சம்பத் ஆணைய அறிக்கையை முன்வைத்து விசாரணை ஆணையங்கள் பற்றி ஒரு குறிப்பு  

(2011ல் பரமக்குடியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பட்டையல் இன மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான கமிஷன் 2013ல் அறிக்கை அளித்தது. காவல்துறை அத்துமீறல்களை முழுமையாக நியாயப்படுத்திய அந்த அறிக்கை மக்கள் மீதே குற்றத்தைத் திருப்பியது. அபோது எழுதப்பட்ட கட்டுரை)

For Daily:27/09/11:Ramanathapuram: Justice Sampath,(second from left) who has been appointed by the State government to inquire into the police firing, inspecting the firing place at Five Point Junction at Paramakudi on Tuesday. Photo:L_Balachandar [with report]
For Daily:27/09/11:Ramanathapuram: Justice Sampath,(second from left) who has been appointed by the State government to inquire into the police firing, inspecting the firing place at Five
Point Junction at Paramakudi on Tuesday. Photo:L_Balachandar [with report]

பரமக்குடியில், சில ஆண்டுகளுக்கு முன், பட்டியல் சாதிகளுள் ஒன்றான தேவேந்திர குல வேளாளர் பிரிவைச் சேர்ந்த ஆறு பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதை (செப் 11, 2011) விசாரிப்பதற்காக ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட சம்பத் ஆணையம் நாம் எதிர்பார்த்ததிலிருந்து இம்மியும் மாறாத வகையில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. செப் 13, 2011 அன்று நியமிக்கப்பட்ட இந்த ஆணையம் 20 மாதங்களுக்குப் பின் சென்ற மே 7, 2013 அன்று தன் அறிக்கையை சமர்ப்பித்தது. சுமார் நான்கு மாதங்கள் கழித்து, சரியாக முத்துராமலிங்கரின் நினைவு நாளுக்கு (அக் 30) முதல் நாள் அதை அரசு சட்டமன்றத்தில் வைத்தது. அ.தி.மு.கவின் ஆதரவுத் தொகுதிகளில் ஒன்றான முக்குலத்தோருக்கு அவர்களின் பூஜைக்குரிய குருவான முத்துராமலிங்கரது நினைவு நாள் பரிசாக சம்பத் ஆணைய அறிக்கை அளிக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள யாருக்கும் பெரிய புத்திசாலித்தனம் வேண்டியிருக்கவில்லை.

சம்பத் ஆணையம் என்ன சொல்லியிருக்கிறது என்பதைப் பார்க்குமுன் பரமக்குடி கொலைகள் தொடர்பாக அரசு தரப்பில் அதற்கு முன் என்ன சொல்லப்பட்டன எனப் பார்க்கலாம். துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த நாள் (செப் 12) முதலமைசர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அது குறித்து இரண்டு விஷயங்களைச் சொன்னார். 1) மண்டலமாணிக்கம் கிராமத்தில் முத்துராமலிங்கர் குறித்து அவதூறாகச் சுவரில் எழுதியதை ஒட்டி பழனிக்குமார் என்னும் மாணவன் செப் 9ம் தேதியன்று கொல்லப்படுகிறான். அதை ஒட்டிய சம்பவங்களின் தொடர்ச்சியாகவே துப்பாக்கிசூடு நடந்தது. 2) தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் ஒரு பெரும்படையுடன் பழனிகுமாரின் மரணத்திற்குத் துக்கம் விசாரிக்கச் செல்லும்போது கலவரம் ஏதும் வராமல் தடுப்பதற்காக அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரது சுமார் 500 ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கலையச் சொல்லி அறிவுரை பகன்ற போதும் அவர்கள் கலையவில்லை. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசிக் கலைக்க முயன்றபோது அவர்கள் காவலர்களைத் தாக்கினார்கள். கற்களை வீசினார்கள். பெட்ரோல் குண்டுகளை எறிந்தார்கள். ‘வஜ்ரா’ போலீஸ் வாகனத்தை எரித்தார்கள். தற்காப்பிற்காக காவலர்கள் சுட வேண்டியதாயிற்று. துரதிர்ஷ்டவசமாக ஆறு பேர் சாக வேண்டிய நிலை ஏற்பட்டது. டி.ஜி.பி சந்தீப் மிட்டால் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.

இவை அன்று பரமக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அன்று ஜெயலலிதா சொன்னவை.

டிசம்பர் 22, 2011 அன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் அமர்வு ஒன்றில் நீதிபதிகள் கே.என்.பாஷா மற்றும்  எம்.வேணுகோபால் இருவரும் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.அய் விசாரணைக்கு ஆணையிட்டனர். அப்போது அரசு தரப்பில் எதிர் மனுவைத் தாக்கல் செய்த டி.ஐ.ஜி ராஜேஷ் தாஸ் அதில் இது குறித்து ஜெயா அன்று சட்டமன்றத்தில் என்ன கூறினாரோ அதையே திருப்பிச் சொன்னர். கும்பல் வன்முறையை எதிர்கொள்ளவே, உரிய எச்சரிக்கைகளுக்குப் பின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றார்.

இப்போதுசம்பத் அறிக்கைக்கு வருவோம். அறிக்கையின் முக்கிய அம்சங்கள் சில: 1) “ஜான் பாண்டியன் பச்சேரி கிராமத்திற்குத் துக்கம் விசாரிக்கப் போனால் கலவரம் வரலாம் என உளவுத்துறைக்குத் தகவல் வந்ததால் அவரைத் தடுத்து நிறுத்த நேர்ந்ததே கலவரத்திற்குக் காரணமாக அமைந்தது, உரிய எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட பின்னரே துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது” முதலான ஏற்கனவே ஜெயாவாலும் தாசாலும் சொல்லப்பட்ட கதைகளை மீண்டும் ஒப்பித்திருந்தார் சம்பத். 2) “காவல்துறை தலித்களுக்கு எதிராகச் செயற்பட்டதாகச் சொல்லப்படுவது பொய். பழனிக்குமார் கொலையை ஒட்டி ஏற்கனவே பொங்கிக் கொண்டிருந்த தலித்கள்தான் வன்முறைக்குக் காரணம். காவல்துறையினர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. தற்காப்புக்காகத்தான் அவர்கள் சுட நேர்ந்தது காவல்துறை மட்டும் அன்று துப்பாக்கிச்சூடு நடத்தியிராவிட்டால் அதன் பின்விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும். இந்தக் காட்டுமிராண்டிக் கும்பலை (savage mass) அடக்குவதற்கு அன்று துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அவர்களின் வன்முறை அந்தப் பகுதியில் மட்டுமின்றி தென் மாவட்டங்கள் பூராவிலுமே சாதிக் கலவரத் தீயைப் பற்றவைத்திருக்கும்.” 3) “கலவரங்களைக் கட்டுப்படுத்த மற்ற எல்லா முறைகளையும் கையாண்டபின், இறுதியில் நிர்வாக மாஜிஸ்ட்ரேட் ஆன தாசில்தார் உத்தரவிட்டபின்னரே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது”. 4) “சுருங்கச் சொல்வதானால் கலவரக்காரர்களின் நடத்தை எல்லாவிதமான அடிப்படை நாகரீகங்களையும் கடந்து மிருகத்தனத்தின் எல்லையையயே தொட்டது. அது எக்காரணங்கொண்டும் மன்னிக்கக்கூடியதாக இல்லை”

ஆக, 2011 செப்டம்பர் 12 அன்று ஜெயா சட்ட மன்றத்தில் என்ன சொன்னாரோ, டிசம்பர் 21 அன்று டி.ஐ.ஜி தாஸ் நீதிமன்றத்தில் என்ன சொன்னாரோ அதையேதான் சம்பத் தன் அறிக்கையில் கொட்டியுள்ளார். நீதிபதியின் பங்கு இங்கே குற்றச்சாட்டின் உண்மை பொய்களை ஆய்வு செய்து உண்மையைக் கண்டு நீதி வழங்குவதாக இல்லை; மாறாக இங்கு நீதிபதியே அரசு வழக்குரைஞராக மாறிவிடுகிறார்.

சொல்லப்போனால் அரசின் வழக்குரைஞர் என்கிற நிலையையும் தாண்டி விடுகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் அவரும் அந்த அப்பாவி மக்களின் மேல் தாக்குதலையும் மேற்கொள்கிறார். முதலமைச்சரும் டி.ஐ.ஜியும் கூடச் சொல்லத் தயங்கிய சொற்களை என்ன அனாயசமாக உதிர்க்கிறார் பாருங்கள். “கட்டுமிராண்டிக் கும்பல்”, “எல்லாவிதமான அடிப்படை நாகரீகங்களையும் கடந்தவர்கள்”, “மிருகத்தனத்தின் எல்லையயே தொட்டவர்கள்” “எக்காரணங்கொண்டும் மன்னிக்கக் கூடாதவர்கள்” – இவை அனைத்தும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் நம் மக்கள் மீது அள்ளித் தெளித்துள்ள சேறு.  நல்ல வேளை நீதிபதி அவர்களின் கையில் துப்பாக்கி இல்லை.

அன்று ஐந்து முக்கில் கூடியிருந்த மக்கள் சுமார் 200 பேர். நின்றிருந்த போலீஸ்காரர்கள் 2000பேர். கூடியிருந்தவர்களால் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை. ஜான் பாண்டியனோ அன்று தடையை மீறி பச்சேரிக்குச் செல்ல முயலவில்லை. அவரை விடுதலை செய்திருந்தால் அன்று அத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது ஆனால் நம் நீதியரசர் என்ன சொல்கிறார் பாருங்கள், அன்று அவர்களை அப்படிச் சுட்டுத் தீர்த்திருக்காவிட்டால் சாதித் தீ தென் மாவட்டம் பூராவிலும் பரவியிருக்குமாம். கொல்லப்பட்டவர்கள் யாரும் ஜான் பாண்டியன் அல்லது டாக்டர் கிருஷ்ணசாமி அல்லது பூ.சந்திரபோசு ஆகியோரது அமைப்புகளில் தீவிர உறுப்பினர்கள் இல்லை. திருமண அழைபிதழ் கொடுக்க வந்தவரும். கடைக்கு வந்தவரும் அன்று அங்கு இருக்க நேர்ந்த அப்பாவி மக்களும் அல்லவா கொல்லப்பட்டனர்.

நீதிபதி இன்னும் ஒருபடி மேலே போய் ஜான் பாண்டியனுக்கும் டாக்டர் கிருஷ்ண சாமிக்கும் இடையே இருந்த பகையே எல்லாவற்றிற்கும் காரணம் என்கிறார். என்னத்தைச் சொல்லுவது. மனித உரிமைப் போராளியும் சிறந்த சிந்தனையாளருமான டாக்டர் பாலகோபால் ஒருமுறை சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நீதியரசர்கள் இப்படிப் பல சந்தர்ப்பங்களில் கொடிய தீர்ப்புகளை வழங்குவது என்பதன் அடிப்படையாக அந்தக் குற்றங்களின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பு உள்ளது என்பதைக் காட்டிலும் அவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது அவர்கள் கொண்ட வெறுப்பே அடிப்படையாக உள்ளது.

என்ன இருந்தாலும் இது ஒரு “நடுநிலையான விசாரணை ஆணையம்” என்கிற பெயரைக் காப்பாற்றியாக வேண்டுமல்லவா. போனால் போகிறது என்று காவல்துறையினர் மீது ஒரே ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். கலவரக் காட்சிகளின் வீடியோ பதிவுகளை எல்லாம் பார்த்தபோது (தங்களை) தாக்கியவர்களில் சிலரைக் காவல்துறையினர் பழிவாங்கும் நோக்குடன் திருப்பித் தாக்கியதைக் கண்டாராம். இது அவர்களுக்குப் புகழை அளிக்கக் கூடிய செயல் இல்லையாம்.

வேதனை என்ன தெரியுமா? இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வெளியிடும்போது இம்முறை அரசு ஒன்றைச் சொல்லியிருந்தது. மேலே சொன்ன “காவல்துறையின் புகழைக் குறைக்கும்” அந்த இரு வரிகளை அரசு நிராகரிக்கிறது என்பதுதான் அது. கலவரத்தை அடக்குவதில் காவல்துறை மிகச் சிறந்த பாராட்டத்தக்க முறையில் நடந்து கொண்டபோதும், கலவரம் அடங்கியபின் சில காவலர்கள் நடந்து கொண்டது சரியில்லை என சம்பத் ஆணையம் தயங்கித் தயங்கி, நசுக்கி நசுக்கிச் சொல்லியிருந்தபோதும் அதைக்கூட ஜெயலலிதா அரசல் சகித்துக் கொள்ள இயலவில்லை. சாலை மறியல் செய்த தேவேந்திரர்களைக் காட்டுமிராண்டிகள், மிருகத்தனத்தின் எல்லையைத் தொட்டவர்கள் என்றெல்லாம் அறிக்கை இழிவு செய்ததைக் கண்டுகொள்ளாத அரசுக்கு, ஒரு சில போலீஸ்காரர்களின் நடத்தை புகழுக்குரியதாக இல்லை என்கிற சொற்களை மட்டும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த மூன்றாம் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில் தன்னுடைய ஆட்சியில் காவல்துறைக்கு எல்லாச் சுதந்திரங்களும் உண்டு எனவும், “இராணுவ வீரர்கள் எல்லையைக் காக்கிறார்கள், காவல்துறையினரோ உள் நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காக்கிறார்கள்” எனவும் புகழ்ந்ததோடு காவல்துறையினர் சலுகை விலையில் பொருள்களைப் பெற “போலீஸ் கான்டீன்” திறக்கப்படும் என அறிவிப்பும் செய்தவரல்லவா ஜெயலலிதா..

ஆணையத்தின் பரிந்துரைகளில் மதுவிலக்கை அமுல் செய்தல் மற்றும் இலவசங்கள் வழங்குவதை நிறுத்துதல் ஆகிய பரிந்துரைகளை, அவை ஆணையத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை என அரசு நிராகரித்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அளித்திருந்த அறிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்ட தீர்ப்புக்கனி தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் உயிருடனேயே பிணவறைக்குக் கொண்டு வரப்பட்டதாக நிலவும் ஐயத்தையும், சுட்டுக் கொல்லப்பட்ட வெள்ளைச்சாமியின் மரணம் தொடர்பான ஐயத்தையும் பதிவு செய்திருந்தோம். சம்பத் ஆணையமும் இந்த இரு மரணங்கள் குறித்து “இன்னும் தீவிரப் புலனாய்வு” மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது.  கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது, இது போன்ற சந்தர்ப்பங்களில் பெண் காவலர்களைக் களத்தில் இறக்கக்கூடாது முதலியன வேறு சில பரிந்துரைகள். சாதித் தலைவர்களின் சிலைகளை அமைக்கக்கூடாது என ஆணையத்தின் முன் தெரிவிக்கப்பட்ட கருத்தொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது

சம்பத் ஆணையம் மட்டுமல்ல ஆகஸ்ட் 1995 ல் நடைபெற்ற தென்மாவட்டக் கலவரங்கள் எனப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டக் கலவரங்கள் குறித்த கோமதிநாயகம் ஆணையமும் இப்படித்தான் காவல்துறை அத்துமீறல்களையும் அக்கிரமங்களையும் புனிதப்படுத்திச் சான்றிதழ் வழங்கியது. மார்ச் 1996 ல் அன்றைய அ.தி.மு.க அரசிடம்  கோமதிநாயகம் தன் அறிக்கையை அளித்தார். எனினும் 1999 நவம்பர் 23 அன்றுதான் அடுத்து வந்த தி.மு.க அரசு அந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வைத்தது. முற்றிலும் தேவேந்திரர்களே வசிக்கும் கொடியங்குளம் கிராமத்தில் ஆக 31, 1995 அன்று சுமார் 600 காவல்துறையினர் நடத்திய தாக்குதலையும் துப்பாக்கிச்சூட்டையும் கோமதி நாயகம் ஆணையம் “முற்றிலும் நியாயமானது” எனவும், எந்த “அத்துமீறல்களும்” அதில் நிகழவில்லை எனவும் சான்று வழங்கியது.

ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்டு அமைக்கப்படும் இத்தகைய விசரணை ஆணையங்கள் இப்படி நியமித்தவர்களுக்கு விசுவாசமாக அறிக்கை அளிப்பது என்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளன. பதவியிலுள்ள நீதிபதிகளானாலும் கூட பல நேரங்களில் இப்படித்தான் நடக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் என்கிறபோது சும்மா சாய்வு நாற்காலிகளில் படுத்துக் கொண்டு ‘இந்து’ பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தவர்களுக்குக் கை நிறையச் சம்பளம், ஆள், தேள் அதிகாரங்கள் என வரும்போது நன்றி விசுவாசம் அவர்களின் நீதியுணர்வை மழுங்கடித்துவிடுகிறது, மொத்தத்தில் தம் மீதான குற்றச் சாட்டுகளைக் கறை நீக்கம் செய்துகொள்ளும் ஒரு கருவியாக இத்தகைய விசாரணை ஆணையங்கள் ஆட்சியாளர்களுக்குப் பயன்படுகின்றன. பாபர் மசூதி இடிப்பை ஒட்டி நியமிக்கப்பட்ட லிபரான் ஆணையம் சுமார் 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 18 கோடி ரூபாய் செலவிற்குப் பின் அன்றைய பிரதமர் நரசிம்மாராவுக்குக் “க்ளீன் சிட்” அளித்தது. இப்படி நிறையச் சொல்லலாம். தப்பித் தவறி ஶ்ரீகிருஷ்ணா போன்ற சில நேர்மையான நீதியரசர்கள் நல்ல நேர்மையான அறிக்கை ஒன்றை அளித்தால் அவற்றின் பரிந்துரைகள் குப்பைக் கூடைக்குப் போவதுதான் வழக்கமாக உள்ளது. மும்பைக் கலவரத்தில் (1992) குற்றமிழைத்த காவல்துறை அதிகாரிகளை நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தன் அறிக்கையில் கச்சிதமாக அடையாளம் காட்டியிருந்தபோதும் அவர்கள் எல்லோரும் பதவி உயர்வுகள் பெற்று முழுப் பணிக் காலத்தையும் சுகமாக முடித்துப் பணி ஓய்வு பெற்றனர். ஜெயலலிதா மட்டுமல்ல பெரும்பாலும் எந்த அரசியல்வாதியும் காவல்துறையினரை விட்டுக் கொடுப்பதில்லை.அ.தி.மு.க அரசுகள், குறிப்பாக ஜெயா இதில் படுமோசம் என்பதுதான்.

இந்த அடிப்படையில்தான் நாம் விசாரணை ஆணையங்கள் குறித்த நமது பார்வைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எக்காரணம் கொண்டும் விசாரணை ஆணையங்களே தேவையில்லை எனச் சொல்ல முடியாது. இதுபோன்ற காவல்துறை அத்துமீறல்கள், சாதி, மதக் கலவரங்கள், இயற்கைப் பேரழிவுகள் முதலியவற்றில் விசாரணை ஆணையங்கள் அமைப்பதைத் தவிர்த்துவிட இயலாது. பல்வேறு வித்தியாசங்கள் மிக்க சமூகங்களின் தொகுப்பாக ஒரு நாடு அமையும்போது அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பன்முகப் பரிமாணம் கொண்டவையாக அமைகின்றன. அவற்றை வெறும் சட்ட ஒழுங்கு அளவுகோலை வைத்து மட்டுமே அளந்துவிட இயலாது. காவல்துறை விசாரணைகள், அது உள்ளூர் மட்டத்திலோ இல்லை சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ மட்டங்களிலோ மேற்கொள்ளப்பட்டாலும் கூட அவையும் இவற்றை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவே பார்க்கும்.

எனவேதான் வெறும் காவல்துறை விசாரணைக்கு அப்பாற்பட்ட, பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் கணக்கில் கொள்ளத் தக்க விசாரணை ஆணையங்கள் தவிர்க்க இயலாதவை என்கிறோம். தவிரவும் இது போன்ற கலவரங்கள், அத்துமீறல்கள், பேரழிவுகள் முதலானவை குறித்த  முழுமையான உண்மைகளை அறிந்துகொள்ளும் உரிமை குடிமக்களுக்கு உண்டு என்கிற வகையிலும் இத்தகைய ஆணையங்கள் அவசியமானவை. அதே நேரத்தில் அவை இப்போதுள்ளதைப்போல அல்லாமல் இன்னும் அதிகாரமிக்கதாய், வெளிப்படைத்தன்மை உடையவையாய், அரசியல் தலையீடில்லாமல் சுதந்திரமாய் இயங்கக்கூடியதாய், மக்களுக்குப் பொறுப்பானதாய் அமைதல் வேண்டும்.

இந்த அடிப்படையில் “1955 ம் ஆண்டு விசாரணை ஆணையங்கள் சட்டம்” மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதில் என்னென்ன அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் எனப் பார்க்கலாம்.

காவல்துறை விசாரணை என்பது பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் பார்க்காமல் அதை வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையகாவே அணுகுகிறது என்றோம். விசாரணை செய்யும் இடத்தில் நீதிபதிகளை அமர வைத்தாலும் இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடுவதில்லை. அவர்களும் பிரச்சினையின் சகல பரிமாணங்களையும் பார்க்கும் பயிற்சி பெற்றிருப்பதில்லை, எல்லாவற்ரையும் சட்ட மற்றும் நீதிவழங்கு நெறிமுறைகளுக்குள்ளேயே சுருக்கிப் பார்த்துப் பார்த்தே பழக்கப்பட்டவர்கள் அவர்கள். பி.என்.பகவதி, கிருஷ்ண அய்யர் அல்லது ஜே.எஸ்.வர்மா போன்ற விசாலமான சிந்தனையையும், அகன்ற பார்வையையும் கொண்ட நீதிபதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

எனவே இதுபோன்ற ஆணையங்கள் நீதிபதிகளைக் கொண்டே அமைக்கப்படவேண்டும் என்பது முதலில் மாற்றப்பட வேண்டும். நீதிபதிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் பிற துறை வல்லுனர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் முதலியவர்கள் பங்குபெறுவதாக அவை அமைய வேண்டும். “தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வளர்ச்சி நடவடிக்கைகள்” (Developmental activities in Extremist Affected Areas) என்பது குறித்து ஆராய 2006ம் ஆண்டு இந்திய அரசின் திட்ட ஆணையத்தால் (Planning Commission) நியமிக்கப்பட்ட ஆணையத்தை இதற்கொரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். டாக்டர் ஈ.ஏ.எஸ்.சர்மா, டாக்டர் என்.ஜே.குரியன், கே.பி.சக்சேனா, டாக்டர் கே. பாலகோபால், எஸ்.ஆர்.சங்கரன், டாக்டர் சுக் தியோ தோரட், டாக்டர் பேலா பாடியா முதலான துறை சார் நிபுணர்கள், முன்னாள் உயர் காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், மே.வங்கத்தில் நிலச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்திய அனுபவமிக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி எனப் 16 பேர்கள் இடம்பெற்ற அந்தக் குழுவின் அறிக்கை இணையத்தளங்களில் உள்ளது. (ஒவ்வொரு விசாரணை ஆணையத்திலும் இத்தனை எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்பதில்லை)

அடுத்து, இத்தகைய விசாரணை ஆணையத்தை அமைப்பது, உறுபினர்களைத் தேர்வு செய்வது, ஆணையத்தின் எல்லைகளையும் நோக்கங்களையும் வரையறுப்பது முதலான அதிகாரங்கள் இப்போதுள்ளதுபோல முழுமையாக அரசின் கைகளில் இருக்கக்கூடாது. இந்த அதிகாரம் ஒரு சுதந்திரமான குழுவிடம் இருக்க வேண்டும். அதில் அரசுப் பிரதிநிதிகள் தவிர, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்துறை நிபுணர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் முதலானோர்  இடம்பெற வேண்டும்.

இவ்வாறு அமைக்கப்படும் ஆணையம் எந்தவிதமான நிர்வாகத் தலையீடும் இல்லாமல் எடுத்துக்கொண்ட பிரச்சினைகள், அத்துமீறல்கள் ஆகியவற்றை முழுமையாக, ஆழமாகச் சென்று ஆராயும் அதிகாரமும் வசதிகளும் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆணையம் தன் அறிக்கையை அரசிடம் தராமல் முன் குறிப்பிட்டவாறு அமைக்கப்பட்ட ஒரு சுதந்திரமான அமைப்பு, அல்லது நாடாளுமன்ற/ சட்டமன்றக் குழு அல்லது நீதிமன்றத்திடம் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அளிக்க வேண்டும். இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்படுவதோடு, பரிந்துரைகளின் அடிப்படையில்  மேல் நடவடிக்கைக்கு ஆணையிடவும் இந்த அமைப்பு அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்.

இந்த அறிக்கையின் பரிந்துரைகள் ஒரு நீதிமன்றத் தீர்ப்பைப் போல சட்டபூர்வமான ஏற்பு (legal status) பெற வேண்டும்.

எனினும் ஆணையத்தின் பரிந்துரைகள் நீதிமன்றப் பரிச்சிலனைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் (subjected to judicial review) என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

இது ஒரு பூர்வாங்க முன்வைப்பு. இது விவாதிக்கப்பட்டு செழுமைப்படுத்தப்படலாம். இப்படியான ஒரு மாற்று நடைமுறை சாத்தியமா என்கிற அய்யம் தேவையில்லை. தகவல் அறியும் உரிமை, லோக் ஆயுதா முதலானவற்றின் ஊடாக மக்கள் அதிகாரம் பெறுகிற வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளபோது ஏன் இதையும் சாத்தியமாக்க இயலாது?

இன்றைய தகவல் யுகமும் இளைஞர்களும் ஒரு குறிப்பு

பதினைந்து நாட்களுக்குப் பின் இன்று குடந்தையில் கொஞ்ச தூரம் வாக்கிங் போனேன்.  அங்கு ஒரு கடையில் சூடாக வடை சாப்பிடுவது வழக்கம். அந்தக் கடையில் நான்கைந்து பேர் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். மூன்று பையன்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மாணவர்கள் இல்லை. படிக்கிற வயதில் வேலைக்குப் போக நேர்ந்த விடலை இளைஞர்கள். அதில் ஒருவனை எனக்குத் தெரியும். அருகிலுள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனிடம் இன்னொருவன் ஸ்பைக் வைத்துத் தலை சீவும் வித்தையைக் கேட்டான். அவன் எங்கே என்ன மாதிரி ஜெல் வாங்க வேண்டும், அதிலுள்ள ‘வெரைடி’கள் பற்றி எல்லாம் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். மூன்றாமவன் சொன்னான்: “ஏய், அப்டி ஸ்பைக் வச்சு ஒரு போடோ எடுத்து ஃபேஸ் புக்ல போடு.. போட்டியன்னா ஃபேஸ் புக் ஓனர் மாற்கு வே அசந்துடுவாரு..” என்றான். “ஃபேஸ் புக்ல போட்டு எல்லாரையும் ஒரு அசத்து அசத்தத்தாண்டா கேக்குறேன். சும்மா நூறு லைக்காவது விழுவும் பாரு..”

அங்கே டீ குடித்துக் கொண்டிருந்த இன்னொருவரையும் நான் அடிக்கடி பார்த்துள்ளேன். வயதானவர். எங்கள் வீட்டில் ஒரு குழாய் ரிப்பேர் செய்ய வந்த ப்ளம்பருக்கு உதவியாளராக ஒருமுறை வந்துள்ளார்.  சில நேரங்களில் வாடகை டயர் மாட்டு வண்டி ஒன்றையும் ஓட்டி வருவார் ஒரு கைலி, பனியனுடன் டீ உறிஞ்சிக் கொண்டிருந்தார். காலில் ஏதோ அடிபட்டிருந்தது. குச்சி ஊன்றி நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பையன்களைப் பார்த்து அவர் சொன்னார் : “டெக்கான் ஹைதராபாத்தை நம்ம சன் டிவி காரங்க வாங்கிட்டாங்க..”. திரும்பி என்னைப் பார்த்தும் ஒரு புன்னகையை வீசினார். எனக்கு கிரிக்கெட் விஷயங்கள் தெரியாது, ஐ.பி.எல் பற்றியும் அதிகம் தெரியாது என்பதை அவர் அறியார். நிச்சயம் தெரிந்திருக்கும் என்பது அவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கெடக்கூடாது என நானும் புன்னகைத்து வைத்தேன்.

முடி வெட்டுகிறவர்கள், மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் எல்லாம் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்துள்ளார்கள், ஐ.பி.எல் பற்றிப் பேசுகிறார்கள் எனச் சொல்வதல்ல என் நோக்கம். உலகிலேயே அதிகம் இன்டெர்நெட் பாவிப்பதில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்றாலும் அது இங்குள்ள மக்கள் தொகையால் வந்த எண்ணிக்கைப் பெருக்கம். இன்னும் கூட 10 சதம் மக்களே நம் நாட்டில் கணினி பாவிக்கின்றனர்.

ஆனாலும் இதுபோன்ற விடயங்களில் ஒரு ஜனநாயகப்பாடு இங்கே நடந்துள்ளது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. தொழில் நுட்பம் இதில் பெரும்பங்கு வகித்துள்ளது. தொழில் நுட்பத்திற்கு இரண்டு பண்புகள் உண்டு. ஒன்று அது சமூகத்தை ஜனநாயகப்படுத்தும்; மற்றது அது தன்னைப் புறக்கணிப்போரைக் கடுமையாகப் பழி வாங்கிவிடும். கணினி அச்சுக் காலத்தில் ஒரு அச்சக உரிமையாளர் ஈய எழுத்துக்களைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அவர் கதி என்னாகும்?

குக்கிராமங்களில் உள்ளோரும் கேபிள் டிவி, செல் போன் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. ஒரு ஏழு, எட்டாயிரம் ரூபாயில் ஒரு ஆன்ட்ராய்ட் செல் வைத்திருந்தால் யாரையும் சார்ந்திராமல் ஒரு ஃபேஸ் புக் அக்கவுன்ட் தொடங்கி விடலாம். பேஸ்புக்கில் பலமாதிரி செய்திகள் வந்து கொண்டே உள்ளன. டி.வியில் 24 மணி நேரமும் ஏகப்பட்ட செய்திகள். ‘நீயா நானா’ போன்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு உலக விஷயங்கள் அலசப்படுகின்றன.

ஓரளவு தகவலறிந்த சமூகமாக நாம் உருப்பெற்றுக்கொண்டே உள்ளோம்.

ஆனால் ஒன்று.

ஏகப்பட்ட தகவல்கள் நம்மை இப்படி வந்தடைந்தபோதும் இவை பெரும்பாலும் எல்லாம் ஒரு contemporary தன்மையதாகவே உள்ளன. வரலாற்று ரீதியான தகவல்களாக அவை இருப்பதில்லை. ஆர்வமுள்ளவர்கள் வரலாற்று ரீதியாகவும் நவீன நுட்பங்களின் உதவியால் நிறையத் தெரிந்துகொள்ள முடியும் என்றாலும் வந்து சேர்பவை மிகவும் சமகால விஷயங்கள்தான். இந்த சமகாலத் தகவல்களால் கட்டப்பட்ட சமூகமாகவே நாம் உள்ளோம்.

ஒரு இருபதாண்டுகளுக்கு முந்திய வரலாறும் கூட தெரியாதவர்களாகவே நம் சராசரி இளைஞர்கள் இருக்கின்றனர்.

இன்று மோடி அலை வீசுவதன் பின்னணிகளில் இதுவும் ஒன்று.

ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

 ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை                                                                                                                                                சென்னை,                                                                                                                                                                                              ஜன 25,2017

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17ம் தேதி முதல் இளைஞர்கள் பொதுவெளிகளில் கூடி இரவிலும் பகலிலும் அகலாமல் அமர்ந்து முற்றிலும் அமைதி வழியில் போராடினர். எந்த ஒரு குறிப்பான கட்சி அல்லது இயக்க வழிகாட்டலும் இன்றி தன்னெழுச்சியாகவும் முற்றிலும் அமைதியாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டம் பல வகைகளிலும் 2011- 12 களில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘வால்ஸ்ட்ரீட் அமர்வு’ போராட்டத்தை நினைவூட்டியது.

அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வைப்பதில் தோல்வியுற்ற தமிழக அரசு சென்ற ஜன 21 அன்று ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கும் வகையில் மிருக வதைத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. அடுத்த நாளே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் தமிழகமெங்கும் இருந்த இந்த அமர்வுப் போராட்டத்தினர் நிரந்தரச் சட்டம் வேண்டும் எனவும், தமிழகத்தைப் பாதிக்கும் பிற பிரச்சினைகள் குறித்துக் கவனத்தை ஈர்த்தும் தம் இடங்களைவிட்டு அகல மறுத்தனர். அலங்காநல்லூர் மக்களும் கூட ஜல்லிக்கட்டு நடத்தவிட மாட்டோம் என்றனர். இந்நிலையில் சென்ற ஜன 23 அன்று சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன. காலைக் கடன்களை முடிப்பதற்காக அருகிலுள்ள நடுக்குப்பம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போராட்டக்காரர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அப்பகுதியில் வசித்த அடித்தள மக்கள் உதவினர். அப்படி வந்தவர்களைத் துரத்தி வந்து காவல்துறையினர் தாக்கியபோது நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளைத் தெரு முதலான பகுதிகளில் இருந்த மீனவர் மற்றும் தலித் மக்கள் அவர்களுக்குப் பாதுகாப்பும் அளித்தனர்.

கோவை முதலான தமிழகத்தின் பல பகுதிகளில் கூடியிருந்த மக்கள் மீதான காவல்துறை தாக்குதல் கடுமையாக இருந்தது. நிரந்தரச் சட்டம் இயற்ற உள்ளதை ஏற்றுச் சில பகுதிகளில் மக்கள் கலையவும் செய்தனர்.

இதற்கிடையில் ஜன 23 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தில் மாலை 5 மணிக்குக் கூடிய சிறப்பு அமர்வு மிருகவதைச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கி நிரந்தரச் சட்டத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இயற்றியது. இன்னொரு பக்கம் வன்முறையாக அமர்வுப் பொராளிகள் வெளியேற்றப்படுதலும் தொடர்ந்தது.

ஐஸ்ஹவுஸ் மற்றும் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள குடியிருப்புகளில் காவல்துறை நடத்திய தாக்குதல்

சுமார் 12 மணி அளவில் யாரோ சில சமூக விரோதிகள் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். சற்று நேரத்தில் அந்தத் தீ பெரிய அளவில் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் அணைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் இருந்த பெண் போலீஸ் ஒருவரும் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

பிற்பகலில், சுமார் மூன்று மணிக்குப் பிறகு ஐஸ் ஹவுசுக்கு அருகிலுள்ள மீனவர் மற்றும் தலித் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த காவல்துறையினர் மிகக் கொடூரமாக அம்மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கினர். சிறுவர்கள் உள்ளிட்ட கையில் அகப்பட்ட ஆண்களை அடித்துப் போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று ‘ரிமான்ட்’ செய்தனர்.

இந்த அத்துமீறல்கள் எங்கள் கவனத்திற்கு வந்தபோது இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கீழ்க்கண்டவாறு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குழுவில் பங்கு பெற்றோர்: பேரா.அ.மார்க்ஸ் முனைவர் ப. சிவகுமார், பேரா. மு..திருமாவளவன், வீ.சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ. கங்காதரன், பேரா.கோ.கார்த்தி, அகமது ரிஸ்வான்.

பார்வையிட்ட பகுதிகள்: 1.நடுக்குப்பம் எனும் மீனவர் குடியிருப்பு மற்றும் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள மீன் மார்கெட் 2. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள ரூதர்புரம் எனும் தலித் குடியிருப்பு 3. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள மீனாம்பாள்புரம் எனும் தலித் குடியிருப்பு 4. வி.ஆர்.பிள்ளைத் தெரு மற்றும் கால்வாய்த் தெரு. 5. முனுசாமி நகர் 6. அனுமந்தபுரம் 7. ரோட்டரி நகர்

நாங்கள் கண்டவை :

1.நடுக்குப்பம் : பெண்கள் சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தாக்கிக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கதவுகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் நொறுக்கப்பட்டுள்ளன. இராணி மேரிக் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள மீன் மார்கெட் முறிலும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மதிப்புள்ள மீன்கள், எரால்கள் கொளுத்தி நாசமாக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைகிள்கள், ஒரு ஸ்கார்பியோ உள்ளிட்ட சில கார்கள், ஆட்டோக்கள் தாக்கப்பட்டடு நொறுக்கப்பட்டுள்ளதோடு இவற்றில் பல முற்றிலுமாய் எரிக்கவும்பட்டுள்ளன. ஏதோ ஒரு தூளைத் தூவி (பாஸ்பரஸ்?) எரியூட்டியதாக மக்கள் கூறினர். சிங்காரவேலர் பிறந்த இந்த நடுக்குப்பத்தில் இத்தகைய வன்முறைகளைக் கண்டதே இல்லை எனப் பலர் உணர்ச்சிவயப்பட்டுக் கூறினர். தமது வாழ்வாதரமே அழிக்கப்பட்டு விட்டது எனப் பெண்கள் அழுதனர். போலீசார், குறிப்பாகப் பெண் போலீசார் தம்மை அடித்தும் கற்களை வீசியும் தாக்கியதோடு மிக மோசமான வார்த்தைகளில் இழிவாக ஏசியதாகவும் கூறினர். ஆண் போலீசார் தங்கள் முன் காற்சட்டை ‘ஸிப்’ களை அவிழ்த்து ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டினர். மெரினாவிலிருந்து அடிபட்டு ஓடி வந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உதவியதைத் தவிர நாங்கள் என்ன பாவம் செய்தோம் எனக் குமுறினர்.

2.ரூதர்புரம்: அம்பேத்கர் பாலத்தை ஒட்டி இரண்டு வேன்களும் தெருவை ஒட்டி ஒரு ஆட்டோவும் எரிக்கப்பட்டிருந்தன. தெரு நுழைவில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்கள், 8 பைக்குகள், 2 சைகிள்கள், 1 சோஃபா செட் எரிந்து கிடந்தன. ஏன் உங்கள் பிள்ளைகளை மெரீனா போராட்டத்துக்கு அனுப்பினீர்கள் எனக் கேட்டுப் பெண் போலீஸார் தம்மைத் திட்டியதாகப் பெண்கள் குமுறினர். அங்கிருந்த சுமார் 100 பேர் திரண்டு சென்று ‘சிட்டி மால்’ அருகில் நின்று. “எங்கள் மாண்வர்களை அடிக்காதீர்கள்” என முழக்கம் எழுப்பியதாக ஞானம்மாள் என்பவர் கூறினார். அப்போது ஒரு வாகனத்தில் வந்து இறங்கிய போலீசார் கற்களையும் பாட்டில்களையும் வீசித் தாக்கியதாகவும் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும் ஒருவர் கூறினார்.

3.மீனாம்பாள்புரம் : லேடி வெலிங்டன் பள்ளியில் +2 படிக்கும் தன் 18 வயது மகன் கிருபாகரனை பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது அடித்து இழுத்துச் சென்றதை அழுது கொண்டே சொன்னார் சிவகாமி (33) க/பெ தினகரன். காவல் நிலையத்திலிருந்த அவனுக்கு இரவில் சோறூட்டச் சென்ற போது அவன் கைகள் வீங்கி இருந்தன என்றார் அவர். அவனை விட்டுவிடுவதாகச் சொன்ன போலீசார் இறுதியில் ரிமான்ட் செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். ரமேஷ் மனைவி கீதா சொன்னது: “எங்க வீட்டுக்காரருக்கு 45 வயசு. தூய்மைப் பணி நிறுவனம் ஒன்றில் தெருக்கூட்டுபவராக வேலை செய்கிறார். வேலை முடிஞ்சு வரும்போது போலீசுங்க அவரை மிருகத் தனமா அடிச்சுப் போட்டு இருக்காங்க.” வேலு மனைவி பொற்கொடி (35): “என் மவனைத் தேடிப் போனேன். ஒரு பெண் போலீஸ் என்னை அடிச்சதுல என் கை முறிஞ்சு போச்சு” எனத் தன் வீங்கிய கையைக் காட்டினார். கணவரை இழந்து வாழும் தமிழரசி (40): “வீட்டுக்குள்ள நுழைஞ்ச போலீஸ் என் புடவையைக் கிழிச்சாங்க” எனச் சொல்லிக் கிழிந்த தன் புடவையைக் காட்டினார். குப்பன் மனைவி காந்தா (60): “வீட்டுக் கதவை உடைசிச்சுட்டாங்க. மோட்டார் சைகிளையும் நொறுக்கிட்டாங்க. பாத்ரூமுல இருந்தவங்களை எல்லாம் ‘சீக்கிரம் வாங்கடீ.'”ன்னு சொல்லி கத்துனாங்க..”

4.வி.ஆர்.பிள்ளை தெரு: போலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களைத் துரத்திவந்தபோது தாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றதாகவும், பின் திடீரென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவர்களையே போலீஸ் துரத்தித் தாக்கியதாகவும் பெண்கள் கூறி அழுதனர். பின் சுமார் 100 பேர் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது போலீசார் அவர்களை அசிங்கமாகத் திட்டினர் என்றனர். மீன்வளத்துறையில் பணியாற்றும் பழனி (58), “நாங்க எல்லாரும் மிரட்டப்பட்டோம். பெண்களை ரொம்ப மோசமாப் பேசுனாங்க. ஊரே பயந்து கிடக்கு..” என்றார்.

5.முனுசாமி நகர்: ராஜீவ் என்பவரின் மனைவி தேவி (36): “என் வீட்டுக்கார்ர ஒரு பெயின்டர். வீட்டில இருந்தவரைப் போட்டு அடிச்சுட்டாங்க. கையில் புத்தகப் பையோடு வந்த மாணவர்களையேல்லாம் துரத்தி அடிச்சாங்க. சம்மந்தமில்லாத எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்க தெரு பொம்பளை ஒருத்தரோட 5 பவுன் சங்கிலியையும் அறுத்துட்டுப் போயிட்டாங்க..” அடிபட்டிருந்த அவரது கணவரையும் பார்த்தோம்.

6.அனுமந்தபுரம் – கால்வாய்த் தெரு: ஆட்டோ டிரைவர் கார்திக் (45); “நான் நேத்து வேலைக்கிப் போகல. ஆட்டோ வாசல்ல நின்னுச்சு. உள்ளே நுழைஞ்ச போலீஸ் என்னைக் கடுமையா அடிச்சுட்டாங்க..” அவர் உடலெங்கும் காயம். கட்டுகள் இருந்தன. வெளியில் நின்றிருந்த அவரது ஆடோ தாக்கப்பட்டுக் கண்ணாடி உடைந்திருந்தது. “ரெண்டு பிள்ளைங்கள நான் காப்பாத்தியாவணும். எப்ப எனக்கு இந்தக் காயங்கள் ஆறும், எப்பிடி நான் இந்த ஆட்டோவை சரி பண்ணி ஓட்டப்போறேன்னு ஒண்ணும் தெரியல..” என்று அவர் அழுதார். கட்டுமானப் பணி செய்யும் தங்கவேலு (33) உடலெங்கும் காயங்கள். அவர் காலொன்று உடைந்து கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டில் அடித்ததோடு போலீஸ் வானில் ஏற்றிச் சென்று லேடி வெலிங்டன் பள்ளியில் வைத்து மீண்டும் அடித்ததாக அவர் கூறினார். பின் இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று அங்கும் அடித்தனராம். பின் அவர்களில் சுமார் 10 பேர்களைக் கொண்டு சென்று ஒரு இடுகாட்டில் தள்ளிச் சென்றுள்ளனர். அவர்களின் வீட்டார்கள் அவர்களைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

7.ரோட்டரி நகர்: பெருங் கூட்டமாகத் திரண்டு வந்த பெண்கள் தாங்கள் எவ்வாறெல்லாம் அசிங்கமாகத் தூற்றப்பட்டோம் எனச் சொல்லி அழுதனர். அவர்களில் ஒருவரின் கை உடைந்திருந்தது.. பெண் போலீசாரே இப்படிச் செய்ததாக அவர்களும் கூறினர்.

இறுதியாக நாங்கள் மயிலாப்பூர் காவல் நிலையத் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் I.P.S அவர்களைச் சந்தித்தோம். தான் மெரினாவில் கண்காணிப்புப் பணியில் இருந்ததாகவும் இங்கு நடந்தவை குறித்து அதிகம் தெரியாது எனவும் காவல்துறை அத்துமீறல்கள் பற்றி நிரூபணங்களுடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி யாரையும் கைது செய்யும் உத்தேசம் தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார். சில ஆண்டுஅகள் முன் இரட்டைக் கொலை ஒன்று இப்பகுதியில் நடந்ததாகவும் அதைப் புலனாய்ந்த ஒரு காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்து கொள்ள நேர்ந்ததாகவும் அதனால் இப்பகுதி மக்கள் காவல்துறைமீது கோபம் கொண்டவர்களாகவே உள்ளதால்தான் காவல் வாகனங்களையெல்லாம் இவர்கள் கொளுத்தினர் எனவும் அவர் கூறினார்.

எமது பார்வைகளும் கேள்விகளும்

  1. 1984 ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இதுதான் இம்மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய காவல்துறை அத்து மீறல். காவல்துறை மீது இப்பகுதி மக்களுக்கு ஒரு பகையும் கோபமும் இருந்ததாக துணை ஆணையர் கூறுகிறார். அது உண்மையோ பொய்யோ காவல்துறைக்கு இப்பகுதி அடித்தள மக்களின் மீது ஒரு பகையும் கோபமும் இருப்பது இன்று அரங்கேறியுள்ள கொடும் வன்முறைகளில் வெளிச்சமாகிறது. போராட்டக்காரர்களுக்கு இம்மக்கள் ஆதரவு காட்டியதையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. மெரினாவிலிருந்து போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு ஓடி வந்த ஒரு பெண் ஓடிக் கொண்டிருக்கும்போதே கருச்சிதைவுக்கு ஆளாகியதையும் அவரை ரோட்டரி நகர் பெண்கள் காப்பாற்றியதையும் அவர்களில் ஒருவர் கூறினார்.
  2. மெரினாவில் அமைதியாக அமர்ந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் முதலமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் நேரடியாக வந்து பேசி உறுதி அளித்திருந்தால் இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். இறுதிவரை காவல்துறையினர்தான் அரசுத் தரப்பில் போராட்டக்காரர்களுடன் பேசினரே ஒழிய முதலமைச்சர் வந்து பேசாததே இத்தனை வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம்.
  3. நிரந்தரச் சட்டம் இயற்றிய பின்னும் அது குறித்த முழு விவரங்களையும் போராட்டக்காரர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தந்து விளக்கி இருக்க வேண்டும். ஏன் அதில் தயக்கம் காட்டப்பட்டது எனத் தெரியவில்லை.
  4. தமிழகமெங்கும் 23 ந்தேதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதே போன்று நடந்த வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டத்தின்போது அமெரிக்க அரசு இப்படி நடந்துகொள்ள வில்லை. பலமாதங்கள் தொடர்ந்து நடந்த போராட்டம் அது. சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு எதிராக நடந்த அரபு வசந்தப் போராட்டங்கள் கூட இப்படி ஒடுக்கப்பட வில்லை. அடிப்படை ஜனநாயகப் பண்பு அற்ற அரசுகளாகவே நமது அரசுகள் உள்ளன என்பதற்கு இந்த அடக்குமுறை இன்னொரு சாட்சியாக உள்ளது.
  5. ஜன 23 அன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுப் பின் அன்று நடந்த இந்த தாக்குதல்களின் ஊடாகப் போக்குவரத்தை நிறுத்திப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உருவாக்கப்பட்ட சிரமங்கள் இந்த அரசின் பொறுப்பின்மையையும் திறமை இன்மையையுமே காட்டுகின்றன.

பரிந்துரைகள்

  1. மரீனாவை ஒட்டியுள்ள தலித் மற்றும் மீனவர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை விசாரிக்க நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.
  2. மீன்வளத்துறையின் மூலம் உடனடியாக தீப்பிடிக்காத கூரையுடன் கூடிய மீன் மார்கெட் ஒன்றை நடுக்குப்பத்தில் அரசு கட்டித்தர வேண்டும்.

3 .நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வணிகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக          இடைக்கால நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் உடனடியாக ரூ 25,000 அளிக்கவேண்டும்.

  1. தலித் மற்றும் மீனவர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் வாகனச் சேதங்களை ஒரு மாதத்திற்குள் உடனடியாக மதிப்பிட்டு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்.
  2. கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  3. இந்த அத்துமீறல்கள் குறித்த விசாரணை முடியும்வரை உயரதிகாரிகள் உட்பட இதற்குப் பொறுப்பானவர்களைக் கட்டாயக் காத்திருப்பில் வைக்க வேண்டும். வன்முறையிலும் தீவைப்பிலும் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்படவேண்டும்.
  4. பெண் போலீசார் இப்படிப் பெண்கள் மீதே வன்முறையாக நடந்து கொண்டது குறித்துக் காவல்துறையும் அரசும் கவனம் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய உணர்வூட்டும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5,முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை 20, செல்:9444120582

அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத் தடையும் ராதா ராஜன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்மையும்

1950களில் தொழில்நுட்பத்தில் மிகவும் தரமான உயர் கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ‘இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்’ (Indian Institute of Technology). சென்னை உட்பட இந்தியாவெங்கும் 18 ஐ.ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. சுயேச்சையான இந்தப் ‘ப்ரீமியர்’ கல்வி நிறுவனத்தில் படிப்பது பெருமை. இடம் கிடைப்பது அருமை. தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.

இந்த சுயேச்சை நிறுவனத்தின் ஆசிரியர் தேர்வில் இந்தியாவெங்கும் அமுலில் உள்ள சாதிவாரி இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஐ.ஐ.டி நிறுவனங்களில் 90 சதத்திற்கும் மேற்பட்டோர் உயர் சாதியினர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சாதியினரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆக உயர் சாதியினரின் தீவுகளாகவே இந்திய ஐ.ஐ.டிக்கள் உள்ளன.

பன்னாட்டுத் தரத்தில் உள்ள இந்நிறுவனங்களில் மாணவர் அமைப்புகள் செயல்பட அனுமதியுண்டு இந்த அமைப்புகளுக்கு நிர்வாகம் ஏற்பு (recognition) வழங்கும் போது அவர்களின் சந்திப்பு மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துரைகள் ஆகியவற்றிற்கு  கல்வி வளாகத்தின் வசதிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

சென்னை ஐ.ஐடியில் இந்துத்துவக் கருத்தியல் சார்புடன் ‘விவேகாநந்தர் வட்டம்’, ‘ஜெய்ஹிந்த் வட்டம்’, ‘இராமாயண வட்டம்’, ‘வந்தே மாதர வட்டம்’ எனப் பல மாணவர் வட்டங்கள் இயங்கி வருகின்றன. சென்ற ஆண்டு முற்போக்கு மற்றும் சமத்துவ சிந்தனைகள் உள்ள மாணவர்கள் “அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்” என்றொரு அமைப்பை உருவாக்கி இயங்கி வந்தனர். இதனை உள்ளேயும், வெளியேயும் உள்ள இந்துத்துவ சக்திகள் பல்வேறு வகைகளில் எதிர்த்து வந்தன.

இந்நிலையில் இவர்கள் மோடிக்கு எதிராகவும் பிற தீவிரமான கருத்துக்களைப் பேசுவதாகவும் ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய கல்வித்துறை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது. இதை ஒட்டி சென்ற மாத இறுதியில் ஐ.ஐ.டி நிர்வாகம் அம்பேத்கர், பெரியார் பெயரில் இயங்கி வந்த அந்த அமைப்பிற்கான ஏற்பை ரத்து செய்ததாக அறிவித்தது.

இந்த நடவடிக்கை தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிட்டது பா.ஜ.க, அ.தி.முக, சில தமிழ் தேசியக் குழுக்கள் தவிர அனைத்து முக்கிய கட்சிகளும், இயக்கங்களும் இன்று இன்று இந்த நடவடிக்கையைக் கண்டித்துக் களத்தில் இறங்கி விட்டன. நாடெங்கிலும் கல்வி வளாகங்களிலும் வெளியிலும் ஏராளமான “அம்பேத்கர் பெரியார் வட்டங்கள்” இன்று உருவாக்கப் படுகின்றன.  ஐ.ஐ.டி நிர்வாகமும் மத்திய அரசும் பம்முகின்றன.

ஒரே ஒரு தரப்புதான் ஐ.ஐ.டி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையைச் சரி என்கிறது. சரி என்பது மட்டுமல்ல, இன்னும் சில பேராசிரியர்களையும் அடையாளம் காட்டி அவர்களைக் களை எடுக்க வேண்டும் என்கிறது. அவர்கள் இதற்குச் சொல்லும் காரணத்தை ஆய்ந்தால் அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளையும் இறுதி நோக்கங்களையும் நாம் புரிந்து கொள்ள இயலும்.

ஆர்.எஸ். எஸ்சின் அறிவுத் தொட்டியில் ஒருவர் ராதா ராஜன். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை விளக்கி ஆங்கிலத்தில் நிறைய எழுதிக் குவிப்பவர். அவரது பெரு நூல் ஒன்று அத்வானி முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. India Facts என்கிற அவரது வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள Something Awry in IIT Madras: The Full Story என்னும் கட்டுரையிலிருந்து சில செய்திகள்:

1.2006ல் சென்னை ஐ.ஐ.டி யில் ஆங்கிலம், வளர்ச்சிக் கல்விகள், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ படிப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்துதான் அங்கு இத்தகைய பிரச்சினைகள்..

2.இப்படி உருவான மாணவர் ‘ஆக்டிவிசம்’ மற்றும் சீரழிவு அறிவாளித்தனம் (student activism and disruptive intellectualism) கிட்டத்தட்ட சென்னை சட்டக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி முதலானவற்றில் உள்ள வன்முறைகளுக்கு இணையான மாணவ ரவுடித் தனத்திற்கு ஒப்பான தோற்றத்தை எடுத்தது.

3.கலை மற்றும் சமூகவியல் துறை (HSS)  ஆசிரியர்கள் மற்றும், வெளியிலிருந்து பேசுவதற்கு அழைக்கப்பட்டவர்களின்  கருத்தியல் சாய்வு, விவாதங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள், நவம்பர் 2004ல் IIT வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட முத்தப் போராட்டம், அப்புறம் இப்போது நடைபெறும் இந்த இந்து மத எதிர்ப்பு மாணவர் அமைப்புப்  (அ.பெ.மா.வ) போராட்டம் எல்லாம் ஒரு காலத்தில் உன்னதமாக விளங்கிய ஐ.ஐ.டி யில் வளர்ந்துள்ள இந்தப் புற்று நோயின் வெளிப்பாடுதான்.

இவை அந்த ஆர்.எஸ்.எஸ் அம்மை முன்வைக்கும் கருத்துக்கள். ஆக 2006ல் தொடங்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ பட்டப் படிப்பு’ (integrated five year M.A) தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும் இந்த ஆர்.எஸ்.எஸ் சார்பு இணையம், “ஏன் இப்படி ஐ.ஐ.டி நிர்வாகம் அ.பெ.மா.வ வைத் தடை செய்ய நேர்ந்தது என்பதை மோடி சர்க்கார் அறிய வேண்டுமானால் ஏன் இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ படிப்பைக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தொடங்கியது என ஆய்வு செய்ய வேண்டும்” என்கிறது. மோடி சர்க்கார் எதையெல்லாம் பரிசீலிக்க வேண்டுமாம்?

“மோடி சர்கார் இந்த ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ வகுப்பின் பாடத் திட்டம், யாரெல்லாம் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள், அவர்களின் கருத்தியல் சாய்வு, இந்த வகுப்பிற்கு என்னவிதமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் ஆகியவற்ரைப் பரிசீலித்தால் இந்த ஐந்தாண்டுப் பாடத் திட்டத்தின் உண்மை நோக்கம் வெளிப்படும்”.

இந்த இடத்தில் கலை மற்றும் சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேரா. எஸ்.செல்லா ராஜனை நோக்கி நீள்கிறது கட்டுரையாளரின் விரல்.  இந்தப் பேராசிரியரால் தொடங்கப்பட்ட ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ பாடத் திட்டத்திற்கான அறிமுக வெளியீட்டில் உள்ள, “இப்பாடத் திட்டம் ஒரு பன்மை ஒழுங்கு அணுகல் முறையுடன் (interdisciplinary perspective) அமையும்” என்கிற சொற்களை உருவி எடுத்து ஒரு மிகப் பெரிய சொற் சிலம்பாட்டத்தை ஆடிக் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். அந்த ஆட்டத்தின் ஊடாக அவரது உண்மை உருவம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் சொற்களில் அவற்றைக் காண்போம்:

1.வரலாறு தொடர்பான இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல் முறை மிகவும் ஆபத்தானது.  அரசியல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆகிய போலி அறிவியல்களைப் பயன்படுத்தி தேசம், தேசியம் முதலான வரலாற்றுத் தரவுகளை மதிப்பீடு செய்கிற பெயரில் அவற்றை மறுப்பதற்காகப் பயன்படுத்தப் படுவதுவதுதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை. தாங்கள் வென்ற மனிதர்கள் மற்றும் ஆக்ரமித்த  நிலங்களின் வரலாற்றை எழுத  கிறிஸ்தவம் கண்டுபிடித்த அறிவுத் துறைதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை.

2.அமெரிக்காவில் ‘பெரிங் ஸ்ட்ரைட் கோட்பாடு’ இப்படித்தான் உருவானது. உள்நாட்டு அமெரிக்கர்கள் என்போர் உண்மையில் உள்நாட்டில் தோன்றியவர்கள் அல்லர். அவர்கள் ஆதி காலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று இந்தக் கோட்பாடு கூறியது. இந்தியாவில் இந்த inter disciplinary அணுகல் முறைதான் சமஸ்கிருதத்திற்கு இருந்த உன்னத இடத்தை அழித்தது. ஆரியப் புலப் பெயர்வுக் கொள்கையை முன்வைத்து பிராமணர்களை இந்தத் தேசத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களாக நிறுத்தியது.

3.இத்தகைய அணுகல் எளிதில் சாதி, வர்க்கம், பெண்ணியம் மற்றும் பழங்குடி உள்ளுறைகளுடன் கூடிய அறிதல்களாக மாற்றி அமைக்கத் தோதாக உள்ளது.

ஆக ஆடிய ஆட்டத்தில் கட்டுரையாளர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார். அவரது ஆத்திரம் எங்கிருந்து முளைக்கிறது என்பது வெளிப்பட்டுவிட்டது. இங்கே அவர் ஒப்பிலக்கணம், ஒப்பிலக்கியம், கால்டுவெல்லின் திராவிட மொழிகள் குறித்த கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி எல்லாம் சொல்லாவிட்டாலும் இத்தகையவற்றின் மீது இங்குள்ள பார்ப்பன அறிவுஜீவிகளின் ஆத்திரத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்.  சமஸ்கிருதத்தை மொழிகளின் தாய் எனச் சொல்ல விடாமல் செய்து விட்டார்களே, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மட்டுந்தான் வந்தேறிகள் என நம்மை அரசியல் பண்ண விடாமல் செய்து விட்டார்களே என்று அவர் சீறிப் பெருமூச்சு விடுகிறார். பேயாய் அலறுகிறார். மேலும் அவர் சொல்வது:

“17,18,19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மிஷனெரிகள் தமது கட்டுப்பாட்டில்  இந்தியாவில் ஆங்கில மீடியம் பள்ளிகள் அப்புறம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலியவற்றை எல்லாம் இந்த நோக்கத்திற்காகவே கொண்டு வந்தனர்.  சுதந்திரத்திற்குப் பின் மார்க்சிஸ்ட்கள் நேரடியாகவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மறைமுகமாகவும் வரலாற்றுக் கல்வியைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் பிராமண எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துக்களைக் கல்வித்துறையில் புகுத்தினர்”.

ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் கட்டுரை விரிவானது, அது இன்ன்னும் பலவற்றைப்ப் பேசுகிறது. அது கிடக்கட்டும். ஒப்பிலக்கணம், மானுடவியல் முதலியன இந்திய வரலாற்று ஆய்வில் பல முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளன (பார்க்க: எனது, ‘ஆரியக் கூத்து’, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி). சமஸ்கிருதத்தைத் தேவ பாஷையாகவும், தமிழை நீச மொழியாகவும் கட்டமைதிருந்த வரலாற்றை அவை தகர்த்தன. சாதிகளின் உருவாக்கம், அதன் இயக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவின. எப்படி, தலித்கள், பழங்குடியினர், பெண்கள் முதலானோர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதை விளக்கின.

அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. அது மட்டுமல்ல கல்வியைக் கிறிஸ்தவம் இங்கு கொண்டு வந்ததே ஒரு சதி என இன்று சொல்லவும் துணிவதை நாம் நோக்க வேண்டும். ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியவர்கள் வேறென்ன சொல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் இன்னொரு அறிவுஜீவிக் கருத்தியலாளர் கே.ஆர்.மல்கானி “இந்தியர்களுக்குப் படிப்பு தேவையில்லை” எனக் கூறி சர்ச்சை ஒன்றைக் கிளப்பியது நினைவில்லையா?

படிப்பே வேண்டாம் என்றால் இவர்கள் சொல்லும் வலிமையான இந்தியாவை எப்படி உருவாக்குவது? வேறொன்றுமில்லை. ஐ.ஐ.டியை வெறுமனே தொழில்நுட்பர்களை, நுண்திறன் பெற்ற ‘டெக்னொக்ராட்’களை உருவாக்கும் நிறுவனமாக மாற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.

இங்கெதற்கு இந்தக் கலைத்துறைப் படிப்பு, பன்மை ஒழுங்கு அறிதல்முறை, ஒப்பிலக்கணம், மானுடவியல் என்கிற “கல்விச் சீரழிவுகள் எல்லாம்?” எனக் கேட்கிறது ஆர்.எஸ்.எஸ்.

சோவியத் ருஷ்யாவில் லெனின் காலந் தொடங்கி சுமார் 30 ஆண்டு காலம் கல்வி அமைச்சராக இருந்த லூனாசாஎஸ்கி, “அதீத நுண்திறம் ஒருவரை முடமாக்கும்” (Overspecialisation cripples a man)” என்பார். கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான மனிதனை உருவாக்குவது. அதனால்தான் பட்டப் படிப்புகளுக்கு Bachelor, Master, Doctor of Philosophy என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் ஒரு major பாடம் தவிர ஒரு minor பாடமும் இருந்தது. விஞ்ஞானம் பயில்பவர் ஒரு கலைப்படத்தையும், கலைப்பாடத்தில் பட்டப்படிப்பு படிப்பவர் சிறிது விஞ்ஞானத்தையும் அறிவது அவசியம் எனக் கருதப்பட்டது. இது கார்பொரேட் காலம். கலைப் பாடங்களையே ஒழிக்க வேண்டும் எனச் சொல்கிற காலம். கார்ப்பொரேட்களும் இந்துத்துவமும் கைகோர்க்கும் இன்னொரு முக்கிய புள்ளி இது.

கலை மற்றும் சமூக அறிவியல்துறைத் தலைவர் டாக்டர் சுதிர் செல்லா ராஜன் மிகவும் தகுதிமிக்க படிப்புகளையும் அனுபவங்களையும் கொண்டவர். அவர், அவரது மனைவி சுஜாதா பைரவன், பேரா. மிலிந்த் ப்ராஹ்மி ஆகிய மூவரே இன்றைய ஐ.ஐ.டி “சீரழிவுக்கு” காரணம் என அடையாளம் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒன்று நிச்சயம். இப்போதைய எதிர்ப்பின் விளைவாக ஐ.ஐ.டி நிர்வாகமும், மோடி அரசும் சற்றே பொறுத்திருந்தாலும் விரைவில் சென்னை ஐ.ஐ.டியில் உள்ள இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட M.A படிப்பு ஒழிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். சுட்டிக்காட்டப்பட்ட ஆசிரியர்கள் பழிவாங்கப்படுவர்.

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்

‘தீராநதி’ இலக்கிய இதழில் ஜனவரி 2017 முதல் ‘நெஞ்சில் கனல் மனக்கும் பூக்கள்’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரை தொடங்கியுள்ளேன். முன்னதாக 2007 ஜனவரி முதல் 2012 டிசம்பர் வரை ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ எனும் தலைப்பில்  எழுதிய 60 கட்டுரைகள் தற்போது ‘உயிர்மை’ வெளியீடாக அதே பெயரில் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வெளிவந்துள்ள தொடக்கக் கட்டுரை.

‘தீராநதி’ யின் ஊடாக உங்களோடு மீண்டும் உரையாட ஒரு வாய்ப்புக் கிடைத்தமையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய எழுத்துப் பணிகளில் மூன்று கட்டங்கள் முக்கியமானவையாக இருந்துள்ளன. ஒன்று கோமல் சுவாமிநாதன் அவர்களின் ‘சுபமங்களா’ இதழில் வெளிவந்த என் கட்டுரைகளும் நேர்காணலும். அடுத்து ‘நிறப்பிரிகை’ என்றொரு இலக்கிய – அரசியல் முயற்சியும் என் எழுத்துக்களும், அடுத்து ‘தீராநதி’ யில் நான் எழுதி வந்த ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ கட்டுரைத் தொடர்.

வெகுமக்கள் இதழ்க் குழுமம் ஒன்றின் இலக்கிய இதழில் எழுதுவது குறித்து சற்றே தயக்கத்துடன்தான் என் தீராநதி நுழைவு அமைந்தது. ஆனால் அந்தத் தொடர் இடைவிடாது வெளிவந்த அந்த ஐந்து ஆண்டுகளில் (ஜனவரி 2007 – டிசம்பர் 2011) என் எழுத்துச் சுதந்திரத்தில் எந்தத் தலையீடும் இன்றி அது அமைந்ததை நான் வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் நன்றியோடு பதிவு செய்து வந்துள்ளேன்.

ஐந்தாண்டுகள், அறுபது கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள்… இன்று நினைத்துப் பார்த்தால் மலைப்பாக உள்ளது. வாசக இடையீடுகள், மறுப்புகள், பாராட்டுகள் என அந்த ஐந்தாண்டுகளும் என் எழுத்து வாழ்வில் மறக்க முடியாதவை.

2011 முதல் 2016 வரையிலான இடைப்பட்ட இந்த நான்காண்டுகளிலும் நான் அவ்வப்போது ஈழம் மற்றும் மலேசிய இதழ்கள் உட்படப் பல்வேறு இதழ்களிலும் எழுதிவந்த போதும், அவ்வப்போதைய நிகழ்வுகளின் மீதான என் கருத்துக்களை உடனுக்குடன் வெளிப்படுத்தும் சாதனமாகப் பெரிய அளவில் நான் பயன்படுத்தியது சமூக ஊடகங்களைத்தான், குறிப்பாக முகநூல். உடனுக்குடன் கருத்துக்களை எழுதுவதற்கும், எழுதிய சில கணங்களில் எதிர்வினைகளைப் பெறுவதற்குமான இந்தப் புதிய ஊடகங்கள் இன்று சக்தி வாய்ந்த கருத்து வெளிப்பாட்டுச் சாதனங்களாக வெளிப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பெரிய அளவில் இன்று கருத்து வெளிப்பாட்டில் ஒரு ஜனநாயகப்பாடும் நிகழ்ந்துள்ளது. கூடவே  ஜனநாயகப்பாட்டின் மூலம் உருவாகும் பிரச்சினைகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக எது குறித்தும் பொறுப்பற்ற முறையில் எதையும் சொல்லிவிடுவது என்பதற்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளது. எனினும் உடனுக்குடன் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது, மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது இந்தப் பிரச்சினையை ஓரளவு ஈடு செய்யக் கூடியதாகவும் அமைகிறது.

தகவல் பெருக்கம் என்பது இந்த நூற்றாண்டின் ஒரு அற்புதம். யாரும் எந்த ஒரு நிகழ்வு குறித்தும் உலகெங்கிலும் என்ன கருத்து வெளிப்பாடுகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறியும் இந்த வாய்ப்பு நம் முந்திய தலைமுறையினருக்குக் கிட்டியதில்லை. அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள். எனினும் இந்தச் சூழல் இணையப் பயன்பாடு மிக்கவர்களின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவு நூல் வாசிப்பைக் குறைத்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. எல்லாவற்றையும் இணையத் தளங்களிலேயே வாசித்து எழுதும் பல கட்டுரைகள் ஆழமற்று அமைந்து விடுகின்றன. அதுவும் தினம் ஒரு கட்டுரை எழுத வேண்டிய கட்டாயப் பொறுப்பில் உள்ளவர்கள் எழுதுபவை பல நேரங்களில் ஆழமற்றவையாக மட்டுமின்றி பிரச்சினைக்குரியவையாகவும் ஆகிவிடுகின்றன.

நூல் வெளியீட்டிலும் மிகப் பெரிய தொழில்நுட்ப வெடிப்பு இன்று நிகழ்ந்துள்ளது. மிகத் தரமாக, அழகாக, விரைவாக நூல்கள் வெளிவந்து விடுகின்றன. ஆனால் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இருந்தது போல 1200 பிரதிகளை அச்சிடுவது, அதில் 200 பிரதிகள் விமர்சனம் முதலானவைகட்கு இலவசமாக அளிப்பது என்பவையெல்லாம் இன்று பழங்கதைகளாகி விட்டன. நூறு பிரதிகள், சில நேரங்களில் வெறும் 50 பிரதிகள் என்கிற அள்விற்கு இன்று நூல் வெளியீடுகள் அமைகின்றன. பல நேரங்களில் நூல் வெளியீட்டாளர்கள் அவை விற்றவுடன் தொடர்ந்து அவற்றை அச்சிடுவதில்லை.

இன்னொரு பக்கம் முன்னெல்லாம் ஒரு 300 பிரதிகளுக்குப் பெரும்பாலும் உறுதியாக நூலக ஆணை கிட்டும் எனும் நிலையும் இன்று இல்லை. நல்ல நூல் வாசிப்பாளரான கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கிய இந்நிலை இன்றும் தொடர்கிறது. இது குறித்து எந்தப் பெரிய எதிர்ப்பும், விவாதமும் தமிழகத்தில் இல்லை. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் சுமார் 300 பேர்கள் அமரக் கூடிய கருத்தரங்க வளாகம் குறைந்த வாடகையில் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கிடைத்து வந்ததும் இன்று எந்த நியாயங்களும் இன்றி நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கும் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாதது வருத்தத்திற்குரியது. இன்று ஒரு நூல் வெளியீட்டைச் சென்னையில் நடத்த வேண்டுமானால் அறை வாடகைக்கே பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்சம் தேவைப் படுகிறது.  எனவே இத்தகைய கூட்டங்கள் இப்போது மிகச் சிறிய அளவில் புத்தகக் கடைகளில் நடத்தப்படக் கூடிய நிலைக்கு வந்துவிட்டன.

நல்ல ஆங்கில நூல்கள் விற்கக் கூடிய கடைகளும் இன்று குறைந்துவிட்டன. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ‘ஆன்லைன்’ விற்பனை அதிகரித்துள்ளதன் விளைவு இது. புத்தகக் கடைகளுக்குச் சென்று அங்கே கடலெனக் குவிந்து கிடக்கும் நூல்களை ஆசை தீரக் கண்களை விரித்துப் பார்த்து, பல மணி நேரங்கள் அங்கு செலவிட்டுச் சுமந்து வந்த நூல்களை, வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து அவற்றின் புதிய வாசனையை நுகர்ந்து புரட்டிப் பார்க்கும் அனுபவங்களும் குறைந்து விட்டன. பயணங்களிலும் கூடப் புத்தகங்கள் படிப்பது என்பது அழிந்து செல்போன்களில் மூழ்குவது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. நண்பர்கள் மத்தியிலும் கூட வாசித்த புதிய புத்தகங்கள் குறித்த உரையாடல்கள் குறைந்து விட்டன.

#   #   #

என் மீது நண்பர்கள் வைக்கும் விமர்சனங்களில் ஒன்று தொடக்க காலத்தில் நான் தமிழ் நூல்கள், எழுத்துக்கள், போஸ்ட்மார்டனிசம் முதலான கோட்பாடுகள் குறித்தெல்லாம் எழுதி வந்தது இப்போது குறைந்து விட்டது என்பதுதான். அது உண்மை களப்பணி மற்றும் உடனடி அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதுவதில் என் நேரம் கழிந்து விடுவதால் நூல்கள் குறித்த உசாவல்கள் குறைந்துவிட்டன. சொல்லப்போனால் எல்லா மட்டங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுள்ளது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல கோட்பாடுகள் அறிமுகமாயின; பெரிதும் விவாதத்திற்குள்ளாயின; ஃபூக்கொ, தெரிதா, பாத்ரிலா லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் என்றெல்லாம், நிறையப் பேசப்பட்டன. இன்று அதன் தொடர்ச்சியும் அறுந்துள்ளது.

தீராநதியில் எழுதக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை இப்படியானவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உள்ளேன். வழக்கம்போல உங்களின் எதிர்வினைகள் இதில் பெரும்பங்கு வகிக்க வேண்டும்.

அடுத்த இதழில் சந்திப்போம்…

 

 

 

 

 

ஆனால் இந்தப் பெரு வாய்ப்பை நாம் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் எச்சரிக்கைகள் தேவை. நாம் இதுவரை அறிந்திராத, பரிச்சயமற்ற எது குறித்தும் எழுதிவிடும் இந்த வாய்ப்பு ஆபத்தாகவும் உருமாற