“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்

அ.மார்க்ஸ் – தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’ என்ற மாயையை, 90-களில் தன் கோட்பாட்டு விமர்சனங்கள் மூலம் உடைத்தெறிந்தவர். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து ஆகியவை தமிழில் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்தியவர். மார்க்சியம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தி மறுவாசிப்பு எனத் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்வைத்தவர். வெறுமனே எழுத்தோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான மனித உரிமைக் களப்பணியில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். இடைவிடாத பயணங்களின் வழியாக இயங்கிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் உடனான மாலை நேர உரையாடல் இது…

எழுத்தின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவரான என் அப்பா அந்தோணிசாமி நாடு கடத்தப்பட்டு தமிழகம் வந்தார். வாட்டாக்குடி இரணியன் போன்ற போராளிகளோடு தொடர்புடையவராக இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சல்பாரிகள் என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அனைவருடனும் தொடர்பைப் பேணியவர் அப்பா. எனவே தோழர்கள் வந்துபோகும் இடமாக என் வீடு இருந்தது.

அப்பா வாசிப்புப் பழக்கம் உடையவர் என்பதால், இயல்பாகவே என் வீட்டில் புத்தகங்கள் இருந்தன. குறிப்பாக, ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். மறுபுறம் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், ஆனந்த விகடன், குமுதம், மஞ்சரி, சோவியத் நாடு போன்ற இதழ்களை வீட்டில் வாங்குவோம். அவை வீடு வந்து சேரும் முன்பே, தபால் அலுவலகத்துக்குப் போய் அங்கேயே தொடர்கதைகளை எல்லாம் படித்துவிடுவேன். ஒருமுறை என் அப்பா ஆனந்த விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைக் குறிப்பிட்டு அவற்றைப் படிக்கச் சொன்னார். அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தொடர்ந்து, ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ குறுநாவலை விகடனில் வாசித்தேன். மெள்ள மெள்ள வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. படிக்கப் படிக்க எல்லோரையும் போல எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது. கல்லூரி மலரில் பாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதுதான் அச்சில் வந்த என் முதல் எழுத்து.

அப்போது, எங்கள் வீட்டுக்கு நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த பல தோழர்கள் வருவார்கள். ஆனால், என் அம்மா என்னை அவர்கள் பக்கமே போகவிட மாட்டார். அப்பாவுக்கு நேர்ந்த காவல்துறை நெருக்கடிகளினால் அம்மாவுக்கு ஏற்பட்ட அச்சம்தான் காரணம். இதனால் நானும் அவர்களுடன் நெருங்க மாட்டேன். ஆனால் அப்போது உள்ளூரில் ஓரளவு செல்வாக்குடன் இருந்த சி.பி.ஐ கட்சியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்துவந்தேன். எமெர்ஜென்சி காலம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் விழிப்பு உணர்வைக் கொடுத்தது. சி.பி.ஐ கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்ததால், நான் சி.பி.ஐ-யுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு சி.பி.எம் கட்சியில் இணைந்தேன். கல்லூரி ஆசிரியனாக இருந்துகொண்டே தீவிரமாகச் செயல்பட்டேன். சி.பி.எம் கட்சியின் ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். வாரம் இரு கட்டுரைகள்கூட எழுதி இருக்கிறேன். என் கட்டுரைகள், கட்சியின் சிறுபிரசுரங் களாகவும்கூட வெளியிடப்பட்டன. கவிஞர் மீராவின் ‘அன்னம்’, பொதியவெற்பனின் ‘முனைவன்’ சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதத் தொடங்கினேன். ‘மணிக்கொடி’ இதழ்களை ஆராய்ந்து ‘முனைவன்’ இதழில் எழுதிய கட்டுரையும் கி.ராஜநாராயணன் மணிவிழா அரங்கில் பேசி பின் மீரா வெளியிட்ட ‘ராஜநாராயணியம்’ நூலில் வந்த கட்டுரையும் மிகுந்த கவனம் பெற்றன. இப்படித்தான் எனது எழுத்துகள் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் யாருடைய எழுத்துகள் உங்களைப் பெரிதும் பாதித்தன?

மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரும் அப்போது என்னை மிகவும் பாதித்தவர்கள். இருவருமே பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனிடம் பயின்றவர்கள்.

கா.சிவத்தம்பியுடன் ஆறு மாத காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தஞ்சையில் இருந்தபோது நானும் பொ.வேல்சாமியும் தினமும் அவருடன் மாலை நேரத்தைக் கழிப்போம்.

கா. சிவத்தம்பியின் பேச்சைப்போல் எளிமையானவை அல்ல அவரது எழுத்துகள்.வாசிக்கச் சற்றுக் கடினமானவை. அதேசமயம், கைலாசபதியின் எழுத்துகளோ எளிமையானவை. கைலாசபதி பத்திரிகையாளராக இருந்தது அவரது எளிமையான நடைக்குக் காரணமாக அமைந்தது. ஆகவே, அவரது எழுத்துகள் என்னை மிகவும் வசீகரித்தன. இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் கைலாசபதியின் நூல்கள் பெரிதும் பாதித்தன. மார்க்சிய நோக்கில் விஷயங்களைப் பார்க்கும் ஆர்வம் அவர் மூலம்தான் எனக்கு ஏற்பட்டது.

மேலும், அப்போது இடதுசாரிகளிடம் ‘ரஷ்ய ஆதரவா…? சீன ஆதரவா…?’ என்ற நிலைப்பாடு முக்கிய விவாதமாக இருந்தது. இதில், கா.சிவத்தம்பி ரஷ்யாவை ஆதரித்தார்; கைலாசபதி சீனாவை ஆதரித்தார். என்னைப் போன்றவர்களுக்கும் சீன ஆதரவு நிலைப்பாடே இருந்ததால், கைலாசபதியிடம் ஈடுபாடுகொண்டேன்.

இயல்பாகவே என்னிடம் தேடல் அதிகம் இருந்ததால், நிறைய தேடித் தேடி வாசித்தேன். மார்க்சிய எழுத்தாளர்களோடு நில்லாமல், தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். தமிழில் வந்த முக்கிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் எல்லாவற்றையும் வாசித்தேன். அந்தக் காலத்தில் என்னை மிகவும் ஈர்த்தவர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். நியோ மார்க்சியக் கருத்துகளும் என்னை ஈர்த்தன. இவை எல்லாம் சி.பி.எம் கட்சியின் மேலிடத்தில் இருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிறகு, எனக்கு அவர்களோடும் முரண்பாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியே வந்தேன். இப்போதும் அந்தக் கட்சி அப்படித்தான் இருக்கிறது எனச் சொல்லவில்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோவியத் மற்றும் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜானகிராமன் எனத் தொடங்கிய நீங்கள், ஏன் புனைவுகள் எழுத விரும்பவில்லை?

எனக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம், என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுபவனாகவும் இலக்கிய விமர்சனம் செய்பவனாகவும் மாற்றியது. எனக்கு முன்பிருந்த இளைய தலைமுறைக்கு, திராவிட இயக்கத்தின் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் எழுத்துகள் ஆதர்சம் என்றால், என்னுடைய தலைமுறை புதிய இடதுசாரி மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நவீனச் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றது எனலாம். அப்படியான நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும், அவற்றை வெளியிட்டுவந்த சிற்றிதழ்களையும் தேடிப் படித்தேன். இந்த எழுத்துகள் எனக்குப் புதிய திறப்பை ஏற்படுத்தின. தமிழ் இலக்கியங்களை இயங்கியல் அடிப்படையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தமிழ் வரலாறு, பண்பாடு அனைத்தையும் எப்படி வெறும் உயர்வுநவிற்சி மனோபாவமற்று, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். சமகால அரசியல் போக்குகளோடு ஒன்றிச் செயல்பட்டு வந்ததாலும், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும், இலக்கிய விமர்சனத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர் நீங்கள். இப்போது அதுவும் குறைந்துவிட்டதே… என்ன காரணம்?

நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பவை, வழக்கமான இலக்கிய நுணுக்கங்களைச் சுட்டும் கட்டுரைகள் அல்ல. ஒருவகை சமூக ஆய்வு விமர்சனங்களாகத்தான் அவை தொடக்கம் முதல் இருந்தன. பாரதி, கி.ரா., கே.டானியல், மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம் இப்படி யாரைப் பற்றி எழுதினாலும் அவற்றின் ஊடாக சமூகத்தின் புனிதம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது என்பதைப் போன்ற சமூக நோக்கில்தான் படைப்புகளை அணுகி விமர்சித்தேன். உதாரணமாக, மெளனி, புதுமைப்பித்தன் என யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் இன்றிக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்துகளில் நான் கவனம் செலுத்தினேன். தற்போது இலக்கியம் வாசிக்க அதிக நேரம் ஒதுக்க இயலவில்லை. தொடர்ந்து, சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து, அதைப் பற்றிப் பேச வேண்டியது, எழுத வேண்டியதே ஏராளமாக உள்ளன. களப்பணிகளோடு என் வாழ்க்கை பிரிக்க இயலாமல் பிணைந்திருப்பதும் ஒரு காரணம்.

இயற்பியல் ஆசிரியராக மூன்று தலைமுறைக்குக் கற்பித்திருக்கிறீர்கள். ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியராக இன்று உங்களது மனநிலை என்ன?

நான் என்னுடைய பாடங்களை ஒழுங்காக நடத்தியிருக்கிறேன் (சிரிக்கிறார்). நான் நிறையப் பயணிக்கிறேன்; ஆதலால், அதிகமாக விடுப்பு எடுத்துவிடுவேன்; வகுப்புக்கு சரிவரச் செல்ல முடியாது என்று பலர் நினைக்கக்கூடும்,. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான் ஒழுங்காகக் கற்பித்திருக்கிறேன். என்னை நானே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியனாக இருந்திருக்கலாம் என்பேன்.

மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது உண்டா?

கவிஞர் தய்.கந்தசாமி போன்ற என் பல மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்றதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.ஆனால், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்த பிறகு, நான் வகுப்புகளில் பாடம் மட்டுமே நடத்தினேன் என்பதுதான் உண்மை. என்னுடைய பெரும்பாலான மாணவர்களுக்கு, நான் இவ்வளவு தீவிரமாக அரசியல் பேசுபவன் என்பதே தெரியாது. மாற்றுக்கல்வி குறித்து நான் கொண்டிருந்த, எழுதிய கருத்துகளைக் கூட கல்லூரியில் நடைமுறைப்படுத்த முயன்றது இல்லை. இந்த சிஸ்டத்துக்குள் ஆசிரியர்களால் பெரிய மாற்றங்கள் ஒன்றையும் கொண்டுவந்துவிட முடியாது.

மூன்று தலைமுறை மாணவர்களை அவதானித்தவர் என்கிற வகையில், அவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் பார்க்க முடிகிறதா?

கல்விமுறையே இங்கு சிக்கலாக இருக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானதாக, போட்டி மனப்பான்மையை விதைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கு உள்ள இளைஞர்களை உருவாக்கும் கல்விமுறையாக இது இல்லை. நான் பணிக்குச் சேர்ந்த எழுபதுகளைக் காட்டிலும் இன்று நிலைமை மோசம். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் அவர்களது துறைகளில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இப்போதைய பாடப்புத்தகங்களும்கூட சிறப்பானவையாக உள்ளன. ஆனால், மாணவர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு பெரிதும் குறைந்துள்ளது. சமூகப்பொறுப்பற்ற திறமை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

வராமல் இருக்க முடியாது. வந்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லா காலகட்டங்களிலுமே ‘அன்றைய’ மாணவர்கள் அரசியலுக்கு வருவதை அதற்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் விரும்பியது இல்லை. புரட்சிக்குப் பிந்தைய காலகட்டம் என்று நினைக்கிறேன்… லெனின் மாணவர்களை நோக்கிச் சொன்னார், “நீங்கள் முதலில் செய்ய வேண்டியது படிப்பு; இரண்டாவது செய்ய வேண்டியது படிப்பு; மூன்றாவது செய்ய வேண்டியதும் படிப்பு!” (சிரிக்கிறார்) ஆட்சியாளர்கள் எப்போதுமே மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பித்தான் ஆக வேண்டும்.

இந்தச் சமூகச் சூழலில் இனி ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் உருவாவது சாத்தியமா?

அப்படியெல்லாம் ஆருடம் சொல்ல முடியாது. சமூகம் குறித்த ஒரு பரந்த ஆய்வுகளோடு அரசியலுக்குள் வருகிறவர்கள் இன்று யாரும் இல்லை. அது நல்ல தலைவர்கள் உருவாவதை அறவே அழித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள், அரசியல் விழிப்பு உணர்வு பெறுவதற்குக் கலை வடிவங்கள் உதவியாக இருக்க முடியுமா?

முன்பு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் பரப்ப கலை வடிவங்கள் பயன்பட்டன. விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் வை.மு.கோதைநாயகி போன்றவர்கள் வீதி வீதியாகச் சென்று பாரதியார் பாடல்களை உரக்கப் பாடி, மக்களைக் கவர்ந்து, கதர்த் துணிகள் விற்றார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்கூட நாடகக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார்கள் என்பார்கள். அது அப்படிப்பட்ட ஒரு காலமாக இருந்தது. பின்னாட்களில் நக்சல்பாரி இயக்கம் கலை வடிவங்கள், வீதி நாடகங்கள் முதலியவற்றை நிறைய பயன்படுத்தியது. இன்று அப்படியான சூழல் குறைந்துள்ளது. சமூக ஊடகங்கள் வரை அனைத்திலும் நாம் யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அவர்களும் அந்த வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்கள். அனைத்திலும் பிற்போக்கான, மேலோட்டமான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும், இந்துத்துவத்தையும் நிறுவுவதற்காக ஜெயமோகன் போன்றவர்கள் கலை வடிவங்களைப் பயன்படுத்தும் காலம் இது. கலை வடிவங்கள், மக்களிடையே வெறுப்பை விதைக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் காலம் இது..

இடதுசாரியான நீங்கள், பின் நவீனத்துவம் மாதிரியான சிந்தனைகளை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

மார்க்சியத்துக்குள் இருந்துகொண்டே மார்க்சியம் சார்ந்த வெவ்வேறு வகையான சிந்தனைப் போக்குகளை வாசித்துவந்தேன். சோவியத் யூனியனின் தகர்வு என்பதுதான் என்னை அடுத்தகட்டச் சிந்தனைகளை நோக்கி நகர்த்தியது. ஏன் சோவியத் உடைந்தது என்ற கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றபோது, நாம் சமூகம் சார்ந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிகாரம் எப்படித் தோன்றுகிறது; எப்படிச் செயல்படுகிறது? என்ற உரையாடல்கள், ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களின் பின் நவீனச் சிந்தனைகள் நோக்கி நகர்த்தியது.

பின் நவீனத்துவத்தில் உங்கள் பங்களிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்? இன்று பின் நவீனத்துவம் அடைந்துள்ள நிலை என்ன?

பின் நவீனத்துவம் என்பதைப் பற்றி நான் மட்டுமல்ல, வேறு பல சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களும் பேசினார்கள். மற்றவர்கள் பேசியதற்கும் நான் பேசியதற்கும் ஒரு சிறிய வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் இலக்கியத்தில் பின் நவீனத்துவச் சிந்தனையின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். நான்-லீனியர் எழுத்து, மையமற்ற எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவையாக அவர்களின் அக்கறை இருந்தது. நான் பின் நவீனத்துவம் எப்படி தத்துவ வரலாற்றில் நவீனத்துவத்தைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக வருகிறது என்பது குறித்தும், பின் நவீன உலகில் அரசியல் வடிவங்களில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தினேன்.

முன்பு பேசியதைப் போல இனி, ‘மொத்தத்துவ’ நோக்கும் ‘ஒற்றை மையம்’ சார்ந்த அணுகல்முறையும் சாத்தியம் இல்லை என்பதாகவும், தலித்துகள், இஸ்லாமியர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் அடையாள அரசியலின் தேவைகள் குறித்தும் பேசினேன். இது தமிழ்த் தேசியர்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரையும் கோபப்படுத்தியது. மறுபுறம் இலக்கியத்தில் உள்ளவர்களையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

என்னுடைய பின் நவீனத்துவம் குறித்த நூல் வந்தபோது, இலக்கியம், அரசியல் என இரண்டு தரப்புமே கடுமையாக எதிர்த்தார்கள். இலக்கியவாதிகள், நான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்றார்கள். அஷ்வகோஷ் போன்றவர்கள், ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்’ போன்ற அபத்தத் தலைப்புகளில் நூல்கள் எழுதினார்கள். கிட்டத்தட்ட நான் அப்போது தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று யாரும் பின் நவீனத்துவம் குறித்து அதிகமாகப் பேசுவதும் சர்ச்சையிடுவதும் இல்லை. ஆனால், ‘விளிம்புநிலை’,‘கட்டுடைத்தல்’, ‘சொல்லாடல்’ போன்ற சொற்களை எல்லோருமே இயல்பாகப் பாவிக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட, அனைவரின் எழுத்து வடிவங்களிலும் பின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இருக்கிறது. எதார்த்தவாதத்துக்கு இனி இங்கு இடம் இல்லை என்று நம்பியது நடக்கவில்லை என்றாலும் யாரும் இப்போது மொண்ணையான எதார்த்த வடிவில் எழுதுவது இல்லை. மறுபுறம், யாரெல்லாம் பின் நவீனச் சிந்தனைகளை எதிர்த்தார்களோ, அவர்கள்தான் இன்று அடையாள அரசியலை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, சி.பி.எம் போன்ற கட்சிகள் இன்று தீண்டாமை எதிர்ப்பு முன்னணி, மாற்றுப் பாலினத்தவர் பிரச்னை போன்றவற்றை எல்லாம் கையில் எடுத்துச் செயல்படும் நிலை வந்துள்ளது. இது பின் நவீன நிலை, தமிழ்ச் சமூகத்தையும் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பதற்குச் சான்று.

பின் நவீனத்தை இவ்வளவு முக்கியமான கருத்தியலாகக் கருதும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள், ஏன் பின் நவீனம் குறித்த ஒரு முழுமையான நூலைக்கூட தமிழில் மொழிபெயர்க்கவில்லை?

தெரிதாவின் Writing and Difference நூலையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு நாம் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. பாரம்பரியம் மிக்க நம் தமிழை அந்த அளவுக்குத் தகுதிப்படுத்தவில்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் சாத்தனார், வீர சோழிய ஆசிரியர் எல்லாம் தமிழை அன்றைய தத்துவ விவாதங்களுக்குத் தக்க மேலுயர்த்திச் சென்ற முயற்சிகளைக் காணும்போது, நமக்கு இன்று பிரமிப்பாக இருக்கிறது. இன்று அந்தப் பணியை அத்தனை சிரத்தையுடன் செய்யத் தவறிவிட்டோம் ஆங்கிலத்தில் வெளியாகும் கோர்ட் தீர்ப்புகளையேகூட தமிழில் குறைந்த வார்த்தைகளில் கச்சிதமாக இரட்டை அர்த்தம் வந்துவிடாமல் உருவாக்குவதே சிரமமாகத்தானே இருக்கிறது. தமிழில் உரைநடையே தாமதமாக வந்ததுதானே? ஒரு ஜனரஞ்சகமான உரைநடையை பாரதிதானே துவக்கிவைக்கிறார். அதற்கு முன்பு ஏது? அவரும்கூட எட்டையபுரத்தில் உட்கார்ந்து சீட்டுக் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்திருந்தால், இதுவும் நடந்திருக்காது. அவர் ஒரு பத்திரிகையாளர் ஆகி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான நவீனமயமாதலின் அங்கமானதால் விளைந்த நன்மை இது.

முதலில் சி.பி.எம், பிறகு மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் இணைந்து, பிறகு அவற்றில் இருந்து விலகி, மார்க்சியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள், இப்போது மீண்டும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களே?

மார்க்சியத்தை அப்படி ஒன்றும் நான் தாக்கவில்லை. சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். நாம் ஹிட்லரையும் முசோலினியையும் அவர்களின் கொடுங்கோன்மைக்காகவும் அவர்களின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்காகவும் நிராகரிக்கிறோம். வேடிக்கை என்னவென்றால், உலகெங்கிலும் இடதுசாரிகள்கூட வன்முறையே புரட்சிக்கான வழி என்றார்கள். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என, தங்கள் ஆட்சிமுறையைக் கூறிக்கொண்டார்கள். முதல் உலகப் போர் முடிந்த சமயம், ‘கிரேட் டிப்ரஷன்’ ஏற்பட்டு, பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, உலகம் முழுதுமே முதலாளித்துவம் வீழ்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோஷலிசமே தீர்வு என்ற நம்பிக்கை உலகம் முழுதும் பரவிவந்தது. அதற்கு ஏற்ப ரஷ்யாவிலும் இடதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

இத்தாலியாகட்டும், ஜெர்மனியாகட்டும், அங்கும் ‘சோஷலிசம்’ எனக் கட்சிக்குப் பெயர் வைத்துக்கொண்டுதான் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ‘நாஸி’ என்றாலே தேசிய சோஷலிசக் கட்சி என்றுதான் பொருள். காந்தி போன்றவர்களுக்குத் தேவை இல்லாமல் ஒரு கம்யூனிஸ எதிர்ப்பு உணர்வு உருவானதற்கு கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த ‘துப்பாக்கி முனையிலிருந்து அதிகாரம் பிறக்கிறது,’ ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ முதலான சொல்லாடல்களும் ஒருகட்சி ஆட்சிமுறையும்தான் காரணம். கம்யூனிஸத்தின் உள்ளார்ந்த அம்சம், மகத்தான அன்பும் மானுடநேயமும், மக்களிடையே பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல், அனைத்து அம்சங்களிலுமான சமத்துவமும்தான். இதை உணரவும் உணர்த்தவும் இடதுசாரிகள் தவறிவிட்டார்கள். இந்த நிலம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், சமணர்களும் இன்னும் அனைவருமே காலங்காலமாக இணைந்து வாழ்ந்த நிலம். ஒற்றை அடையாளத்துக்கு இங்கு இடம் இல்லை. அது குறித்தெல்லாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறினார்கள். அதைத்தான் விமர்சித்தேன்.

இன்று, சூழ்நிலை வெகுவாக மாறிவிட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதை இன்று பெரும்பாலான கம்யூனிஸக் கட்சிகளே கைவிட்டுவிட்டன. அவர்களும் பல கட்சி ஆட்சிமுறைக்கு மாறிவருகிறார்கள். தேர்தல் பாதையை நோக்கித் திரும்பும் நிலை அதிகரித்துள்ளது. இங்கு நடக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பும், நம்பிக்கை அளிக்கும் சக்திகளாகவும் இடதுசாரிகள் உள்ளார்கள். பொது சிவில் சட்டமாகட்டும், புதிய கல்விக் கொள்கையாகட்டும் – அதை விமர்சிப்பவர்களாக, செயல்படுபவர்களாக அவர்கள்தானே இருக்கிறார்கள்.

பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, இங்கே நுழைய இருக்கும் கார்ப்பரேட் கல்விமுறை. இது ஏதோ சமஸ்கிருதம் அல்லது வேதக் கல்வி முதலான பிரச்னை மட்டும் அல்ல. அது மாணவர்களை, வெகு நுட்பமாக ‘படிப்பை உயர் கல்வி அளவுக்குத் தொடர வேண்டிய மாணவன்’, ‘தொடரக்கூடாத மாணவன்’ எனப் பிரிக்கிறது. கல்விமீதும் பன்னாட்டு ஆதிக்கத்தைப் பெருக்குவதற்கு வழி அமைப்பதாக இருக்கிறது. இதை எல்லாம் இடதுசாரிகள்தான் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். எனவே, பிரச்னையின் தீவிரம் மற்றும் தேவை கருதி நானும் அவர்களுடன் இணைந்து நிற்கிறேன். மதவாத பாசிச எதிர்ப்பில் நம்பிக்கை தரும் சக்தியாக வேறு யாரும் இங்கு இன்று இல்லை.

இடதுசக்திகளுக்கான எதிர்காலம் என்பது என்னவாக இருக்கிறது?

இன்று உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. மிச்சமுள்ள சோஷலிச நாடுகளுமே நிறைய மாறிவிட்டன. இனி, கம்யூனிஸம் அதன் ஆதிப் பண்பான சமத்துவம் என்பதை வலியுறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு உதிரும் என்பது போன்ற அதிகார எதிர்ப்புச் சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டும். உலகின் பன்மைத்துவத்துக்கு அழுத்தம் அளிக்கவேண்டும். நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடுகள் அழியும் இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலும் இக்காலக்கட்டத்துக்கு உரிய வடிவில் மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை ஏன் முழுமுற்றாக மறுதலிக்கிறீர்கள்?

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்ல… பொதுவாக தேசியம், சாதியம், மதவாதம் என்றெல்லாம் மக்கள் கூறுபோடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்கிற பெயரில் பேசப்படும் ‘வந்தேறி வடுகர்’ முதலான சொல்லாடல்கள், அருந்ததியர் உள்ளிட்ட ‘பிற மொழியினருக்கு’ இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்வதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இங்கு உருவாகும் தமிழ்த் தேசியம் எளிதில் இந்துத்துவத்துக்குப் பலியாகக்கூடிய ஒன்று!

இந்துத்துவம், சாதி என்று பேச்சு வருகிறபோது, அம்பேத்கரின், பெரியாரின் போதாமைகளை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கு நிறைய குழப்பங்கள், அபத்தங்கள் உள்ளன. அம்பேத்கர் போதாது; பெரியார் போதாது என ஆளாளுக்கு சர்ச்சை யிடுகிறார்கள். அப்படியானால் யார்தான் இங்கு போதுமானவர்? யாருமே எக்காலத்துக்குமே, எல்லா இடங்களுக்குமே போதுமானவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை. மதவாதிகள்தான் அப்படி நினைக்கக்கூடும். அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ் – இவர்களில் யார் சொன்னதும் முக்கியமானவைதான். யாரேனும் ஒருவர் ஒரு விஷயத்தில் தோற்றுப் போனதாக யாரேனும் சொன்னார்களானால், அந்த விஷயத்தில் மற்ற மூவர் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இவர்கள் எல்லோரிடமும் பொதுவான அம்சங்கள் உண்டு. குறிப்பாக, இவர்கள் நால்வருக்கும் தேசியத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல, ஒவ்வொருவரிடமும் குறைகளும் உண்டு. ஒருவரை முன்னிறுத்தி மற்றவரைப் போதாது என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அம்பேத்கர் போதாது; மார்க்ஸ் வேண்டும் என்பதுபோலவே, மார்க்ஸ் போதாது; அம்பேத்கர் வேண்டும் என்பதும் உண்மைதான். இதில் சர்ச்சையை உண்டாக்குவது உள்நோக்கம் கொண்டது.

இன்றைய மிகப் பெரிய ஆபத்து, பாசிசம். அந்த எதிர்ப்பை இத்தகைய சர்ச்சைகள் பலவீனப்படுத்தும். அது போலவே, காந்தி பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் இங்கு உள்ளன. அவரை விமர்சிக்கும் யாரும் அவரை வாசிப்பது இல்லை. காந்தியிடம் பல மாற்றங்கள் இருந்தன. அதேபோல, ஒரு தொடர்ச்சியும் இருந்தது. அவர் 1910-களிலேயே தீண்டாமை பற்றி சிந்தித்து இருக்கிறார். தான் உருவாக்கிய கம்யூன்களில் அவர் தீண்டாமையை ஒழித்திருந்தார். அம்பேத்கரோ, பெரியாரோ – யார் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் பேசியபோது, காந்தி – யார் பாதிப்பை உருவாக்குகிறார்களோ, அவர்களை நோக்கிப் பேசினார். ஆலய நுழைவுப் போராட்டங்களில் காந்தி இறங்கிய பிறகுதான் முழு வெற்றி கிடைத்தது. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது உண்மைதான். அதற்காக, காந்தியின் போராட்டங்களின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முடியுமா?

காந்தி தோற்றுவிட்டார் என்றால், இங்கு யார்தான் வென்றவர்? அம்பேத்கர்…பெரியார்… மார்க்ஸ்… எல்லோரும்தான் தோற்றார்கள். மார்க்ஸ், உலகம் முழுக்கத் தோற்றார். சரியாகச் சொல்வதானால், இவர்கள் யாருமே தோற்கவில்லை. இவர்கள் உலகை மாற்றினார்கள். அவர்களது முழு லட்சியமும் நிறைவேறவில்லை என்பது உண்மை. ஆனால், உலகம் இனி அவர்களுக்கு முந்திய காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இனி இங்கு யாராவது சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் நீச பாஷை எனச் சொல்ல இயலுமா? அப்படியானால், திராவிடக் கருத்தியல் தோற்றது என எப்படிச் சொல்வீர்கள்?”

அம்பேத்கரை ‘இந்துத்துவ அம்பேத்கராக’ சித்திரிக்க முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க-வினர் அப்படித் திட்டமிட்டு ஓர் உரையாடலை உருவாக்குகிறார்கள். அம்பேத்கர் மகாராஷ்டிராக்காரர். சாவார்க்கரோடு எல்லாம் பழகியிருக்கிறார் என்பதை வைத்து, அப்படிப் பேச முயல்கிறார்கள். இஸ்லாத்துக்கு அவர் மாறாததற்கு, ‘தேசியம் பலவீனப்பட்டுவிடும்’ என்று அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அடிப்படையில் ‘இந்து ராஷ்டிரம்’ என்பதை வெளிப்படையாகவும் உறுதி யோடும் காந்தியைவிடவும் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். எப்படியாயினும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பதில் உறுதியாக இருந்தார்; வெளியேறினார். அவரை இந்து மத அடையாளங்களுக்குள் அடைப்பது முடியாத காரியம். இதற்கான பதிலையும் மறுப்பையும் நாம்தான் முன்வைக்க வேண்டும்.

அதேசமயம் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வினரின் இந்த முயற்சியைக் காட்டிலும் இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக் காட்டும் மௌனத்தை நான் மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன். இதுபோன்ற மௌனத்தின் வழியாக அவர்கள் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். ரவிக்குமார் போன்றவர்களின் பா.ஜ.க-வை நோக்கிய நகர்வு ஆபத்தானது. மாட்டிறைச்சிப் பிரச்னை பூதாகரமானபோது, உனாவில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் அவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதில், தலித்-முஸ்லிம் ஒற்றுமை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய அந்த எழுச்சி, சமீபத்திய நம்பிக்கையூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு. ஆனால், அதில் பங்குகொள்ளாமல் அமைதிகாத்த ஒரே மாநிலம், தமிழகம்தான். இங்கு அனுசரிக்கப்பட்ட மௌனம் மிக மிகக் கவலைக்குரிய ஒன்று.

இது பெரியாரின் மண். இங்கு இந்துத்துவத்தால் ஒருநாளும் கால் ஊன்ற முடியாது!” என்று் பேசப்படுவது எதார்த்தத்துக்கு மாறானதா?

ஆமாம். நிச்சயமாக. அப்பாவித்தனமான நம்பிக்கை அது. பெரியாருக்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப்போனது. தொடர்ந்து மதவாதத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்கும் எதிராக வலுவாகப் போராடியே தீரவேண்டிய காலகட்டம் இது. இன்று இடதுசாரிகளின் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்னும்கூட கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தலித் – கம்யூனிஸ்ட் ஒற்றுமை இன்னும் போதிய அளவில் நிகழவில்லை. இந்துத்துவ எதிர்ப்பில் தமிழ்த் தேசியர்களையும் நம்புவதற்கு இல்லை.

தலித்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை போதிய அளவு சாத்தியப்படாதது போலவே இஸ்லாமியச் சமூகமும் தன்னைப் பெரிதும் தனிமைப் படுத்திக்கொள்கிறதே?

இன்று முஸ்லிம் இளைஞர்கள் மாற்றங்களுக்கான நம்பிக்கையைத் தருகிறார்கள். பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்னையில்கூட, இன்று அதை எதிர்த்தபோதும் அதே சமயம் தனிநபர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்கிற கருத்துகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நமக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளதே என்கிற நியாயமான அச்சமும் மூத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்னைகள் தனித்துவமானது. உடனடியான ஆபத்துகள் அவர்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தனி அரசியல் அடையாளங்களுடன் ஒன்று சேர்வது தவிர்க்க இயலாதது!

நீங்கள் முஸ்லிம் அரசியலை விமர்சனமற்று ஆதரிப்பதாகச் சொல்லப்படுவது பற்றி…

எனக்கு எந்த முஸ்லிம் அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது. நான் பாதிக்கப்படுபவர்களுக்காக நிற்கிறேன். இங்கு பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, அவர்களோடு நிற்கிறேன். அவர்கள் குறித்து மிகப் பெரிய பொய்களும் அவதூறுகளும் மக்கள் மத்தியில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உண்மைகளைக் கூறுகிறேன், அவ்வளவுதான். மற்றபடி, எனது கருத்துகள் பலவற்றை முஸ்லிம்களே ஏற்பது இல்லை. ஏற்க முடியாது என்பது எனக்கும் தெரியும். என்னைப் பொறுத்தமட்டில், நான் எந்த மதத்தையும் ஏற்க இயலாதவன். ‘என்னுடைய மதமே சிறந்தது’ எனச் சொல்வதைக் காட்டிலும் ஆபாசமான ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருத்து. எல்லா மதங்களிலும் சிறப்புகளும் உண்டு; விமர்சனங்களும் உண்டு. இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான கூறுகளும் உண்டு. ஓர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது என்பதே அதன் சிறப்புகளில் ஒன்று என்பது என் கருத்து. நிச்சயமாக என் முஸ்லிம் நண்பர்கள் அதை ஏற்கமாட்டார்கள்!

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுகின்ற இந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுவதென்பதே இந்துத்துவம் உறுதிப்படுவதுதான். பெரியார், இடைநிலைச் சாதிகளை ஒன்றுதிரட்டினார் என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட அவர் இந்துத்துவத்திற்கு எதிராகவே ஒன்று திரட்டினார். ஆனால், இன்று இந்துத்துவத்தோடு இணைந்து அந்தத் திரட்சி நடக்கிறது. இந்தியா முழுக்கவும் இதுதான் நிலை. முசாபர்நகரில் முஸ்லிம்களை இந்துக்கள் தாக்கினார்கள் என்றால், அவர்களை ‘இந்துக்கள்’ என்பதாக மட்டும் பார்க்க முடியாது. அதை ஜாட்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தாத்ரியில் நடந்த தாக்குதல்களை ரஜபுத்திரர்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் இப்படித்தான். குறிப்பான இடைநிலைச் சாதிகளின் திரட்சி, இந்துத்துவத் திரட்சியுடன் இணைந்தே நிகழ்கிறது!

திராவிட இயக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

திராவிடக் கருத்தாக்கத்தின் அடிப்படையான அம்சமே தமிழக எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவருமே தமிழர்கள், திராவிடர்கள் என ஏற்றுக்கொள்வதுதான். சாதிரீதியான, மதரீதியான பிளவுகளற்று, தமிழ் அடையாளத்தை முன்வைத்து இயங்குவதுதான். ஆனால், வாரிசு அரசியல் அதன் இழுக்கு. தலைவரைப் பார்த்து அடிமட்ட தொண்டர்கள் வரை வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது ஜனநாயக நோக்கத்துக்குப் பெருங்கேடு. அது மாற வேண்டும்!

டாஸ்மாக் – குடிக் கலாசாரம் குறித்து…

தவறாமல் எல்லோராலும் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி (சிரிக்கிறார்). இது கவலைக்குரிய ஒரு விஷயம்தான். சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாகக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருப்பது வருத்தமான விஷயம்தான். அதேசமயம், பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று. இதை வெறும் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமூகப் பிரச்னை. இதைப் பேசவேண்டியவர்கள் எழுத்தாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சிந்தனையாளர்கள். இந்தப் பொறுப்பைப் போலீஸ்காரர்களிடம் கொடுப்பது கள்ளச் சாராயத்துக்கும், போதை மருந்துப் பழக்கத்துக்கும், குற்றவாளிகள் உருவாவதற்கும் மட்டுமே பயன்படும்.

மோடி அரசின் இந்த இரண்டாண்டு ஆட்சியின் மீதான உங்கள் விமர்சனம்?

ஒரு போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சி அது. காந்தியும் நேருவும் இட்டுச் சென்ற பலமான ஜனநாயக அடித்தளத்தையும், அம்பேத்கர் தலைமையில் உருவான நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும், சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மத ஒருமைப்பாட்டையும் தகர்த்துவிடும் அத்தனை எளிதற்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆட்சி அது.

பணமதிப்பு நீக்கம் குறித்த உங்கள் பார்வை?

இதை நான் வரவேற்கிறேன். மோடி அரசு எத்தனை பொய்யானது; திறமையற்றது; அடிப்படைப் பொருளாதார அறிவற்றது; சர்வாதிகாரமானது; அடித்தள மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலையற்றது என்பதை எல்லாம் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கைதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது!

போருக்குப் பிறகான ஈழத்தின் அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? ஏதேனும் நம்பிக்கைகள் தென்படுகின்றனவா?

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. அதே சமயம், எந்த முன்னேற்றமும் வரவே இல்லை என்றும் சொல்ல முடியாது. ராஜபக்‌ஷேவின் தோல்வி; அங்கு ஏற்பட்டிருக்கிற கூட்டணி ஆட்சி முதலியன வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். நீண்டகாலப் போர், அது சார்ந்த அடக்குமுறைகள் – இவற்றால் அங்கு மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட நிலம் மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதிகாரப் பரவல், ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு, எனப் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அதேசமயம், அங்கு ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீண்ட காலப் போரின் முடிவு அங்கு கொஞ்சமாகவேனும் சுதந்திரக் காற்று வீசுவதற்கு வழியமைத்துள்ளதை நாம் முற்றாக மறுத்துவிட இயலாது.

உண்மையறியும் குழுவில் நீங்கள் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாகச் சிலர் சொல்லி வருகிறார்களே…?

அப்படி இல்லை. பொதுவாக எல்லா பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தலித்துகளும், இஸ்லாமியர்களும், பிற விளிம்புநிலை மக்களுமே இருக்கிறார்கள் என்பதால், அப்படியான தோற்றம் இருக்கக்கூடும். கடந்த ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில் என்ற தலித் இளைஞர், காதல் தகராறால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் தாய்மாமனால் கை கால்கள் வெட்டப்பட்டதாக ஒரு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று முழுமையாக விசாரித்து, அது காதல் தகராறோ, ஆணவக் கொலை முயற்சியோ அல்ல என்றும் ரயில் விபத்துதான் என்றும் ஆய்வறிக்கை வழங்கினோம். இப்படி, சம்பவங்களின் உண்மை நிலைக்கு ஏற்பத்தான் எப்போதுமே செயல்படுகிறோம். இதில் எங்களுக்கு விருப்புவெறுப்புகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மைகளைச் சொல்வதே போதுமானது. கூடுதலாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இத்தனை ஆண்டுகால சமூகப்பணியில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?

நிறைய எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தவன் நான். அதே சமயம், அ.மார்க்ஸ் சொன்னால் எவ்வித சுயநலனும் இன்றி, இன, மத சார்பற்று உண்மையைச் சொல்வார் என்று மற்றவர்கள் என்மீது நம்பிக்கை கொள்வதை நான் உணர்கிறேன். அதில் முக்கியமான வெற்றி, காந்தியைப் பற்றி நான் பேசியதன் வாயிலாக பலர் காந்தியை மறுபரிசீலனை செய்தார்கள். அது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். Secularism என்ற தத்துவச் சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர் காந்தி. இந்துத்துவத்தை எதிர்ப்பதில் காந்தி உருவாக்கிய தளமே, நாம் கைக்கொண்டு இயங்கவேண்டிய தளம்.

அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை முன்னிட்டு போராட்டங்கள் நடந்தவண்ணம்தான் உள்ளன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளப் படுகின்றனவா? அகிம்சைப் போராட்டங்களுக்கு இன்னும் இங்கு மதிப்பு இருக்கிறதா?

அகிம்சை, வன்முறை என்பதையெல்லாம் தாண்டி எந்தப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். பல ஆயுதப் போராட்டங்கள் வீழ்ந்ததன் காரணம் அது மக்கள் போராட்டமாக மாறாததுதான். மக்கள் போராட்டமாக மாறாத எந்தப் போராட்டமும் வெல்வது இனிச் சாத்தியம் இல்லை. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது; ஒருமித்த கருத்தை உருவாக்குவது என்பது எந்த ஒரு போராட்டத்திலும் முக்கியமான அம்சம்.

“சமூக ஊடகங்களின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

பாசிட்டிவாகச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசால் ஒரு பொய்யை இனி எளிதாகச் சொல்வது சாத்தியம் இல்லை என்றாகிவிட்டது. ஒரு கருத்தை சமூகத்திடம் கொண்டுசெல்ல கார்ப்பரேட் மீடியாக்களை மட்டுமே மக்கள் நம்பியிருந்த காலமும் மலையேறிவிட்டது. கார்ப்பரேட் மீடியாக்களே இன்று சமூக ஊடகங்களைக் கவனித்து, தங்களைத் திருத்திக்கொள்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பொருள், இன்று கார்ப்பரேட் மீடியாக்கள் பலம் இழந்துவிட்டன என்பது அல்ல.

சமூகச் சிந்தனைக்குள் புதிதாக வருகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் பன்மைத்தன்மையை உணர்வதும் அதைக் காப்பாற்றுவதும் முதன்மையான ஒன்றாக வைத்து இயங்குங்கள். பன்மையைப் போலொரு அற்புதமான விஷயம் எதுவும் இல்லை.

சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன்

படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

இடதுசாரிகள் மீதும் இஸ்லாமியர்கள் மீதும் காழ்ப்பைக் கக்கியுள்ள ஜெயமோகன்..

“முற்போக்கு என்ற பெயரில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நிலை வரை சென்ற இடதுசாரிகள், இனிமேலாவது தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இங்கு இடதுசாரி அரசியலே இல்லாமல் ஆகிவிடும். அது இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பாகும்.”

– இது இன்றைய (மே 28, 2014) தமிழ் இந்துவில் ஜெயமோகன் கக்கியுள்ள விஷம்.

வழக்கம் போல எந்த ஆதாரமும் இன்றி அப்பட்டமான அவதூறு ஒன்றை இந்த நபர் இடதுசாரிகள் மீது உமிழ்ந்துள்ளார்.

தீவிரவாதிகள், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் அவர்களுக்காகப் பரிந்து பேசிய வரலாறு இடதுசாரிக் கட்சிகளுக்குக் கிடையாது. தீவிரவாதத்தை நடைமுறையிலும் கொள்கை அடிப்படையிலும் அவர்கள் கடுமையாக எதிர்ப்பவர்கள். தீவிரவாதிகள் எனச் சந்தேகப்பட்டு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் எந்தப் பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டதும் இல்லை.

சென்ற ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தோழர் பிரகாஷ் காரட்டும் மூத்த சி.பி.எம் தலைவர்களும் குடியரசுத் தலைவரைச் சந்தித்து 26 முஸ்லிம் இளைஞர்களின் பட்டியல் ஒன்றைத் தந்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் தீவிரவாதிகள் எனக் கைது செய்யப்பட்டுக் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகி, இறுதியில் பல ஆண்டுச் சிறை வாசங்களின் ஊடாகத் தம் இளமையையும் எதிர்காலத்தையும் இழந்த பின் குற்றமற்றவர்கள் என நீதி மன்றங்களால் விடுதலை செய்யப்பட்டவர்கள், காராட் தலைமையில் சென்ற குழு வைத்த கோரிக்கை முற்றிலும் 100 சதம் சரியானது. 1. இது போன்ற அப்பாவி இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 2. இவ்வாறு தீவிரவாதிகள் எனச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் விரைவு நீதி மன்றங்களில் விசாரிக்கப்பட்டுக், குற்றவாளிகளாக இருந்தால் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இதே கோரிக்கையை நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு போன்றோரும் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தின் பேரில் யாரும் கைது செய்யப்படுவதையோ, விசாரிக்கப்படுவதையோ எந்நாளும் இடதுசாரிகள் எதிர்த்ததில்லை. சொல்லப்போனால் சில நியாயமான பிரச்சினைகளிலும் கூட இந்த மாதிரி விடயங்களில் முஸ்லிம்களுக்கு உரிய ஆதரவு அளித்ததில்லை என்கிற விமர்சனகள்தான் அவர்கள் மீது உண்டு. ஒரு எடுத்துக்காட்டு. சுமார் இரண்ன்டாண்டுகளுக்கு முன் திருச்சி விமான நிலையத்தில் தமிம் அன்சாரி என்கிற இளைஞனப் பாகிஸ்தானுக்கு உளவு கடத்தியதாகப் பொய் கூறிக் கைது செய்தனர். ஒரு உண்மை அறியும் குழு அமைத்து நாங்கள் விசாரித்த போது அது முழுப் பொய் எனத் தெரிந்தது. பின்னால் நீதிமன்றமும் அவர் மீது போடப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை எல்லாம் ரத்து செய்துப் பிணையில் விடுதலை செய்தது, இன்றளவும் அது பொய் என்பதால் மேற்கொண்டு யாரும் கைது செய்யப்படாமல் அவ் வழக்கு தேங்கியுள்ளது. இந்த தமீம் அன்சாரி சி.பி.எம் கட்சியிலும் வெகு ஜன அமைப்புகளிலும் பல மட்டங்களில் நீண்ட காலம் பணியாற்றியவர். இது பொய் வழக்கு எனத் தெரிந்த பின்னும் கூட சி.பி.எம் கட்சி வெளிப்படையாக அவரது கைதைக் கண்டிக்கவோ, அவருக்குச் சட்டபூர்வமான் உதவிகள் எதையும் செய்யவோ முன்வரவில்லை என்பதை நடு நிநிலையாளர்கள் கண்டித்துள்ளனர்.

ஆக முற்றிலும் குற்றமற்றவர்கள் என நிரூபித்து நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம்கள் பிரச்சினையில்தான் இடதுசாரிக் கட்சிகள் தலையிட்டுள்ளன. ஆனால், தீவிரவாத முஸ்லிம்களை ஆதரித்ததாலேயே, முஸ்லிம் அல்லாதவர்களின் ஆதரவை இழந்து, இடதுசாரிகள் இன்று தேர்தலில் தோற்றுள்ளனர் என அப்பட்டமான பொய் ஒன்றை வீசுகிறார் இந்த நபர் ஜெயமோகன்.

உண்மை இதற்கு நேர் எதிரானது. 2004 தேர்தலில் 40க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள் இன்று வெறும் பத்தாகச் சிறுத்துள்ளதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில் இன்று அவர்கள் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெறக்கூடிய நிலை ஏற்பட்டதுதான் காரணம்.

இந்நிலை ஏன் ஏற்பட்டது? ஜெயமோகன் சொல்வது சரி எனில் இடதுசாரிகள் முஸ்லிம்களை ஆதரித்ததால் மற்றவர்கள் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாகிறது. ஆனால் இடதுசாரிகள் இன்று மே.வங்கத்தில் பெருந் தோல்வி அடைந்ததற்கான முக்கிய காரணம் அங்கு அவர்கள் முஸ்லிம்களின் ஆதரவை இழந்ததுதான்.

மே.வங்கம் இந்தியாவிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் (25%) மாநிலம். 30 ஆண்டுகள் இடது முன்னணி ஆண்டும் அங்கு முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. இந்தியாவிலேயே முஸ்லிம்களின் நிலை மிக மோசமாக உள்ள மாநிலம் அது என்பதை சச்சார் குழு தன் அறிக்கையில் நிறுவியது. இடதுசாரிகள் தோற்றதற்கு இத்வும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு இடதுசாரித் தலைவர், “அந்தக் குள்ள நீதிபதிதான் (சச்சார்) எல்லாத்துக்கும் காரணம்” என வெளிப்படையாகவே தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியது இதழ்களில் வந்தது.

உண்மை இப்படி இருக்க ஜெயமோகனின் மேற்கண்ட கூற்று எதைக் காட்டுகிறது?

ஜெயமோகனின் மூன்று அடிப்படைப் பண்புகள், அடையாளங்கள் இதன் மூலம் வெளிப்படுகின்றன. அவை:

1.முஸ்லிம் வெறுப்பு

2.இடதுசாரி எதிர்ப்பு.

‘இடதுசாரிகளின் தேய்வு இந்தியாவுக்கு இழப்பு’ என ஜெயமோகன் நீலிக்கண்னீர் வடிப்பது இவரின் மூன்றாவது முக்கிய அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. அது:

3.இந்த நபரின் நரித்தனம்.

ஒவ்வொரு ரத்த அணுவிலும் இடதுசாரி எதிர்ப்பை ஏந்தியுள்ள இந்த நபர் இப்படித் தந்திரமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு என்னால் இன்னொரு எடுத்துக்காட்டைச் சொல்ல இயலும். அவரது ‘பின் தொடரும் நிழலில்’ எனும் அப்பட்டமான கம்யூனிச எதிர்ப்பு நாவலை மூத்த தொழிற்சங்கவாதியும் இடதுசாரிக் கட்சி ஒன்றின் உறுப்பினருமான மறைந்த தோழர் ஜெகனை வைத்து வெளியிட்டவர் இந்த ஜெயமோகன்.

எனினும் யாருக்கும் ஒரு அய்யம் வர இடமுண்டு. இடதுசாரிகள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை ஆயின் பின் ஏன் ஜெயமோகனுக்கு இடதுசாரிகள் மீது இத்தனை ஆத்திரம்?

தீவிரவாதத்தை எதிர்ப்பதோ கண்டிப்பதோ அல்ல ஜெயமோகனின் நோக்கம். அவரே ஒரு ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளன். அவருடைய பிரச்சினை முஸ்லிம்களின் நியாயங்களை ஆதரிப்பதுதான். முஸ்லிம்களின் இருப்பை ஏற்றுக் கொள்வதுதான். இந்தச் சமூகத்தின் பன்மைத் தன்மையை அங்கீகரிப்பதுதான். இந்த விடயங்களைப் பொருத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளை எந்நாளும் இடதுசாரிகள் விட்டுக் கொடுத்ததில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கைகளிலும் கூட மத வன்முறைத் தடுப்புச் சட்டம் ஒன்றை இயற்றுதல், முஸ்லிம் இட ஒதுக்கீடு, ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கை நிறைவேற்றம் ஆகியவற்றிற்கு இடதுசாரிக் கட்சிகள் இரண்டும் முக்கியத்துவம் அளித்துள்ளன. இராமர் கோவில் கட்டுதல், அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவைத் தொடர்தல் ஆகியவற்றிலும் இடதுசாரிகள் எப்போதும் முஸ்லிம்களின் நிலைபாட்டை ஆதரித்தே வந்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக காங்கிரஸ் தவிர்த்த பிற இந்தியக் கட்சிகளில் அவர்கள் மட்டுமே எக்காரணம் கொண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்வதில்லை?

இடதுசாரிகள் மீது காழ்ப்பை உமிழ்வதற்கு இவை போதாதா ஜெயமோகன் போன்ற ஒரு பாசிஸ்டுக்கு?

தனது அரசியல் வாழ்வை இந்துத்துவ அமைப்புகளில் தொடங்கிய ஜெயமோகன் இந்துத்துவத்தின் இரு முக்கிய எதிரிகளின் மீது காழ்ப்பைக் கொட்டியுள்ளதன் பின்னணி இவையே.

ஒன்று உறுதி. இந்த அரசில் ஜெயமோகனுக்கு நல்லதொரு பரிசு காத்திருக்கிறது.

“குடிசை மக்கள் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்” அ

அ.மார்க்ஸ் நேர்காணல்

October 16, 2012 at 1:06pm

{“தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காலாண்டிதழானஅணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மார்க்சின் வீட்டில் அவரைச் சந்தித்து எடுக்கப்பட்டது. முன்னணியின் மாநிலப் பொருளாளர் ஆர்.ஜெயராமன், மாநிலக் குழு உறுப்பினர்கள் நீதிராஜன் மற்றும் எஸ்.கே.சிவா ஆகியோர்வெண்மணிசார்பாகப் பங்கேற்றனர்.

1960 களின் பிற்பகுதி தொடங்கி சென்னைக் குடிசை வாழ் மக்களின் பிரச்சினைகள், உலக வங்கித் தலையீட்டால் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், பெரும்பான்மைக் குடிசை மக்கள் தலித்களாகவும் டொழிலாளிகளாகவும் இருந்தபோதும் அவர்களின் பிரச்சினைகள் தலித் பிரச்சினையாகவும் தொழிலாளிகளின் பிரச்சினையாகவும் பார்க்கபடாமற் போன வரலாறு, உலக மயம் மற்றும் உலகத் தரமான பெருநகர உருவாக்கங்களினூடாக  சென்னைகுள்ளேயே இரு சென்னைகள் உருவாகும் அவலம் முதலிய பல பிரச்சினைகள் இந் நேர்காணலில் அலசப்படுகின்றன.} 

 

வெண்மணிசென்னை நகரில் அடிக்கடிக் குடிசைகள் தீப்பற்றி எரிவது குறித்து உண்மை அறியும் குழுக்களை அமைத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளீர்கள். எவ்வளவு காலமாக இப்படிக் குடிசைகள் தீப்பற்றி எரிகின்றன? இதனுடைய பின்புலமென்ன?

 

.மார்க்ஸ்நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே இதுபோல ஒரு மிகப் பெரிய தீ விபத்து நடந்தது. தீப்பிடிக்காத சுமார் 5000 வீடுகளை தி.மு.க அரசு அப்போது எரிந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்தது. குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் இயற்கையாகக் கூட நடக்கலாம். சமீப காலமாகச் சென்னை நகரில் நடக்கும் தீ விபத்துக்களை அரசு தானாகவே ஏற்பட்டவை எனவும் மின் கசிவு முதலியவைதான் காரணம் எனவும் சொல்லுகிறது. ஆனால் மக்கள் அதை நம்புவதில்லை. அப்படி நம்பாததற்குக் குறிப்பாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் இந்த விபத்துக்கள் எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் அறிவிக்கப் படும் இடங்களிலேயே நடை பெறுகின்றன. திட்டங்களுக்காக அப்பகுதியிலுள்ள குடிசைகளை அகற்ற வேண்டுமென சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அம் மக்கள் மத்தியில் வந்து பேசியிருப்பார்கள். கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள். மக்கள் அதற்குச் சம்மதித்திருக்க மாட்டார்கள். திடீரென அப்பகுதிக் குடிசைகள் தீப்பற்றி எரியும். 2009 இறுதியில் வியாசர்பாடி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில்  320 குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அதற்குச் சில நாட்களுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்காக அப் பகுதியினர் வெளியேற வேண்டுமென அதிகாரிகள் கூட்டம் நடத்திப் பேசியிருந்தார்கள். அருகிலுள்ள பி.கே.புரம் மற்றும் புது நகரிலும் அதே காலகட்டத்தில் சுமார் 130 வீடிகள் தீப்பற்றி எரிந்தன. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக இங்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்ததோடு, அவர்களது வீடுகளெல்லாம் அளந்து குறியிடப்பட்டிருந்ததையும் நாங்கள் பார்த்தோம். 2009 ஜூனில்  அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் விரிவு ஆகிய இடங்களில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்தடுத்து எரிந்தன. அடையாறு-போரூர் எக்ஸ்பிரஸ் ஹைவேக்காக நிலம் அளந்து கல் பதிக்கப்பட்ட இடம் இது. தீ விபத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அடையாறு பூங்கா ட்ரஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு இம்மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் பற்றி இவர்களிடம் “கருத்துக் கேட்கப்பட்டு” இருந்தது. இப்படி நிறையச் சொல்லலாம். சென்ற மாதத்தில் அசோக் பில்லர் அருகே அம்பேத்கர் காலனி எரிந்து 500 குடிசைகள் சாம்பலாகியதல்லவா? அருகில் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்திற்கு,  இப்பகுதி மக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள  ஒரு கிரவுண்ட் தேவை எனச் சொல்லிப் பிரச்சினை இருந்தது. ஆக இந்த ‘விபத்துக்களெல்லாம்’ திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்கிற ஐயம் மக்களுக்கு உள்ளது.

 

இரண்டாவதாக, தற்போது குடிசைகள் எரியும்போதெல்லாம், முன்னைப்போல அதே இடங்களில் தீப்பிடிக்காத குடியிருப்புகளை அரசு கட்டித் தருவதில்லை. உடனடியாக அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு, நகருக்கு வெளியே துரைப்பாக்கம், ஓக்கியம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் விரிவிலிருந்த 106 வீடுகளும் எரிந்த ஒரு வாரத்தில் அப்பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி முள்வேலியிட்டு அடைக்கப்பட்டு உள்ளே யாரும் நுழையக் கூடாது எனப் பலகைகளும் நடப்பட்டன. பெருங்களத்தூர் கன்னடபாளையம் அருகில் ஆள் நடமாட்டமும் எந்த வசதியும் இல்லாத பகுதி ஒன்றில் ஆளுக்கு ஒரு சென்ட் நிலத்தைக் கொடுத்துக் கட்டாயமாக அவர்கள் கொண்டு விடப் பட்டனர். தற்போது எரிந்துள்ள அசோக்நகர் மற்றும் மக்கீஸ் கார்டன் பகுதிகளிலும்கூட உடனடியாக வந்து பார்வையிட்ட அமைச்சர்களும் மேயரும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொன்னது, இங்கிருந்து நீங்கள் போய்விடுங்கள் என்பதுதான். எரியும் பகுதிகளில் இருந்தவர்களுக்குச் சில ஆயிரம் நிவாரணப் பணம் வழங்குவதோடு முடித்துக் கொள்ளுகிறார்கள். முன்னைப்போல அந்தந்த இடங்களிலேயே தீப்பிடிக்காத வீடுகள் கட்டிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் இந்த விபத்துக்கள் எல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்டவையோ என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்படுகிறது.

 

வெண்மணிமக்களுக்கு இத்தகைய சந்தேகம் ஏற்படுகிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் பலமுறை இந்தப் பகுதிகளுக்குச் சென்று அறிக்கை அளித்துள்ளீர்கள். உங்கள் கருத்து என்ன? இந்தத் தீவிபத்துகளுக்குப் பின் ஏதாவது சதி உள்ளதா?

 

.மாஎங்களின் உண்மை அறியும் குழு அறிக்கைகளில் நாங்கள் நூறு சதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் உள்ளவற்றைத்தான் இறுதி முடிவாகச் சொல்வது வழக்கம். அப்படிச் சாத்தியமில்லாத நிலையில் அரசும் ஊடகங்களும் முன்வைக்கும் கதைகளில் உள்ள முரண்களை அம்பலப்படுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மறைக்க முயல்கிற அம்சங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்போம். முழுமையாக நடந்ததை வெளிக் கொணர வேறு சாத்தியமான விசாரணை முறைகளைக் கோருவோம். இந்த விஷயத்திலும் நாங்கள் அப்படித்தான் சொல்கிறோம். மக்களின் அய்யங்களில் முழுக்க முழுக்க நியாயம் இருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லும் காரணங்கள் பலவும் நம்பும்படியாக இல்லை. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த புகழ் பெற்ற மூர் மார்க்கெட்டைக் கொளுத்தித்தானே அங்கு கடை வைத்திருந்தோரை  வெளியேற்றினார்கள். இந்தத் தீவிபத்துக்கள் எல்லாவற்றையும் மின் கசிவு என்பதுபோலக் காரணம் சொல்லி, “விசாரணையில் உள்ளது” எனப் பதிவு செய்து கொஞ்ச காலத்தில் கதையை முடித்து விடுகிறார்கள். தீயணைப்புத் துறையைக் கேட்டால், “நாங்கள் சேவை செய்யும் அமைப்பு மட்டுந்தான். விசாரிப்பது எங்கள் பொறுப்பு அல்ல. நீங்கள் சொல்வது போல இது திட்டமிட்ட சதி வேலையாகவும் இருக்கலாம். எந்தெந்தப் பகுதியில் தீ விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். குடிசைப் பகுதிகளுக்கு மிக அருகாக தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாது, குழாய்களைக் கொண்டு சென்று தீயை அணைக்க முயலும் முன் காரியம் முடிந்து விடுகிறது. இந்தப் பகுதிகளில் நிரந்தரமாகத் தண்ணீரை அதற்கான தொட்டிகளில் வைத்திருப்பதையும் ‘சாலிட் ஹைட்ரன்ட்’ முதலான தொழில் நுட்ப வசதிகளையும் செய்ய வேண்டும். ஆனால் அரசு இதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை” என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் மக்கீஸ் கார்டனில் சுமார் 200 குடிசைகள் மூன்று வாரங்களில் தவணை முறையில் எரிந்து சாம்பலாயின. எல்லாவற்றையும் மின்கசிவு எனச் சொல்லி மேல் விசாரணை இல்லாமல் வைத்திருந்தார்கள், இது குறித்து ஆயிரம் விளக்குக் காவல் நிலையத் துணை ஆய்வாளரிடம் கேட்டோம். மக்களின் ஐயங்களைச் சொல்லி, இப்படித் தவணை முறையில் எரிவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே, அவர்களை வெளியேற்றுவதற்கான சதி முயற்சி என்கிற கோணத்தில் இதை விசாரிக்க முடியாதா எனக் கேட்டோம். அவர் சிரித்தார். “அப்படீன்னா, அரசாங்கமே இப்படிச் செய்யுது என்று விசாரிக்கணும் என்கிறீங்களா? அது எப்படி சார் முடியும்?  அரசாங்கம் மக்களுக்கு நல்லதுதானே செய்யும்?” என்றார். ஆக, போலீஸ் விசாரணை மூலம் இந்தத் தீவிபத்துக்கள் குறித்த   உண்மைகள் வெளிவராது.

 

இன்று சென்னையில் நான்கைந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்கள்  செயலில் உள்ளன. துறைமுகம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னத்திலிருந்து மதுர வாயில் வரை கூவம் ஆற்றின் ஓரமாகவும், அடையாறு மலர் மருத்துவ மனையிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் வரையில் அடையாற்றங்கரை ஓரமாகவும், எண்ணூர்- பேசின் பிரிட்ஜ்- வால்டாக்ஸ் சலை வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் ஓரமாகவும் கட்டப்படும் அதி வேக உயர் நெடுஞ்சாலைகள் இவற்றில் முக்கியமானவை. இந்த நதிக்கரை ஓரங்களில்தான் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் உள்ளன. மிகவும் சுகாதாரக் கேடான, எந்த வசதியும் இல்லாத இந்தச் சாக்கடைக் கரையோரங்களில்தான்  புழுக்களைப்போல நம் மக்கள் வசித்து வருகின்றனர், நகர்ப் புறத்தில் அமைந்துள்ள வாழ்வாதாரங்களுக்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இவர்கள் காலங் காலமாக இங்கே வசித்து வருகின்றனர். இந்த வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்துக் கடன் தரும் உலக நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்குத் தக இன்று நமது அரசுகள் நகர்ப்புறக் குடியிருப்பு உருவாக்கம் தொடர்பான தனது கொள்கைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. குடிசைகள் இருந்த இடங்களிலேயே உறுதியான வீடுகளைக் கட்டித் தருவது, வசதிகளை மேம்படுத்துவது என்பதற்குப் பதிலாக, குடிசை மக்களை நகர் மையங்களிலிருந்து வெளியேற்றி தூரமாகக் கொண்டு சென்று பிற குடிமக்களிடமிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பது இன்றைய அணுகல் முறையாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்தத் தீவிபத்துக்கள் மிகுந்த சந்தேகத்திற்குரியவைகளாக உள்ளன. இதனை நமது காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. எனவே கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிசைப் பகுதி தீ விபத்துக்கள் குறித்து  நீதி விசாரணை ஒன்று வேண்டும் என்கிறோம்.

 

வெண்மணிஉலக நிதி நிறுவனங்களின் தலையீட்டால் மத்திய மாநில அரசுகள் குடிசை மாற்று தொடர்பான தமது அணுகள் முறைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன என்று சொன்னீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா?

 

.மாமிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று இது. கூடிய வரை சுருக்கமாகச் சொல்வதானால், சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில், குறிப்பாக அறுபதுகள் தொடங்கி கிராமப் புறங்களிலிருந்து பெரிய அளவில் அடித்தள மக்கள் நகரங்களுக்கு, அதிலும் குறிப்பாகச் சென்னை நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அரசின் தவறான கொள்கைகள், கிராமப்புறம் மற்றும் விவசாய வளர்ச்சியில் போதிய அக்கறை காட்டாமை, நேரு காலத்தியத் தொழில் முயற்சிகள் யாவும் நகரங்களை மையப்படுத்தி இருந்தது முதலியன இப்படியானதற்குக் காரணங்களாக இருந்தன. இவர்கள் ஆக அடித்தள மக்கள் மட்டுமல்ல. ஆக அடித்தளச் சாதிகளையும் சேர்ந்தவர்கள். இன்று சென்னையிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதம் வரை குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களாகவும், வீடற்றவர்களாகவும் உள்ளனர். வீடற்றவர்கள் என்பது நடைபாதை ஓரங்கள் முதலானவற்றில் ஒண்டியிருப்பவர்கள். இந்தக் குடிசை வாழ் மக்கள் மற்றும் வீடற்றோர்களில் 90 சதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

வெண்மணிஆகக் குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தலித் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும் அல்லவா?

 

.மாநிச்சயமாக. அதைத்தான் சொல்ல வருகிறேன். இங்கிருந்த பாரம்பரியமான தலித்கள், கடலோரங்களில் வசித்த மீனவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் முதலான உதிரித் தொழிலாளிகள் போன்றோரில் பெரும்பகுதியும் உறுதியான வீடுகளின்றிக் குடிசைப் பகுதிகளில் வசித்தவர்கள்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடது. எனினும் புதிதாக இடம்பெயர்ந்து வந்த அடித்தளச் சாதியினர் நகரத்தில் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அசுத்தமானப் பகுதிகளில், குறிப்பாக இன்று சாக்கடைகளாக மாறிப்போன நதிக்கரைகளில் குடிசைகள் அமைத்துக் குடியேறினர். இவர்களில் 90 சதம் பேர் தலித்களாகவே இருந்தபோதும் சென்னை நகரத் தலித்கள் என்றால் பரம்பரியமாக இங்கிருந்த தலித்கள் மட்டுமே மனம் கொள்ளப்பட்டனர். புதிதாகக் குடியேறிய இந்தக் குடிசை மக்களைத் தலித்களாகப் பார்க்கும் வழமை இங்கில்லை. சாதி என்பதை பிறப்புடனும் பிறந்த நிலத்துடனும் (Nativity) தொடர்புபடுத்திப் பார்க்கும் நமது மனநிலையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

 

இறுக்கமான மார்க்சீய வரையறையின்கீழ் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை. வேலை உறுதி,  தொழிற் கள உரிமைகள் எதுவும் இல்லாமல் துண்டு துக்காணி வேலைகள் (piecemeal works) செய்து வாழ்பவர்கள் இவர்கள். வீட்டு வேலைகள் செய்வது, கார்ப்பொரேஷன் பள்ளி வாயில்களில் நாவற் பழம், மலிவான மிட்டாய்கள் முதலியவற்றை விற்பது, பூ விற்பது, வண்ணம் பூசுவது, வண்டி இழுப்பது, மெக்கானிக் ஷாப்களில் இரும்பு அடிப்பது,  சாவு மேளம் அடிப்பது, பாலியல் தொழிலாளியாகச் செயல்படுவது, சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, கட்டிடத் தொழிலாளிகளாக ஒப்பந்தக் காரர்களிடம் பணிபுரிவது, குழந்தைத் தொழிலாளிகளாக ஓட்டல்கள் முதலானவற்றில் வேலை செய்வது, குப்பை பொறுக்குவது, குழி தோண்டுதல், லாரிகளில் சுமை ஏற்றுதல் முதலானக் கடின வேலைகளைச் செய்வது முதலியன இவர்களில் பெரும்பாலானோரது தொழில்கள். இந்தத் தொழில்களில் பல கடினமானவை மட்டுமல்ல,  பாலியல் சுரண்டல் மட்டுமின்றிப் பல்வேறு வகையான  சுரண்டல்களுக்கும் வழி வகுப்பவை. இப்படியான உதிரித் தொழில்களைச் செய்து வந்தவர்கள் என்பதால் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை.

 

ஆக வர்க்க அடிப்படையில் அணி திரட்டியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைத் திரட்டியவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இவர்கள் இருந்தனர்; இருக்கின்றனர்.

 

1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் அணுகல் முறைகளிலிருந்து அவர்கள் பல அம்சங்களில்

வேறுபட்டனர், தங்களுடைய ஆதரவு சக்திகளாக இருந்த குடிசை வாழ் மக்கள் முதலானோருக்கு உடனடிப் பலன்கள் கிட்டுமாறு சில திட்டங்களை அவர்கள் நடைமுறைப் படுத்தினர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் மற்றும் 1971ம் ஆண்டு நகரத் திட்டமிடல் சட்டம் முதலியன இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1970 டிசம்பர் 23 அன்று நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் ‘தமிழ்நாடு குடிசை மற்று வாரியத்தை’த் துவக்கி வைத்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இன்னும் ஏழாண்டுகளில் சென்னை நகரில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் ஒழித்து விடுவதாகச் சூளுரைத்து அதற்கென 40 கோடி ரூபாய்களை ஒதுக்கவும் செய்தார். 1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி சென்னையிலுள்ள குடிசை வாழ் மக்களின் என்ணிக்கை 7.37 இலட்சம். 2001ம் ஆண்டுக் கணக்கின்படி இது 10.79 இலட்சம். இது மொத்தச் சென்னை மக்கள்தொகையில் 26 சதம். இன்றைய நிலையில், நடைபாதையில் வசிப்போர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இது உயர்ந்த பட்சம் 30 சதமாக இருக்கலாம்.

 

திமு.க அரசு தான் அறிவித்த குறிக்கோளை நிறைவேற்ற இயலாமற் போனதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால்  தொடக்கத்தில் இது தொடர்பாக அது கொண்டிருந்த அணுகல் முறை உண்மையில் வரவேற்கப்படக் கூடிய ஒன்று. குடிசைகளை ஒழித்து அந்த இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை உருவாக்குவது என்பதில் குடிசை மக்கள் அதே இடங்களில் குடியமர்த்தப் படுவது என்பது முக்கிய அம்சமாக இருந்தது. நொச்சிக்குப்பம், டூமிங்குப்பம், அயோத்தி குப்பம் முதலான மீனவர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இப்படித்தான் உருவாயின. இராம.அரங்கண்ணல்  போன்ற கட்சித் தலைவர்கள் குடிசை மாற்று வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். கட்டப்பட்ட குடியிருப்புகளை யாருக்கு அளிப்பது என்கிற அதிகாரம் வாரியத் தலைவருக்கு அளிக்கப்பட்டது. மாநில அரசு நிதி ஒதுக்கீடு, ‘ஹட்கோ’ போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி உதவி ஆகியவற்றின் மூலம் இவை நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் உலக நிதி நிறுவனங்கள் இதில் தலையிட்டு மிகப் பெரிய கொள்கை மாற்றங்களுக்கு வழி வகுத்தன. இதன் முக்கியமான அம்சம் என்னவெனில் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி  வெகு தொலைவில் கொண்டு சென்று பிற நகர மக்களிலிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பதே. 1972லிருந்து உலக வங்கியின் தலையீடு தொடங்கியது. இதற்கென அது சில கொள்கை அறிக்கைகளையும் உருவாக்கியது, Urbanisation (1972), Sites and Services Projects (1974), Housing (1975) முதலியன இவற்றில் சில. இது குறித்து நித்யா ராமன் விரிவாக ஆய்வு செய்துள்ளார் (EPW, July 30, 2011). குடிசை மாற்று நடவடிக்கைகளில் அரசியல் தலையீட்டைக் குறைத்து அதிகாரவர்க்க மயப்படுத்துவது (bureucritisation),  மக்கள் நலன் என்பதைக் கட்டிலும் இந்தத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் நிதியை எவ்வாறு சிக்கனமாகவும் மீட்டெடுக்கும் வகையிலும் பயன்படுத்துவது முதலான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முன்னதாக நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு இக்குடியிருப்புகள் வழங்கப்படும்போடு அவர்கள் மாதந்தோறும் வெறும் 10 ரூபய்கள் கொடுத்தால் போதுமானது எனவும், வைப்புத் தொகையான 500 ரூபாயையும் கூட அவர்கள் கட்ட வேண்டியதில்லை எனவும் தி.மு.க அரசு உத்தரவிட்டிரூந்தது குறிப்பிடத்தக்கது.

1977ல் மொத்தத் திட்டத் தொகையான 62 மில்லியன் டாலரில் 24 மி டாலரை உலக வங்கி கடனாக அளித்தது.  சென்னை நகர வளர்ச்சித் திட்டம்1 (MUDP 1) என இதற்குப் பெயர். 1980-88ல் MUDP 2க்கு 42மி டாலரும், 1988-97 காலகட்டத்தில் தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் 255 மி டாலரும் கடனளிக்கப்பட்டது. குடிசைப் பகுதி மக்களை அவர்களிடத்திலிருந்து வெளியேற்றாமல் அவரவர் இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களை கட்டிக் குடியமர்த்துவது என்கிற தமிழக அரசின் கொள்கையை உலக வங்கி வெறுப்புடன் பார்த்தது. நகருக்கு வெளியே இடங்களைக் கண்டுபிடித்து அங்கே தங்குவதற்கான ‘வசதிகளை  ஏற்படுத்தி’ தகுதியானவர்களுக்கு அளிப்பது, கூடியவரை கட்டிடங்களாகக் கட்டி அளிப்பது என்பதைத் தவிர்ப்பது, அரசு மாநியங்களைப் பெரிய அளவில் குறைப்பது, வாரியத் தலைவர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது முதலியன உலகி வங்கியின் கொள்கைகளாக அமைந்தன. கட்டப்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு அளிக்கும்போது, அவர்களிடமிருந்து உடனடியாகக் கட்டுமானச் செலவில் பத்து சதத்தை வசூலிப்பது, மீதத் தொகையை 12சத வட்டியில் 20 ஆண்டுகளில் வசூலிப்பது முதலியன உலக வங்கி ஏற்படுத்திய சில மாற்றங்கள். முன்னதாக 4 சத வட்டியே பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இப்படித் தொடங்கியதுதான் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி ஓக்கியம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்வது என்பது. 1986ல் மெரீனா கடற்கரையை அழகு படுத்துவது என்கிற பெயரில் மீனவர் குடியிருப்புகளக் காலி செய்ய எம்.ஜி.ஆர் அரசு நடவடிக்கை மேற்கொண்டதும், இடம்பெயர மறுத்த மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர்கள் கொல்லப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான் நடந்தது.

 

வெண்மணிசென்னைக்குள் இனி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களே கட்டுவது இல்லை என்பதுதான் அரசு முடிவா?

 

.மா: ஆமாம். அரசு அப்படித்தான் முடிவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மக்கீஸ் கார்டனில் குடிசைகள் எரிந்ததையொட்டி நாங்கள் குடிசை மாற்று வாரியத்தில் விசாரித்தபோது இத்தகைய பதில்தான் வந்தது. பட்டினப்பாக்கம் தவிர இனி சென்னைக்குள் குடிசை மாற்றுக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்டமே இல்லை என உறுதியாகச் சொன்னார்கள். மேயர் சைதை துரைசாமியும் அதைத்தான் சொன்னர். “சென்னைக்குள் எங்கே சார் இடமிருக்கு? இருந்தா காட்டுங்க, அம்மாட்ட சொல்லி உடனே கட்டித் தருகிறேன்” என்றார்.

 

வெண்மணிஅவர்கள் சொல்வது உண்மைதானா? சென்னை நகர மையத்தில் இனிமேல் இடமே கிடையாதா?

 

.மா: இல்லை. அது தவறான கருத்து.  தவறு என்பதைக் காட்டிலும் அது முழுப் பொய். இது குறித்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து வரும்  “Transparent Chennai’ என்கிற அமைப்பு சில முக்கிய தகவல்களை முன்வைத்துள்ளது.

 

அதன்படி. சென்னை நகருக்குள் புதிதாகக் குடிசைக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டே இருந்த போதிலும் 1985க்குப் பின் புதிய குடிசைப் பகுதிகள் ஏதும் அராசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஆனால் புதிய குடிசைப் பகுதிகள் உருவாகும்போது அவற்றைக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டுமென்பது விதி. கடைசியாக இது குறித்த விரிவான ஆய்வு 1971ல் செய்யப் பட்டது. அப்போது 1202 புதிய குடிசைப் பகுதிகள் அடையாளம் கண்டு அறிவிக்கப் பட்டன. அதற்குப் பின் 1985ல் அந்தப் பட்டியலில் மேலும் 17 குடியிருப்புகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. அவ்வளவுதான்.அதன்பின் நூற்றுக்கணக்கான புதிய குடிசைப் பகுதிகள் உருவாகியிருந்த போதிலும் அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.  சிலவற்றில் வாழ்ந்தவர்கள் உரிய விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

 

ஆனால் இப் புதிய குடிசைப் பகுதிகள் அனைத்தும் சென்னை நகரத்திற்குள் மிகக் குறைந்த சிறு நிலப் பரப்பிலேயே அமைந்துள்ளன. குடிசை மாற்று வாரியம் 2002ல் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பின் படி இந்த அங்கீகரிக்கப் படாத புதிய குடிசைப் பகுதிகள் சென்னை நகரின் மத்தியப் பகுதியில் வெறும் 1.7 சதுர கி.மீ பரப்பிலேயே அமைந்துள்ளன. மொத்தச் சென்னைப் பெரு நகரப் பகுதியிலும் வெறும் 4.8 சதுர கி.மீ பரப்பில்தான் இவை உள்ளன. இது விரிவாக்கப் பட்ட கார்பொரேஷனின் மொத்தப் பரப்பில் வெறும் 1.1 சதம் மட்டுமே.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டதைப் பயன்படுத்தி பாடம் நாராயணன்  அறிந்துள்ள ஒரு தகவலின்பட்டி நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சென்னை முழுவதிலும் அரசு கையகப் படுத்தியுள்ள மொத்த நிலத்தில் பயன்படுத்தப் படாது கைவசமுள்ள நிலம் 10.42 சதுர கி.மீ. ஆக அரசு நினைத்தால் இந்தக் குடிசைப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் அவர்களின் வாழ்வை அழிக்காமல் சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த இயலும். வெறும் 4.8 சதுர கி.மீயில் சுகாதாரமற்ற குடிசைகளில் வாழும் இவர்களை உபரியாக உள்ள 10.42 சதுர கி.மீ பரப்பில் குடியேற்ற முடியாதா என்ன?

 

ஆனால் சிங்காரச் சென்னைக்குப் பொருத்தமற்ற அழுக்குகளாகக் கருதி இம்மக்களை செம்மஞ்சேரி முதலான பகுதிகளுக்கு வெளியேற்றுவதிலேயே குறியாய் இருக்கும் அரசுகள் நகருக்குள் இடமே இல்லை எனச் சாதிக்கின்றன. குடிசைப் பகுதிகள் எரியும்போது அந்த இடத்திலேயோ, இல்லை 5கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றியோ அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு  கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப் பட்டுள்ளன.  சென்னை நகருக்குள் இது போன்ற சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளின் மூலம் கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும்.  வளர்ச்சி, மற்றும் சென்னையை அழகு படுத்தல் குறித்த  மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும். குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை.

 

வெண்மணிஏன் இப்படிக் குடிசைப் பகுதிகளை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்? செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களில் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வருகிற அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பார்த்துள்ளீர்களா? அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

 

.மாஎந்த வகையிலும் குடிசைப் பகுதி மக்களுக்குச் சட்டபூர்வமான நிலை அளித்துவிடக் கூடாது என்பதுதான்.  இவர்களை எப்போதும் சட்ட விரோத ஆக்ரமிப்பாளர்களாக வைத்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது. நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  குடிசைப் பகுதிகள் பலவற்றில் மக்கள் தாமாகவே மின் இணைப்புகளைக் கொடுத்துக் கொள்கின்றனர். அசோக் பில்லர் அருகிலுள்ள அம்பேத்கர் காலனிக்கு நாங்கள் சென்றபோது எரிந்து போன இடங்களில் அவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்களாகவே இணைப்புக் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் இதெல்லாம் தெரியும். ஆனாலும் இந்த “மின் திருட்டு” அறிந்தே அனுமதிக்கப் படுகிறது. குடிசை வாழ் மக்களை பிற குடிமக்களுக்குச் சமமானவர்களாக நடத்த அரசு விரும்பவில்லை. அவர்களை ஒருவகைச் சட்ட விரோதக் குடிமக்களாகவும், குற்ற நிலையினராகவுமே வைத்துக்கொள்ள அரசு நினைக்கிறது. குடிசைப் பகுதிகளை அங்கீகரித்தால், அவர்களை நினைத்தபடி வெளியேற்ற இயலாது. சில விதி முறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.

 

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கண்ணகி நகர் போன்ற இடங்களில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலை பற்றி எங்கள் அறிக்கையில் விரிவாகப் பேசியுள்ளோம். முன்பிருந்த இடங்களிலிருந்து சுமார் 20,30 கி.மீ தொலைவில் இவர்கள் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப்படும்போது முதலில் அவர்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுகிறது. வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பெண்கள் அவற்றைத் தொடர இயலுவதில்லை. பிள்ளைகள் படிக்க முடிவதில்லை. குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் கிடையாது. கடன், கந்து வட்டி, கள்ளச் சாராயம், ராவுடியிசம், தற்கொலைகள், இப்படித்தான் அங்கே வாழ்க்கை அமைந்துள்ளது.

 

இப்போது பெரும்பாக்கத்தில் ‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்ட்த் திட்ட’த்தின் கீழ்  மிகப் பெரிய மெகா குடியிருப்பு ஒன்றை அரசு கட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் 950 கோடி ரூபாய் நிதியில் இது கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு எட்டு மாடி வளாகம். 27,158 வீடுகள் இங்கே கட்டபடுகிறதாம். ஒவ்வொரு வீடும் 200 சதுர அடியாம். இப்படியான மெகா குடியிருப்புத் திட்டம் மிக மிக மோசமானது. முதலில் இவ்வாறு அடித்தள மக்களை சமூகத்திலிருந்து பிரித்துக் கொண்டு சென்று ஒதுக்கி வைப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்து, இந்த ஜவஹர்லால் நேரு திட்டம், ராஜீவ் அவாஸ் யோஜனா (JNNURM / RAY) என்பனவெல்லாம் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைகளை அந்த்தந்த இடங்களிலேயே (in situ) வைத்து மேம்படுத்துவது என்பதுதான். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 30 கி.மீ தொலைவில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்துவது தவறு.

 

பெரும்பாக்கம் குடியிருப்பில் எல்லாவிதமான வசதிகளையும் அரசு செய்து தரும் எனச் சொல்வதையும் நாம் நம்ப இயலாது. பாடம் நாராயணன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவலின்படி அங்கே 20 அங்கன்வாடிகள் 3 நர்சரிப் பள்ளி, 5 தொடக்கப் பள்ளிகள், 2 உயர்நிலப் பள்ளிகள், 2 மேல் நிலைப் பள்ளிகள், 1 கல்லூரி, 1 விடுதி, 50 படுக்கைகள் உள்ள ஒரு மருத்துவமனை எல்லாம் கட்டித்தரப்படுமாம்.  ஒவ்வொரு வீட்டிலும் 5 பேர்கள் இருப்பதாகக் கொண்டால் பெரும்பாக்கம் குடியிருப்பில் உள்ள  27,158 வீடுகளிலும் 1,35,790 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு எப்படி 50 படுக்கை கொண்ட மருத்துவமனை போதும்? குறைந்த பட்சம் 100 அங்கன்வாடிகள் 20 பள்ளிகள் தேவைப்படாதா? அடுக்கு மாடிக் குடியிருப்பில் 20 க்கும் மேற்பட்ட லிஃப்ட்கள் பொருத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்கு இவை ஒழுங்காக வேலை செய்யும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன.

4 அல்லது 5 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இப்படி ஒரே இடத்தில் கட்டுவது மிகப் பெரிய அபத்தம். அரசு அதிகாரிகளே இந்த முட்டாள்தனமான திட்டத்தை எதிர்த்துள்ளதாக அறிகிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

 

வெண்மணிஇன்று நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். சென்னை நகரக் குடிசை வாழ் மக்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

 

.மாநிறைய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. உலகமயம் பல்வேறு தளங்களில் அடித்தள மக்களின் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. “தேச அரசுகள் தனியார் மயப் படுத்தப்படல்” (privatization of nation states)

Top of Form