தேவை நமது தேர்தல் முறையில் உடனடி மாற்றம்

இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நமது தேர்தல் முறையின் பொருத்தம் குறித்த அய்யத்தை எழுப்பியுள்ளது. ஜனநாயக ஆட்சி முறை என்பதைச் சுருக்கமாக. “சிறுபான்மையினர் தமது கருத்துக்களைப் பேசவும் பரப்பவும் உரிமை அளிக்கப்பட்ட பெரும்பான்மையின் ஆட்சி” எனலாம். வாக்களர்கள் அளிக்கும் வாக்குகளின் எண்ணிக்கையில் ஆட்சி அமைக்கப்படும் ஜனநாயக முறைகளில் இந்தப் ‘பெரும்பான்மை’ என்பது எதைக் குறிக்கிறது?

குறைந்த பட்சம் அது இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும். 1. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கை பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் 50 சதத்தைத் தாண்டி இருக்க வேண்டும். 2. மாநிலத்தை அல்லது நாட்டை ஆளும் வாய்ப்புப் பெறும் கட்சி ஒட்டு மொத்தமாகப் பதிவான வாக்குகளில் 50 சதத்தைத் தாண்டி இருக்க வேண்டும்.

இது மட்டுமல்ல, ஒரு ஜனநாயக ஆட்சியில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்கள் முக்கியமானவை. அவற்றில் சகல மக்கள் பிரிவினர்க்கும் உரிய பங்களிப்பு இருக்க வேண்டும். குறிப்பாக தலித்கள், முஸ்லிம்கள் முதலான அதிகாரப்படுத்தப்படாத மக்கள் தொகுதிகள் உள்ள நமது நாட்டில் இது முக்கியம். இதுவும் கூட தற்போதுள்ள தனித் தொகுதி அடிப்படையில் இருந்தால் பயனில்லை என டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டது கவனத்துக்குரியது. நடைமுறையில் உள்ள முறையில் எண்ணிக்கையில் தலித்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இருந்த போதிலும் பிற கட்சிகளை நம்பியவர்களாகவே அவர்கள் இருப்பர். சுயேச்சையான அதிகாரமுடையவர்களாக இருக்க இயலாது என்றார் அவர். எந்த ஓரிடத்திலும் எண்ணிக்கையில் செறிந்திராத தலித்கள், முஸ்லிம்கள் முதலானோர் அவர்கள் மட்டுமே வாக்களிக்கக் கூடிய தனி வாக்காளர் தொகுதிகள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி முறை குறித்த இந்தப் புரிதலோடு நாம் இந்திய ஜனநாயகம் செயல்பட்டு வரும் முறையை ஆராய்வோம். இந்தத் தேர்தலில் மட்டுமின்றி எந்தத் தேர்தல்களிலுமே வெற்றி பெறும் வாக்காளர்களில் 80 முதல் 90 சதம் வரை 30 லிருந்து 49 சத வாக்குகளுக்குள் பெற்று வெற்றி பெற்றவர்களாக வே உள்ளனர். தனது தொகுதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அதேபோல காங்கிரசானாலும் சரி, பா.ஜ.க ஆனாலும் சரி, அல்லது மாநில அளவில் தி.மு.க, அ.தி.மு.க அல்லது பகுஜன் சமாஜ் கட்சி , சமாஜ்வாதி கட்சி எதுவாக இருந்தாலும் ஆட்சி அமைக்கும் கட்சிகள் பெரும்பாலும் 30 லிருந்து 40 சத வாக்குகளை மட்டுமே பெற்று ஆட்சி அமைக்கின்றன. 50 சதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்ரு ஆட்சி அமைப்பது விதி விலக்காகவே உள்ளது.

இப்போது 16 வது மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம். இம்முறை பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை (282) பெற்று ஆட்சி அமைத்துள்ளது. எனினும் இக் கட்சி பெற்றுள்ள வாக்கு வீதம் வெறும் 31 சதம் தான். மொத்தமுள்ள 583 இடங்களில் 31 சதம் என்பது 169 இடங்கள் மட்டுமே. ஆக அது கூடுதலாக 113 இடங்களைப் ‘பெரும்பான்மை போனஸ்’ (Majority Bonus) ஆகப் பெற்று மிகவும் வசதியான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. சென்ற முறை (2009) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் இவ்வாறே வெறும் 37.13 சத வாக்குகளுடன் (262 இடங்கள்) ஆட்சி அமைத்தது.
மாறாக எதிர்க் கட்சிகள் தாம் பெற்ற வாக்கு வீதங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதில்லை. இம்முறை காங்கிரஸ் 19.31 சத வாக்குகளைப் பெற்றிருந்தும் அது பெற்றுள்ள இடங்கள் வெறும் 44. அதற்கு எதிர்க் கட்சி நிலையையும் தர இயலாது என்கிறது இன்றைய பா.ஜ.க அரசு. உண்மையில் காங்கிரஸ், அது பெற்றுள்ள வாக்கு வீதத்தின்படி 105 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.
சிறிய கட்சிகளின் நிலை இன்னும் மோசம். 4.14 சத வாக்குகளைப் பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சி ஓரிடத்திக் கூடப் பெற இயலவில்லை. ஆனால் அதே நேரத்தில் அதைவிடக் குறைந்த வாக்கு வீதம் (3.27) பெற்ற அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் 38 இடங்களைப் பெற்ருள்ளது.

தி.மு.க சென்ற முறை 1.83 சத வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்தில் 19 எம்.பிக்களைக் கொண்டிருந்தது. இம்முறை அது 1.74 சத வாக்குகளைப் பெற்றிருந்தும் ஒரு இடங்களைக் கூடப் பெற இய்லவில்லை. இத்தனைக்கும் அது சென்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது இழந்த வாக்கு வீதம் வெறும் 0.09 சதம் மட்டுமே. ஆனால் இழந்த இடங்களோ 19. அதே நேரத்தில் வெறும் 0.1 சத வாக்குகளைப் பெற்ற அசாம் கண பரிஷத் குவித்துள்ள இடங்களோ 12. சி.பி.எம் கட்சி 3.25 சத வாக்குகள் பெற்றிருந்தும் 9 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. ஆனால் அதனுடைய பரம எதிரியான திருனாமுல் காங்கிரஸ், அதை விட வெறும் 0.59 சத வாக்குகள் கூடப் (3.84%) பெற்று 34 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். சற்றும் அறிவுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் பொருந்தாத வகையில் வாக்கு வீதங்களுக்கும் பெறுகிற பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான உறவு அமைந்துள்ளது கவலைக்குரியதாகிறது.

2.

நமது தேர்தல் முறையில் உள்ள அடிப்படைக் கோளாரின் விளைவு இது. போட்டியிடும் வேட்பாளர்களில் ஒரு வாக்கையேனும் கூடப் பெறுகிற ஒருவர் வெற்றி பெறும் இந்த முறையை First Past the Post System (FPTP) என்பார்கள். அதாவது வெற்றி பெறுபவர் 50 சதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்று “முழுமையான பெரும்பான்மை”யை (Absolute Majority) பெற வெண்டும் என்பதில்லை. போட்டி இடுபவர்களில் அதிக வாக்குகள் பெறுதல் என்கிற “எளிய பெரும்பான்மை” (Simple Majority) இருந்தால் போதுமானது. “வெற்றி பெற்றவர்கள் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளும்” (Winner Takes All) முறை இது.
ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலும் இதே முறைதான் கடை பிடிக்கப்படுகின்றது என்பதல்ல. குறைந்த பட்சம் பத்து (Mixed Member Proportional System, Closed List Proportional System, Open List Proportional System, Semi Proportional System, single Transferable Vote, Mixed Member Parallel System, Winner Takes All / Instant Run Off, Winner Takes All / Run Off, Winner Takes All, Block Vote..) தேர்தல் முறைகளேனும் நடைமுறையில் உள்ளன. எல்லாவற்றையும் விளக்க இங்கு இடமில்லை.
இவற்றில் நமது தேர்தல் முறை வெற்றி பெற்றவர்கள் எல்லாவற்றையும் சுருட்டிக் கொள்ளும் FPTP முறையில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதைச் சற்று முன் பார்த்தோம். எனினும் இதனை ஆதரிப்போர் முன் வைக்கும் வாதங்களையும் பார்த்து விடுவோம்.

1. இது ஒரு எளிதான முறை. யாராவது பிடித்த வாக்காளருக்கு வாக்களித்து அதிக வாக்குகளைப் பெற்றவரை வெற்றி பெற்றவராக அறிவிப்பது எளிமையானது. ‘ஒற்றை மாற்று முறை’ முதலானவற்றில் நமது முன்னுரிமைகளை 1,2,3.4 எனப் பதிவிட்டு முதலில் முதல் முன்னுரிமையை, பின் அடுத்த முன்னுரிமை என எண்ணி வெற்றி பெற்றவரைக் காண்பது முதலானவை சிக்கலானது.

2. குறிப்பிட்ட தொகுதிக்கான பிரதிநிதி இவர் என அடையாளங் காட்டப்படுவதால் அவர் அதற்குப் பொறுப்பாக இருப்பார். இதனால் தொகுதிப் பிரச்சினைகள் கவனிக்கப்படும் என்பது தவிர, கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் யாரோ ஒரு பெருந்தலைவர் என்பது தவிர பகுதி வாரியாகத் தலைமைகள் விரிவாக்கப்படும்.

3. கூட்டணி ஆட்சிக் குழப்பங்கள் இதில் தவிர்க்கப்படும். அதாவது வாக்கு விகிதத்தைக் காட்டிலும் கூடுதலாக ‘போனஸ்’ இடங்களைக் வெற்றி பெறும் கட்சி பெறுவதால் நிலையான ஒரு கட்சி ஆட்சி ஏற்படும், அதாவது இந்தத் தேர்தலில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைபிடிக்கப்பட்டிருந்தால் பா.ஜ.க வெறும் 169 இடங்களை மட்டுமே பெற்று கூட்டணி ஆட்சிக்குத் தள்ளப்பட்டிருக்கும். அதேபோல வலிமையான எதிர்க்கட்சிகளும் இதன் மூலம் உருவாக வாய்ப்புண்டு.

4. மாநில அளவிலான கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இது வழி வகுக்கிறது. இந்தத் தேர்தலில் திருனாமுல் மற்றும் அ.தி.மு.க போன்ற கட்சிகள் இவ்வாறு பயனடைந்துள்ளதைக் காணலாம்.

5. தீவிரமான கொள்கைகளுடன் போட்டியிடும் கட்சிகள், அவை ஏதேனும் குறிப்பிட்ட பகுதிகளில் செறிந்து இருக்காத பட்சத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு இதில் தவிர்க்கப்படும்.
கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக நாம் இந்தத் தேர்தல் முறையைக் கண்டு வருகிறோம். மேலே குறிப்பிடப்படும் சிறப்பு அம்சங்கள் எதுவும் உரிய பயனளிக்கவில்லை என்பதுதான் உண்மை. தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாரும் அப்படி ஒன்றும் தொகுதிகளுக்குப் பொறுப்பானவர்களாக இருப்பதில்லை. அதிக வாக்கு வீதங்களைப் பெறும் கட்சி ‘போனஸ்’ இடங்களைப் பெறுவது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாகக் கேலிக் கூத்தாக்குவது குறித்து விரிவாக மேலே பார்த்தோம். வெறும் 30 சத வாக்குகளின் அடிப்படையில் உருவாகும் நிலையான ஆட்சியை ஜனநாயக நெறிமுறையாக எப்படிக் கொள்ள இயலும்? எதிர்க் கட்சிகளும் ‘போனஸ்’ இடங்களைப் பெற்று வலிமையாக விளங்க இயலும் என்பதும் அபத்தம். இந்தத் தேர்தலில் சுமார் 20 சத வாக்குகளைப் பெற்றும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகக் கூடத் தகுதி பெறாதது குறிப்பிடத் தக்கது.
மாநில அளவிலான கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பது வரவேற்கத் தக்கதுதான் எனினும் அதை ஒரு சிறப்பு அம்சமாகக் கொள்ள இயலாது. இடதுசாரிகள் முதலான தேசிய அளவிலான கட்சிகள் ஒரே அளவு வாக்கு வீதம் பெற்றிருந்தபோதும் அதே அளவும், சில நேரங்களில் அதை விடக் குறைவாகவும் வாக்குகளைப் பெறும் மாநிலக் கட்சிகள் அதிக இடங்களை அள்ளிக் கொண்டு போவதை எப்படி நியாயப் படுத்த முடியும்? தவிரவும் இம்முறையால் ஒரு மாநிலக் கட்சி பயன்பெறும் போது இன்னொரு மாநிலக் கட்சி இழப்புகளை எதிர் கொள்ள நேர்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்டுக் காட்டாக இம்முறை அ.தி.மு.க இங்கு பெரும் பயனடைந்துள்ளது. ஆனால் தி.மு.கவுக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை.
ஒரு இடத்தில் செறிவாக இல்லாத கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாமையை ஒரு சிறப்பு அம்சமாகக் கொள்ள இயலாது. தலித்கள், முஸ்லிம்கள் முதலான இவ்வாறு இரே தொகுதியில் செறிவாக இல்லாமல் பரந்து வாழ்வதாலேயே அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் உரிய இடங்களைப் பெற இயலாமல் போவது குறிப்பிடத் தக்கது.

3.

விகிதாசாரத் தேர்தல் முறையிலும் பல விதங்கள் உண்டு. வெறுமனே கட்சிகளின் சின்னங்களில் வாக்களித்து அந்த அடிப்படையில் கட்சிகளுக்கு இத்தனை இடங்கள் எனப் பிரித்துக் கொடுத்து, அக் கட்சிகள் அதற்குரிய வேட்பாளர்களைத் தேர்வு செய்தல் என்பதாக இதை எளிமைப் படுத்திப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ‘மூடிய பட்டியல்’ முறியில்தான் யார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதைக் கட்சி மட்டுமே முடிவு செய்யும். திறந்த பட்டியல் முறைகளில் கட்சி வெளியிடும் பட்டியலில் யாருக்கு முன்னுரிமை அளிபக்க வேண்டும் என்பதை வாக்காளர்களும் தீர்மானிக்க இயலும்.
குறிப்பிட்ட தொகுதிகளுக்கான குறிப்பிட்ட பிரதிநிதி என்கிற பலனை ‘அரை விகிதாசார முறை’ யின் மூலம் கிட்ட முடியும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் இன்று 543 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் இரண்டிரண்டு தொகுதிகளை ஒன்றாக்கி 272 தொகுதிகளாக்கலாம். ஒவ்வொரு வேட்பாளரும் இரண்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யலாம். ஆக மொத்தம் 544 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிருந்தவாரே இருப்பர். இவர்களில் 272 பேர் வழக்கம் போல தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப் படுவர். இன்னொரு 272 பேர் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிப் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்.
நடந்து முடிந்த 16வது மக்களவைத் தேர்தலில் இம்முறை கடைபிடிக்கப்பட்டிருந்தால் முடிவுகள் எப்படி இருந்திருக்கும். சுமாராகச் சொல்வதானால் பா.ஜ.கவிற்கு நேரடித் தேர்தலின் மூலம் 141 உறுப்பினர்களும் கட்சிக்குக் கிடைத்த வாக்கு வீதத்தின்படி 81 உறுப்பினர்களும் என மொத்தம் 222 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பர். காங்கிரசுக்கு 77 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 11 உறுப்பினர்களும், அ.தி.மு.கவிற்கு 28 உறுப்பினர்களும், சி.பி.எம்முக்கு 17 உறுப்பினர்களும் கிடைத்திருப்பர். இது ஒரு மிகச் சுமாரான மதிப்பீடு இன்றைய முறையில் கிடைத்த வாக்குகளை வைத்துக் கணக்கிடப்பட்டது என்பதை நினைவிற் கொள்க. அரை விகிதாச்சார முறை அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பதிவாகிற வாக்குகள் இதே முறையில் அமைந்திருக்காது. எனினும் இந்தச் சுமாரான கண்க்கீடே இப்போதுள்ள முறையைக் காட்டிலும் இந்த அரை விகிதாச்சார முறை மேலும் ஜனநாயகத் தன்மை உடையதாக உள்ளதை உறுதிப்படுத்துகிறது. இந்த முறையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது தவிர, வாக்காளர்களை நேரடியாகத் தேர்வு செய்தலையும் கூட FPTP முறையில் இல்லாமல் ஒற்றை மாற்றீட்டு முறையில் அமைத்து 50 சதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவித்தால் இன்னும் சிறந்த முறையில் பிரதிநிதித்துவம் அமையும்.

4. 

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என்பதல்ல. இதிலும் பல குறைபாடுகள் உண்டு. முக்கியமாக இது சாதி முதலான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாவதை ஊக்குவிக்கும் என்பது ஒரு குறைபாடு. ஓரிடத்தில் செறிவாக இல்லாதபோதும், நாடு முழுவதிலும் பெறுகிற வாக்கு வீதத்தின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பதால் சாதி முதலான அடிப்படை அமைப்புகள் உருவாகும் என்பது உண்மையே. ஆனால் இன்றைய முறையிலும் கூடத்தான் சாதி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது. அதே நேரத்தில் இப்படி ஓரிடத்தில் செறிவாக இல்லாத சில பிரிவினர் (எ.கா முஸ்லிம்கள்) உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

சிறிய கட்சிகள் அதிக அளவில் பயனடைவது மற்றும் அந்த அடிப்படையில் கூட்டணி அரசுகளில் பேரம் பேசுவது ஆகியவற்றைத் தடுக்க ஜெர்மனி முதலான நாடுகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் மூலம் நாடாளுமன்றத்தில் இடம் பெற குறைந்த பட்ச வாக்கு வீதம் (Cuy off Value) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இது 5 சதம், அதாவது 5 சதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்ற கட்சிகளுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். எடுத்துக் காட்டாக குறைந்த பட்ச அனுமதி அளவு ஜெர்மனியில் உள்ளது போல இங்கிருந்தால் அ.தி.மு.க விகிதாசார முறையில் நாடாளுமன்றத்தில் இடம் பெற இயலாது. ஆனால் தொகுதிகளில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இடம் பெறுவர்.

எனினும் இந்தியா போன்ற விரிந்த ஒரு நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கத்தான் செய்யும். இங்கு இது போன்ற குறைந்த பட்ச அனுமதி அளவு எந்த அளவிற்கு ஏற்புடையது என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக இந்தத் தேர்தலில் நாம் 5 சதம் என அனுமதி அளவை நிர்ணயித்திருந்தால் பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டும் மட்டுமே இந்தப் பலனைப் பெறும். மூன்று சதம் என்றால் கூடுதலாக பகுஜன் சமாஜ், திருனாமுல், சமாஜ்வாதி, அ.தி.மு.க, சி.பி.எம் கட்சிகளும் இடம் பெறும்.. அனுமதி அளவு 2 சதம் என்றால் கூடுதலாக தெலுகு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் இடம் பெறும்.
எந்தப் பிற நாட்டு மாதிரியையும் நாம் அப்படியே கடைபிடிக்க வேண்டியதில்லை. கடைபிடிக்கவும் இயலாது. நமது நாட்டிற்கான தனிப்பட்ட பிரச்சினைகள் உண்டு. இட ஒதுக்கீடு அதில் ஒன்று. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் ஓரளவு அதைத் தீர்க்கும் எனினும் நேபாளத்தில் உள்ளவாறு ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட அளவில் பட்டியல் பிரிவினர் சிறுபான்மையோர், பெண்கள் ஆகியோருக்குத் தம் பட்டியல்களில் இடமளிக்க வேண்டும் என்பதை இங்கும் கட்டாயமாக்கலாம்.

ஒன்று நிச்சயம். இன்றைய தேர்தல் முறை அவசியம் மாற்றப்பட வேண்டும். நமது நாட்டுக்கு உரிய வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கொண்டுவரப்பட வேண்டும். அது இன்றைய முறையைக் காட்டிலும் இன்னும் விசாலமானதாக் இருக்கும். வெறும் எளிய பெரும்பான்மை போதும் என்கிறபோது ஒவ்வொரு கட்சியும், வேட்பாளரும் பரந்த அளவில் எல்லாத் தரப்பின் ஆதரவையும் தேடுவது என்பதைக் காட்டிலும் தனக்கு எதிரான ஓட்டுக்களைப் பிரிப்பது என்பதிலேயே கருத்தைச் செலவிட நேர்கிறது. சாதி ஓட்டுக்களைப் பிரிப்பதற்காக வேண்டுமென்றே அதே சாதியைச் சேர்ந்த போட்டி வேட்பாளரை நிறுத்துவது, அல்லது தன் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு குழுவினரின் ஆதரவைப் பெற்றால் தேவையான எளிய பெரும்பான்மை கிடைத்துவிடும் என்பதற்காக நியாயமற்ற கோரிக்கைகளை ஏற்பது என்பதெல்லாம் நீங்கும். கட்சிகளும் வேட்பாளர்களும் பரந்த அளவில் எல்லாத் தரப்பினரின் ஆதரவையும் தேடும் நிலையும் ஏற்படும்.

இந்த மண்ணுக்கேற்ற ஒரு விகிதாசார முறையை நோக்கிய தேசிய விவாதம் ஒன்று உடனடித் தேவையாக உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களுக்குத் தோல்வி நேர்கிற போது மட்டும் இதைப் பேசாமல் இது குறித்த பொதுக் கருத்து ஒன்றை உருவாக்கும் முயற்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *