2019 தேர்தலை ஒட்டி: நெஞ்சை உலுக்கும் கடந்த ஐந்தாண்டுகள்…

2014 தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 268 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டால் அவர்கள் பக்கம் 336 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்தப் பெரிய வெற்றியின் பின்னணியில் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் உலகமே தங்கள் கைகளில் வந்துவிட்டதாகச் செயல்படத் தொடங்கினர். எல்லோரும் கேலி செய்யும் அளவுக்கு  வெளிநாட்டுப் பயணங்கள், வெளிநாட்டுத் தலைவர்களை வரவழைத்துச் செய்த (இலட்ச ரூ மதிப்புள்ள தங்க சரிகை பொறுத்திய கோட் அணிந்து மினுக்கியது உட்பட) அட்டகாசங்கள் ஆகியவற்றை நாம் மறந்துவிட முடியாது. பிரேசிலின் ஜைர் போல்சனாரோ போலவும், துருக்கியின் ரிசெப் தையிப் எர்டோகான் போலவும், ஹங்கேரியின் விக்டர் ஆர்பன் போலவும் அமெரிக்காவின் ட்ரம்ப் போலவும் தன்னை ஒரு ஆக வலிமையான strongman ஆக நரேந்திரமோடி முன்னிறுத்திக் கொண்டார்..

நாட்டில்  கிறிஸ்தவ நீதிபதிகளும் இருபார்களே என்பதைப் பற்றிக் கவலை இல்லாமல் ஒரு ஈஸ்டர் நாளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மாநாட்டைக் கூட்டியதும், பிரதமர் அலுவலகம் ஆண்டுதோறும் நடத்தி வந்த இப்தார் விருந்தை ரத்து செய்ததும், இஸ்ரேல் தொடர்பான இந்தியாவின் பாரம்பரியமான கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, பலஸ்தீனத்தின் மீதான அதன் தாக்குதலை மௌனமாக ஆதரித்ததும், பெரும் விளம்பரங்களுடன் இஸ்ரேலுக்குச் சென்று விருந்தாடி வந்ததும் சில எடுத்துக்காட்டுக்கள்.

அனைத்து அதிகாரங்களும் தம் கைகளில் வந்தாற்போல சங்கப் பரிவாரங்களும் ஆங்காங்கு தம் வேலைகளைத் தொடங்கின. புனேயில் தொழுகை முடித்து வந்துகொண்டிருந்த மொஹ்தின் ஷேக் என்ற ஒரு இளம் சாஃப்ட்வேர் ஊழியர்  (ஜூன் 2, 2014) குத்திக் கொல்லப்பட்டார். அங்கிருந்த முஸ்லிம் கடைகள், குறிப்பாக பேக்கரிகள் மற்றும் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன. டெல்லியில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன (பிப்ரவரி 2015). அடுத்த சில மாதங்களில் உ.பியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என முகம்மது அக்லக் எனும் பெரியவரை சங்கப் பரிவாரக் கும்பலொன்று குத்திக் கொன்றது. அவரது இளம் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் (செப் 2015) மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். ஊர்ப் பொதுவாக உள்ள ஆலய ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்து, மக்களை வெறியூட்டித் திரட்டி அக்லக் வீட்டிற்கு ஆயுதங்களுடன் சென்று அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது உலகளவில் கவனத்திற்கு உள்ளாகியபோதும் கூட நரேந்திரமோடி வாய்திறக்கவில்லை. தொடர்ந்து பலர் இவ்வாறு பசுவின் பெயரால் நாடெங்கும் கொல்லப்பட்டனர்.

அடுத்தடுத்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் மோடியும் அமித்ஷாவும்  வெளிப்படையாக மதவாத அரசியலைச் செய்தனர். ‘வளர்ச்சி’ (விகாஸ்) என வாயாடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மோடி மாநிலத் தேர்தல்களில்  ‘முஸ்லிம்கள்’ எனப் பெயர் உதிர்த்து அடையாளம் காட்டாமலேயே முஸ்லிம் வெறுப்பை விதைத்து, அதை ஓட்டுக்களாகவும் ஆக்கினார். காங்கிரசை முஸ்லிம் கட்சி என அடையாளம் காட்டுவது அவரது தந்திரங்களில் ஒன்று.. “பசுமைப் புரட்சி “க்குப் பதிலாக “ஊதாப் புரட்சி” செய்த கட்சி என பிஹார் தேர்தலின்போது காங்கிரசை அவர் அடையாளப் படுத்தியது குறிப்பிடத் தக்கது. விவசாயத்தை வளர்ப்பதற்குப் பதிலாக காங்கிரஸ் மாட்டுக் கறி விற்பனையைப் பெருக்கிய கட்சி என்பது அதன் பொருள். “பசுமாடுகள் வளர்த்துப் பால் வியாபாரம் செய்வதற்குக் கடனுதவி செய்ய மாட்டார்கள். ஆனால் மாட்டுக்கறி வணிகம் என்றால் குறைந்த விலையில் எல்லா வசதியும் செய்து தருவார்கள்” – என அக்கட்சியை அடையாளப்படுத்துவது என்பதெல்லாம் நரேந்திரமோடியின் தரக் குறைவான தேர்தல் பிரச்சார உத்திகளுக்குச் சில எடுத்துக்காட்டுகள்.

காங்கிரஸ் இந்த உத்தியைத் தைரியமாக எதிர்கொள்ளாமல் பம்மியது. நேரடியாக இதை ஒரு மதவாத அரசியல் எனச் சுட்டிக் காட்டி அம்பலப் படுத்தாமல் ‘நாங்கள் அப்படியெல்லாம் இல்லை’ எனச் சொல்வதையே அது தன் எதிர்வினையாக ஆக்கிக் கொண்டது. இதன் அடுத்த கட்டமாக ராகுல் காந்தி தன்னை ஒரு காஷ்மீர் பிராமணனாக அடையாளப்படுத்திக் கொண்டார். இந்து ஆலயங்களுக்குச் சென்று வணங்கிவிட்டுத் தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

மொத்தத்தில் முஸ்லிம்களாக இருப்பதே குற்றம் என்கிற அளவுக்கு முஸ்லிம்கள் உணர வேண்டிய நிலை சென்ற ஐந்தாண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுபவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்கள் வங்கதேச அல்லது ரோகிங்யா “ஊடுருவிகள்”, அவர்கள் இந்துக்களாக இருந்தால் இந்து “அகதிகள்”. மொழியை அத்தனை சாதுரியமாக ஒரு தாக்குதல் ஆயுதமாக அவர்கள் ஆக்கினர். அண்டை நாடுகளில் இருந்து வெளியேற நேர்ந்தவர்கள் முஸ்லிம்களாக இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தருவது மட்டுமல்லாமல் குடியுரிமையும் அளிக்கப்படும். அவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கடந்த பல பத்தாண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்து இங்கு விவசாயம் முதலான தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களாக இருந்த போதும் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. இன்று அசாமில் அவ்வாறு 40 லட்சம் மக்கள் குடியுரிமை பற்றிய கேள்விக்குறியுடன்  வதிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்துக்கள் எந்த நாடுகளில் இருந்து வந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை என்பதை ஆர்.எஸ்.எஸ் இஸ்ரேலின் ‘அலியாஹ்’ கொள்கையிலிருந்து எடுத்துக் கொண்டது குறிப்பிடத் தக்கது. உலகின் எப்பாகத்திலிருந்து யூதர்கள் இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் கொள்கையைத்தான் அவர்கள் ‘அலியாஹ்’ என்கிறார்கள்.

அக்லக் முதலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது ஒருபக்கம் மோடி மௌனம் காத்தார். இன்னொரு பக்கம் அவரது கட்சிக்காரர்களும் மாநில அமைச்சர்களும் அதை ஆதரித்தனர். மோடி அதைக் கண்டிக்காததற்கு அப்படிக் கண்டிப்பது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாகிவிடும் என அவர்கள் தரப்பில் சமாதானம் சொல்லப்பட்டது.

2015 பிஹார் தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவ், “இந்துக்களும்தான் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள்” எனப் பதிலளித்தபோது, “‘யாதவ் சாதியில் பிறந்துவிட்டு இந்துக்களை அவமானப் படுத்துகிறார்” என மோடி அவரைக் குற்றம் சாட்டியதையும் மறந்துவிடமுடியாது.

இப்படியான அப்பட்டமான மதவாத அரசியல் தொடர்ந்தால் அது எங்கு கொண்டு சென்றுவிடும்?

இதுதான் இந்தத் தேர்தல் நம்முன் எழுப்பும் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *