9 மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் அபத்தம் நிறுத்தப்பட வேண்டும்!

10 மற்றும் +2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவித்தால் மட்டும் போதுமா?

               அக்கறையுள்ள கல்வியாளர்களின் கூட்டறிக்கை

                                                                                                                                                                  சென்னை,

26, மே, 2015.

இந்த ஆண்டு +2 மற்றும் 10 ம் வகுப்புத் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதோடு அதிக அளவில் 200 க்கு 200; 100 க்கு 100 என மதிப்பெண்களைக் குவித்தும் உள்ளனர். +2 தேர்வில் கணிதத்தில் 9,710 பேர்களும் கணக்குப் பதிவியலில் 5,167 பேர்களும் வேதியலில் 1,049 பேர்களும் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதே போல 10ம் வகுப்பிலும் நூற்றுக்கு நூறு வாங்கியோர் எண்ணிக்கை ஏராளம். முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் மாத்திரம் 773 பேர்கள். கணக்கில் 27,134 பேர்களும், அறிவியலில் 1,15,853 பேர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி எனவும் இப்படி ‘ரேங்க்’ வாங்கியவர்கள் இவ்வளவு பேர்கள் எனவும் தனியார் பள்ளி விளம்பரங்கள் நாளிதழ்களை நிரப்புகின்றன.

கடினமாக உழைத்து இப்படிச் சாதனைகள் புரிந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லும் அதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் கல்வியில் அக்கறையுள்ள அனைவர் முன்னும் சில கேள்விகளை எழுப்ப வேண்டி உள்ளது.

இப்படிக் கடினமாக உழைத்து ஏராளமான மதிப்பெண்களை அள்ளிச் செல்லும் மாணவர்களில் பலர் மேற்படிப்புகளில் முதலாம் ஆண்டில் தோல்வியுறுவது ஏன்?

IIT படிப்பிற்கான JEE நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்கள் பின் தங்குவதேன்? 2014ம் ஆண்டு JEE தேர்வில் தமிழ்நாடு 14 வது இடத்தைத்தான் பெற முடிந்தது. முதல் 10 இடங்களை ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உ.பி, மஹாராஷ்டிரா, டெல்லி, ம.பி, பிஹார், ஹரியானா, ஜார்கன்ட், மே.வங்கம் ஆகிய மாநிலங்கள் தட்டிச் சென்றன. சென்ற ஆண்டு JEE தேர்வு  எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,58, 981. இதில் 21,818 (14.7%) இடங்களை ஒன்றாக இருந்த ஆந்திரப் பிரதேச மாணவர்கள்  வென்றெடுத்தனர். தமிழக மாணவர்களால் பெற முடிந்ததோ வெறும் 3974 (2.5%) இடங்களைத்தான்.

இதற்கான காரணங்களில் ஒன்றாக நாங்கள் கருதுவது நமது மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அறிதல் சார்ந்த (Knowledge Based / Objective Type) கேள்விகளுக்குப் பதில் எழுதுவதில் போதிய திறன் பெற்றிருக்கவில்லை என்பதுதான். அதற்குக் காரணம் நம் மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக உள்ளனர் என்பதுதான்.

90 சதத்திற்கும் மேல் மதிப்பெண்களை எளிதாகப் பெறும் நம் மாணவர்கள் எவ்வாறு அடிப்படைகளில் பலவீனமாக நேர்ந்தது?

நமது பள்ளிகளில், குறிப்பாக ஏராளமாக ‘ரிசல்ட்’ காட்டுகிற தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புப் பாடங்களைக் கற்றுத் தருவதில்லை என்பது நமது மாணவர்கள் அடிப்படைகளில் பலவீனமாக இருப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது. எட்டாம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பிற்குச் சென்ற உடன், அவர்களுக்கு 9ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித்தராமல் 10ம் வகுப்புப் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. அதே போல 11ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 11ம் வகுப்புப் பாடங்களைச் சொல்லித் தராமல்  இரண்டாண்டுகளும் 12ம் வகுப்புப் பாடங்களே சொல்லித் தரப்படுகின்றன. இரண்டாண்டுகளும் ஒரே பாடங்களைப் படித்து, மனப்பாடம் செய்து, பல முறை மாதிரித் தேர்வுகளை எழுதி, நமது மாணவர்கள் இந்தத் தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவிக்கும் எந்திரங்களாக மாற்றப்படுகின்றனர்.

நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வெண்டும். Higher Secondary என்பது +1 மற்றும் +2 ஆகிய இரு வகுப்புகளும் சேர்ந்த ஒரு ஒருங்கிணைந்த படிப்பு (Integrated Course). +1, +2  என்பன தனித்தனி வகுப்புகள் அல்ல. இயற்பியல் (Physics) என்றொரு பாடத்தை எடுத்துக் கொண்டால் அதில் Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics, Electricity and Magnetism, Atomic Physics, Electronics எனப் பல உட்பிரிவுகளும் இணைந்ததுதான் இயற்பியல். இவற்றில்  Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics ஆகிய பாடங்கள் 11ம் வகுப்பிலும் Electricity and Magnetism, Atomic Physics, Nuclear Physics, Electronics முதலானவை 12ம் வகுப்பிலும் பிரிந்துள்ளன. 11ம் வகுப்புப் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படாதபோது Mechanics, Properties of Matter, Optics, Heat, Thermodynamics முதலானவற்றில் அம்மாணவர் அடிப்படைகளை அறியாதவராகி விடுகிறார். இந்த அடிப்படைகள் இல்லாமல் ஒருவர் இயற்பியலின் மற்ற இயல்களை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.

இது மற்ற பாடங்களுக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக 9ம் வகுப்புப் புவீயலில் தமிழகப் புவியியல் குறித்த பாடம் உள்ளது. 10ம் வகுப்பில் இந்தியப் புவி இயல் பாடம் உள்ளது. 10வது பாடங்களை மட்டும் படித்து, 9வது பாடங்களைப் படிக்காத ஒரு மாணவர் தமிழகப் புவி இயல் குறித்த அடிப்படைகளை அறியாதவராக ஆகிவிடுகிறார். இப்படி ஒவ்வொரு பாடம் குறித்தும் எடுத்துக்காட்டுகளைச் சொல்ல இயலும்.

இவ்வாறு அடிப்படைகளில் வலுவில்லாமல் வெறும் மதிப்பெண்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும் மாணவர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற இயலாதது கூடப் பெரிதில்லை. அவர்கள் அந்தந்தத் துறைகளில் சாதனை படைக்கும் அறிவியலாளர்களாகவும் உருப்பெற இயலாது என்பதுதான் வேதனை. Classical Mechanics ல் வலுவில்லாமல் ஒருவர் எப்படி Quantum Mechanics ஐப் புரிந்து கொள்ள இயலும்? Thermodynamics ன் அடிப்படைகளை அறியாத ஒருவர் எப்படி ஒரு இயற்பியலாளராக இயலும்?

இந்த ஆண்டு +2 தேர்வில் இயற்பியலில் வெறும் 124 பேர்கள்தான் 200 க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 198 மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தும் அவர்கள் இந்த இரண்டு மதிப்பெண்களைக் கோட்டை விட்டதற்குக் காரணம் இரண்டு objective type கேள்விகள் 11 ம் வகுப்பில் சொல்லிக் கொடுக்கப்படும் அடிப்படைகளைப் புரிந்து கொள்பவர்களால் மட்டுமே பதில் அளிக்கக் கூடியதாக இருந்ததுதான்.

 

தனியார் பள்ளிகளின் வணிக நோக்கமே இதன் பின்னணி

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வைக்கிறோம் என விளம்பரப் படுத்திக் கல்வி வணிகம் நடத்திக் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி ‘லாபி’ யே இதற்குக் காரணமாக உள்ளது.

இரண்டு வகைகளில் அவர்கள் இதைச் செய்தனர்.

  1. உலகெங்கிலும் இருப்பது போல தமிழகத்திலும் ‘ட்ரைமெஸ்டர்’ முறை கொண்டு வந்தபோது அதை 9ம் வகுப்புக்கு மேல் கொண்டு வரக் கூடாது என அவர்கள் தடுத்து நிறுத்தினர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் 10ம் வகுப்பில் பொதுத் தேர்வு உள்ளது என்பதுதான். கல்லூரிகளில் பொதுத் தேர்வுகளிலும் செமஸ்டர் முறை கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல் பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. பள்ளிக் கல்வியிலும் 10,11,12 வகுப்புகளில் ட்ரைமெஸ்டர் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் செமஸ்டர் முறையாவது தொடர்ந்திருக்க வேண்டும். Higher Secondary படிப்பை +1, +2 இரண்டாண்டுகளையும் 4 செமெஸ்டர்களாக்கிப் பொதுத் தேர்வுகளை நடத்தி அந்த அடிப்படையில் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிலை இருந்திருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. 11 ம் வகுப்புப் பாடங்களை ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பது தவிர்க்க இயலாததாக ஆகி இருக்கும்.
  2. +2 கேள்வித்தாள்கள் உருவாக்கம் பற்றிய வல்லுனர் குழு 20 சத மதிப்பெண்கள் Knowledge Based கேள்விகளுக்கு இருக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருந்தும் அப்படிக் கேள்விகள் அமைந்தால் அது மாணவர்களுக்குக் கடினமாக இருக்கும் எனச் சொல்லித் தடுத்ததும் இந்தத் தனியார் பள்ளி ‘லாபி’ தான். உண்மையில் அது மாணவர்களுக்குக் கடினம் என்பதல்ல. “100 மார்க்” ஆசையை ஊட்டி வணிகம் செய்பவர்களுக்குத்தான் அது கடினம். கேள்வித் தாள்கள் என்பன ஒரு சராசரி மாணவர் எளிதில் வெற்றி பெறக் கூடியதாகவும், அதே நேரத்தில் ஒரு திறமையான மாணவரை அடையாளம் காட்டக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளையும் தொற்றும் இந்த ஆபத்து

ஒப்பீட்டளவில் அரசுப் பள்ளிகளில் ‘ரிசல்ட்’ குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அடித்தள மற்றும் கிராமப் புற மாணவர்கள் அதிகம் படிப்பவையாக அரசுப் பள்ளிகளே உள்ளன. தவிரவும் தனியார் பள்ளிகள் தம் ‘வெற்றி வீதத்தை உயர்த்திக் காட்டுவதற்காகப் பல தில்லு முல்லுகளைச் செய்கின்றன. தோல்வியடையக் கூடிய, அல்லது குறைந்த மதிப்பெண்கள் எடுக்கக் கூடிய மாணவர்களைக் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றுவது, தனிப் பயிற்சி மூலம் படித்தவர்கள் என்பதாக அவர்களைத் தேர்வு எழுத வைப்பது, முறையான ஊதியம் அளிக்காமல் ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்குவது எனப் பல மோசடிகளைச் செய்துதான் அவை நூறு  சத வெற்றியை எட்டுகின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் வெற்றி வீதம் குறைவாக உள்ளது புரிந்து கொள்ளக் கூடியதே. அரசுப் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளைக் களைவது என்கிற நிலையை எடுக்காமல் அரசும் கல்வித்துறையும் இன்று “தனியார் பள்ளிகளைப் போலச் செய்து” அதிக வெற்றி வீதத்தைக் காட்ட வேண்டும் என அரசுப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் இன்று அரசுப் பள்ளிகளிலும் 9. 11ம் வகுப்புப் பாடங்களைப் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

என்ன செய்ய வேண்டும்?

நமது பள்ளிக் கல்வியில் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன. தமிழ்வழிக் கல்விக்கு உரிய முக்கியத்துவம் இல்லை. தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வந்த அரசுப் பள்ளிகளிலும் இப்போது ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்படுகிறது, சமச்சீர்க் கல்வியில் உள்ள குறைபாடுகளைக் களைந்து அதை மேம்படுத்தவில்லை. Higher Secondary சேர்க்கையில் இட ஒதுக்கீடு கடை பிடிக்கப்படுவதில்லை. அரசுப் பள்ளிகளில் அகக்கட்டுமானங்கள் போதுமானதாக இல்லை. காலியான ஆசிரியப் பணி இடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவதில்லை. ஆசிரியர் அமைப்புகள் அதை வற்புறுத்துவதுமில்லை. +1. +2 பாடத் திட்டம் சமச்சீர்க் கல்விக்குத் தக சீரமைக்கப்படவில்லை. கிராமப் புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாததால் மருத்துவம், பொறியியல் முதலிய படிப்புகள் இன்னும் கிராமப் புற அடித்தள மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருப்பது….

இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்தும் முக்கியமானவை என்ற போதும் தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அக்கறையுள்ள நாங்கள் உடனடியாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளைக் கோருகிறோம்.

  1. 11ம் வகுப்பிலும் அரசுத் தேர்வை நடத்தி இரண்டு வகுப்புகளிலும் பெற்ற மதிப்பெண்களை வைத்தே Higher Secondary படிப்பிற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும்.
  2. 10, 11, 12 வகுப்புகளில் டிரைமெஸ்டர் அல்லது செமெஸ்டர் முறை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.
  3. ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வகுப்புகளுக்குரிய பாடங்கள் சொல்லித் தரப்படுகிறதா என்பதைக் கல்வித்துறை கண்காணிக்க வேண்டும். மீறுகிற பள்ளிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
  4. அரசுத் தேர்வுகளுக்கான கேள்வித் தாள்களில் 20 சத மதிப்பெண்கள் அறிதல் சார்ந்ததாகவும் (knowledge based), மீதி 80 சத மதிப்பெண்கள் பாடம் சார்ந்ததாகவும் (Text based) கேள்விகள் குறிக்கப்பட வேண்டும்.

இவற்றோடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இதர உடனடி நடவடிக்கைகள்:

  1. மாநில அளவில் மருத்துவ, பொறியியல் படிப்புகளிலும், இந்திய அளவில் IIT, NIT முதலான படிப்புகளிலும் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சத ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
  2. JEE தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும்.

6.அரசுப் பள்ளிகளில் கட்டாய ஆங்கில வழிப் பாடம் கொண்டு வரும் நடவடிக்கை கைவிடப்படல் வேண்டும்.

7.தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களை இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்ற ஆசிரியரே சொலித் தருவது என்பதற்குப் பதிலாக அந்தந்தத் துறைகளில் பட்டம் பெற்றவர்களை அந்தந்தப் பாடங்களைச் சொல்லிதர நியமிக்க வேண்டும்

பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என நினைக்காமல் அடிப்படைகளில் வலுவுடன் முழுமையாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை உணர்ந்து இந்தக் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இங்ஙனம்,

அக்கறையுள்ள கவியாளர்கள் குழு,

பேரா. பிரபா. கல்விமணி (மக்கள் கல்வி இயக்கம்), முனைவர் ப. சிவகுமார் (முன்னாள் கல்லூரி முதல்வர்), முனைவர் சற்குணம் ஸ்டீபன் (முன்னாள் கேள்வித்தாள் உருவாக்கக் குழு உறுப்பினர்), கோ. சுகுமாரன், பேரா. அ.மார்க்ஸ், பேரா. மு..திருமாவளவன் (முன்னாள் கல்லூரி முதல்வர்), வீ.சீனிவாசன் (சுற்றுச் சூழல் ஆர்வலர்), ஆசிரியர் மு.சிவகுருநாதன், ஆசிரியர் முனைவர் ஜெ. கங்காதரன், ஆசிரியர் த. மகேந்திரன், ஆசிரியர் அ.செந்தில்வேலன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *