த பின்னும் கூட மேட்டிமைச் சக்திகளின் அதிகார மையத்தைத் தகர்க்க இயலாமைக்கும் இட்டுச் சென்றது.

புரட்சிகர அரசியலை முன்வைப்பவர்கள் இன்றைய ஜனநாயக முறைக்குத் திரும்பும்போது இதற்குரிய விதிகளைப் புறக்கணித்துவிடலாகாது என்பது நேபாளம் கற்றுத் தரும் ஒரு பாடம். இதன் பொருள் தேர்தல் அரசியலின் ஊழல்களுக்கும் போலித் தனங்களுக்கும் தகவமைந்து போவது என்பதல்ல. அப்படி ஆகாமலேயே சாதாரண மக்களின் பிரச்சினைகளிலும் ஆளுகையிலும் கருத்தூன்றிச் செயல்பட்டு ஒரு வித்தியாசத்தை அவர்கள் நிலை நாட்ட வேண்டும்.

பிரசாண்டா, ஹிசிலா யாமி (பாபுராம் பட்டாராயின் மனைவி) ஆகியோரது மேட்டிமைதனமான வாழ்க்கை முறையையும் மக்கள் ரசிக்கவில்லை. இங்கு மக்களின் ஒரு மனப்பாங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழில் ஒரு கதையுண்டு ஒரு பிச்சைக்காரருக்கு ஒரு பெண் தினசரி பிச்சையிடுவாள். பக்கத்து வீட்டுப் பெண் பிச்சையிட மறுத்துவிடுவாள். அவர் ஒன்றும் சொல்லாமல் போய்விடுவார். ஒரு நாள் எப்போதும் பிச்சையிடும் பெண் இல்லை என்பாள். உடனே அந்தப் பிச்சைக்காரர் அவளைத் திட்டுவார். அந்தப் பெண், “தினசரி பிச்சையிடாத பக்கத்து வீட்டுக்காரியைத் திட்ட மாட்டாய், ஒரு நாள் போடவில்லை என்பதற்காக் என்னைத் திட்டுகிறாயே” என்பாள். அதற்கு அவர், “என்னைக்கும் போடுற மகராசி இன்னைக்கும் போடல. தினசரி போடற கழுதை இன்னைக்கு ஏன் போடலை?” என்று கேட்டதாகக் கதை. இந்தக் கதையின் ஆபத்தான கூறுகள் ஒரு பக்கம் இருந்தபோதும், மக்களின் எதிர்பார்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து ஒரு பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ள இயலும். பூர்சுவா அரசியலாளரிடம் இந்தப் பண்புகள் இருப்பதைக் கண்டுகொள்ளாத மக்கள் அதே அணுகல்முறை இடதுசாரிகளிடமும் இருப்பதை அவ்வளவாக ஏற்பதில்லை. அவர்களிடம் ஒரு வித்தியாசமான அரசியலை மட்டுமல்ல அணுகல் முறைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்பதுதான் அது. தவிரவும் பிரசாண்டா, யாமி முதலானவர்களிடம் காணப்பட்ட இந்த மேட்டிமைத் தனங்களை முதலாளிய இதழ்களும் பெரிதுபடுத்திக் காட்டின.

2008 தேர்தலில் அதிக எண்ணிக்கைகளைப் பெற்ற கட்சியாக இருந்தபோதும் மாஓயிஸ்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை. எனினும் அவர்களே தொடர்ச்சியாகப் பதவியில் இருக்க முயன்றதான ஒரு கருத்தை மக்கள் மத்தியில் அவர்களின் செயல்பாடுகள் ஏற்படுத்தின. நேபாள காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்துவிட இயலாது என்பதற்காகவே தலைமை நீதிபதி ரெக்மியை இடைக்கால அரசுக்குத் தலைமை ஏற்க மாஓயிஸ்டுகள் முன்மொழிந்தனர் என்றும் ஒரு கருத்துண்டு.

இந்தப் பதவிச் சண்டை மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகளின் விளைவாகக் கட்சி அணிகளுக்கும் உரிய முக்கியத்துவத்தைதயும் தலைமை அளிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டும் மாஓயிஸ்டுகள் மீது உண்டு. புரட்சிகர இராணுவத்தைச் சேர்ந்த 9 பேர்களைக் கட்சி அமைப்புக்கள் பரிந்துரைத்திருந்தபோதும் அவர்களில் ஒருவருக்கும் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்படவில்லை. தலைமை கமான்டர் நந்த கிஷோர் புன்னுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. காத்மாண்டு 10 தொகுதியில் பிரசாண்டாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் மாஓயிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் ஒருவர்.

எப்படியோ இன்று மாஓயிஸ்டுகள் தோல்வியைத் தழுவியுள்ளனர். இதை அவர்கள் பெருந்தன்மையுடன் ஏற்றுச் செயல்படுவதே அவர்களது எதிர்கால அரசியலுக்கு ஏற்றது. தமது தோல்விக்கான முழுமையான சுய பரிசோதனை ஒன்றை அவர்கள் செய்து கொள்ள வேண்டும். நேபாள காங்கிரசும் நேபாள கம்யூனிஸ்டும் இரண்டும் சேர்ந்து செயல்படப்போவது உறுதி. எனினும் அப்படியும் கூட மூன்றில் இரு பெரும்பான்மைக்கு மேலும் 30 உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்குத் தேவை. தவிரவும் நேபாள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே மாஓயிஸ்ட் கட்சிக்கு எதிரான ஒரு ஒற்றுமை இருந்தபோதும் கருத்து மாறுபாடுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக நேபாள கம்யூனிச்ட் கட்சி வேறொரு குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனச் சொல்வது இத்தகைய வேறுபாடுகளில் ஒன்று.

மாஓயிஸ்டுகள் முன்வைத்த கருத்தொருமிப்பு அடிப்படையிலான அரசியல் சட்ட அவை என்கிற கருத்தை ஏற்கத் தயாராக இருப்பபதாகவும் இன்று அவர்கள் கூறியுள்ளனர். இப்படியான கருத்தொற்றுமை அடிப்படையிலான அரசியல் சட்டமே வலுவுடையதாக இருக்கும். எனினும் மாஓயிஸ்டுகளும் மாதேசிகளும் இன்று படுதோல்வி அடைந்துள்ளதை மனப்பூர்வமாக ஏற்று சில விட்டுக் கொடுத்தல்களுக்கு அவர்கள் தயாராக வேண்டும்.

இந்திய அனுபவம் ஒன்றையும் அவர்கள் கணக்கில் கொள்ளலாம். கருத்தொருமிப்பு உடனடியாகச் சாத்தியமில்லாததன் விளைவாக அரசியல் சட்ட அவை தன் பணியை முடிக்க இயலாத நிலை வந்துவிடலாகாது என்பதற்காக அம்பேத்கர் அவர்களின் கூர்த்த அறிவு முன் வைத்த ஒரு வழிமுறைதான் அரசியல் சட்டத்தை “அடிப்படை உரிமைகள்” எனவும் “வழிகாட்டு நெறிமுறைகள்” எனவும் இரண்டாகப் பிரிப்பது. அடிப்படை உரிமைகள் உஅடனடியாக வழங்கப்படுதல் வேண்டும் வழிகாட்டு நெறிமுரைகளில் கண்டுள்ள அம்சங்கள் காலப்போக்கில் கருத்தொற்றுமையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். மாஓயிஸ்டுகள் இந்த வடிவத்தைக் கவனமாகப் ப்ரிசீலிக்க வேண்டும்.

ஆசியாவிலேயே பொருளாதார வளர்ச்சியிலும், தனிநபர் வருமானத்திலும், வேலை வாய்ப்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நாடு நேபாளம் என்பதைக் கருத்திற்கொண்டு நேபாள அரசியல் கட்சிகள் ஆளுகைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்தியா தன் அரசியல் தந்திரத்தில் தற்காலிக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இப்படி நேபாளத்தைத் தன் மாநிலங்களில் ஒன்று போல நடத்தி மேலாண்மை செய்வதை அது தொடர்ந்தால் இந்திய வெறுப்பு அங்கு அதிகமாகும். சிக்கிம் உதாரணம் அவர்களை ஏற்கனவே அச்சுறுத்திக் கொண்டுள்ளதை இந்தியா கவனம் கொள்ள வேண்டும். நேபாளத்தையும் பகைத்துக் கொள்வது இந்தியாவிற்கு நல்லதல்ல.

ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து கற்க வேண்டியதும் அது கற்றுக்கொள்ள வேண்டியதும்

கடந்த இரு மாதங்களாக எந்த இதழைத் திறந்தாலும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய செய்திகளும் கட்டுரைகளுந்தான் நிறைந்துள்ளன. தோன்றிய ஓராண்டுக்குள் இரு பெரும் கட்சிகளை வீழ்த்தி ஒரு மாநில ஆட்சியைப் பிடித்தது, ஏராளமான முக்கிய தலைகள் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி ஓடி வருவது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 400 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக நம்பிக்கையுடன் அறிவித்திருப்பது என்பதெல்லாம் எல்லோரது புருவங்களையும் உயர்த்தியுள்ளன. இது எப்படி நிகழ்ந்ததென அரசியல் விமர்சகர்கள் வரிந்து வரிந்து எழுதித் தள்ளுகின்றனர்.

கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களில் ஆட்சியைப் பிடிப்பது என்பதெல்லாம் அப்படி ஒன்றும் இந்திய வரலாற்றில் புதிதல்ல, என்.டி.ராமாராவின் தெலுங்கு தேசம், எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க, அஸ்ஸாம் கண பரிஷத் முதலியவை இந்தச் சாதனைகளைச் செய்துள்ளன. ஆனால் இவை யாவும் மாநில அளவுகளில் நடந்தவை. ஆம் ஆத்மி டெல்லி முதல் தமிழகத்தில் நமது சுப. உதயகுமார் வரை தன் வலையை விரிக்க முடிந்துள்ளதுதான் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒட்டு மொத்தமாக இந்திய அரசியலில் மக்கள் சலிப்படைந்துள்ளனர்; ஊழல், வாரிசு அரசியல், சாதாரண மக்களை மதிக்காமை ஆகியவற்றால் ஆத்திரமுற்றுள்ள மக்கள் ஒரு மாற்று அரசியலை விரும்புகின்றனர்; அரசியல் விளையாட்டின் விதி முறைகளை மாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது, சாதாரண மக்களது பிரச்சினைகளை முன்நிலைப்படுத்தும் கட்சிகளுக்குத்தான் இனி எதிர்காலம் என்கிற ரீதியில் ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து அரசியல் விற்பன்னர்களும் பத்தி எழுத்தாளர்களும் எழுதித் தள்ளுகின்றனர். “குறுகிய அடையாள அரசியலுக்கு” இனி காலமில்லை என்றும் பேசப்படுகிரது.

மக்கள் இன்றைய அரசியலில் சலிப்படைந்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் ஒரு மாற்று அரசியல் சக்தியாக ஆம் ஆத்மி அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்பப் போகிறது?

அரசியல் கட்சிகள் இப்படிச் சாதாரண மக்களை முன்னிறுத்துவது புதிதல்ல. இந்தியா, சாதி ரீதியாக, மொழி நீதியாக, மத ரீதியாக, பொருளாதார ரீதியாக இப்படிப் பல மட்டங்களில் சாதாரண மக்கள் நிரம்பிய ஒரு நாடு. மாற்று அரசியல் கட்சிகளாக உருவெடுத்த எல்லாமே இப்படிச் சாதாரண மக்களை முன்னிறுத்திப் பேசித்தான் மேலுக்கு வந்தன. தேர்தலைச் சார்ந்து நிற்கும் கட்சிகள் எதுவும் சாதாரண மக்களைப் பற்றி எப்படிப் பேசாமல் இருக்க இயலும்? திராவிட இயக்கம் தமிழகத்தில் உருவானபோது அது பார்ப்பனரல்லாத மற்ற சாதாரண மக்களை முன் நிறுத்தியது. வட நாட்டில் லோகியா வழிக் கட்சிகள் இப்பபடி அமைந்தன. ஆனால் கூடிய விரைவில் இவர்களைக் காட்டிலும் சாதாண மக்கள் பற்றிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. தலித் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உருவாயின. பொதுவுடமைக் கட்சிகள் எப்போதுமே தொழிலாளர், விவசாயிகள், பழங்குடிகள் என அவை சாதாரண மக்களை மட்டுமே பேசின. அது மட்டுமல்ல இவைதான் முதன் முதலாகத் தாங்கள் சாதாரண மக்களுக்காக மட்டுமே நிற்பதாக வெளிப்படையாகச் சொல்லி களமிறங்கின.

எனில் ஆம் ஆத்மி கட்சி எந்த வகையில் சாதாரண மக்களை முன்வைப்பதால் தனித்துவம் பெறுகிறது? அக்கட்சி அப்படி என்ன ஆம் ஆத்மிகளின் பிரச்சினைகளை முன்வைக்கிறது? “ஊழல் என்பது எல்லா சாதாரண மக்களையும் பாதிக்கிறது, அந்த வகையில் சாதி, மத, இன, மொழி அடையாளங்களை எல்லாம் மீறி இம்மக்களை எங்களால் ஒன்றிணைக்க முடியும்” என்கிறார் கெஜ்ரிவால் (ஃப்ரன்ட்லைன், ஜன 24, 2014). ஆனால், சாதாரண மக்கள் கட்சி எனப் பெயரிருந்தாலும் இதில் உள்ள முன்னணித் தலைவர்கள் யாரும் கக்கனையோ, காமராஜரையோ இல்லை கருணாநிதியைப் போலவோ அப்படி ஒன்றும் சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்களல்ல; பெரும்பாலும் ஐ.ஏ.எஸ், அய்.பி.எஸ், முன்னாள் உயர் அதிகாரவர்க்கத்தினர், பேராசிரியர்கள் இப்படியான பின்புலமுள்ளவர்கள்தான்; நிதி அளிப்பவர்கள், தேர்தல் பிரச்சரத்திற்கு வந்தவர்கள் பட்டியலில் வெளிநாட்டு இந்தியர்கள் அதிகம்; ஊழல் நல் ஆளுகை முதலியவற்றைக் கோரி இவர்களுக்காகத் தெருவில் இறங்குபவர்கள் பெரும்பாலோர் 27 தள அடுக்குமாடிக் கட்டிடவாசிகள்தான் என்றெல்லாம் எழுகிற விமர்சனங்களை வெறும் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் சொல்லப்படுபவை என எளிதாக ஒதுக்கிவிட இயலாது.

இன்னொன்றையும் நாம் யோசிக்க வேண்டும். “சாதாரண மக்கள்” என்றாலே புரட்சிகரமானவர்கள் என்கிற ரீதியில் புனித பிம்பம் ஒன்றைக் கட்டுவது அபத்தம். கட்டுரையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளது போல இட்லருக்கு வாக்களித்தவர்களும் அவரது ஏவலில் யூதர்களைக் கொன்று குவித்தவர்களும் சாதாரண மக்கள்தான், குஜராத்தில் மோடியின் கடைக்கண் வீச்சில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர்களும் சாதாரண மக்கள்தான், சாதாரண மக்களாயினும் சரியான அரசியல் மயமாகும்போதே மாற்றத்துக்குரிய சக்திகள் ஆகிறார்கள்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் பேச்சுக்களைப் பார்த்தால் அவர்கள் “இன்றைய இந்திய அரசியலை” மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக அரசியலையே வெறுக்கக்கூடியவர்களாகத்தான் தோன்றுகிறது. இக்கட்சியின் முக்கிய கருத்தியலாளரான பேராசிரியர் யோகேந்திர யாதவ். சி.என்.என் தொலைகாட்சிப் பேட்டியொன்றில், “20ம் நூற்றாண்டு அரசியல் சொல்லாடலான இடது / வலது என்கிற எதிர் முரணுக்கு இந்த நூர்றாண்டில் இடமில்லை” என்றார். கெஜ்ரிவாலும் இடது / வலது என்பதற்கெல்லாம் என்ன முக்கியத்துவம் என எனக்குத் தெரியவில்லை.: பிரச்சினைகளைக் கண்டு தீர்வு காண்பது மட்டுமே என் பார்வையில் உள்ளது” என்கிறார்.

பிரச்சினைகளின் பின்னாலுள்ள அரசியலைப் பார்க்காமல் எப்படிப் பிரச்சினைகளைத் தீர்க்க இயலும்? டெல்லியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது, இலவசமாகத் தண்ணீர் வழங்குவது என்கிற இரு பிரச்சினைகளை ஆம் ஆத்மி எடுத்தது. டெல்லியில் இப்படி மின்சாரக் கட்டணம் அதிக அளவில் இருப்பதற்கு மின்சார வினியோகம் தனியார் மயப் படுத்தப்பட்டதுதான் முக்கிய காரணம். பில்லியன் கணக்கில் மெகா ஊழல்கள் நடப்பதெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாமல் சந்தையை பன்னாட்டு மூலதனத்திற்குத் திறந்து விட்ட பின்புதான், இது குறித்தெல்லாம் அரசியல் ரீதியான அணுகல்முறைகளை உருவாக்காமல் அப்போதைக்கப்போது முடிவெடுப்பது (adhochism) எப்படிச் சரியாக இருக்க முடியும்?

கருத்தியலின் காலம் முடிந்துவிட்டது; தலித், பிற்படுத்தப்பட்டவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் என்கிற அடையாள அரசியலுக்கு இனி இடமில்லை: காரியம் நடக்க வேண்டும், இதுதான் எங்கள் கொள்கை என ஆம் ஆத்மி கட்சியினர் மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே சொல்கிறார்கள். மேலே குறிப்பிட்ட ஃப்ரன்ட்லைன் நேர்காணலை மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். தலித், ஆதிக்க சாதி, இந்து, முஸ்லிம், ஏழை, பணக்காரர் எல்லோரையும் ஊழல் எதிர்ப்பு என்கிற அம்சத்தில் ஒன்றாக்கி விடுவோம் என்கிறார் கெஜ்ரிவால், தமிழன், ஈழம் என்றெல்லாம் சவடால் அடிப்பவர்களே பரமக்குடி, தருமபுரி என வருகிறபோது உடைந்து சிதறி விடுகிறார்கள். ஊழலைப் பிரச்சினையாக்கி எவ்வாறு எல்லோரையும் ஒன்றாக்கப் போகிறார் கெஜ்ரிவால்?

கருத்தியல் அல்ல, ஊழல் மர்றும் காங்கிரஸ் எதிர்ப்புதான் முக்கியம் என்று “மாற்று அரசியலை” முன் வைத்த ஆனானப்பட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், வி.பி.சிங் எல்லோரது கதியும் என்னாயிற்று? கருத்தியலைக் கண்டுகொள்ள வேண்டாம் என ஆர்.எஸ்.எஸ்சை அணைத்துக் கொண்டார்கள். அது அவர்களுக்குத்தான் இழப்பாக முடிந்தது. இந்துத்துவ அரசியலுக்கே அது வலு சேர்த்தது, ஜெயப்பிரகாசரின் நவநிர்மாண் இயக்கத்தின் மூலமாக மேலுக்கு வந்தவர்தானே நரேந்திர மோடி.

சரி, ஆம் ஆத்மி கட்சி மாற்று அரசியல் என்கிற முழக்கத்துடன் இன்று மேடை ஏறியுள்ளது. நிச்சயமாக இன்றைய அரசியலை மாற்றித்தான் ஆக வேண்டும் என்கிற நாம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனக் காது கொடுத்துக் கேட்பதுதான் முறை. அதோடு இப்போதுதான் களத்திற்கு வந்துள்ளவர்களுக்குக் கொஞ்சம் கால கெடு கொடுத்து விமர்சிப்பதுதான் பண்பாடும் கூட, அவர்களின் வருகையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள இயலும், நம்முடைய அநுபவங்களிலிருந்து நாம் அவர்களுக்கு என்ன சொல்ல இயலும் என்பதை மட்டும் பார்ப்போம்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தல் (2009) முடிவுகளை ஆய்வு செய்து நான் ‘மக்கள் களத்தில்’ எழுதிய கட்டுரையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தோல்வியையும் நிதிஷ் குமாரின் வெற்றியையும் ஒப்பிட்டு “நல் ஆளுகை” என்கிற முழக்கத்தை நோக்கி இந்திய அரசியல் நகர்வது குறித்துக் கவனத்தை ஈர்த்திருந்தது நினைவிருக்கலாம். ஆம் ஆத்மி அதையே முழக்கமாக்கித் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியுள்ளது என்றால் இன்னொரு பக்கம் நரேந்திர மோடி வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம், வலிமையான இந்தியா என்கிற சொல்லாடல்களை விரிக்கிறார். நிதிஷ் குமார் ஐந்தாண்டுகளுக்கு முன்பே நல் ஆளுகை என்பதை முன்வைத்துக் காய்களை நகர்த்தி அடையாள அரசியல் பேசிய லாலு பிரசாத் யாதவை இல்லாமல் ஆக்கினார். காங்கிரசும் இப்போது உணவு உரிமைச் சட்டம், கல்வி, தகவல் உரிமைச் சட்டங்கள், பொருளாதாரச் சீர்திருத்தம். மகாத்மா காந்தி வேலைத் திட்டம் என்பவற்றை முன் நிறுத்திப் பார்க்கிறது.

இந்த இடத்தில் நாம் அடையாள அரசியலுக்கு ஏற்பட்ட சரிவைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். தலித், மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை அடையாளங்களுடன் வெளிப்போந்த கட்சிகள் இயக்கங்கள் எல்லாம் இன்று பொலிவிழந்து நிற்கின்றன. பிற வெகு மக்கள் கட்சிகளில் உள்ள ஊழல்கள் அத்தனையும் இன்று அவற்றுக்குள்ளும் உள்ளன. இது நாள் வரை மற்றவர்கள் செய்து வந்தார்கள், நாங்கள் செய்ய வரும்போது குற்றம் சொல்கிறீர்களே என இதற்கொரு தத்துவ நியாயங்கள் வேறும் முன்வைக்கப்பட்டன. மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிகமான தலைவர் வழிபாடு, குடும்ப அரசியல், கட்டப் பஞ்சாயத்து. குறுகிய அரசியல் பலன்களுக்காக முறையற்ற கூட்டணிகள் அமைப்பது (எ.காட்டாக மாயாவதி பகுஜன்னைச் சர்வஜன் ஆக்கிப் பார்ப்பனர்களை உள் இழுத்துக் கொண்டது, பா.ம.க இந்துத்துவத்தின் பக்கம் சாய்வது) இறுக்கமான அடையாளக் கட்டமைப்புகளின் விளைவாக உட்பிரிவு மோதல்களை ஏற்படுவது, எளிதில் ஊழல் வயப் படுவது…… என நிறையச் சொல்லலாம். இந்த இயக்கங்கள் அடையாளங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளுக்குக் கொடுக்காதது கவனத்திற்குரியது. தாங்கள் தவறாகச் சித்திரிக்கப் படுவதாகக் கருதப்படும் ஒரு சினிமா அல்லது புத்தகத்திற்குக் காட்டப்படும் எதிர்ப்பு தமது மக்கள் தாக்கப்படும்போதும், பாதிக்கப்படும்போதும் காட்டப்படுவதில்லை என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல இயலும். தமிழக அரசு ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்காததையோ, தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கையையோ முன் வைத்து தமிழக அளவிலும் இந்திய அளவிலும் போராட்டங்கள் எதையும் இவர்கள் எடுக்க முயலவில்லை என்பது ஒரு எடுத்துக்காட்டு.

எனினும் நாம் இங்கே ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தியா பல இனங்கள், சாதிகள், மதங்கள் உள்ள ஒரு பன்மைப் பூமி. இங்கு இந்த அடிப்படையில் எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. இந்தச் சூழலில் ஆளுகை என்பது வெறும் வளர்ச்சி மற்றும் உற்பத்திப் பெருக்கம் சார்ந்து மட்டும் இருக்க இயலாது. வளர்ச்சி ஏற்பட்டால் தானாகவே மற்ற எல்லாம் சரியாகி விடும் என்று நம்பிய காலம் மலையேறி விட்டது. எத்தனைதான் அடையாள அரசியலில் மேலே குறிப்பிட்ட தவறுகள் மலிந்திருந்தாலும், அவற்றின் ஊடாக இதுகாறும் ஒடுக்கப்பட்ட, அடையாளம் மறுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் உரிய முக்கியத்துவம் பெறும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தது போல அவர்கள் மீதான தாக்குதல்களை இன்று அப்படி ஒன்றும் மறைத்துவிடவோ, காரணமானவர்கள் தண்டனையிலிருந்து தப்பித்துவிடவோ இயலாது ஏற்கனவே இது தொடர்பான பல சட்டங்களிருந்தும், அவற்றால் சாதிக்க இயலாதவற்றை இன்று உருவாகியுள்ள இந்த அடையாளப் பிரக்ஞைதான் சாத்தியமாக்கியுள்ளது.

தவிரவும் இன்று “வளர்ச்சி”, “ஊழலின்மை” “நல் ஆளுகை” பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் இந்த அடையாளங்களுக்கு முற்றிலும் அப்பார்பட்டவர்களல்ல. மோடி சொல்லும் வளர்ச்சி முஸ்லிம்களை விலக்கிய வளர்ச்சிதான். கெஜ்ரிவாலின் அரசியல் ஒரு வகை மத்தியதர வர்க்க மனநிலையைத்தான் பிரதிபலிக்கிறது. இரு வாரங்களுக்கு முன் டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சர் சோம்நாத் பாரதி டெல்லியிலுள்ள கிர்கி பகுதியில் ஆப்ரிக்கக் கருப்பினப் பெண்களை இனவெறி நோக்கில் பேசி அவமானப்படுத்திய பிரச்சினையில் டெல்லியின் மத்தியதர வர்க்க மக்கள் மத்தியில் நிறைந்துள்ள இன வெறுப்பு அப்படியே வெளிப்பட்டதைப் பார்த்தோம்.

எப்படி இருந்தபோதும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பின் அடிப்படையில் கீழ்க்கண்ட பாடங்களை காங்கிரசும் பா.ஜ.கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என அரசியல் நோக்கர்கள் எழுதுகின்றனர். அவை: 1) அரசியலில் எளிமை, 2) சாதாரண மக்களை மதித்தல் 3) அரசியல் முடிவுகளிலும் நிதி வரத்துகளிலும் வெளிப்படைத் தன்மை, 4) வாரிசு அரசியலுக்கு முழுக்கு, 5) ஊழலற்ற அரசியல் மற்றும் ஆளுகை ஆகியன. இவை ஒரு ஜனநாயக அரசியலுக்கான அடிப்படைகள் என்பதை யாரும் மறுக்க இயலாது. இவை இன்றைய அரசியலில் வெளிப்படவில்லை என்பதும் உண்மைதான். இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டியது காங்கிரசும் பா.ஜ.கவும் மட்டுமல்ல, இங்குள்ள அடையாள அரசியல் இயக்கங்களுந்தான்.

காங். பாஜக, மற்றும் அடையாள இயக்கங்கள் இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், வளர்ச்சி மற்றும் நல் ஆளுகை பற்றிப் பேசினால் போதும் என்கிற ஆம் ஆத்மி கட்சியும் வரலாற்றிலிருந்து ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது பல் இன, மொழி, சாதி, மத மக்கள் வசிக்கும் நாடு; தலித்கள், சிறுபான்மையோர் முதலான ஒடுக்கப்பட்ட பிரிவினரும் உள்ள நாடு. கடும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட அடிப்படை வர்க்கத்தினர் மலிந்த நாடு. எந்த ஊழலற்ற ஆட்சியும் வளர்ச்சியை முன் நிறுத்தும் ஆளுகையும் இந்த எதார்த்தங்களைக் கணக்கில் கொண்டதாக, இவர்களை உள்ளடக்கியதாக இருந்தாக வேண்டும் என்பதுதான் அந்தப் பாடம்.