சீரழிக்கப்படும் உயர் கல்வி

குங்குமம், ஜூலை 20, 2018

முதல்முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைத்தபோது புதுச்சேரி மாநில துணை ஆளுநராக அமர்த்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி கே.ஆர். மல்கானி கல்வி என்பது ஒரு மேலைக் கருத்தாக்கம் எனவும் இந்தியர்களுக்கு அது முக்கியமில்லை எனவும் கூறியது அன்று பெரிய சர்ச்சையானது. வேதம் வழங்கப்பட்டவர்களாகக் கருத்தப்படும் ‘செமிடிக்’ மதத்தினருக்கே கல்வி முக்கியம், அப்படியான ஒரு அருளப்பட்ட நூல் என எதுவும் இல்லாத எமக்கு கல்வி அடிப்படையான ஒன்று அல்ல என்பது இதன் பொருள்.

ஆனால் இன்று இப்படி வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் அதை அவர்கள் நடைமுறையில் தொடங்கிவிட்டனர்.  உலகத் தரமான பல்கலைக்கழகங்கள், “மாண்புமிகு கல்வி நிறுவனங்கள்” (Institute of Eminence-IoE) என ஒருபக்கம் வாயளவில் முழங்கினாலும் உயர்கல்வியை பா.ஜ.க அரசு குறி வைத்துத் தாக்குவதை நாம் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ள முடியும்.

உயர்கல்வி, பல்கலைக் கழகங்கள் முதலான கருத்தாக்கங்களை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேலை நாடுகளில் பல்கலைக் கழகங்கள் உருவானபோது அதற்கான வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு அக்கால அரசதிகாரிகளிடமோ மத பீடங்களிடமோ கொடுக்கப்படவில்லை. ஷ்லெர்மேயர். ஃபிச்டே, வில்லியம் வான் ஹம்போல்ட் முதலான தத்துவ ஞாநிகளிடமே அது கொடுக்கப்பட்டது. இன்றளவும் முனைவர் பட்டம் பெறுவோருக்கு Doctor of Philosophy ((Ph.D), Master of Philosophy (M.Phil) என்றுதான் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ‘தத்துவம்’ என்கிற கருத்துடன் உயர்கல்வி இணைக்கப்படுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றளவும் அறிவியல் படிப்பவர்களாயினும் ஷேக்ஸ்பியரையும், சங்க இலக்கியங்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்பது நியதி.

வெறும் பொறியாளர்களையோ, ‘ரொபாட்’ களையோ தயாரிக்கும் நிறுவனங்கள் அல்ல பல்கலைக்கழகங்கள். இன்றளவும் உலகத் தரமான கல்வி நிறுவனங்கள் என்றால், அவை பல்கலைக்கழகங்கள் தானே ஒழிய எவ்வளவுதான் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமாயினும் அவற்றிற்கு அந்தப் பெருமையில்லை.

ஆனால் இன்று மோடி அரசு அறிவித்துள்ள ‘மாண்புமிகு கல்வி நிறுவனங்களில்” (Institutions of Eminence- IoE) இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடமில்லை. முதற்கட்டத் தேர்விலேயே அவை தள்ளப்பட்டன. விண்ணப்பித்திருந்த 74 பொதுப் பல்கலைக்கழகங்களில் மூன்று மட்டுமே இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக் கழகங்களுக்குச் சம வாய்ப்பு அளிக்கப்படுவதாகச் சொல்லி ரிலையன்சின் ‘ஜியோ’, மணிப்பாய் அகாடெமி முதலானவற்றிற்கு மாண்பு மிகு பல்கலைக்கழகத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் எனப் பார்த்தாலும்கூட சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டதில் பொருள் இல்லை. அதிலும் தனியாருக்கே இங்கு முக்கியத்துவம்.

பல்கலைக் கழகங்கள் என்கிற கருத்தாக்கம் இன்று பல்வேறு வகைகளில் அழிக்கப்படுகிறது. டெல்லி ஜே.என்.யூவில் இனி ஐ.ஐ.டி போலத் தொழில்நுட்பக் கல்விகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப் பாடங்களை (humanities) ஒழித்துக் கட்டும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. மூன்றாண்டுகளுக்கு முன் சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர்- பெரியார் மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது நினைவிருக்கலாம். அப்போது ஆர்.எஸ்,எஸ் அமைப்பின் கருத்தியலாளரான ராதா ராஜன் என்பவர் ஐ.ஐ.டி யில் ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ கலைப்பாட வகுப்பு தொடங்கப்பட்டதும், பாடத்திட்டத்தில் ‘பன்மை ஒழுங்கு அணுகல்முறை’ (Interdisciplinary Approaches) கடைபிடிக்கப்பட்டதும்தான் “இப்படியான சீரழிவுக்குக் காரணம்” எனப் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத் தக்கது.

மோடி அரசு பதவி ஏற்றவுடனேயே பல்கலைக் கழக ஆய்வு மாணவர்களுக்கு இனி ஆய்வு உதவித் தொகை கிடையாது என அறிவிக்கப்பட்டது. போராட்டங்கள் வெடித்தபின் இப்போது அந்த முயற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜே.என்.யூ வில் ஆண்டுக்கு 1408 மாணவர்கள் ஆய்வுப் படிப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். சென்ற கல்வி ஆண்டில் இது 242 ஆகக் குறைக்கப்பட்டது. ஐதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்திலும் அவ்வாறே ஆய்வுப் படிப்பிற்கான சேர்க்கைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டன.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருந்த “பல்கலைக் கழக நிதி நல்கைக் குழு” (UGC) இப்போது ஒழிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்த உடனேயே அதற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று பொதுப் பல்கலைக் கழகக் கல்விக் கட்டணங்களும் கூட ஆயிரம் மடங்கு அளவுவரை உயர்ந்துள்ளன.

விடுதலை அடைந்த இந்தியாவில் உயர்கல்வியை வளர்க்க வேண்டும் என்பதற்கென உருவாக்கப்பட்ட அமைப்புதான் யு.ஜி.சி. பல்கலைக் கழகங்களுக்கு நிதி வழங்குவது, 80,000 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்குவது ஆகியவற்றோடு பல்கலைக் கழகங்களுக்கு ஏற்பு வழங்குவது, அவை விதிமுறைகளின்படிச் செயல்படுகின்றனவா எனக் கண்காணிப்பது ஆகியனவும் அதன் பணிதான்.

இப்படி அரசுத் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இயங்கும் யு.ஜி.சியை மட்டுமின்றி, அதே போன்று பிற கல்வித் துறைகளில் செயல்படும் “தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கழகம்” (AICTE / NCTE), “மருத்துவக் கல்விக் கழகம்” (MCI), தேசிய கல்வி ஆராய்ய்ச்சி நிறுவனம் (NCERT) முதலான உயர்கல்விக்கான ஒழுங்காற்று நிறுவனங்கள் எல்லாவற்றையும் கலைத்துவிட்டு, பதிகலாக  அதிகாரப்படுட்தப்பட்ட ஒரே மைய  நிறுவனமாக்குதல் என்கிற முயற்சியை ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மோடி அரசு தொடங்கியது. கல்விக் கொள்கை அறிக்கையில் அது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இப்போது அதை நடைமுறைப் படுத்தும் முயற்சி தொடங்கிவிட்டது. யு.ஜி.சி ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் “இந்திய உயர் கல்வி ஆணையம்” (HECI) அமைக்கப்படும் என அறிவித்தாயிற்று. நாடாளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் அமைக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்காமலேயே கலைக்கப் படுகிறது..

காங்கிரஸ் ஆட்சியில் உயர்கல்வி தனியார் மயமாக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் அது ஜின்டால், ஜியோ, ஷிவ் நாடார் எனக் கார்பொரேட் மயமாக்கப்படுகிறது. உலகப் பல்கலைக் கழகங்களும் இங்கே கால்  பதிக்கப் போகின்றன.

உயர்கல்வி ஒரு பக்கம் கல்வி நீக்கம் செய்யப்பட்டு வெறும் தொழில்நுட்ப மயமாக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அது எளிய மக்களுக்கு எட்டாக் கனி ஆகிறது. அந்த இடத்தில் “திறன் பயிற்சி” (skill training) என்பது அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் வெறும் திறன் பயிற்சிக்கு மட்டுமே தகுதியானவர்கள் என எளிய மாணவர்களை ஒதுக்கப் போவதும் இன்று புதிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டு விட்டது.

“மேக் இன் இந்தியா” வுக்கு இது போதாதா?

 

“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்

அ.மார்க்ஸ் – தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’ என்ற மாயையை, 90-களில் தன் கோட்பாட்டு விமர்சனங்கள் மூலம் உடைத்தெறிந்தவர். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து ஆகியவை தமிழில் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்தியவர். மார்க்சியம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தி மறுவாசிப்பு எனத் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்வைத்தவர். வெறுமனே எழுத்தோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான மனித உரிமைக் களப்பணியில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். இடைவிடாத பயணங்களின் வழியாக இயங்கிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் உடனான மாலை நேர உரையாடல் இது…

எழுத்தின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவரான என் அப்பா அந்தோணிசாமி நாடு கடத்தப்பட்டு தமிழகம் வந்தார். வாட்டாக்குடி இரணியன் போன்ற போராளிகளோடு தொடர்புடையவராக இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சல்பாரிகள் என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அனைவருடனும் தொடர்பைப் பேணியவர் அப்பா. எனவே தோழர்கள் வந்துபோகும் இடமாக என் வீடு இருந்தது.

அப்பா வாசிப்புப் பழக்கம் உடையவர் என்பதால், இயல்பாகவே என் வீட்டில் புத்தகங்கள் இருந்தன. குறிப்பாக, ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். மறுபுறம் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், ஆனந்த விகடன், குமுதம், மஞ்சரி, சோவியத் நாடு போன்ற இதழ்களை வீட்டில் வாங்குவோம். அவை வீடு வந்து சேரும் முன்பே, தபால் அலுவலகத்துக்குப் போய் அங்கேயே தொடர்கதைகளை எல்லாம் படித்துவிடுவேன். ஒருமுறை என் அப்பா ஆனந்த விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைக் குறிப்பிட்டு அவற்றைப் படிக்கச் சொன்னார். அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தொடர்ந்து, ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ குறுநாவலை விகடனில் வாசித்தேன். மெள்ள மெள்ள வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. படிக்கப் படிக்க எல்லோரையும் போல எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது. கல்லூரி மலரில் பாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதுதான் அச்சில் வந்த என் முதல் எழுத்து.

அப்போது, எங்கள் வீட்டுக்கு நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த பல தோழர்கள் வருவார்கள். ஆனால், என் அம்மா என்னை அவர்கள் பக்கமே போகவிட மாட்டார். அப்பாவுக்கு நேர்ந்த காவல்துறை நெருக்கடிகளினால் அம்மாவுக்கு ஏற்பட்ட அச்சம்தான் காரணம். இதனால் நானும் அவர்களுடன் நெருங்க மாட்டேன். ஆனால் அப்போது உள்ளூரில் ஓரளவு செல்வாக்குடன் இருந்த சி.பி.ஐ கட்சியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்துவந்தேன். எமெர்ஜென்சி காலம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் விழிப்பு உணர்வைக் கொடுத்தது. சி.பி.ஐ கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்ததால், நான் சி.பி.ஐ-யுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு சி.பி.எம் கட்சியில் இணைந்தேன். கல்லூரி ஆசிரியனாக இருந்துகொண்டே தீவிரமாகச் செயல்பட்டேன். சி.பி.எம் கட்சியின் ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். வாரம் இரு கட்டுரைகள்கூட எழுதி இருக்கிறேன். என் கட்டுரைகள், கட்சியின் சிறுபிரசுரங் களாகவும்கூட வெளியிடப்பட்டன. கவிஞர் மீராவின் ‘அன்னம்’, பொதியவெற்பனின் ‘முனைவன்’ சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதத் தொடங்கினேன். ‘மணிக்கொடி’ இதழ்களை ஆராய்ந்து ‘முனைவன்’ இதழில் எழுதிய கட்டுரையும் கி.ராஜநாராயணன் மணிவிழா அரங்கில் பேசி பின் மீரா வெளியிட்ட ‘ராஜநாராயணியம்’ நூலில் வந்த கட்டுரையும் மிகுந்த கவனம் பெற்றன. இப்படித்தான் எனது எழுத்துகள் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் யாருடைய எழுத்துகள் உங்களைப் பெரிதும் பாதித்தன?

மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரும் அப்போது என்னை மிகவும் பாதித்தவர்கள். இருவருமே பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனிடம் பயின்றவர்கள்.

கா.சிவத்தம்பியுடன் ஆறு மாத காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தஞ்சையில் இருந்தபோது நானும் பொ.வேல்சாமியும் தினமும் அவருடன் மாலை நேரத்தைக் கழிப்போம்.

கா. சிவத்தம்பியின் பேச்சைப்போல் எளிமையானவை அல்ல அவரது எழுத்துகள்.வாசிக்கச் சற்றுக் கடினமானவை. அதேசமயம், கைலாசபதியின் எழுத்துகளோ எளிமையானவை. கைலாசபதி பத்திரிகையாளராக இருந்தது அவரது எளிமையான நடைக்குக் காரணமாக அமைந்தது. ஆகவே, அவரது எழுத்துகள் என்னை மிகவும் வசீகரித்தன. இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் கைலாசபதியின் நூல்கள் பெரிதும் பாதித்தன. மார்க்சிய நோக்கில் விஷயங்களைப் பார்க்கும் ஆர்வம் அவர் மூலம்தான் எனக்கு ஏற்பட்டது.

மேலும், அப்போது இடதுசாரிகளிடம் ‘ரஷ்ய ஆதரவா…? சீன ஆதரவா…?’ என்ற நிலைப்பாடு முக்கிய விவாதமாக இருந்தது. இதில், கா.சிவத்தம்பி ரஷ்யாவை ஆதரித்தார்; கைலாசபதி சீனாவை ஆதரித்தார். என்னைப் போன்றவர்களுக்கும் சீன ஆதரவு நிலைப்பாடே இருந்ததால், கைலாசபதியிடம் ஈடுபாடுகொண்டேன்.

இயல்பாகவே என்னிடம் தேடல் அதிகம் இருந்ததால், நிறைய தேடித் தேடி வாசித்தேன். மார்க்சிய எழுத்தாளர்களோடு நில்லாமல், தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். தமிழில் வந்த முக்கிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் எல்லாவற்றையும் வாசித்தேன். அந்தக் காலத்தில் என்னை மிகவும் ஈர்த்தவர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். நியோ மார்க்சியக் கருத்துகளும் என்னை ஈர்த்தன. இவை எல்லாம் சி.பி.எம் கட்சியின் மேலிடத்தில் இருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிறகு, எனக்கு அவர்களோடும் முரண்பாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியே வந்தேன். இப்போதும் அந்தக் கட்சி அப்படித்தான் இருக்கிறது எனச் சொல்லவில்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோவியத் மற்றும் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜானகிராமன் எனத் தொடங்கிய நீங்கள், ஏன் புனைவுகள் எழுத விரும்பவில்லை?

எனக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம், என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுபவனாகவும் இலக்கிய விமர்சனம் செய்பவனாகவும் மாற்றியது. எனக்கு முன்பிருந்த இளைய தலைமுறைக்கு, திராவிட இயக்கத்தின் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் எழுத்துகள் ஆதர்சம் என்றால், என்னுடைய தலைமுறை புதிய இடதுசாரி மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நவீனச் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றது எனலாம். அப்படியான நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும், அவற்றை வெளியிட்டுவந்த சிற்றிதழ்களையும் தேடிப் படித்தேன். இந்த எழுத்துகள் எனக்குப் புதிய திறப்பை ஏற்படுத்தின. தமிழ் இலக்கியங்களை இயங்கியல் அடிப்படையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தமிழ் வரலாறு, பண்பாடு அனைத்தையும் எப்படி வெறும் உயர்வுநவிற்சி மனோபாவமற்று, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். சமகால அரசியல் போக்குகளோடு ஒன்றிச் செயல்பட்டு வந்ததாலும், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும், இலக்கிய விமர்சனத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர் நீங்கள். இப்போது அதுவும் குறைந்துவிட்டதே… என்ன காரணம்?

நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பவை, வழக்கமான இலக்கிய நுணுக்கங்களைச் சுட்டும் கட்டுரைகள் அல்ல. ஒருவகை சமூக ஆய்வு விமர்சனங்களாகத்தான் அவை தொடக்கம் முதல் இருந்தன. பாரதி, கி.ரா., கே.டானியல், மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம் இப்படி யாரைப் பற்றி எழுதினாலும் அவற்றின் ஊடாக சமூகத்தின் புனிதம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது என்பதைப் போன்ற சமூக நோக்கில்தான் படைப்புகளை அணுகி விமர்சித்தேன். உதாரணமாக, மெளனி, புதுமைப்பித்தன் என யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் இன்றிக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்துகளில் நான் கவனம் செலுத்தினேன். தற்போது இலக்கியம் வாசிக்க அதிக நேரம் ஒதுக்க இயலவில்லை. தொடர்ந்து, சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து, அதைப் பற்றிப் பேச வேண்டியது, எழுத வேண்டியதே ஏராளமாக உள்ளன. களப்பணிகளோடு என் வாழ்க்கை பிரிக்க இயலாமல் பிணைந்திருப்பதும் ஒரு காரணம்.

இயற்பியல் ஆசிரியராக மூன்று தலைமுறைக்குக் கற்பித்திருக்கிறீர்கள். ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியராக இன்று உங்களது மனநிலை என்ன?

நான் என்னுடைய பாடங்களை ஒழுங்காக நடத்தியிருக்கிறேன் (சிரிக்கிறார்). நான் நிறையப் பயணிக்கிறேன்; ஆதலால், அதிகமாக விடுப்பு எடுத்துவிடுவேன்; வகுப்புக்கு சரிவரச் செல்ல முடியாது என்று பலர் நினைக்கக்கூடும்,. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான் ஒழுங்காகக் கற்பித்திருக்கிறேன். என்னை நானே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியனாக இருந்திருக்கலாம் என்பேன்.

மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது உண்டா?

கவிஞர் தய்.கந்தசாமி போன்ற என் பல மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்றதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.ஆனால், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்த பிறகு, நான் வகுப்புகளில் பாடம் மட்டுமே நடத்தினேன் என்பதுதான் உண்மை. என்னுடைய பெரும்பாலான மாணவர்களுக்கு, நான் இவ்வளவு தீவிரமாக அரசியல் பேசுபவன் என்பதே தெரியாது. மாற்றுக்கல்வி குறித்து நான் கொண்டிருந்த, எழுதிய கருத்துகளைக் கூட கல்லூரியில் நடைமுறைப்படுத்த முயன்றது இல்லை. இந்த சிஸ்டத்துக்குள் ஆசிரியர்களால் பெரிய மாற்றங்கள் ஒன்றையும் கொண்டுவந்துவிட முடியாது.

மூன்று தலைமுறை மாணவர்களை அவதானித்தவர் என்கிற வகையில், அவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் பார்க்க முடிகிறதா?

கல்விமுறையே இங்கு சிக்கலாக இருக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானதாக, போட்டி மனப்பான்மையை விதைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கு உள்ள இளைஞர்களை உருவாக்கும் கல்விமுறையாக இது இல்லை. நான் பணிக்குச் சேர்ந்த எழுபதுகளைக் காட்டிலும் இன்று நிலைமை மோசம். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் அவர்களது துறைகளில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இப்போதைய பாடப்புத்தகங்களும்கூட சிறப்பானவையாக உள்ளன. ஆனால், மாணவர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு பெரிதும் குறைந்துள்ளது. சமூகப்பொறுப்பற்ற திறமை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

வராமல் இருக்க முடியாது. வந்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லா காலகட்டங்களிலுமே ‘அன்றைய’ மாணவர்கள் அரசியலுக்கு வருவதை அதற்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் விரும்பியது இல்லை. புரட்சிக்குப் பிந்தைய காலகட்டம் என்று நினைக்கிறேன்… லெனின் மாணவர்களை நோக்கிச் சொன்னார், “நீங்கள் முதலில் செய்ய வேண்டியது படிப்பு; இரண்டாவது செய்ய வேண்டியது படிப்பு; மூன்றாவது செய்ய வேண்டியதும் படிப்பு!” (சிரிக்கிறார்) ஆட்சியாளர்கள் எப்போதுமே மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பித்தான் ஆக வேண்டும்.

இந்தச் சமூகச் சூழலில் இனி ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் உருவாவது சாத்தியமா?

அப்படியெல்லாம் ஆருடம் சொல்ல முடியாது. சமூகம் குறித்த ஒரு பரந்த ஆய்வுகளோடு அரசியலுக்குள் வருகிறவர்கள் இன்று யாரும் இல்லை. அது நல்ல தலைவர்கள் உருவாவதை அறவே அழித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள், அரசியல் விழிப்பு உணர்வு பெறுவதற்குக் கலை வடிவங்கள் உதவியாக இருக்க முடியுமா?

முன்பு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் பரப்ப கலை வடிவங்கள் பயன்பட்டன. விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் வை.மு.கோதைநாயகி போன்றவர்கள் வீதி வீதியாகச் சென்று பாரதியார் பாடல்களை உரக்கப் பாடி, மக்களைக் கவர்ந்து, கதர்த் துணிகள் விற்றார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்கூட நாடகக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார்கள் என்பார்கள். அது அப்படிப்பட்ட ஒரு காலமாக இருந்தது. பின்னாட்களில் நக்சல்பாரி இயக்கம் கலை வடிவங்கள், வீதி நாடகங்கள் முதலியவற்றை நிறைய பயன்படுத்தியது. இன்று அப்படியான சூழல் குறைந்துள்ளது. சமூக ஊடகங்கள் வரை அனைத்திலும் நாம் யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அவர்களும் அந்த வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்கள். அனைத்திலும் பிற்போக்கான, மேலோட்டமான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும், இந்துத்துவத்தையும் நிறுவுவதற்காக ஜெயமோகன் போன்றவர்கள் கலை வடிவங்களைப் பயன்படுத்தும் காலம் இது. கலை வடிவங்கள், மக்களிடையே வெறுப்பை விதைக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் காலம் இது..

இடதுசாரியான நீங்கள், பின் நவீனத்துவம் மாதிரியான சிந்தனைகளை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

மார்க்சியத்துக்குள் இருந்துகொண்டே மார்க்சியம் சார்ந்த வெவ்வேறு வகையான சிந்தனைப் போக்குகளை வாசித்துவந்தேன். சோவியத் யூனியனின் தகர்வு என்பதுதான் என்னை அடுத்தகட்டச் சிந்தனைகளை நோக்கி நகர்த்தியது. ஏன் சோவியத் உடைந்தது என்ற கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றபோது, நாம் சமூகம் சார்ந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிகாரம் எப்படித் தோன்றுகிறது; எப்படிச் செயல்படுகிறது? என்ற உரையாடல்கள், ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களின் பின் நவீனச் சிந்தனைகள் நோக்கி நகர்த்தியது.

பின் நவீனத்துவத்தில் உங்கள் பங்களிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்? இன்று பின் நவீனத்துவம் அடைந்துள்ள நிலை என்ன?

பின் நவீனத்துவம் என்பதைப் பற்றி நான் மட்டுமல்ல, வேறு பல சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களும் பேசினார்கள். மற்றவர்கள் பேசியதற்கும் நான் பேசியதற்கும் ஒரு சிறிய வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் இலக்கியத்தில் பின் நவீனத்துவச் சிந்தனையின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். நான்-லீனியர் எழுத்து, மையமற்ற எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவையாக அவர்களின் அக்கறை இருந்தது. நான் பின் நவீனத்துவம் எப்படி தத்துவ வரலாற்றில் நவீனத்துவத்தைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக வருகிறது என்பது குறித்தும், பின் நவீன உலகில் அரசியல் வடிவங்களில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தினேன்.

முன்பு பேசியதைப் போல இனி, ‘மொத்தத்துவ’ நோக்கும் ‘ஒற்றை மையம்’ சார்ந்த அணுகல்முறையும் சாத்தியம் இல்லை என்பதாகவும், தலித்துகள், இஸ்லாமியர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் அடையாள அரசியலின் தேவைகள் குறித்தும் பேசினேன். இது தமிழ்த் தேசியர்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரையும் கோபப்படுத்தியது. மறுபுறம் இலக்கியத்தில் உள்ளவர்களையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

என்னுடைய பின் நவீனத்துவம் குறித்த நூல் வந்தபோது, இலக்கியம், அரசியல் என இரண்டு தரப்புமே கடுமையாக எதிர்த்தார்கள். இலக்கியவாதிகள், நான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்றார்கள். அஷ்வகோஷ் போன்றவர்கள், ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்’ போன்ற அபத்தத் தலைப்புகளில் நூல்கள் எழுதினார்கள். கிட்டத்தட்ட நான் அப்போது தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று யாரும் பின் நவீனத்துவம் குறித்து அதிகமாகப் பேசுவதும் சர்ச்சையிடுவதும் இல்லை. ஆனால், ‘விளிம்புநிலை’,‘கட்டுடைத்தல்’, ‘சொல்லாடல்’ போன்ற சொற்களை எல்லோருமே இயல்பாகப் பாவிக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட, அனைவரின் எழுத்து வடிவங்களிலும் பின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இருக்கிறது. எதார்த்தவாதத்துக்கு இனி இங்கு இடம் இல்லை என்று நம்பியது நடக்கவில்லை என்றாலும் யாரும் இப்போது மொண்ணையான எதார்த்த வடிவில் எழுதுவது இல்லை. மறுபுறம், யாரெல்லாம் பின் நவீனச் சிந்தனைகளை எதிர்த்தார்களோ, அவர்கள்தான் இன்று அடையாள அரசியலை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, சி.பி.எம் போன்ற கட்சிகள் இன்று தீண்டாமை எதிர்ப்பு முன்னணி, மாற்றுப் பாலினத்தவர் பிரச்னை போன்றவற்றை எல்லாம் கையில் எடுத்துச் செயல்படும் நிலை வந்துள்ளது. இது பின் நவீன நிலை, தமிழ்ச் சமூகத்தையும் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பதற்குச் சான்று.

பின் நவீனத்தை இவ்வளவு முக்கியமான கருத்தியலாகக் கருதும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள், ஏன் பின் நவீனம் குறித்த ஒரு முழுமையான நூலைக்கூட தமிழில் மொழிபெயர்க்கவில்லை?

தெரிதாவின் Writing and Difference நூலையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு நாம் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. பாரம்பரியம் மிக்க நம் தமிழை அந்த அளவுக்குத் தகுதிப்படுத்தவில்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் சாத்தனார், வீர சோழிய ஆசிரியர் எல்லாம் தமிழை அன்றைய தத்துவ விவாதங்களுக்குத் தக்க மேலுயர்த்திச் சென்ற முயற்சிகளைக் காணும்போது, நமக்கு இன்று பிரமிப்பாக இருக்கிறது. இன்று அந்தப் பணியை அத்தனை சிரத்தையுடன் செய்யத் தவறிவிட்டோம் ஆங்கிலத்தில் வெளியாகும் கோர்ட் தீர்ப்புகளையேகூட தமிழில் குறைந்த வார்த்தைகளில் கச்சிதமாக இரட்டை அர்த்தம் வந்துவிடாமல் உருவாக்குவதே சிரமமாகத்தானே இருக்கிறது. தமிழில் உரைநடையே தாமதமாக வந்ததுதானே? ஒரு ஜனரஞ்சகமான உரைநடையை பாரதிதானே துவக்கிவைக்கிறார். அதற்கு முன்பு ஏது? அவரும்கூட எட்டையபுரத்தில் உட்கார்ந்து சீட்டுக் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்திருந்தால், இதுவும் நடந்திருக்காது. அவர் ஒரு பத்திரிகையாளர் ஆகி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான நவீனமயமாதலின் அங்கமானதால் விளைந்த நன்மை இது.

முதலில் சி.பி.எம், பிறகு மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் இணைந்து, பிறகு அவற்றில் இருந்து விலகி, மார்க்சியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள், இப்போது மீண்டும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களே?

மார்க்சியத்தை அப்படி ஒன்றும் நான் தாக்கவில்லை. சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். நாம் ஹிட்லரையும் முசோலினியையும் அவர்களின் கொடுங்கோன்மைக்காகவும் அவர்களின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்காகவும் நிராகரிக்கிறோம். வேடிக்கை என்னவென்றால், உலகெங்கிலும் இடதுசாரிகள்கூட வன்முறையே புரட்சிக்கான வழி என்றார்கள். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என, தங்கள் ஆட்சிமுறையைக் கூறிக்கொண்டார்கள். முதல் உலகப் போர் முடிந்த சமயம், ‘கிரேட் டிப்ரஷன்’ ஏற்பட்டு, பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, உலகம் முழுதுமே முதலாளித்துவம் வீழ்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோஷலிசமே தீர்வு என்ற நம்பிக்கை உலகம் முழுதும் பரவிவந்தது. அதற்கு ஏற்ப ரஷ்யாவிலும் இடதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

இத்தாலியாகட்டும், ஜெர்மனியாகட்டும், அங்கும் ‘சோஷலிசம்’ எனக் கட்சிக்குப் பெயர் வைத்துக்கொண்டுதான் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ‘நாஸி’ என்றாலே தேசிய சோஷலிசக் கட்சி என்றுதான் பொருள். காந்தி போன்றவர்களுக்குத் தேவை இல்லாமல் ஒரு கம்யூனிஸ எதிர்ப்பு உணர்வு உருவானதற்கு கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த ‘துப்பாக்கி முனையிலிருந்து அதிகாரம் பிறக்கிறது,’ ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ முதலான சொல்லாடல்களும் ஒருகட்சி ஆட்சிமுறையும்தான் காரணம். கம்யூனிஸத்தின் உள்ளார்ந்த அம்சம், மகத்தான அன்பும் மானுடநேயமும், மக்களிடையே பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல், அனைத்து அம்சங்களிலுமான சமத்துவமும்தான். இதை உணரவும் உணர்த்தவும் இடதுசாரிகள் தவறிவிட்டார்கள். இந்த நிலம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், சமணர்களும் இன்னும் அனைவருமே காலங்காலமாக இணைந்து வாழ்ந்த நிலம். ஒற்றை அடையாளத்துக்கு இங்கு இடம் இல்லை. அது குறித்தெல்லாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறினார்கள். அதைத்தான் விமர்சித்தேன்.

இன்று, சூழ்நிலை வெகுவாக மாறிவிட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதை இன்று பெரும்பாலான கம்யூனிஸக் கட்சிகளே கைவிட்டுவிட்டன. அவர்களும் பல கட்சி ஆட்சிமுறைக்கு மாறிவருகிறார்கள். தேர்தல் பாதையை நோக்கித் திரும்பும் நிலை அதிகரித்துள்ளது. இங்கு நடக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பும், நம்பிக்கை அளிக்கும் சக்திகளாகவும் இடதுசாரிகள் உள்ளார்கள். பொது சிவில் சட்டமாகட்டும், புதிய கல்விக் கொள்கையாகட்டும் – அதை விமர்சிப்பவர்களாக, செயல்படுபவர்களாக அவர்கள்தானே இருக்கிறார்கள்.

பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, இங்கே நுழைய இருக்கும் கார்ப்பரேட் கல்விமுறை. இது ஏதோ சமஸ்கிருதம் அல்லது வேதக் கல்வி முதலான பிரச்னை மட்டும் அல்ல. அது மாணவர்களை, வெகு நுட்பமாக ‘படிப்பை உயர் கல்வி அளவுக்குத் தொடர வேண்டிய மாணவன்’, ‘தொடரக்கூடாத மாணவன்’ எனப் பிரிக்கிறது. கல்விமீதும் பன்னாட்டு ஆதிக்கத்தைப் பெருக்குவதற்கு வழி அமைப்பதாக இருக்கிறது. இதை எல்லாம் இடதுசாரிகள்தான் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். எனவே, பிரச்னையின் தீவிரம் மற்றும் தேவை கருதி நானும் அவர்களுடன் இணைந்து நிற்கிறேன். மதவாத பாசிச எதிர்ப்பில் நம்பிக்கை தரும் சக்தியாக வேறு யாரும் இங்கு இன்று இல்லை.

இடதுசக்திகளுக்கான எதிர்காலம் என்பது என்னவாக இருக்கிறது?

இன்று உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. மிச்சமுள்ள சோஷலிச நாடுகளுமே நிறைய மாறிவிட்டன. இனி, கம்யூனிஸம் அதன் ஆதிப் பண்பான சமத்துவம் என்பதை வலியுறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு உதிரும் என்பது போன்ற அதிகார எதிர்ப்புச் சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டும். உலகின் பன்மைத்துவத்துக்கு அழுத்தம் அளிக்கவேண்டும். நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடுகள் அழியும் இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலும் இக்காலக்கட்டத்துக்கு உரிய வடிவில் மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை ஏன் முழுமுற்றாக மறுதலிக்கிறீர்கள்?

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்ல… பொதுவாக தேசியம், சாதியம், மதவாதம் என்றெல்லாம் மக்கள் கூறுபோடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்கிற பெயரில் பேசப்படும் ‘வந்தேறி வடுகர்’ முதலான சொல்லாடல்கள், அருந்ததியர் உள்ளிட்ட ‘பிற மொழியினருக்கு’ இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்வதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இங்கு உருவாகும் தமிழ்த் தேசியம் எளிதில் இந்துத்துவத்துக்குப் பலியாகக்கூடிய ஒன்று!

இந்துத்துவம், சாதி என்று பேச்சு வருகிறபோது, அம்பேத்கரின், பெரியாரின் போதாமைகளை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கு நிறைய குழப்பங்கள், அபத்தங்கள் உள்ளன. அம்பேத்கர் போதாது; பெரியார் போதாது என ஆளாளுக்கு சர்ச்சை யிடுகிறார்கள். அப்படியானால் யார்தான் இங்கு போதுமானவர்? யாருமே எக்காலத்துக்குமே, எல்லா இடங்களுக்குமே போதுமானவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை. மதவாதிகள்தான் அப்படி நினைக்கக்கூடும். அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ் – இவர்களில் யார் சொன்னதும் முக்கியமானவைதான். யாரேனும் ஒருவர் ஒரு விஷயத்தில் தோற்றுப் போனதாக யாரேனும் சொன்னார்களானால், அந்த விஷயத்தில் மற்ற மூவர் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இவர்கள் எல்லோரிடமும் பொதுவான அம்சங்கள் உண்டு. குறிப்பாக, இவர்கள் நால்வருக்கும் தேசியத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல, ஒவ்வொருவரிடமும் குறைகளும் உண்டு. ஒருவரை முன்னிறுத்தி மற்றவரைப் போதாது என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அம்பேத்கர் போதாது; மார்க்ஸ் வேண்டும் என்பதுபோலவே, மார்க்ஸ் போதாது; அம்பேத்கர் வேண்டும் என்பதும் உண்மைதான். இதில் சர்ச்சையை உண்டாக்குவது உள்நோக்கம் கொண்டது.

இன்றைய மிகப் பெரிய ஆபத்து, பாசிசம். அந்த எதிர்ப்பை இத்தகைய சர்ச்சைகள் பலவீனப்படுத்தும். அது போலவே, காந்தி பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் இங்கு உள்ளன. அவரை விமர்சிக்கும் யாரும் அவரை வாசிப்பது இல்லை. காந்தியிடம் பல மாற்றங்கள் இருந்தன. அதேபோல, ஒரு தொடர்ச்சியும் இருந்தது. அவர் 1910-களிலேயே தீண்டாமை பற்றி சிந்தித்து இருக்கிறார். தான் உருவாக்கிய கம்யூன்களில் அவர் தீண்டாமையை ஒழித்திருந்தார். அம்பேத்கரோ, பெரியாரோ – யார் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் பேசியபோது, காந்தி – யார் பாதிப்பை உருவாக்குகிறார்களோ, அவர்களை நோக்கிப் பேசினார். ஆலய நுழைவுப் போராட்டங்களில் காந்தி இறங்கிய பிறகுதான் முழு வெற்றி கிடைத்தது. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது உண்மைதான். அதற்காக, காந்தியின் போராட்டங்களின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முடியுமா?

காந்தி தோற்றுவிட்டார் என்றால், இங்கு யார்தான் வென்றவர்? அம்பேத்கர்…பெரியார்… மார்க்ஸ்… எல்லோரும்தான் தோற்றார்கள். மார்க்ஸ், உலகம் முழுக்கத் தோற்றார். சரியாகச் சொல்வதானால், இவர்கள் யாருமே தோற்கவில்லை. இவர்கள் உலகை மாற்றினார்கள். அவர்களது முழு லட்சியமும் நிறைவேறவில்லை என்பது உண்மை. ஆனால், உலகம் இனி அவர்களுக்கு முந்திய காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இனி இங்கு யாராவது சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் நீச பாஷை எனச் சொல்ல இயலுமா? அப்படியானால், திராவிடக் கருத்தியல் தோற்றது என எப்படிச் சொல்வீர்கள்?”

அம்பேத்கரை ‘இந்துத்துவ அம்பேத்கராக’ சித்திரிக்க முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க-வினர் அப்படித் திட்டமிட்டு ஓர் உரையாடலை உருவாக்குகிறார்கள். அம்பேத்கர் மகாராஷ்டிராக்காரர். சாவார்க்கரோடு எல்லாம் பழகியிருக்கிறார் என்பதை வைத்து, அப்படிப் பேச முயல்கிறார்கள். இஸ்லாத்துக்கு அவர் மாறாததற்கு, ‘தேசியம் பலவீனப்பட்டுவிடும்’ என்று அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அடிப்படையில் ‘இந்து ராஷ்டிரம்’ என்பதை வெளிப்படையாகவும் உறுதி யோடும் காந்தியைவிடவும் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். எப்படியாயினும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பதில் உறுதியாக இருந்தார்; வெளியேறினார். அவரை இந்து மத அடையாளங்களுக்குள் அடைப்பது முடியாத காரியம். இதற்கான பதிலையும் மறுப்பையும் நாம்தான் முன்வைக்க வேண்டும்.

அதேசமயம் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வினரின் இந்த முயற்சியைக் காட்டிலும் இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக் காட்டும் மௌனத்தை நான் மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன். இதுபோன்ற மௌனத்தின் வழியாக அவர்கள் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். ரவிக்குமார் போன்றவர்களின் பா.ஜ.க-வை நோக்கிய நகர்வு ஆபத்தானது. மாட்டிறைச்சிப் பிரச்னை பூதாகரமானபோது, உனாவில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் அவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதில், தலித்-முஸ்லிம் ஒற்றுமை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய அந்த எழுச்சி, சமீபத்திய நம்பிக்கையூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு. ஆனால், அதில் பங்குகொள்ளாமல் அமைதிகாத்த ஒரே மாநிலம், தமிழகம்தான். இங்கு அனுசரிக்கப்பட்ட மௌனம் மிக மிகக் கவலைக்குரிய ஒன்று.

இது பெரியாரின் மண். இங்கு இந்துத்துவத்தால் ஒருநாளும் கால் ஊன்ற முடியாது!” என்று் பேசப்படுவது எதார்த்தத்துக்கு மாறானதா?

ஆமாம். நிச்சயமாக. அப்பாவித்தனமான நம்பிக்கை அது. பெரியாருக்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப்போனது. தொடர்ந்து மதவாதத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்கும் எதிராக வலுவாகப் போராடியே தீரவேண்டிய காலகட்டம் இது. இன்று இடதுசாரிகளின் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்னும்கூட கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தலித் – கம்யூனிஸ்ட் ஒற்றுமை இன்னும் போதிய அளவில் நிகழவில்லை. இந்துத்துவ எதிர்ப்பில் தமிழ்த் தேசியர்களையும் நம்புவதற்கு இல்லை.

தலித்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை போதிய அளவு சாத்தியப்படாதது போலவே இஸ்லாமியச் சமூகமும் தன்னைப் பெரிதும் தனிமைப் படுத்திக்கொள்கிறதே?

இன்று முஸ்லிம் இளைஞர்கள் மாற்றங்களுக்கான நம்பிக்கையைத் தருகிறார்கள். பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்னையில்கூட, இன்று அதை எதிர்த்தபோதும் அதே சமயம் தனிநபர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்கிற கருத்துகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நமக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளதே என்கிற நியாயமான அச்சமும் மூத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்னைகள் தனித்துவமானது. உடனடியான ஆபத்துகள் அவர்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தனி அரசியல் அடையாளங்களுடன் ஒன்று சேர்வது தவிர்க்க இயலாதது!

நீங்கள் முஸ்லிம் அரசியலை விமர்சனமற்று ஆதரிப்பதாகச் சொல்லப்படுவது பற்றி…

எனக்கு எந்த முஸ்லிம் அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது. நான் பாதிக்கப்படுபவர்களுக்காக நிற்கிறேன். இங்கு பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, அவர்களோடு நிற்கிறேன். அவர்கள் குறித்து மிகப் பெரிய பொய்களும் அவதூறுகளும் மக்கள் மத்தியில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உண்மைகளைக் கூறுகிறேன், அவ்வளவுதான். மற்றபடி, எனது கருத்துகள் பலவற்றை முஸ்லிம்களே ஏற்பது இல்லை. ஏற்க முடியாது என்பது எனக்கும் தெரியும். என்னைப் பொறுத்தமட்டில், நான் எந்த மதத்தையும் ஏற்க இயலாதவன். ‘என்னுடைய மதமே சிறந்தது’ எனச் சொல்வதைக் காட்டிலும் ஆபாசமான ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருத்து. எல்லா மதங்களிலும் சிறப்புகளும் உண்டு; விமர்சனங்களும் உண்டு. இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான கூறுகளும் உண்டு. ஓர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது என்பதே அதன் சிறப்புகளில் ஒன்று என்பது என் கருத்து. நிச்சயமாக என் முஸ்லிம் நண்பர்கள் அதை ஏற்கமாட்டார்கள்!

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுகின்ற இந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுவதென்பதே இந்துத்துவம் உறுதிப்படுவதுதான். பெரியார், இடைநிலைச் சாதிகளை ஒன்றுதிரட்டினார் என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட அவர் இந்துத்துவத்திற்கு எதிராகவே ஒன்று திரட்டினார். ஆனால், இன்று இந்துத்துவத்தோடு இணைந்து அந்தத் திரட்சி நடக்கிறது. இந்தியா முழுக்கவும் இதுதான் நிலை. முசாபர்நகரில் முஸ்லிம்களை இந்துக்கள் தாக்கினார்கள் என்றால், அவர்களை ‘இந்துக்கள்’ என்பதாக மட்டும் பார்க்க முடியாது. அதை ஜாட்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தாத்ரியில் நடந்த தாக்குதல்களை ரஜபுத்திரர்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் இப்படித்தான். குறிப்பான இடைநிலைச் சாதிகளின் திரட்சி, இந்துத்துவத் திரட்சியுடன் இணைந்தே நிகழ்கிறது!

திராவிட இயக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

திராவிடக் கருத்தாக்கத்தின் அடிப்படையான அம்சமே தமிழக எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவருமே தமிழர்கள், திராவிடர்கள் என ஏற்றுக்கொள்வதுதான். சாதிரீதியான, மதரீதியான பிளவுகளற்று, தமிழ் அடையாளத்தை முன்வைத்து இயங்குவதுதான். ஆனால், வாரிசு அரசியல் அதன் இழுக்கு. தலைவரைப் பார்த்து அடிமட்ட தொண்டர்கள் வரை வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது ஜனநாயக நோக்கத்துக்குப் பெருங்கேடு. அது மாற வேண்டும்!

டாஸ்மாக் – குடிக் கலாசாரம் குறித்து…

தவறாமல் எல்லோராலும் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி (சிரிக்கிறார்). இது கவலைக்குரிய ஒரு விஷயம்தான். சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாகக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருப்பது வருத்தமான விஷயம்தான். அதேசமயம், பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று. இதை வெறும் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமூகப் பிரச்னை. இதைப் பேசவேண்டியவர்கள் எழுத்தாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சிந்தனையாளர்கள். இந்தப் பொறுப்பைப் போலீஸ்காரர்களிடம் கொடுப்பது கள்ளச் சாராயத்துக்கும், போதை மருந்துப் பழக்கத்துக்கும், குற்றவாளிகள் உருவாவதற்கும் மட்டுமே பயன்படும்.

மோடி அரசின் இந்த இரண்டாண்டு ஆட்சியின் மீதான உங்கள் விமர்சனம்?

ஒரு போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சி அது. காந்தியும் நேருவும் இட்டுச் சென்ற பலமான ஜனநாயக அடித்தளத்தையும், அம்பேத்கர் தலைமையில் உருவான நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும், சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மத ஒருமைப்பாட்டையும் தகர்த்துவிடும் அத்தனை எளிதற்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆட்சி அது.

பணமதிப்பு நீக்கம் குறித்த உங்கள் பார்வை?

இதை நான் வரவேற்கிறேன். மோடி அரசு எத்தனை பொய்யானது; திறமையற்றது; அடிப்படைப் பொருளாதார அறிவற்றது; சர்வாதிகாரமானது; அடித்தள மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலையற்றது என்பதை எல்லாம் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கைதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது!

போருக்குப் பிறகான ஈழத்தின் அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? ஏதேனும் நம்பிக்கைகள் தென்படுகின்றனவா?

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. அதே சமயம், எந்த முன்னேற்றமும் வரவே இல்லை என்றும் சொல்ல முடியாது. ராஜபக்‌ஷேவின் தோல்வி; அங்கு ஏற்பட்டிருக்கிற கூட்டணி ஆட்சி முதலியன வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். நீண்டகாலப் போர், அது சார்ந்த அடக்குமுறைகள் – இவற்றால் அங்கு மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட நிலம் மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதிகாரப் பரவல், ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு, எனப் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அதேசமயம், அங்கு ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீண்ட காலப் போரின் முடிவு அங்கு கொஞ்சமாகவேனும் சுதந்திரக் காற்று வீசுவதற்கு வழியமைத்துள்ளதை நாம் முற்றாக மறுத்துவிட இயலாது.

உண்மையறியும் குழுவில் நீங்கள் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாகச் சிலர் சொல்லி வருகிறார்களே…?

அப்படி இல்லை. பொதுவாக எல்லா பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தலித்துகளும், இஸ்லாமியர்களும், பிற விளிம்புநிலை மக்களுமே இருக்கிறார்கள் என்பதால், அப்படியான தோற்றம் இருக்கக்கூடும். கடந்த ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில் என்ற தலித் இளைஞர், காதல் தகராறால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் தாய்மாமனால் கை கால்கள் வெட்டப்பட்டதாக ஒரு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று முழுமையாக விசாரித்து, அது காதல் தகராறோ, ஆணவக் கொலை முயற்சியோ அல்ல என்றும் ரயில் விபத்துதான் என்றும் ஆய்வறிக்கை வழங்கினோம். இப்படி, சம்பவங்களின் உண்மை நிலைக்கு ஏற்பத்தான் எப்போதுமே செயல்படுகிறோம். இதில் எங்களுக்கு விருப்புவெறுப்புகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மைகளைச் சொல்வதே போதுமானது. கூடுதலாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இத்தனை ஆண்டுகால சமூகப்பணியில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?

நிறைய எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தவன் நான். அதே சமயம், அ.மார்க்ஸ் சொன்னால் எவ்வித சுயநலனும் இன்றி, இன, மத சார்பற்று உண்மையைச் சொல்வார் என்று மற்றவர்கள் என்மீது நம்பிக்கை கொள்வதை நான் உணர்கிறேன். அதில் முக்கியமான வெற்றி, காந்தியைப் பற்றி நான் பேசியதன் வாயிலாக பலர் காந்தியை மறுபரிசீலனை செய்தார்கள். அது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். Secularism என்ற தத்துவச் சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர் காந்தி. இந்துத்துவத்தை எதிர்ப்பதில் காந்தி உருவாக்கிய தளமே, நாம் கைக்கொண்டு இயங்கவேண்டிய தளம்.

அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை முன்னிட்டு போராட்டங்கள் நடந்தவண்ணம்தான் உள்ளன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளப் படுகின்றனவா? அகிம்சைப் போராட்டங்களுக்கு இன்னும் இங்கு மதிப்பு இருக்கிறதா?

அகிம்சை, வன்முறை என்பதையெல்லாம் தாண்டி எந்தப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். பல ஆயுதப் போராட்டங்கள் வீழ்ந்ததன் காரணம் அது மக்கள் போராட்டமாக மாறாததுதான். மக்கள் போராட்டமாக மாறாத எந்தப் போராட்டமும் வெல்வது இனிச் சாத்தியம் இல்லை. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது; ஒருமித்த கருத்தை உருவாக்குவது என்பது எந்த ஒரு போராட்டத்திலும் முக்கியமான அம்சம்.

“சமூக ஊடகங்களின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

பாசிட்டிவாகச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசால் ஒரு பொய்யை இனி எளிதாகச் சொல்வது சாத்தியம் இல்லை என்றாகிவிட்டது. ஒரு கருத்தை சமூகத்திடம் கொண்டுசெல்ல கார்ப்பரேட் மீடியாக்களை மட்டுமே மக்கள் நம்பியிருந்த காலமும் மலையேறிவிட்டது. கார்ப்பரேட் மீடியாக்களே இன்று சமூக ஊடகங்களைக் கவனித்து, தங்களைத் திருத்திக்கொள்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பொருள், இன்று கார்ப்பரேட் மீடியாக்கள் பலம் இழந்துவிட்டன என்பது அல்ல.

சமூகச் சிந்தனைக்குள் புதிதாக வருகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் பன்மைத்தன்மையை உணர்வதும் அதைக் காப்பாற்றுவதும் முதன்மையான ஒன்றாக வைத்து இயங்குங்கள். பன்மையைப் போலொரு அற்புதமான விஷயம் எதுவும் இல்லை.

சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன்

படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.

கலைத்துறைப் பாடங்களின் எதிர்காலம்

மேலைப் பல்கலைக்கழகங்களில் கலைத் துறைப் பாடங்களின் (Humanities) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது குறித்த கட்டுரை ஒன்றை ஆங்கில நாளிதழ் ஒன்றில் படித்தேன்.. மறுமலர்ச்சி கால ஃப்ரெஞ்சு இலக்கியம், தத்துவம் முதலான கலைத் துறைகளில் மிகத் தரமான கல்விக்குப் புகழ் பெற்றுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் இத்துறைகளில் மொத்தத்தில் 45 சதப் பேராசிரியர்கள் இன்றுள்ளனர்… ஆனால் அப்பாடங்களில் பயிலும் மாணவர்களோ வெறும் 15 சதந்தான்.

மாணவர்கள் மத்தியில் ரொம்பவும் வரவேற்கப்படும் முதல் ஐந்து துறைகளில் ஒன்று கூட கலைத் துறைப் பாடமில்லை. மிக அதிகமாக விரும்பப்படும் பாடம் கம்ப்யூடர் சயின்ஸ். அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் பலவற்றிலும் இதுதான் நிலை. பென்சில்வேனியாவில் உள்ள எடின்பரோ பல்கலைக் கழகம், போதிய மாணவர் சேர்க்கை இல்லை என்பதற்காக ஜெர்மன் மொழி, தத்துவம் மற்றும் உலக மொழிகளும் பண்பாடுகளும் முதலான துறைகளில் பட்ட வகுப்புகளை மூடுவதாகச் சமீபத்தில் அறிவித்துள்ளது. போமோனா கல்லூரியில் சென்ற ஆண்டு பட்டம் பெற்ற 1500 மாணவர்களில் ஆங்கில இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்திருந்தவர்கள் வெறும் 15 பேர்கள்தான்.

ப்ரின்ஸ்டன், ஸ்டான்ஃபோர்ட் முதலான பல்கலைக் கழகங்கள், கலைத்துறைப் பாடங்களில் ஆர்வம் ஏற்படுத்துவதற்காகப் பள்ளி மாணவர்களுக்குக் கோடைகாலப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.

மாணவர்களையோ, பெற்றோர்களையோ குறை சொல்லிப் பயனில்லை. கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், மேலாண்மை முதலான துறைகளில் பட்டங்கள் இருந்தால்தான் வேலை வாய்ப்பு என்கிற கருத்து இன்று வலுவாக உள்ளது. இயற்பியல், வேதியல், உயிரியல் முதலான அடிப்படை அறிவியல்களிலும் (basic sciences) கூட இன்று நாட்டமில்லை. எலக்ட்ரானிக்ஸ், உயிர் வேதியல் முதலான பிரயோக அறிவியல்களுக்குத்தான் (applied sciences) இன்று மவுசு.

இந்தியச் சூழலில் 1980களில் உயர் கல்வி பெரிய அளவில் வணிகமயப் படுத்தப்படுவது தொடங்கியது. அப்போது தமிழகத்திலிருந்த அரசு கலைக் கல்லூரிகள் எழுபதுக்குள் இருக்கும். அதே அளவு அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இருந்தன. இங்கெல்லாம் அடிப்படை அறிவியல்கள் மற்றும் வரலாறு, ஆங்கில, தமிழ் இலக்கியங்கள், பொருளாதாரம், தத்துவம் வணிகவியல் முதலான பாடங்களில் பட்ட, பட்ட மேற்படிப்புகள் இருந்தன.

இன்று அரசு, மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் நானூறுக்கும் மேற்பட்ட சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் கலைத் துறைப் பாடங்கள் கிடையாது. பலவற்றில் அடிப்படை அறிவியலுங் கூடக் கிடையாது. பிரயோக அறிவியல்களே உண்டு.

எண்பதுகளின் பிற்பகுதியில் அரசு கல்லூரிகளிலும் கலைத்துறைப் பாடங்களை மூடுவது என்கிற நிலையை தமிழக அரசு எடுத்தது. பொன்னையன் கல்வி அமைச்சர். ஆசிரியர் சங்கத்தின் ஊடாக இம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்து நிறுத்தினோம். 1987ல் மாநிலக் கல்லூரியில் கலைத்துறைப் பாடங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒரு கருத்தரங்கை நடத்தியது நினைவுக்கு வருகிறது.

கலை இலக்கியக் கல்வி சமூகத்திற்குத் தேவை இல்லை என்கிற நிலை உள்ளபோது ஏன் அதைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும் என்பதுதான் அரசும் கல்வி நிறுவனங்களும் கேட்கிற கேள்வி.

கலை இலக்கியத் துறைப் பாடங்களை வற்புறுத்துவோர் இதற்கு இரண்டு விதமான பதில்களை முன்வைக்கின்றன.ர். உலக மயச் சூழலில் பிற நாட்டு மொழி, பண்பாடு முதலியவற்றை அறிந்து கொள்ளும் அவசியம் முன்பை விட அதிகமாகியுள்ளது என்பது ஒன்று. இஸ்லாமியத் தீவிரவாதம் எனச் சொல்லாடி ஈராக் மீது அமெரிக்கா படை எடுக்கு முன் இஸ்லாம் மதத்தைப் புரிந்து கொள்வதற்காக அத்துறைப் பேராசிரியர் பெர்னார்ட் லூயிசை டிக் செனி சந்தித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது.

மற்றது, கலை இலக்கியங்கள்தான் மனிதனிடம் மனிதாயப் பண்புகளை உயிர்க்கும் வல்லமை வாய்ந்தவை. கல்வியின் பணி சிறப்புப் பயிற்சியாளர்களை உருவாக்குவது அல்ல. முழுமையான மனிதனை உருவாக்குவது. தத்துவம் என்பது எல்லா அறிவியல்களுக்கும் தாய். எனவே இவற்றைப் புறக்கணித்துவிட இயலாது என்பது.

இது பின் நவீன யுகம். இதில் முழுமையான மனிதன் என்பதெல்லாம் ‘அஜென்டா’வில் இல்லை. இன்று இந்த வாதம் எடுபடவில்லை. சோவியத் ரஷ்யாவில் சுமார் இருபதாண்டு காலம் கல்வித் துறைக்குப் பொறுபேற்றிருந்த லூனாசார்ஸ்கி, “அதீத சிறப்புப் பயிற்சிகள் மனிதரை முடமாக்கும் (overspecialisation cripples a man)” என்று கண்டித்ததெல்லாம் அந்தக் காலம். புதிய கல்விக் கொள்கைகளை அம்பானியும் பிர்லாவும் இயற்றும் காலம் இது. இன்றைய உலகின் தேவை ‘ரோபோ’க்களைப் போல இயங்கும் சிறப்புப் பணியாளர்கள்தான்.

எனினும் மனிதர்கள் எல்லோரையும் ரோபோக்களாகப் பார்க்கும் கார்பொரேட் மனநிலையை எதிர்ப்பவர்கள் கலைத்துறைப் பாடங்களின் முக்கியத்துவத்தை வற்புறுத்தவே செய்கின்றனர்,

கலை இலக்கியத் துறைப் பயிற்சி என்பது மனித நாகரீகங்களின் பிரிக்க இயலாத அம்சமாக இருந்து வந்துள்ளது. பல்கலைக் கழகங்கள் இப்பயிற்சியையும் இத் துறைகளில் அறிவுருவாக்கத்தையும் ஜனநாயகப் படுத்தின. கலை இலக்கிய ஆய்வுகளும் ரசனைகளும் சமூகத்தின் மேல்தட்டினரின் தனிச் சொத்தாக இருந்த நிலை போய் அடித்தள மக்களும் அவற்றை உரிமை கொள்ளக் கூடிய நிலை பல்கலக் கழகங்களினூடாகத்தான் வந்தது. இன்றுங்கூட நம் இலக்கிய மேட்டிமைச் சக்திகள் பல்கலைக்கழக இலக்கிய ஆசிரியர்கள் மீது காழ்ப்பைக் கொட்டுவதை நாம் கவனிக்க இயலும்.

சில பத்தாண்டுகளுக்கு முன் தமிழகப் பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பில் ‘மைனர்’ என்று ஒரு பாடமிருந்தது. அறிவியலை முக்கிய பாடமாக எடுக்கிறவர்கள் ஏதேனும் ஒரு கலைப் பாடத்தைக் கட்டாய மைனர் பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும். அந்த நிலை மீண்டும் வந்தால் நல்லது. பட்டப் படிப்பில் பார்ட் ஒன், பார்ட் டூ ஆகியவற்றில் உள்ள மொழிப் பாடங்களில் மீண்டும் இலக்கியங்களின் பங்கு அதிகமாக்கப்பட வேண்டும்.

எனினும் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். கலை இலக்கியப் பயிற்சியுடைய எல்லோரும் எல்லா அம்சங்களிலும் மனித நேயமுடையவர்களாக இருப்பார்கள் என்பதல்ல.. தனது பணியாளர்களைக் கொடுமையாகச் சுரண்டும் பல முதலாளிகள், பண்ணையார்கள், ஏன் பாசிஸ்டுகளும் கூட இலக்கிய ஆர்வலர்களாக இருந்துள்ளனர். மிகப் பெரிய அறிவுக் கருவூலம் ஒன்றை உருவாக்கியிருந்த தஞ்சை சரபோஜி மன்னருக்கு 18 மனைவியர், 98 ஆசை நாயகிகள் இருந்தனர் என்று சொல்வார்கள்.

கலை, இலக்கியத்துறைப் பாடங்களின் முக்கியத்துவம் என்பது, அவற்றின் மூலமாகத்தான் இன்னும் திறமையான நிர்வாகிகள் நமக்குக் கிடைப்பார்கள் என்பதல்ல. மாறாக வாழ்வை இன்னும் அதிகமாக நேசிக்கவும் பொறுத்துக்கொள்ளவும் அது நமக்கு உதவும். கலைத் துறைப் பாடங்களின் முக்கியத்துவம் குறித்த ஒரு கட்டுரையின் கீழ் ஒருவர் இப்படிப் பின்னூட்டம் இட்டிருந்தார். “நான் ஸ்டான்ஃபோர்டில் தத்துவம் பயின்றேன். .டெம்னீஷியா நோயில் என் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக இறந்தபோது அவளுக்குத் துணையாய் இருக்கவும், அதன் பின் அவள் பிரிவை நான் தாங்கிக் கொள்ளவும் அன்று படித்த கலைத்துறைப் பாடங்கள்தான் கைகொடுத்தன,”

ஆடம் கோப்னிக் என்கிற பேராசிரியர் கூறுவது போல, “மனிதாயநிலைக் கல்வித்துறைகள் (Humanities) ஏன் நமக்கு அவசியம் என்பதற்கான காரணம் நாம் மனிதர்களக இருக்கிறோம் என்பதுதான்.”

ஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்

[ஆனந்த விகடன் ‘செய்தியும் சிந்தனையும்’ தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப் பேசியவை]

1. இடியும் கட்டிடங்கள் சாகும் தொழிலாளிகள்..

இரண்டு வாரங்களில் இரண்டாம் முறையாக இடிபாடுகளில் சிக்கி மக்கள் இறந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போன வாரம் முகலிவாக்கத்தில் கட்டிக் கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் செத்துப் போனாங்க. நேற்று பொன்னேரிக்குப் பக்கத்தில ஒரு தனியார் குடோனின் 20 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்படப் 11 பேர் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறாங்க.

இரண்டிலுமே செத்துப் போனவங்க எல்லோரும் கட்டிடத் தொழிலாளிகள். நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தவிர ஆந்திரா, ஒடிசா முதலான மாநிலங்களிலிருந்து தொழில் செய்து பிழைப்பதற்காக இங்கு வந்து குறைந்த ஊதியத்தில் வேலை செய்து கொண்டிருந்த வெளி மாநிலத் தொழிலாளிகள்.

பெரிய அளவு மழை வெள்ளம் கூட இல்லை. பருவ மழை இப்போதுதான் தொடங்கி இருக்கு. அதற்குள் இந்த விபத்துக்கள். இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி இப்படி கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் சாவது அதிகமாகி வருது. இரண்டு வருடத்துக்கு முன்னால் ஶ்ரீ பெரும்புதூருக்குப் பக்கத்தில ஜேப்பியார் தொழில் நுட்பக் கல்லூரிக்கான கட்டிடம் ஒன்ணு இப்படிக் கட்டிக்கொண்டிருக்கும்போது இடிஞ்சு விழுந்து 10 வெளி மாநிலத் தொழிலாளிங்க செத்துப் போனாங்க.

போன வருடம் மும்பையில அடுத்தடுத்து இரண்டு கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்து ஒண்னுல 74 பேரும் இன்னொண்ணுல 61 பேரும் செத்துப் போனாங்க.

இந்த விபத்துகள் எதுவும் புயல், வெள்ளம், நில நடுக்கம் மாதிரி இயற்கைச் சீற்றங்களால் நடந்தது இல்ல. முழுக்க முழுக்க இவை மனிதர்கள்தான் இந்த அழிவுக்குக் காரணம்.

விதிகளை மீறி, சட்ட விரோதமா கட்டிடங்களைக் கட்டுவதன் விளைவு இது. இப்படி விதிகளை மீறுவதில் பெரிய அளவு லஞ்சம், ஊழல் பங்கு வகிக்குது. இப்பவெல்லாம் ஒருவர் சொந்தமா ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சா பட்ஜெட்ல ஒரு லட்ச ரூபா லஞ்சத்துக்குன்னு ஒதுக்கி வைக்க வேண்டி இருக்கு. இப்படி கோடிக் கணக்கில முதலீடு பண்ணி இன்னும் பல கோடிக் கணக்கில லாபம் சம்பாதிக்கிற பெரிய கட்டிட நிறுவனங்கள் விதிகளை மீறிக் கட்டுறதுக்கு எத்தனை கோடி வேணும்னாலும் லஞ்சம் கொடுக்கத் தயாரா இருக்காங்க. கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கிற பஞ்சாயத்து, நகராட்சி. மாநகராட்சி, பெரு நகர வளர்ச்சிக் குழுமம் – CMDA இதில் எல்லாம் கட்டிட அனுமதி வழங்கும் துறையில போதிய அளவில் அதிகாரிகள், வல்லுனர்கள் இல்லை என்பது ஒரு பக்கம். இருக்கிறவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகளா இருக்கிறது இன்னொரு பக்கம். விதி மீறல் கண்காணிப்புக் குழு என ஒண்ணு பேருக்கு இருக்கு. அதுக்குப் பெரிய அதிகாரமில்ல. ஒழுங்கா அதைக் கூட்டுவதும் கிடையாது.

விதிமீறிக் கட்டப்படும் கட்டிடங்களை இடிச்சால்மட்டும் பத்தாது. கட்டிய பில்டர், அநுமதி அளித்த அதிகாரி எல்லோரும் கடுமையா தண்டிக்கப்படணும். பொறுப்பான சமூக உணர்வாளர்கள், வல்லுனர்கள அடங்கிய விதி மீறல்கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அவற்றிற்கு உரிய அதிகாரமும் அளிக்கப்படணும்.

புலம் பெயர்ந்து வரும் தொழிலாளிகளா இருந்தாலும், உள்ளூர்த் தொழிலாளிகளா இருந்தாலும் அவர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணியிடப் பாதுகாப்பு உறுதி செய்யப்படணும். வெளி மாநிலத் தொழிலாளிகள்தான் அதிகம் சுரண்டப் படுறாங்க. அவங்களுக்குக் கேட்க நாதி இல்லை என்பதற்காகத் தான் நம்ம ஊர் முதலாளிகளும் ஒப்பந்தக்காரர்களும் அவங்களை வேலைக்கு வச்சுக்கிறாங்க. அவங்களுக்கு பணி இடப் பாதுகாப்பு மட்டுல் இல்லாம பாதுகாப்பான தங்குமிடங்களும் செய்து தரப்படணும். இவற்றை அரசாங்கம் உரிய முறையில் கண்காணிக்கணும்.

ஒரு உண்மையை நாம மறக்கக் கூடாது. “லஞ்சம் கொல்லும்”. “ஊழல் மக்களை அழிக்கும்” என்பதுதான் அது.

2. பா.ஜ.க அரசின் பட்ஜெட்

பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட் முந்தைய காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாக உள்ளது என்பதை மேலோட்டமாக அதைக் கவனிப்பவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும். ஆட்சிக்கு வந்து 45 நாட்களுக்குள் வேறென்ன செய்துவிட முடியும் என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. அதில் உண்மை இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்கள் தரப்பில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டதால், இப்போது அந்த எதிர்பார்ப்புகளை நோக்கி எதுவும் செய்யப்படாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு கடைசியாக அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.1 சதம் என்றால் பா.ஜ.க பட்ஜெட்டிலும் அதுதான்., ரெவின்யூ செலவு அதிகரிப்பாக காங்கிரஸ் அறிவித்தது 1.5 லட்சம் கோடி. பா.ஜ.க வும் அதுதான் சொல்லி இருக்கு. இப்படி நிறையச் சொல்லலாம். வருமான வரி விலக்கு அதிகரிப்பும் பெரிசா இல்ல. 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ஒதுக்கியுள்ள நிதி வெறும் ஏழாயிரம் கோடிதான்,

இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஆகிய துறைகளில் நேரடி அந்நிய முதலீடு காங்கிரஸ் பட்ஜெட்ல 29 சதம். பா.ஜக்வோ இன்னும் ஒரு படி மேலே போய் 49 சதம் ஆக்கிட்டாங்க.

ஏற்கனவே அயல் உறவுக் கொள்கை, குறிப்பா ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு எல்லாவற்றிலும் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையைத்தான் பா.ஜ.க அரசு கடை பிடிக்கிறது என்கிற விமர்சனம் இருக்கு. இப்ப பொருலளாதாரக் கொள்கையிலும் வித்தியாசம் இல்லை என்பது தெரிஞ்சு போச்சு.

தங்களோட இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவது என்கிற அம்சத்தில் மட்டுந்தான் பா.ஜ.க அரசு காங்கிரஸ் ஆட்சியிலிருந்து வேறுபடுது.

இதில ரொம்ப வருந்தத் தக்க விசயம் என்னன்னா, இதுவரைக்கும் இதே கொள்கைகளுக்காக காங்கிரசை விமர்சித்த ஊடகங்கள் எல்லாம் இப்ப எந்த விமர்சனமும் இல்லாம புதிய ஆட்சியைக் கொண்டாடுவதுதான்.

விமர்சனத்துக்குரிய அம்சங்களை யாராவது சுட்டிக் காட்டினால், காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படித்தானே நடந்தது என்பதுதான் அவர்களின் பதிலாக் இருக்கு. ஆக, ஆட்சியில இருக்கும்போதும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்டுவது, ஆட்சியில இல்லாதபோதும் இன்றைய ஆட்சியாளர்களின் தவறுக்காகவும் மறுபடியும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்ட்வது என்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

3. இந்த வேட்டி விவகாரம்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும் 1. இத்தகைய மேல்தட்டு வர்க்கங்களுக்கான கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்டுமல்ல இந்தியாவெங்கிலும் உள்ள மேல் தட்டு வர்க்க கிளப்புகள் எல்லாவற்றிலும் உள்ள நடைமுறைதான், 2002ம் ஆண்டில் பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக் கழக இயக்குநர் மோகன் கோபால் இப்படி வேட்டி செருப்பு அணிந்து வந்த காரணத்திற்காக பெங்களூரு கிளைப்பில் அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாகியது. மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் சத்யஜித்ரேயின் மருமகன் அசோக் சட்டர்ஜிக்கும் இதே காரணத்திற்காக அங்கு அநுமதி மறுக்கப்பட்டது.

ஆக இது அடிப்படையில் ஒரு மேல் தட்டு வர்க்க மனோபாவம். காலனீய எச்ச சொச்சம். மேல் தட்டினர் தம்மை அடித்தட்டு மக்களின் அடையாளங்களிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ளும் ஒரு திமிர் நடவடிக்கை என்றே கொள்ள வேணும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது போன்ற ஆடை விதிகளும் பண்பாட்டுத் தடைகளும் பல மட்டங்களில் சமூகத்தில் செயல்படுவதைக் காணலாம். அரசு நிறுவனங்களிலும் கூட உண்டு. சென்ற ஆண்டில் ஆதார அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கவந்த துப்பட்டா அணியும் வழக்கமில்லாத பெண்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள். படத்தில் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது தவிர வேறு விதிகள் ஏதும் இல்லாத போதும் இப்படிச் செய்யப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் அவர்களுக்குச் சவுகரியமான உடை ஆகிய சுடிதார் அணிய அனுமதிக்கப்படுவதில்லை.
கிராமங்களில் இன்னும் கூட தாழ்த்தப்ப்பட்ட மக்கள் செருப்பு அணியக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்றெல்லாம் எழுதப்படாத விதிகள் செய்ல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. நான்காண்டுகளுக்கு மும் மதுரையை அடுத்த வில்லூரில் இப்படியான ஒரு பிரச்சினையில் துப்பாக்கிச் சூடு வரை சென்றது. இன்றும் கூட பெரிய ஷாப்பிங் மால்களில் கைலி அணிந்து செல்வதற்கு இடமில்லை. இத்தனைக்கும் கைலி என்பது ஒரு தமிழர் ஆடை. தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களுக்குக் கைலி அணிந்தே சென்றார். ஷர்ஜா, துபை போன்ற முஸ்லிம் நாடுகளில் நம் தமிழ் முஸ்லிம்கள் கைலி அணிந்து பொது இடங்களில் செல்வதற்குத் தடை உள்ளது,

ஆடை என்பது நமது சவுகரியத்திற்காக உள்ளது. பண்பாடு என்பதற்கு ஒரு தொடர்ச்சியும் உண்டு அதேபோல அதில் கலப்பிற்கும் இடம் உண்டு. பேன்ட், சர்ட், சுடிதார் என்பதெல்லாம் இப்போது ஏதேனும் ஒரு நாடு அல்லது இனத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கக்கூடிய உடைகள் அல்ல. இன்றைய கலகட்டத்திற்குரிய உடைகளாக அவை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன, வேட்டியாக இருக்கட்டும், சுடிதாராக இருக்கட்டும் இவற்றை கண்ணியமற்ற உடைகள் என்பதாகக் காண்கிற நிலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

வக்கீல்கள் கருப்புக் கோட், அதற்கு மேல் நீண்ட கருப்பு அங்கி ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்துதான் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும் என்பது உட்பட அனைத்து ஆடை விதிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. இஸ்ரேலின் கொலை வெறித் தாக்குதலும் இந்தியாவின் மௌனமும்

நேற்று மாநிலங்கள் அவையில் இஸ்ரேல் காஸாவில் நடத்தும் கொலை வெறித் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நேரம் ஒதுக்க வேண்டினர். இதை அயலுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இரு தரப்பினருமே நமக்கு வேண்டியவர்கள்தான், எனவே நாம் ஒன்றும் பேச முடியாது எனக் கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் எற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு இடையேயான சமமான போருமல்ல. முதற்கட்டத் தாக்குதலில் 193 பலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ குறி தவறி நடந்த தாக்குதல்கள் அல்ல. இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே சொல்லிச் செய்கின்றனர். “காஸாவைக் கற்கால நிலைமைக்குக் கொண்டு செல்வோம்” “அனைத்து சக்தியையும் திரட்டி அழிப்போம்” என்றெல்லாம் சூளுரைக்கின்றனர்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றது நாங்கள் இல்லை என் பலஸ்தீனிய அமைப்புகள் அனைத்தும் மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அவர்கள்தான் இதைச் செய்துள்ளனர் எனத் தன் தாக்குதலுக்கு நியாயம் சொல்கிறது.றது. ஆதாரம் என்ன என ஐ.நா இஸ்ரேல் அரசைக் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் தாக்குதல்கள் தொடர்கின்றன.

பலஸ்தீனியர்களின் ஹமாஸ் அமைப்பும் ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது என்றாலும் இதுவரை ஒரே ஒரு இஸ்ரேலியர்தான் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவில் இல்லாத தற்போதைய எகிப்து அரசு முன் வைத்தப் போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அதை ஒட்டி இஸ்ரேல் தனது இரண்டாம் கட்டக் குண்டு வீச்சைத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் போர் நிறுத்த வாக்குறுதிகளை நம்பவே இயலாது. அப்படித்தான் 2008ல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்ட இஸ்ரேல் பின்னர் சிறையிலுள்ள ஒரு இஸ்ரேலியன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒரு காரணத்தைச் சொல்லி மீண்டும் போரைத் தொடங்கியது. அந்தப் போரில் மட்டும் சுமார் 1200 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமக்குள் எதிர் எதிராக நின்ற பலஸ்தீனிய அமைப்புகளான ஹமாசும் ஃபடாவும் சென்ற ஏப்ரலில் இணைந்து காசாவில் ஒரு “ஒற்றுமை அரசு” (unity Govrnment) அமைத்ததை இஸ்ரேலால் செரித்துக் கொள்ள இயலவில்லை. அதன் விளைவுதான் இந்தத் தாக்குதல்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்ட போது “ஒரு தந்தை என்கிற முறையில்” கண்ணீர் வடிப்பதாகச் சொன்ன ஒபாமா அந் நிகழ்ச்சிக்கு முன் இரு பலஸ்தீனிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் பின் ஒரு பலஸ்தீனியச் சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டதையும் கண்டிக்கவில்லை. சுமார் 250 பலஸ்தீனச் சிறுவர்கள் நீண்ட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது குறித்தும் பேசியதில்லை.

பலஸ்தீனர்களின் உரிமையை இந்தியா எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது. இந்நிலை 1998ல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி வந்தபோது மாறியது. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுத்தது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி நேரு காலத்திய அணுகல் முறையைக் கைவிட்டு பா.ஜ.க தொடங்கிய வழியிலேயே சென்றது.
இன்று பா.ஜ.க அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் “நடுநிலைமை” வகித்துக் கொலைக்குத் துணை போகிறது.

குடிமக்களாகிய நாம் இதைக் கண்டிக்க வேண்டும். அறம் சார்ந்த ஒரு அயலுறவுக் கொள்கைக்காகப் போராட வேண்டும்.

5. கல்வி நிறுவனகளில் கட்சி சார்ந்தோரை நியமிக்கக் கூடாது

பா.ஜ.க அரசின் கல்வி சார்ந்த இரு நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக எல்லப்பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரலாற்றுத் துறையில் எந்தப் பங்களிப்பையும் செய்ததில்லை. இது ஒரு தகுதியற்ற நியமனம் என உலகப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்களான ரொமிலா தப்பார், டி.என்.ஜா போன்றோர் கண்டித்துள்ளனர்.

சென்ற முறை பா.ஜ.க தலைமையில் ஆட்சி நிறுவப்பட்டபோது இதே ICHR அமைப்பின் தலைவராக பி.ஆர்.குரோவர் என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போதும் இதே போல சர்ச்சை எழுந்தது. அதோடு ஏற்கனவே பணியில் இருந்த புகழ்பெற்ற வரலாற்றறிஞர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர், இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (ICSSR) பி.எல்.சோந்தி என்கிற அவர்கள் கட்சியின் முன்னாள் எம்.பி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனங்களும் பணி நீக்கங்களும் கல்வியாளர்களால் அப்போது கடுமையாக எதிர்க்கப்பட்டன. இது போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள், கல்விக் கொள்கைகளை வகுக்கும் நிறுவனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும். இவைகளில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப் படுபவர்கள் உலக அளவில் கல்விக் குழுமங்களால், ஆராய்ச்சி அறிஞர்களால் மதிக்கப்படுபவர்களாகவும் சாதனை புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆளுங் கட்சி தனது கருத்தியலைக் கல்விக் கூடங்களில் புகுத்தும் நோக்கத்திற்காகத் தகுதியற்றவர்களை நியமிக்கக் கூடாது. தங்கள் நோக்கத்திற்காக வரலாற்றைத் திரித்து இளம் நெஞ்சங்களில் வெறுப்பை விதைக்கக் கூடாது. தற்போது ICHR தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷன் ராவ் எழுதிய கட்டுரை ஒன்று நேற்று சர்ச்சைக்குள்ளானது.

இந்தியச் சாதி அமைப்பு வரலாற்றில் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது எனவும், அதனால் யாரும் பாதிக்கப்பட்டதோ இல்லை பயனடைந்ததோ கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். இது ஆட்சியில் உள்ளவர்களுக்குப் பிடித்த கருத்தாக இருக்கலாம். ஆனால் இது கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக் கருத்து அல்ல. வரலாற்றில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றோர் சாதிமுறையை எதிர்த்துள்ளனர்.

கல்வி சார்ந்த இன்னொரு அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. CBSE அமைப்பு தனது 15,000 பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டுமாம். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளனர். 1. சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாயாம். 2. சமஸ்கிருதம் மட்டுமே இந்திய வரலாற்றுடன் பிரிக்க இயலாது இணைந்துள்ளதாம்.

இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையதல்ல. சமஸ்கிருதம் எல்லா மொழிகளின் தாய் என்கிற சனாதனக் கருத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பொய் என நிறுவப்பட்டு விட்டது. வில்லியம் ஜோன்ஸ், ராபர்ட் கால்டுவெல் ஆகியோர் சமஸ்கிருதமும் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என மொழி இயல் அடிப்படையில் நிறுவினர். இது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முடிவு, சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. திராவிட மொழிகள் தான் இந்திய மண்ணில் தோற்றம் கொண்டவை. சமஸ்கிருதத்தை எல்லா மொழிகளுக்கும் தாய் என்பது எத்தனை பெரிய அபத்தம்.

பல்வேறு மொழிகளும், இனங்களும், மக்கட் பிரிவுகளும் உள்ள நாட்டில் இது போன்ற கருத்துக்கள் நாட்டு ஒற்றுமையைக் கெடுக்கும். யாரேனும் ஒரு தரப்பினர் செய்தால் கூட அவர்களின் கருத்து அது என விட்டு விடலாம். ஒரு அரசே இப்படிச் செய்யலாமா?. கல்விக் கொள்கைகள் எதுவாயினும் அவை போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, தேசிய அளவில் விவாதிக்கப்பட்டே முடிவு செய்யப்பட வேண்டும்.

6. நதி நீர்ப் பிரச்சினைகள் : மத்திய அரசுக்கு உறுதி வேண்டும்

நதி நீர்ப் பிரச்சினையில் ஒரு புறம் தமிழக மக்களுக்கு ஆறுதலும் இன்னொரு புறம் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சென்ற 13 அன்று முல்லைப் பெரியார் அணையின் 13 ஷட்டர்களும் திறக்கப்பட்டு நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படும் முயற்சி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தமிழக விவசாயிகளுக்கு மகிழ்சியளிக்கும் செய்தி.

தான் அளித்துள்ள தீர்ப்பின்படி 192 டி.எம்.சி நீரைத் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குத் தான் ஆணையிட முடியாது எனச் சென்ற 15 அன்று காவிரி நடுவர் மன்றம் மறுத்துள்ளது வேதனை அளிக்கும் செய்தி. உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி நடுவர் மன்றம் ஒதுங்கிக் கொண்டதை ஒட்டி தஞ்சையில் இன்று கடைஅடைப்பையும், டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடும் போராட்டத்தையும் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

நதி நீர்ப் பிரச்சினை, கடலில் மீன் பிடிக்கும் பிரச்சினை ஆகியவற்றில் பாரம்பரிய உரிமை என்பது மிகமுக்கியமான ஒன்று. அந்த வகையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆகட்டும், காவிரிப் பிரச்சினை ஆகட்டும் தமிழக விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

பாரம்பரிய உரிமை என்பது தவிர சமீபத்திய இவை தொடர்பான நடுவர் அமைப்புகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழக விவாசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்தே வந்துள்ளன. காவிரி நதி நீர்ப்பங்கீட்டைப் பொருத்தமட்டில் ஆண்டுக்கு 192 டிஎம்.சி நீர் என்பது தவிர, மாதந் தோறும் இதை எவ்வாறு பிரித்தளிக்க வேண்டும் என்பதும் வரையறுக்கப் பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ஒரு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி ஏழாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. கர்நாடக அரசு இந்த நடுவர் தீர்ப்பை மதிக்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணையில் ஒரு நேரத்தில் 152 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்தது, அணை பலவீனமாக உள்ளது என்கிற காரணத்தைச் சொல்லி நீர்த்தேக்கம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசோ 142 அடி வரைக்குமாவது நீர்மட்டத்தை உயர்த்தக் கோரிகை வைத்து நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் நியமித்த வல்லுனர் குழு அணை முழுப் பாதுகாப்புடன் இருப்பதாக உறுதி கூறியது, சென்ற மே மாதம் உச்ச நீதி மன்றம் தமிழகக் கோரிக்கையை ஏற்று 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்து ஆணையிட்டது.

இத்தனைக்குப் பின்னும் இன்று கர்நாடக அரசும், கேரள அரசும் இம்முடிவுகளை ஏற்க மறுக்கின்றன. கர்நாடக அரசு தமிழகப் பங்கை அளிக்க மறுக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போடுகிறது. கேரள அரசோ புதிய அணை கட்டியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது.

இப்படியான சூழல்களில் இத்தகைய நடுநிலை நிறுவனங்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதில் மத்திய அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அது பக்கச் சார்பு எடுக்க வேண்டியதில்லை. ஆனால் அதே நேரத்தில் அது நடுவர் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதி காட்ட வேண்டும். கூட்டாட்சி முறை நிலைத்து நிற்பதற்கு இந்த உறுதி மிக முக்கியம்.

மத்திய அரசு உடனடியாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக நதி நீர்ப் பங்கை உறுதி செய்ய வேண்டும். புதிய அணை கட்டும் கேரள முயற்சியைத் தடுக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் முக்கியமாக தேசிய அளவிலான கட்சிகளும் இடதுசாரிகளும் இரு மாநிலங்களிலும் இரு வேறு குரல்களில் பேசுவதை நிறுத்தி ஒற்றைக் குரலில் பேச வேண்டும்; நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

இல்லையேல் இந்தப் பிரச்சினைகளை மூலதனமாக்கி ‘சிவசேனை’ பாணியிலான ஒரு இனவாத வன்முறை அரசியலை முன்னெடுக்க முனைவோருக்கே இச்சூழல் பயன்படும்.

7. உக்ரேன் நெருக்கடியும் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும்

மலேசிய விமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியாகியுள்ளது எல்லோருக்கும் கவலை அளிக்கும் செய்தி.. விலை மதிக்க முடியாத 298 உயிர்கள் பலியானது தவிர உலக அளவில் ஒரு அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்படுமோ என்கிற அச்சத்தையும் இந்த நிகழ்ச்சி எற்படுத்தியுள்ளது.

பயணிகள் விமானத்தை வீழ்த்தியது யார் என்பது உறுதியாக இதுவரை கண்டுபிடிக்கப் படாதபோதும், ரசிய ஆதரவு கிரீமியப் போராளிகளே இதற்குக் காரணம் என்கிற கருத்து இன்று பலமாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவும் இதர நேடோ நாடுகளும் இப்படிச் சொல்லுகின்றன. ஏற்கனவே கிரீமியப் பிரச்சினையைக் காரணம் காட்டி ரசியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இன்னும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

உக்ரேன் அரசு இன்னும் ஒருபடிமேலே போய் ரசியப் படைகளே நேரடியாக இதைச் செய்திருக்க வேண்டும் என்கிறது. ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அதனால் தர இயலவில்லை. இன்னொரு பக்கம் கிரீமியப் போராளிகள் இதை உக்ரேன் அரசுதான் செய்திருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

சுட்டு வீழ்த்தப்பட்ட MH 17 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது அதைச் சுட்டு வீழ்த்த வேண்டுமானால்.தீவிரமான ரடார் தொழில் நுட்பமும் அதற்குரிய ஏவுகணைக் கருவிகளும், அவற்றை இயக்கும் பயிற்சியும் தேவை. ரசிய ஆதரவுக் கிரீமியப் போராளிகளுக்கு ரசியா பயிசி அளிப்பது உண்மைதான். ஆனால் ஒரு இரண்டு வாரப் பயிற்சி இதற்கெல்லாம் போதாது. உக்ரேனிய இராணுவத்திலிருந்து பிரிந்து வந்து போராளி அமைப்புகளில் இணைந்தவர்கள் இதைச் செய்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.

சென்ற சில நாட்களில் உக்ரேன் எல்லை மீது பறந்துகொண்டிருந்த நான்கு விமானங்கள் இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டன. மற்ற மூன்றும் போர் விமானங்கள். இதில் இரண்டைச் சுட்டு வீழ்த்தியதற்கு போராளிகள் உரிமை கோரியுள்ளனர். ஆனால் இவை தாழப் பறந்தவை. சாதாரணத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகப் பயிற்சி இல்லாதவர்களும் இதைச் செய்ய முடியும். ஆனால் மலேசிய விமானம் உட்பட மற்ற இரு விமானங்களையும் தாங்கள் சுடவில்லை எனப் போராளிகள் சொல்கின்றனர்.

நடுநிலை விசாரணை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ள ரசிய அதிபர் புடின், “கிரீமியாவில் அமைதி நிலைநாட்டப் படுவதற்குக் தடையாக இருந்தவர்களே இதற்குப் பொறுப்பு” என்றுள்ளார். அதாவது உக்ரேனிய அரசும் அதற்கு ஆதரவாக உள்ளவர்களுமே காரணம் என்கிறார்.

உக்ரேனின் கிழக்குப் பகுதில் உள்ள கிரீமியாவும் செவஸ்டாபோலும் ரசிய மொழி பேசுபவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகள்.. சென்ற பிப்ரவரியில் உக்ரேனில் நடைபெற்ற ஒரு ஆட்சி கவிழ்ப்பை ஒட்டி இப்பகுதிகள் ரசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தன. ஒரு வாக்கெடுப்பு நடத்தி 90 சதத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கருத்தை ஆதரித்து ரசியாவுடன் சேர்வதாக அறிவித்த போதும் நேட்டோ நாடுகளும் ஐ.நாவும் இதை ஏற்கவில்லை. எல்லை ஓரங்களில் ரசிய மற்றும் உக்ரேனியப் படைகள் குவிக்கப்பட்டுள்ள பின்னணியில்தான் இன்று இந்த மலேசிய விமானம் பயணிகளோடு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது..

எப்படி ஆயினும் பயணிகள் விமானத்தைச் சுட்டுவீழ்த்தி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத் தக்கது. இது வரை வரலாற்றில் குறைந்த பட்சம் ஏழு முறை இப்படி நடந்துள்ளன. இதில் 1988ல் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய ஈரானிய விமானமும் அடக்கம். இதிலும் 290 பேர்கள் கொல்லப்பட்டனர்.

போரும், ஆயுதப் போராட்டங்களும் மக்களின் உயிர்களை மதிப்பதில்லை. தேச இறையாண்மை என்கிற பெயர்களில் அரசுகளும், நாட்டு விடுதலை என்கிற பெயர்களில் போராளிகளும் இப்படியாக ஆயுதம் தரிக்காத மக்களின் கொலைகளை நியாயப் படுத்துவதை ஏற்க இயலாது. எல்லாவற்றையும் கொள்கைகளைச் சொல்லி நியாயப்படுத்திவிட இயலாது.